Tuesday, October 17, 2017

நகர்வலம் - பூக்களைக் கொண்டு செல்கிறோம்... கசக்கி விட வேண்டாம்

அதிகாலை நேரத்திலே  கண்களை விழித்தும் விழிக்காமலும், குழந்தைகளை பரபரப்பாக தயார் செய்து  வேக வேகமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களில் ஏற்றி அனுப்புகின்றோம்.

https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0Tk5vQXRER1diVkE/view?usp=drivesdk

நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பள்ளி  நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுபவை அல்ல என்பது கொஞ்சம் அதிர்ச்சியளிக்கும் தகவல் தான்.


 பெரும்பாலான பள்ளிகளில், பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு செய்யும் செலவைவிட போக்குவரத்து வசதிக்காக  செய்யும் செலவு நம்மை மலைக்க வைத்துவிடும்.  குழந்தையை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் திரும்பி  அழைத்து வருவதற்கும் பள்ளி நிர்வாகத்தில் இருந்தே தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. போக்குவரத்திற்காக பள்ளி நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் தொகையைவிட இந்தத் தனியார் நிறுவனத்தினர் மூன்று மடங்கு  குறைவான தொகையை பெற்றோர்களிடமிருந்து வசூலித்து கொள்கின்றனர்.    

பள்ளி நிர்வாகத்தின் போக்குவரத்து வசதியை உபயோகிக்க வேண்டும் என்றால் வருடத்தின் ஆரம்பத்திலேயே அந்த முழு வருடத்திற்கான போக்குவரத்து   கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்திவிட வேண்டும். அந்தக் கட்டணம் பல பள்ளிகளில் லட்சங்களைத் தாண்டி விடும் என்பது மறைக்கப்பட்ட உண்மை .
இதுவே தனியார் நிறுவனத்தின் மூலம் நம் குழந்தைகளின் போக்குவரத்து வசதியை முடிவு செய்கிறோம் என்றால் பள்ளி போக்குவரத்து கட்டணத்தை காட்டிலும்  மிகக்குறைந்த தொகையை மாதாமாதம் கட்டணமாக செலுத்தி கொள்ளலாம்.

இந்தத் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பள்ளிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அவர்களுக்குள் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கத்தான் செய்கின்றது. பள்ளி நிர்வாகத்தின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்துகின்றோம்  என்றால்  நமது  பிஞ்சுக் குழந்தைகள்  அமர்ந்து கொண்டு பயணம் செய்வதற்கு பயணஇருக்கை  நிச்சயமாக கிடைத்துவிடும். இதுவே குறைந்த கட்டணத்தில்  இயக்கப்படும்   தனியார் நிறுவனத்தின் வழியாக குழந்தைகளுக்கு போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்தோமென்றால் நம் குழந்தைகள் உட்கார்வதற்கு பயண இருக்கை கிடைப்பது நிச்சயம் அல்ல. 

எவ்வளவு நேரமானாலும் நமது பிஞ்சுக் குழந்தைகள் கால்கடுக்க நின்று கொண்டு பயண நேரம் முழுவதும் பயணிக்க வேண்டிய அவலமும் நடக்கத்தான் செய்கின்றது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் தங்களை விட சிறிய குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்கின்றார்கள்.பள்ளி வாகனங்கள் வேகமாக செல்லும் பொழுது திடீரென்று சில வேகத்தடைகள் ஏற்படும்பொழுது மடியில் இருக்கும் சிறு குழந்தைகள் கீழே விழும் வாய்ப்பும் அதிகமாய்த் தான் இருக்கின்றது.




பெண் குழந்தைகள் இருக்கும் பள்ளி வாகனத்தில் நிச்சயமாக ஒரு பெண் பணியாளர் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் அதனை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்று பேதம் இல்லாமல்  வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது நம் குழந்தை பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் பள்ளி வாகன ஓட்டுநர் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது நாம் அறிந்த உண்மைதான்.

இவ்வகையான சம்பவங்களை நினைவில் கொண்டாவது பள்ளி நிர்வாகம் வாகன ஓட்டுனர்களை கண்காணிக்க வேண்டியிருக்கிறது.
இதுபோன்ற சில சம்பவங்களினால் அன்பாக பழகக் கூடிய பள்ளி வாகன ஓட்டுநர்களும் சந்தேக பார்வைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதும் வருத்தப்பட வைக்கும் உண்மை. பள்ளி வாகனங்கள் உறுதியானவையாக இல்லாமல் ஓட்டை உடைசலுடன் இருக்கத்தான் செய்கின்றன. பல கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி நிறுவனங்கள் பள்ளி  வாகனங்களின் தரத்தில்  அலட்சியம் காண்பிப்பது ஏற்புடையதாக அல்ல. பள்ளி வாகனத்தில் ஓட்டை ஏற்பட்டு அது ஒரு குழந்தையின் உயிரைப் பலிவாங்கியது நம்மால்  எளிதில் மறக்க முடியாத துன்பமான சம்பவம்.




அரசின் உத்தரவுப்படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில்தான் வண்ணம் பூசப்பட்டிருக்கவேண்டும் என்று விதிமுறை விதித்திருந்தாலும் பல பள்ளிகளும், கல்லூரிகளும்  அதனை பின்பற்றுவதே இல்லை.
வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது இது போன்ற மஞ்சள் நிற வண்டிகளை கண்டவுடன் நம்மையறியாமல் அந்த வண்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முற்படுவோம் என்பதனால்தான் அரசு வண்ணம் விஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது.

காலை நேரங்களில் பல பள்ளி வாகனங்கள் வேகமாக போவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகின்றது .பள்ளி நிறுவனங்கள் பள்ளி வாகன ஓட்டுநர்களை நியமிக்கும் பொழுதும்  திறமையானவர்களாகவும்  , அனுபவ முதிர்ச்சி  உடையவர்களாகவும் தேர்வு செய்வது அவர்களுக்கும் நல்லது நம் குழந்தைகளுக்கும் நல்லது.வருங்கால இளைய தலைமுறைகளை பாதுகாப்புடன் பேணிக் காக்கும் பொறுப்பு நம் கையில்தானே இருக்கிறது. அன்போடும் அக்கறையோடும் அவர்களைப்  பாதுகாப்போமா ?

No comments:

Post a Comment