Monday, March 12, 2018

கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

ஜியகோமா பட்ரியின் அட்டைப்படம் மாய உலகத்தின் கதவுகளின் வழி தப்பித்து ஓடும் மனிதனைக் குறிப்பிடுவது போல் இருக்கின்றது. வாழ்வின் மாயங்களிலும் சிக்கல்களிலும் சிக்கி தவித்து தப்பித்து ஓடும் மனிதர்களின் வாழ்வின் நிகழ்வுக் கதைகளே 12 சிறுகதைகளாய்த் தொகுக்கப்பட்டிருக்கிறது. 




குரோதம்:
ஊர்பக்கம் சிற்றோடையில் கால்களை வைத்தால் குட்டி குட்டி அயிரை மீன்கள் கூட்டமாக மொய்த்து காலில் உள்ள அழுக்குகளையும், தூசு, தேவையில்லாத தோல், செதில்களை இலவசமாக சுத்தம் செய்து விடும்.ஆனால் நகரத்தில் அதற்கென பிரத்யேகமான கடைகள் வந்துவிட்டன. காராரூஃபா என்ற டாக்டர் மீனிடம் அயிரை மீனின் அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.கடித்து இரத்தம் வந்தாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை .

அதிநவீன ட்ராவ்லர் படகுகள் கடல் அன்னையைக்  கற்பழிக்கும் அரக்கனோட ஆண்குறியாய் இருக்கின்றது. அந்தப்படகுகளின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சுங்கவரியைக் குறைத்து அதனை படகாய் வடிவமைத்துக் கொடுக்கும் கதாநாயகனின் நிலைமையில் நாமும் இயற்கைக்கு எதிரான பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு தான்  இருக்கிறோம். பிரன்ஹா மீனைப் போல குரோதம் தீர்த்துக் கொள்ளும் காராரூஃபாமீனும்,மீனவ உடம்பிற்கு மேல் சுங்க  உடை உடுத்தி ஒற்றை கெட்ட வார்த்தையில் திட்டும் அதிகாரியும் இயற்கையை வன்புணர்வு கொள்ள நினைத்தாலே நம் நினைவில் வந்து மிரட்டுவார்கள். கண்ணம்மாவைத் தேடும் காதல் கதை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, சுங்க அதிகாரியின் கண்களில் காராரூஃபாவின் கொடூரத்தைக் காட்டி கதையை முடிப்பது ஆசிரியரின் தந்திரம். 

புத்தகத்தில் உள்ள ஓவியங்களின் தனித்துவத்தைப் பார்த்தே யார் வரைந்திருக்கிறார்கள் என்று பிரித்துக் கூற முடிகின்ற அளவுக்கு, ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியரின் தனித் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. 'குரோதத்துடன்' கால்களைச் சுற்றும் மீன்களின் படம் , கூடலின் பரிமாணத்தை இரண்டு விதமாகக் காட்டும் ஓவியம் இடம்பெற்றிருக்கும் ' அது ஒரு பாதை மட்டுமே ', 'காக்கைகள் இல்லாத ஊர்' கதையில் வரும் காக்கைகளின் படங்கள் விஜய் பிச்சுமணியின் கைவண்ணத்திற்குச் சான்று.'இதில் என்ன இருக்கிறது... இதெற்கெல்லாம்  கவலை படத்தேவையா என்று நாம்  அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளும், பரிணாமம்,  தேவையானது என நாம் நம்பும் அறிவியல் முன்னேற்றங்களும் எத்தனை பெரிய ஆபத்தையும் அழிவுகளையும் கொண்டு வரும் என்பதற்கு உதாரணக் கதைகள் ஆகின்றன 'காக்கைகள் இல்லாத ஊர்'  மற்றும் ' அது ஒரு கனவு மட்டுமே'.  

