Friday, October 27, 2017

பறக்கும் யானையும் பேசும் பூக்களும் - உமையவன்(சிறுவர்களுக்கான கதைகள்)

குழந்தைகளுக்கான உலகத்தைப் புரிந்து கொண்டு அவர்களது கனவு உலகில் புகுந்து கொள்வதற்கு முதலில் நாம் குழந்தையாய் மாறி நமது பால்ய காலத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது நமது கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விடும்.அந்தக் கற்பனைக்கதைகளை நாம் ஆராயாமல் அனுபவிக்கும் பொழுது நாம் சிறுவர்களாய் மாறி வேறு உலகில் குதூகலிக்க வாய்ப்புண்டு.



15 கதைகள் எளிமையாய் இருப்பதாய்த் தோன்றினாலும், அனைத்துக் கதையிலும் குழந்தைகளுக்குக் கற்பிக்க ஏதுவாய் நீதிகளும், கருத்துக்களும் நிரம்பியே இருக்கின்றன. நாம் கற்பனை செய்யும் பறவைகள், விலங்குகள், மனித கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டும் விதமாக ஓவியம் தீட்டிய ஜமால் அவர்கள், குழந்தைகளுக்கு படம் பார்த்து கதை சொல்லும் முறையை எளிமைப் படுத்தியிருக்கிறார்.

பொங்கல், தீபாவளி பண்டிகளை எப்படி இயற்கையாய் கொண்டாடலாம் என்று குழந்தைகளுக்கு  கற்றுத்தரும் பொழுது ,  கற்றுக் கொள்வது சிறுவர்கள் மட்டுமல்ல நாமும் தான். செம்பருத்தி, ஆவாரம் பூக்களில் இருந்து சிவப்பு , மஞ்சள் இயற்கை வண்ண சாயங்கள் உருவாக்குவதிலிருந்து , வேப்பமரத்து பிசின் தடவிய குச்சியில் ஒட்டப்பட்ட மின்மினிப்பூச்சிகள் என்று இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கம்பி மத்தாப்பு வரை அனைத்தும் நமக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறது.

கதையில் வரும் சின்னப் பட்டாம்பூச்சிக்கு மட்டுமல்லாமல்
நெத்திச்சுட்டிக்காயை தரையில் தட்டி இயற்கைத் தந்த பட்டாசை வெடிக்கும் ஆசை நமக்குள்ளும் பிறக்கிறது. டெங்குக் காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வை விலங்குகள் வழியாய் சிறுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது நல்ல யோசனை. சுற்றுப்புறத்தை பாதுகாத்து தூய்மையாய் வைத்துக் கொள்ள கூவம்நதியைச் சுத்தப்படுத்தும் கருவை எடுத்துக் கொண்டிருப்பது சிறுவர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதையே நமக்கும் சிறுவர்களுக்கும் உணர்த்துகிறது.


அனைத்துக் கதைகளிலுமே இக்காலத்து சிறுவர்களுடன் பெரியோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இயற்கை, கிராமம் பற்றிய புரிதல் , அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்தும் இழையோடி இருக்கிறது. கோழிகள் தோல் முட்டைப் போட்டால் கால்சியம் சத்து அதிகமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்று அங்கங்கே பயனுள்ள தகவல்களும் தரப்பட்டிருக்கிறது.கல்வி வியாபாரமாகி வருவதையும் , கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் கதை நாம் விலங்குகளுக்குச் செய்யும் அநீதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.


நம் குழந்தைகள் சோர்வடையும் நேரத்தில் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் , முயன்றால் முடியும் என்பதை வலியுறுத்துவதற்காகவே சொல்லப்பட்ட கதைகளில் எலிகள் கொண்டாடிய சுதந்திர தினமும் ஒன்று.
பெரியார்களை நேசித்து அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் போன்று, பெற்றோர் விரும்பும் கருத்துக்களும் உபதேசமாக அல்லாமல் சுவாரஸ்யமான கதையாய் விலங்குகள் வழியாய் கூறிப்பட்டு இருப்பதால், குழந்தைகள் நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நம்பி நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது இந்த பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

7 comments:

  1. குழந்தைகளுக்கு எளிமையான புரிதல் உடைய புத்தகம்..

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. மிக எளிமையான.. மிக்க கருத்துக்கள்.. வாழ்த்துக்கள் உமயவன்.

    ReplyDelete
  3. நூலாசிரியர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
    நட்பின் வழியில்
    சோலச்சி புதுக்கோட்டை

    ReplyDelete
  4. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete