புதிதாக ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் பொழுது, சில கதைகள் ரொம்பவே சிறப்பானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்து விடும். சில கதைகள் புரியவே இல்லையே.. திரும்பிப்படித்தால் தான் புரியுமோ என்றும் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லா கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. அதுற்குக் காரணமாக அரிசங்கர் அவர்களோட இயல்பான மொழிநடை , யதார்த்தமான கதாபாத்திரங்கள், கதைக்களங்களைச் சொல்லலாம்.
ஒரு பெண் என்றாலே பலவிதமான எதிர்பார்ப்பை வைக்கும் இந்தச் சமூகம் அவளின் சிறு எதிர்பார்ப்புக்குக் கூட தலைசாய்க்கத் தயாராய் இல்லை. பெண் என்றாலே அவள் அழகாகத்தன்னைச் சிங்காரித்துக்கொள்ள வேண்டும். சுகந்தத்துடன் சுற்றித் திரிய வேண்டும் என்ற இந்த சமூகத்தின் கட்டமைப்பு சரி என்றால் ஒரு பெண் தன் இணையிடம் விரும்புவதை அவன் நிறைவேற்றுவது தானே மரபு.
பெரும்பாலும் பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்குத்தான் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. சமூகத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்போம். பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பதட்டம் 'மௌனம் கலையட்டும்' சிறுகதையைப் படித்ததும் ஏற்பட்டது. நான்கு வயது மகளிடம் சென்று , 'பாப்பா , உன்னை யாராவது தொந்தரவு செய்றாங்களா?' என்று கேட்க மனம் படபடத்தது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.
உடலளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியான மாற்றத்தை உணரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அன்புடன் அணைத்துக்கொள்ளும் மனநிலையையும், சக மனிதராக பாவிக்கும் பக்குவத்தையும் 'நிழல் தேடும் பறவைகள்' கதை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையையும், கொடுமைகளையும் சுட்டிக்காட்டும் 'பிணந்தின்னி கள்', 'புதுச்சட்டை' சிறுகதைகள் நம்முள் இருக்கும் மனிதத்தை உரசிச்செல்கின்றன.
செஞ்சிறை கதை முழுவதும் பயணித்து வந்த பயமும் அச்சமும் பிறந்த பிள்ளையின் அழுகையை அடக்க, பால் சுரக்காத தன் முலைகளை அம்மா அதன் வாயில் புகட்டியபொழுது உச்சம் பெற்றது.
குக்கூ படத்தை பார்த்த பொழுது ஏற்பட்ட ஒருநெகிழ்வை 'தொடுதல்' சிறுகதையில் உணரமுடிந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சீண்டல்களையும், பிரச்சனையையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தொடரும் நிலைமை, எத்தனை பெரிய மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்திருப்பதால் ' விடுவிப்பு ' கதையின் நாயகிகளுடன் எளிதாகவே ஒன்றிவிட முடிந்தது. பிரச்சனைகளை வெளியே சொன்னால் அதற்கு காரணமாக பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லவும், அதில் இருந்து விலகி ஓடுவதற்கும் அறிவுரை சொல்லத்தான் எத்தனை பேர் தயாராய் இருக்கின்றார்கள். ஒரு பெண் என்றால் அவளுக்குப் பிரச்சனையே வரக்கூடாது என்பதில் தான் அனைவரது கவனமும் இருக்கின்றது. அதை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித்தர பெற்றோரும், கணவரும், குடும்பமும், சமூகமும் கிஞ்சித்தும் முயற்சி எடுப்பதே இல்லை.
நமக்கு பிரியமானவர் இறந்து விட்டார் என்பதை விட அவர் எங்கேயோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம்மை வாழ்க்கை ஓட்டத்தில் வெகுதூரம் அழைத்துப்போகும் ஆற்றல் பெற்றது. அதுதான் 'புயல்' கதையும் கருவும் கூட.அரிசங்கர் அவர்களின் முதல் புத்தகம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. தன் எழுத்தைப் பரிகாசம் செய்தவர்களுக்குத்தான் இந்த பதிலடி என்று தனது நூல் வெளியீட்டில் குறிப்பிட்டு இருந்தார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது 16 சிறுகதைகளுமே சிறப்பா இருந்து விடுமா என்ன? என்று நினைத்த எனக்கு தான் இந்த பதிலடி.
பக்கங்கள் - 136
விலை - 150