23 வதாக எட்டிப் பார்த்தவர்களாக' பாலத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் சராசரி வகையான குச்சி மனிதர்கள், 'அது ஒரு கனவு மட்டுமே '  கதையில் வரும் தூக்கம் தொலைத்த ஆதார் ஆவண  கண்கள், ரோஸ்வுட் மேசை, நாற்காலிகள் என்று  கணபதி சுப்ரமணியத்தின் ஓவியங்கள் கதைகளுக்குப் பொருத்தமானவை.அனைத்துக்கதைகளுமே திரும்பிப் படிக்கத் தோன்றுகிறது.  திரும்பப் படிக்கத் தூண்டும் அனைத்துக் கதைகளுமே சிறந்தக் கதைகளாகவே இருக்கின்றன. சரியாகப் புரியாதது போல் தோன்றும் அனைத்துக் கதைகளுமே உணர்வு ரீதியான மாற்றத்தைத் தருகின்றன.' p for பாலவிடுதி' மொழி திணிப்பின் அடையாளம். 'மீனு' நடுத்தர வர்கக் குடும்பத்தின் திணறலை தீர்க்கும் தேவதையாகின்றாள். 

நினைவலைகளாய் விரியும் சிற்பம் சொல்லும் 'உண்மையும் மகத்தான உண்மையும் ' கதையில் யாழி, சிற்ப தேவதையின் எண்ண ஓட்டங்களுடன் அரசியலை  வெளிப்படுத்துவதாக இருந்தது வட்டவட்டமான சுஜித் குமார் ஸ்ரீ கந்தனின் ஓவியம். 1799  ஆண்டில் வெளிவந்த கோயாவின் ஆந்தைகள், வௌவால், ஓநாய்கள் சூழ்ந்த  ஓவியம் மக்கள் காலி செய்த ' நகரம்'  கதைக்குத் துணையாய் நிற்கிறது. வங்காளி கதையில் , கதாநாயகனை வரையும் வங்காளி கண்ணம்மாவை நரேந்திர பாபுவின் ஓவியத்தில் காணமுடிகின்றது.சொல்லப்பட்ட
கதைகளும் சொல்லப்படாத கதைகளையும் தனக்குள் அடக்கியவள் தான் இந்த கண்ணம்மா.

யாவரும் பதிப்பகம் விலை  150 பக்கங்கள் 148

Thursday, March 8, 2018

வ.ஐ.ச. ஜெயபாலன் குறுந்தொகை

ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரர். மெட்ராஸ் படச் சுவற்றை கம்பீரமாய் அலங்கரித்தவர். சிறந்த குணச்சித்திர நடிகர் என்று அறியப்பட்டவரைச் ஒரு மிகச்சிறந்த கவிஞராக இந்த புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஈழத்துக்கவிஞரின் கவிதைகள்  வருடங்கள் வாரியாக பிரித்து தொகுக்கப்பட்டு இருக்கிறது.நினைவுகள் போலவே,  எழுதப்பட்ட கவிதைகள் வருடத்தைக் கொண்டு பின்னோக்கி பயணிக்கின்றன.

பல கோடி விந்துக்களில் வீரியமானவை மட்டுமே வாசகர்களின் மனதில் கருத்தெரிக்கும். ஜெயபாலன் அவர்களின் கருத்துப்படியே என்னுள் கருத்தரித்த சில கவிதைகளை ஈன்றெடுக்கின்றேன். ஐந்திணைப்பாடல்களில் ஒவ்வொரு நிலத்திற்குரிய அழகு உவமைகளுடன் மக்களின் வலியும் புகுத்தப்பட்டு இருக்கிறது. 'வண்டின் பாடலில் 
 மயங்கி மொட்டுக்கள் துகில் அவிழ்க்கிற மாலை' மருத நிலத்தின் மயக்கத்தையும் கொடுத்து 'ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் ' என்று ஏக்கத்தையும் விதைத்துச் செல்கிறது. 'ஆம்பல் கேணிக் கண்களை உப்புக்கடலாக்காதே'. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை உணர்த்தும் பிரத்யேகச் சொற்றொடர். 


'என் கதை' என்ற தலைப்பில்,  ஒரு மரமும் பறவையும் காவியமானது என்ற கவிதை வரிகளில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே இருக்கும் காதல், கூடல், ஊடல் ,  எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் போன்றவைச் சொல்லப்படும் பொழுது பிரமிப்புடன் சேர்ந்து அந்த கவிதை வரிகள் அனைத்துமே நம் மனதிற்கும் நெருக்கமாகி விடுகின்றன. 'நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு'.எல்லா காலக்கட்டத்திலும் கணவன் மனைவிக்கு நடுவே இருக்கும் வேறுபாடுகள் சிறப்பாய்ச் சொல்லப்பட்டதற்கு இந்த வரிகள் ஒரு சான்று.



