புத்தகத்தின் பெயரையும் அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே நமக்குத் தெரியாத இரகசியங்களும் வாழ்க்கைமுறையும் பகிரப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் மனதிலே ஓடியது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடனேயே அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
கதவு துவாரத்தின் வழியே சில கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
பழைய வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் அன்றாடம் கடக்கும் நமக்குப் பரிட்சயமான இடங்களில் நமக்குத் தெரியாமல் ஒரு தனி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று உணர்கையில் ஒருவிதமான அச்சம் கவ்விக்கொள்கிறது.
இவாஞ்சலின், சோஃபி கன்னியாஸ்திரீகளாக இருந்தாலும் உடல்தேவை, அன்பிற்கான ஏக்கம் போன்ற சாதாரண பெண்களின் விருப்பம் அவர்களுக்குள்ளும் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறைவனின் பெயரைச் சொல்லி இயங்கும் பாதிரியார்களும் ஒரு சாதாரண ஆணாய் கன்னியாஸ்திரிகளின் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை நடத்தும் பொழுது அவர்களைக் காப்பாற்ற கர்த்தரையே நம் மனம் வேண்டிக் கொள்கிறது.
பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்த நமக்கு பிக்பாக்கெட் அடிக்கும், போதைப் பொருட்களைக் கைமாற்றிவிடும் குருவியான செல்வியின் வாழ்க்கை விசித்திரமாகவே இருக்கிறது. பெண் எங்கு சென்றாலும் ஆணால் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது அவள் பிறக்கும் பொழுதே வாங்கி வந்த சாபம் போல.
பாலியல் தொந்தரவு தருபவனையும், தன் மனதிற்குப் பிடிக்காத போலி மருத்துவர் முத்துலட்சுமியையும் வதைக்கும் செல்வியின் தோழி தவுடின் தைரியத்தை எல்லாப் பெண்களும் பெற்றுவிட்டால் நன்றாய்த் தான் இருக்கும். தன் தாய் தன் நண்பனுடன் சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சம்பத் , தன் உடல் தேவையை அறிந்திருந்த அளவு தன் தாயின் உடல் தேவையையும், அவருக்கும் வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதைப் பற்றி உணர்ந்திருக்கவில்லை.
பண வாசனையுடன் மட்டுமே தூங்க விருப்பப்படும் கணவனை மணந்திருக்கும் சேட்டுப் பெண் சிவானியின் வாழ்க்கைப் பல குடும்பங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்றே தோன்றுகிறது.கள்ளக்காதல் , ஒழுக்கமற்ற உறவு என்று பல பெயர்கள் வைக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யும் பொறுப்பு அந்த கணவன் மனைவி கைகளிலேயே இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
பிழைப்புக்காக சொந்த ஊர்விட்டு வரும் ஆதம்மாவின் குடும்பம் நம் மனதிலும் இடம்பிடித்துக் கொள்கிறது.கட்டட வேலை செய்யும் ஆந்திரா , ஒரிசா வேற்று மாநிலக்காரர்களின் மனநிலை, அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள், உடல் தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத வசிப்பிடம் ஆகியவற்றை உணரும் பொழுது நம்மையும் அறியாமல் இப்புதினத்தில் வரும் ஆர்த்தியாகிவிடவே நம் மனம் ஆசை கொள்கிறது. முதன்முதலில் சென்னையை பார்க்கும் நமது மனநிலையை ஆதம்மாவின் கண்கள் வழி காண நேர்கின்றது.
புத்தகத்தின் பின்னட்டையில் வெட்டுண்ட நாய் போல பாதி அழிந்தது போலக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓவியத்தின் தாக்கமே மனத்தை அறுக்க நாய்க்கறி வியாபாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பொழுது இந்த சமுதாயத்தில் நாய்களுக்குக் கூடவா பாதுகாப்பில்லை என்று நற்சிந்தனை ஒரு புறம் தோன்றினாலும், அந்த இறைச்சி சமைக்கப்படும் உணவகத்தில் சாப்பிட்டுவிடக்கூடாது என்றே மன ம் அருவருப்புடன் வேண்டிக்கொள்கிறது.
2012 ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்ற இந்த புதினம் ஓரினச் சேர்க்கை, விவாதத்திற்குரிய பல கருத்துக்களைத் தன்னுள் கொண்டிருந்தாலும் நமக்குத் தெரியாத பல வகையான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை யதார்தத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.