சினிமாவில் வடிவேலு கேட்பதுபோல் துபாய்ல எங்க இருந்தீங்க? ஷார்ஜாவா ? அபுதாபியா ? பஹ்ரைனா? என்பது போன்ற சிற்றறிவு தான்
எனக்கும் துபாய்க்கு வருவதற்கு முன்னால் இருந்தது.
ஷார்ஜா, அபுதாபியாவது ஐக்கிய அரபு அமீரகத்தினுள்
உள்ளவை. பஹ்ரைன் என்பது வளைகுடாவைச் சேர்ந்த தனிநாடு.
தற்பொழுது பரவலாக அனைவருக்கும் வளைகுடா நாட்டைப்
பற்றி விழிப்புணர்வு இருந்நாலும் நம் மக்கள் அழகான அறியாமையில் இருப்பதை
தெளிவுபடுத்தும் பொறுப்பு நமக்கும் இருக்கிறதல்லவா?
முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தின்
பெயர்களை மனப்பாடம் செய்ய வழி சொல்லிக் கொடுத்தேன். துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பெயர்கள்
பரிட்சயமானவை என்பதனால் அதை விட்டுவிட்டு உம் அல் குவைன் (ராணி), ராஸ் அல் கைமா(கைமா பரோட்டா), புஜெய்ரா (ஜெய்ராம்), அஜ்மான்(மான்) என்ற மற்ற
பரிட்சயமில்லா பெயர்களை விளையாட்டாக ஞாபகம்வைத்துக் கொள்ள கற்பித்தேன். ஐக்கிய
அரபு அமீரகத்திற்கு என்று அயல்நாட்டு நுழைவுச் சான்று ( visa) வாங்கிவிட்டால் இந்த ஏழு அமீரகத்தியையும் சுற்றி வரலாம் என்று
தெளிவுபடுத்தினேன்.
துபாய்ல எங்க இருக்கீங்க? என்றென்னிடம்
நீங்கள் கேட்டவுடன், நான் துபாய் பேருந்து நிலையம் அருகே என்றால்
சிரிக்காதீர்கள்!என் வீடு அல்குபைபா (al ghubaibha) பேருந்து
நிலையத்திற்கு அருகேதான் இருந்தது. ஷார்ஜா போவதற்கு நான், என் கணவர், குழந்தையுடன்
அங்கேதான் நின்றிருந்தோம். ஷார்ஜாவில் என் பள்ளிகால கணினி ஆசிரியை ஜெயசித்ரா
அவர்களின் வீட்டுக்குப் போகிறேன் என்றால் அனைவரும் வியப்பாய் ஒரு பார்வை
பார்க்கத்தான் செய்வார்கள்.
பள்ளிகாலத்திலேயே ஜெயசித்ரா ஆசிரியை அவர்கள் திருமணம்
முடிந்து ஷார்ஜாவிற்கு செல்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தோம்.
கணினி பயிற்சி மட்டுமல்லாது பள்ளியில் ஒலிபெருக்கியில்
அவர்பாடியதும் என்றும் மனதில் நிற்கும் பசுமையான நினைவுகளே!
இப்பொழுது அவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாது தெரிந்தக்
கடைக்காரரும் கையிலே குழந்தையுடன் இருக்கும் என்னைப் பார்த்து உங்கள் மாணவியா
என்று ஆச்சரியப்பட்டார்கள்.சமூக வளைதளங்களின் உதவியால் பலவருடங்கள் கடந்து என்
ஆசிரியருடன் தொடர்பு ஏற்பட்டது நான் பெற்ற பாக்கியமே!
தற்காலிக பயணஅட்டையை துபாயினுள்ளே பேருந்து, இரயில், டிராம் வண்டி, பயணத்திற்கு
மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதை அப்பயணத்தின் போதுதான்
தெரிந்து கொண்டோம் .நல்ல வேளை நிரந்திர பயண அட்டை வைத்திருந்ததால் பக்கத்தில்
உள்ள பேருந்து அலுவலகத்திலேயே சென்று அதன் மதிப்பை உயர்த்திக் கொண்டோம்.
துபாயிலிருந்து ஷார்ஜா செல்லும் பெரும்பாலான பேருந்துகள்
இரண்டு அடுக்குக் கொண்டவையாகவே இருக்கும்.அதில் பயணம் செய்யும் பொழுது குழந்தை
போன்று நான் கொண்ட குதூகலத்தை என் கணவர் வித்தியாசமாகக் பார்த்தார். சிறுவயதிலிருந்தே
அத்தகைய பேருந்தில் பயணம் செய்யும் ஆசை எனக்குள் ஒளிந்திருந்தது எனக்கு மட்டும்
தானே தெரியும்.