'சமையலறையின் வேலியைப் பிரித்தால் சமவெளி எங்கும் குறிஞ்சி மலர்கள்' , 'திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர் குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்ததாக நம்ப விரும்புவோர் தேசத்தில்' போன்ற வரிகள் , அடைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கான கதவுகளைத் திறக்கின்றது. அம்மாவுக்கு மகள் எழுதிய கடிதத்தில், வெளிப்படுத்தப்படும் 
போரில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவம் , இளைய தலைமுறைப் பெண்ணின் அழுத்தமான முடிவும் ,உறுதியும் என்றைக்கு வாசித்தாலும் அனைவருக்கும் உத்வேகத்தைத் தரக்கூடியவை.


அகதி விசாரம் என்ற தலைப்பில் 'இராவணனாலும் அனுமனாலும் மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம் தீயிடப்படுகின்ற துயரத்தினாலா', 'கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை', 'ஈசலாய்ப் பறக்கும் என் தாயக மக்கள்',' 'பதுங்குகுழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில்', 'வாழும் என் விருப்பைத் 
தேயிலைக் கொழுந்தாய் கிள்ளிச் செல்கின்ற துயர்' போன்ற வரிகளை வெறும் வரிகளாய் படிக்க முடியவில்லை. ஒரு போரினால் ஏற்படும் கொடுமைகளின் உக்கிரத்தையே அந்த வரிகள் உணர்த்துகின்றது.  

க்ரியா பதிப்பகம் -  விலை 170 ரூபாய் - பக்கங்கள் 184

Sunday, March 4, 2018

நகர்வலம் - மாநகரத்தை மகிழ்விக்கும் இசை

இசைக்கு மொழி இல்லை. சாதி இல்லை.மதம் இல்லை.பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில்தான் ‘கிரியேட்டிவ் சிட்டீஸ்’ பட்டியலில் நம் சென்னை மாநகரத்தைச் சேர்த்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.கர்நாடக இசைக்கும், வெகுஜன இசைக்கும், நடன இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் சென்னை புகலிடமாக விளங்குகிறது.

அதில் மிகவும் முக்கியமானது கானா இசை என்றழைக்கப்படும் சென்னைப் பாடல்கள். வடசென்னையில் துள்ளலாய் ஆடத்தூண்டும் சென்னைப்பாடல்களுக்கு என்று ஒரு தனி இரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் கல்லூரி மாணவர்களால் பிரபலமாகத் தொடங்கியது.திரை இசைப் பாடல்களில் இடம்பெற்றபின் உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

கானாவின் மிக முக்கிய அம்சமே பங்கேற்பு. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லை.கையில் கிடக்கிற தட்டு, தகரம் என ஓசை தருகிற எதுவும் கானா பாடலுக்கான இசைக் கருவிகளாகிவிடும்.  மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் பொருந்துமாறு பாடல்கள் அமைந்திருக்கும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்கும்.தற்பொழுது மேளம், டிரம் ,பறை, முரசு கட்டை, டோலக், இடுகட்டிசட்டியோடு டிரம்ஸ், கிட்டாரும் இசையால் கைகோற்று  புதுப்புது இளம் இரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

ஒரு சாமான்ய மனிதனின் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டத்தை, அனுபவிக்கும் கொடூரத்தை, உற்சாகத்தை, துக்கத்தை, பாசத்தை, துரோகங்கள் மீதான கோபத்தைத் அவர்களாகவே மெட்டமைத்து, இட்டுக்கட்டிய பாடல்களால் வெளிப்படுத்திக் கொள்ள கானாப்பாடல் என்றழைக்கப்படும் சென்னை பாடல்கள் வடிகால்களாக பயன்படுகிறது. ஒருவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து சென்றார் என்றால் இரண்டு மாட்டு வண்டிகளை ஒன்றாகச் சேர்த்து, அவசர மேடை ஒன்று அமைக்கப்படும். அந்த மனிதனைப் பற்றியும் அவரது குணநலன்களையும் சம்பவங்களையும் வைத்து அங்கேயே அப்போதே பாடல்கள் தயாராகி கச்சேரியில் அரங்கேறும். விடிய விடிய கானா நடப்பதும் உண்டு. முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு நினைவுநாளிலும்கூட கானா பாடுவார்கள்.


