நெஞ்சில் நிறைந்த
நினைவில் நின்ற
தொடர்பில்லாமல் தொலைந்த
பால்யகால நட்பூக்கள் துளிர்க்க
தண்ணீர்த் தெளித்து
பழைய ஞாபகங்களைப்
பாசத்துடன் பகிரச்செய்த பகிரியே!
நண்பர்கள்குழுவில்
நீளும் முடிவில்லா
அரட்டைகளை
அடக்கி அரட்ட ஆசான்கள்
யாருமில்லையே!
ஒருநாளேனும்
வாழ்வில் வழிகாட்டிய
ஆசான்களிடம் ஆசிபெறும்
அற்புதங்களைச் செய்து
ஆச்சரியமூட்டிப் புலன்களை
புல்லரிக்கவைத்த
என்னருமைப்புலனமே!
காதலர்களின்
காதல்பொங்கி வழிய
சத்தமில்லாத முத்தத்தில்
மையலை மென்மையாய்
மொழியஉதவும் மொழியில்லா
உணர்ச்சிக் குறுநகைகளே!
எண்ணங்களில் நிறைந்தவரின்
சுயவிவரபடத்தை
எண்ணிலடங்கா தடவை
எடுத்தெடுத்துப் பார்க்கவைத்து
இதயத்தை இதமாக்குவது இரகசியமே!
பகிர்ந்த புகைப்படங்களும்
காணொளியும்
நம்மையும் நம்திறன்பேசியின்
நினைவுத்திறத்தை
நில்லாது நிரப்பி
நிலைகுலையச் செய்யுமே!
தடங்கலேதுமில்லாது
தடங்காட்டிவழி
விவரமாய் வழிகாட்டி
நேரவிரயம் நேராமல்
பயணஇலக்கைச் சேர்த்திடுமே!
No comments:
Post a Comment