பேருந்தின் கீழ் அடுக்கில் என் குழந்தையை வைத்து தள்ளும் இழுபெட்டியை ஓரமாக நிற்கவைத்து பேருந்திலுள்ள இணைப்புடன் கட்டிவிட்டு மேலே சென்று பயணத்தை இரசிக்கலானோம்.
ஷார்ஜாவில் வீட்டு வாடகை சற்று குறைவு என்பதால் மக்கள் பலர்
அங்கு தங்கியிருந்ததால் ஷார்ஜா சாலை பெரும்பாலும்
போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படும்.
தமிழர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகம் என்பதால்
பேருந்தில் தமிழ் பேச்சுக்கள் அங்கங்கே கேட்டன.ஆதலால் எங்கள் பேச்சுவார்த்தையின்
சத்தத்தைக் குறைத்து எங்கள் மானம் கப்பலேராமல் காத்துக்கொண்டோம்.
என் ஆசிரியையின் கணவர் பாஸ்கர் அவர்கள் அலுவலக நிமித்தமாக
துபாய் வந்திருந்ததால் என் பெற்றோரும் , அத்தையும்
அவருடன் ஷார்ஜாவிற்கு மகிழுந்தில் மகிழ்ச்சியாய் கிளம்பி இருந்தார்கள். அப்பா ஒரு மட்டைப்பந்து இரசிகர், இல்லை...
இல்லை .... வெறியர் என்பதால் போகும் வழியில் பாஸ்கர் அவர்கள் வெளியிலிருந்தே காட்டிய ஷார்ஜா மட்டைப்பந்து விளையாட்டு மைதானம் அப்பாவிற்கு
பிறவிப்பயனை அடைந்தது போன்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.
விருந்தினர்களை பாஸ்கர் அவர்கள் தன் வீட்டில் விட்டுவிட்டு எங்களை வரவேற்க பேருந்து நிலையம் வரசரியாக இருந்தது. மதிய விருந்திற்கு என் ஆசிரியை என் குடும்பத்தாரை வரவேற்றிருந்ததால் அனைவரும் உணவிற்குப் பின் ஷார்ஜாவை சுற்றிப்பார்க்க முடிவு செய்திருந்தோம்.
என் ஆசிரியை என் மகளுக்கு பிறந்தநாள் பரிசாய் வாங்கித் தந்திருந்த ஆடையை அவள் உடுத்தியிருந்ததால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அவர்களின் மகன் சரணும், மகள் கிருத்திகாவும் என் குழந்தையுடன் உற்சாகமாக விளையாடி ஒரு தனிஉலகில் லயித்து இருந்தனர்.
விருந்துண்டபின் நீர்வாழ் காட்சிசாலையையும், அருங்காட்சியமும் பார்க்க அழைத்துச் சென்றார்கள். அவர்கள் ஏற்கனவே
பார்த்துவிட்டதால் நாங்கள் சுற்றிப் பார்த்துவிட்டபின் தொலைபேசியில் அழைக்குமாறு
சொல்லிச் சென்றனர். அங்கு நுழைவுச் சீட்டு, மற்ற நீர்வாழ் காட்சிசாலையைக் காட்டிலும் மலிவு என்றாலும் 25திராம்களை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்
அப்பா.
இந்த நாட்டுப் பணத்தை இந்திய பணத்திற்கு மாற்றிப்
பார்த்தால் சந்தோஷமாக சுற்றுலாவை அனுபவிக்க முடியாது என்று கூறி அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனானேன். விசித்திரமாகவும் , வித்தியாசமாகவும் இருந்த பல வண்ண மீன்களைக் கண்டு என்
குழந்தைமட்டுமல்லாது அனைவருமே குதூகலமானோம். தொலைக்காட்சியில், திரைப்படத்திலுமே
மட்டும் பார்த்து பயந்து இரசித்திருந்த மீன்களையும், கடல்வாழ் உயிரினங்களையும்
நேரில் பார்ப்பது சிலிர்ப்பாய் இருந்தது.