கானா கலைஞர்கள் என்றால் கைலி கட்டி இருப்பார்கள்.  துக்க வீட்டில் மட்டும்பாடிக்கொண்டு இருப்பார்கள். யாராவது ஊற்றிவிடுகிற மதுவைக் குடித்துக்கொண்டு இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடமும் ஆணாதிக்க வக்கிரம் இருப்பதன் அடையாளமாகப் பெண்களை இழிவுபடுத்தும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். கடைசியில் கிடைக்கிற கூலியோடு திரும்பிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான எண்ணம் தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கிறது.நவீன உடை உடுத்தி, நவீன தொழில்நுட்பங்களை வசப்படுத்தி,சம உரிமைக்காகப் போராடும் சிந்தனைகள் ,சாதியை அழித்தொழிக்கத் துணிகரமாக இயங்கிய அம்பேத்கரின் கருத்துகளுடன் கானா பிரம்மாண்டமான அரங்களில் அரங்கேற்றப்படுகிறது.

கானா பாடல் வடசென்னையின் பூர்வீக மக்கள் வாழ்நிலையிலிருந்து புறப்பட்ட கலை. சமூகக் கட்டமைப்பில் ஒதுக்கப்பட்டது போலவே, “செவ்வியல் இசை” எனப்படும் தளங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்டவர்களின் இசை ஆக மலர்கிறது.சாதிய ஒடுக்குமுறையை, வர்க்கப் பாகுபாட்டை உடைத்தெறியச் சமீபகாலமாக இசைவிழா போன்ற முன்னெடுப்புகள் ஆங்காங்கே நடந்தேறிவருகின்றன. இவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அல்லாமல், அரசியல் விழிப்புணர்வுக்கான மகத்தான கருவி இசை என்பதையும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளது.

பட்டம் விடும் கயிற்றால் ஏற்படும் மரணங்கள், சாலை விதிகள் பற்றிய புரிதல் என்று பல நல்ல கருத்துகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே கானா பாடல் வழியாக  சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பாடல்களை இயற்றி
சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.பேருந்துகளில் இளைஞர்கள் பாடும் கானாப்பாடல்கள் தொந்தரவாக இருக்கிறது என்று சிலர் குறைகூறினாலும், அவர்களும் அந்த எளிய பாடலின் அர்த்தத்யையும் இசையையும் இரசிக்கத்தான் செய்கிறார்கள்.


மனதிற்குள் சிலர் கானா பாடல்களை இரசித்தாலும் பலர் அதை பாடுபவர்களிடம் சொல்லாமல் போய்விடுகின்றார்கள். ஒரு கலைஞனுக்கு உச்சகட்ட பாராட்டாக எது அமைந்து விடும்? பணம், புகழ், மரியாதை கிடைத்தாலும் எளிய மக்களின் வாழ்த்தும், அன்புமே அவர்களை முழுமை அடையச்செய்கிறது . இந்த இசை இரைச்சலாய் காற்றில் கரைந்து விடாமல் வலியின் ஆழத்தை நம்  இதயங்களில்  பதிய  வைக்கிறது.

கானா இசைக்கலைஞர்களுக்கு உண்டான மரியாதை பல இடங்களில் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது.அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணம் கொடுப்பதில் பாகுபாடும் அலைக்கழிப்பும்  இருப்பது வருத்தம் அளிக்கிறது.இசையைப் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை நம்முள் இருக்கிறது. ஆனால் அந்த இசையால் மட்டுமே புரட்சியை, செழுமையான கருத்துக்களை மக்களின் மனதில் சுலபமாக விதைக்க வைக்கும் சூட்சமம் இருக்கிறது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். இசையில் உயர்வு தாழ்வு இல்லை. நம்முள் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு மருந்தாக நம் மாநகரத்தின் இசையே இருக்கிறது. எளிமையான மக்களின் துயர் நீக்கும் இசையைக் கொண்டாடுவது மட்டுமல்ல அதை  வெளிப்படுத்தும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே.....