தண்ணீருக்குள் ஏற்படுத்திய குகைப் போன்று அமைந்திருந்த
வழியே சென்றது சிறப்பான அனுபவமாயிருந்தது. உள்ளே இருந்த அனைத்து கடல் வாழ் உயிரனங்களும் வெளியே மாதிரி
பொம்மைகளாக தத்ரூபமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் விலைதான் வழிக்கு வரவில்லை.
சில நூற்றாண்டுகளுடனான பாரம்பர்யத்தையே கொண்டிருந்தாலும்
இவ்வளவு நேர்த்தியாக மீன்பிடி , முத்துக்
குளிப்பு , கப்பல் செய்யும் தொழில்களைக்
கொண்டு மிகவும் புதுமையாக உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியம் அருமையாய் இருந்தது.
இவர்களை விட பல்லாயிரமாண்டு நாகரிகம், விஞ்ஞானம், கலை, அறிவியல்,
கலாச்சாரத்தையும் நாம் கொண்டிருந்தாலும் அதனை உலகிற்கு திறம்பட தெரிவிக்கவும், அதன் சிறப்பை உணரவும் தவற விட்டுவிட்டோம் என்ற மதுரையைச்
சேர்ந்த அத்தையின் வருத்தம் எனக்கும் சரியாகத்தான் பட்டது.
அல்கஸ்பா என்ற இடத்திற்கு அடுத்ததாக எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த குளிரூட்டப்பட்ட இராட்சத இராட்டினத்தில் பயணம் செய்ததால் 'அமீரகத்தின் கண்'ணில் பயணம்
செய்தோம் என்ற பெருமை கொண்டோம். அங்கிருந்து ஒட்டுமொத்த அமீரகத்தையும்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட சிறுசிறு நீரூற்றில் அனைத்து
குழந்தைகளும் விதவிதமாக சேட்டைகள் செய்து மனதை கவர்ந்து கொண்டிருந்தன. பொங்கி
வரும் சிறு நீரூற்றின் மேல் படுத்துக் கொண்டும், உட்காருவது போலவும்
ஆட்டம்போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு உருளைக்கிழங்கை மிகவும் வித்தியாசமாக ஒரு குச்சியில்
சுற்றி வருவலாக விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒளித்திருவிழாவில்
பலவகையான வண்ணங்களுடைய கிளர்கதிர்களுடன் (laser) பிரகாசித்துக் கொண்டிருந்தது.
பல வகையான மயிர்கூச்செரியும் இராட்டினங்கள் என் மனதைப் பயணம்
செய்ய ஈர்த்தாலும், கணவர் 18ம்
வாய்ப்பாட்டைக் கணக்கிட்டுக் கொண்டே குழந்தைக்கு சொல்வதைப் போல எந்த இராட்டிணமும் நல்லா
இருக்காது, ஆபத்து நிறைந்தது என்று கூறி அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்வதிலேயே
கவனமாய் இருந்தார். துணையாய் யாரும் சாகசப் பயணம் மேற்கொள்ள அருகிலில்லாததால்
சிறிது வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்தேன்.
என் வருத்தத்தை புரிந்து கொண்ட அன்புக்கணவர் விரைவிலேயே
சிறந்த இராட்டினங்கள் அமைந்த புகழ்பெற்ற கேளிக்கை பொழுதுபோக்கு அரங்கத்திற்குக்
கூட்டிச் செல்கிறேன் என்று கூறி என் வருத்தத்தைப் போக்கி என் முகத்தில் புன்னகையை
வரவழைத்தார்.
பொருட்காட்சி போன்று தோற்றம் அளித்தாலும் நீரோடைப் போன்று
ஏற்பாடு செய்து அதில் படுகுசவாரியும் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அடுத்ததாக அல்மஜாஸ் பூங்காவிற்குச் (al majaz) செல்ல
ஆயத்தமானோம்.
பிரயாணம் செய்த வழியில் உலகிலேயே உயர்ந்த 7வது கொடிக்கம்பம்
இருந்ததை என் ஆசிரியையின் மகன் தான் எங்கள் அனைவருக்கும் காட்டினான். தள்ளி
இருந்து பார்த்ததாலோ என்னவோ எனக்கு அதன் தாக்கம் ஏற்படவில்லையாததால் அவனிடம்
கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தேன்.
இரயில் போன்று வடிவம் கொண்டிருந்த இரண்டு கட்டிடங்கள் என்றும் அழியாமல் மனதில் பதிந்து கொண்டது. ஒளித்திருவிழாவை முன்னிட்டு
பல இடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மனதை மயக்கும் வகையில் அரசாங்க கட்டிடத்தின் மேல் ஒலி ஒளி வடிவுடன் சில
கருப்பொருள்களை மையமாகக் கொண்டு ஒளித்திருவிழா
பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பின்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் பல
இடங்களில் கட்டணமில்லா ஷார்ஜாவின் ஒளித் திருவிழாவை வியப்புடன் இரசித்தோம்.
ஷார்ஜாவில் மெட்ரோ கிடையாது என்பதால் வாடகை மோட்டார்
வண்டியில் தான் பயணம் செய்தோம். அதன் செலவையும் எங்களை கொடுக்கவிடாது, என்
ஆசிரியையே கொடுத்தார்கள்.
குறித்த நேரத்தில் இல்லாவிட்டாலும் சிறிது தாமதமாக அல்மஜாஸ்
பூங்காவில் பாடலுக்கு ஏற்ப நீரூற்று நடனமும் ஒளிக்கதிர்
நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆனால் எப்பவும் நடப்பது போல நீரூற்றின் மேல் அரசர்களின் புகைப்படத்தை பிரதிபலிக்கும்
வகையில் ஒளிமி (டaser) காட்டப்பட்டு சிறப்பாக நடக்கவில்லை என்று என் ஆசிரியை குடும்பத்தினர் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். கட்டணமில்லா
அரசுப்பூங்காவின் கழிவறைகள் கூட நட்சத்திர விடுதியின் தூய்மைக்கு நிகராக
இருந்ததைக் கண்டு அனைவருமே ஆச்சரியப்பட்டோம்.
அடுத்த முறை என் கணவரின் பெற்றோருடன் ஷார்ஜா வந்திருந்த
பொழுது அல்மஜாஸ் பூங்காவில் இறங்கிய நேரம் வான வேடிக்கையைப் பார்க்கும்
வாய்ப்புகிட்டியது. சாதாரணமான பட்டாசுகளைக் காட்டிலும் வெவ்வேறு வண்ணங்களுடனும்,
விதவிதமான வடிவங்களுடன் அவை மனம்கவர்வதாக அமைந்தன. என் குழந்தையோ பட்டாசு தன்னை
நோக்கி வருவதாக நினைத்து அலர ஆரம்பித்தாள்.
இரவு உணவுக்காக ஒரு தமிழ் உணவகத்திற்குச் சென்ற பொழுது
அம்மா, பேரங்காடிகளின் பல நாட்டுவகை உணவகங்களில் இருந்து வரும் ஒன்றுபட்ட
வாசனையிலிருந்து விடுபட்டு நம் உணவின் வாசனையை நுகரும் பொழுதுதான் புத்துணர்ச்சி
வருகிறது என்றதைக் கேட்டு அனைவரும் நகைத்தனர்.
வடைபிரியரான அப்பாவிற்கு அங்கு வடையின் விலையைக் கேட்டு
மயக்கம் வந்துவிட்டது. வாழ்க்கை முழுவதும் தினமும் யாரேனும் வடை கொடுத்தார்கள்
என்றால் தன் சொத்தில் பாதியை கொடுத்துவிடுவேனென்று அப்பா கூறியது ஞாபகம் வந்தது.
விருந்தினர்களை உபசரிக்கும் விதமாக, எங்கே உணவுக்கான பணத்தை நாங்கள் கொடுத்துவிடுவோமோ என்று
முதலிலேயே அவ்வுணவகத்தில் பணம் கொடுத்து அதீத அன்பால் திக்குமுக்காடச் செய்தார்
பாஸ்கர் அவர்கள். எங்கள் இடத்திற்கு வந்து உங்களைப் பணம் கொடுக்க விட்டுவிடுவோமா
என்று புன்னகைத்தார். பிரியும் வேளையில் ஞாபகப் பரிசுகளை வழங்கி இதயத்திலும் குடும்பத்துடன்
இடம்பிடித்துக் கொண்டார்கள்.
ஷார்ஜா என்றாலே உங்களின் நினைவுதான் வரும் என்று அப்பா
நன்றி தெரிவித்தார். அவர்களின் அன்பில் உருகி என் ஆசிரியையின் கைகளில் நான்
முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்க என் கணவர் வந்து உங்க ஆசிரியை என்ன பாட்ஷா
பாய்யா என்று கேட்க அனைவரும் வெடித்துச் சிரித்து இனிமையான நினைவுகளுடன் வீடு
திரும்பினோம்.