பர்துபாயிலிருந்து (Burdubai) நீண்ட மெட்ரோ இரயில் பயணத்திற்கு என் பெற்றோர் தம்பிதுரை-சாந்தி
தம்பதியினரையும், அப்பாவின் அக்காவான மாரீஸ்வரி அத்தை
மற்றும் என் குழந்தை அமிர்தவாணியையும் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். கோவில்பட்டியிலிருந்து
வாங்கி வந்திருந்த பிரசித்திபெற்ற எள், கடலை,கொக்கோ மிட்டாய்களுடன், கருப்பட்டி,
சீனி மிட்டாய் போன்ற ஏணிப்படி மிட்டாய்களையும், சிவப்பு நிற தேங்காய் பர்பிகளையும்
திண்பண்டமாக எடுத்து வைத்து பயணத்தை இனிமையாய் ஆரம்பித்தோம்.
அனைவரும் செலவைச் சுலபமாக கணித்துக் கொள்ள
பதினெட்டாம் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்திருந்தார்கள். முதல் தடவையாக தனியே
வெளியில் விருந்தினர்களை அழைத்துச் செல்வதால் ஒருவகையான பதட்டத்துடன் இருந்தேன்.
என்னதான் துபாயைக் ஏற்கனவே கணவர் சுற்றிக்காட்டியிருந்தாலும் வேறு நாடாயிற்றே?
ஏதேனும் தவறு நடந்து அபராதமேதேனும் கட்டவேண்டி வருமோ
என்ற பயமே பதட்டத்திற்குக் காரணமானது.
நல்லபடியாக விருந்தினர்களை அழைத்துச்
சென்று எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டிய பின் வீடுகொண்டு சேர்ப்பதிலேயே என்
எண்ணம் இருந்தது. மாமனார், மாமியாரின் வருகையென்றாலும் மிகுந்த ஈடுபாட்டுடன்
என்னுடன் சேர்ந்து மூளையைக் கசக்கி அனைத்து சுற்றுலாத் தளங்களையும் ஆராய்ந்து
அதற்காக எளிதான முறையில் செல்லும் வழியையும் , மலிவான வாகனப் போக்குவரத்து வாய்ப்புகளையும்
பட்டியலிட்டிருந்தார் என் ஆசைக் கணவர் ஶ்ரீகாந்த் அவர்கள்.
இந்த அனுபவம் பின்நாளில் அமீரகச்
சுற்றுலா வந்த என் கணவரின் பெற்றோரான மாமா கருப்பசாமி , அத்தை
தமிழ்செல்வி , என்
மாரீஸ்வரி அத்தைமகன் இராம், அவனது மனைவி உமா மற்றும் பல நண்பர்கள், உறவினர்கள்
அனைவருக்கும் ஒரு சுற்றுலா வழிகாட்டி தம்பதியராய் வலம் வர உதவி
செய்தது.
‘இபன்பட்டுட்டா பேரங்காடி’ என்று கணவர் அவர்களுடன் சேர்ந்து வரையரைக்கப்பட்ட சுற்றுலா அட்டவணையின்படி முடிவு செய்திருந்தமயால், வீட்டின் அருகேயுள்ள அல்பஃகிதி (alfahidi) மெட்ரோ இரயில் நிலையம் செல்ல
ஆயத்தமானோம்.
முதல் தடவை என் கணவரின்
நண்பர்கள் குடும்பத்துடன் அந்த பேரங்காடிக்கு
வேறு சில இடங்களுக்குப் போய்விட்டுச் சென்றிருந்ததால், களைப்பில் சில அரங்கங்களைப்
பார்க்க முடியாமல் போயிருந்தது.
அப்பொழுது இந்த பேரங்காடியின்
சிறப்பை அறிந்திருக்கவில்லை . பின்னர் பெற்றோர், உறவினர்கள், சுற்றுலாவிற்கு வருகை
தருவதனால் தகவலைத் திரட்டிப் படித்து இருந்தேன். அதனால் இரண்டாம்முறை செல்வதானாலும்
எனக்கும் ஆர்வம் மேலோங்கியிருந்தது.
பயணத்தின் முதல் நாள்
என்பதாலும், அந்த பேரங்காடி சுற்றளவில் மிகப் பெரியது என்பதனால் முதல்நாளே விருந்தினர்களை
களைப்படையச் செய்து மிரட்டிவிடக் கூடாது என்று இபன்பட்டுட்டா பேரங்காடி மட்டும் கூட்டிச்
செல்லலாம் என்று ஒருமனதாய் முடிவெடுத்திருந்தோம்.
மெட்ரோ இரயில் பயணத்திற்காக வாங்கி
வைத்திருந்த நிரந்தர அட்டையைக் கணவர் தவறுதலாக அவரது அலுவலகம் எடுத்துச்
சென்றுவிட்டது நினைவுக்குவர இன்னும் பதட்டமானது. தற்காலிக அட்டைவாங்கிக்
கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொண்டு இரயில் நிலையம் அடைவதற்குள்ளேயே மாரீஸ்வரி அத்தை சோர்வானார்கள் .
இன்னும் எவ்வளவு தூரம் நடக்கவும்,
பயணமும் செய்ய வேண்டி இருக்கிறதென எனக்கு மட்டும் தான் தெரியுமென்பதனால் அத்தையுடன்
உற்சாகமாக போகின்ற வழியில் சோர்வு தெரியாமல் இருப்பதற்காக கட்டிடங்களைப் பற்றியும்,
வழியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களையும் கதைகளாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்.
பச்சை சிவப்பு மெட்ரோ பாதையைப் பற்றி
விளக்கமாய் கூறியபின்னும் குழப்பமாய் எல்லோரும் ஒரு பார்வை பார்த்ததனால்
போகப்போகப் புரிந்துவிடும் என்று கூறி இரயிலுக்குள் அழைத்துச் சென்றேன். மெட்ரோ
இரயில் பயணத்தில் எவ்வளவு தூரமென்றாலும் தனி நபருக்கு 3,5,7 திராம்களுக்குள் தான்
செலவு என்றதும் அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.
என் குழந்தையும் மெட்ரோ
இரயிலுக்குள்ளேயே அவளருகே இருந்த ஆப்பிரிக்கர்கள், பிலிப்பினோக்கள்,
கொரியர்கள், வெளிநாட்டவர்கள் என அமீரகத்தில்
குடிபெயர்ந்தோர், குடிமக்களென அனைவரிடமும் சிரிப்பாலும்,
மழலையாலும் மனம் கவர ஆரம்பித்திருந்தாள். அன்பின் வெளிப்பாட்டுக்கு
மொழி தடையாகாமல், புன்னகை, கையசைவுகள், சிரித்த முகங்களே மொழியாயின. அப்பாவும், அம்மாவும் மெட்ரோ இரயில் பயணத்தில் அதன் தூய்மையிலும், நேரம் தவறாமல் குறித்த காலத்தில் அதன் வருகையைக் கண்டும்
அதிசயித்திருந்தார்கள்.
போகின்ற வழியிலேயே என்னை நானே
ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல் பாவித்துக் கொண்டு வழியிலேயே தெரிந்த புர்ஜ்
கலிபாவையும் , புர்ஜ் அல் அராபைப் பற்றியும் சிறிது
முன்னுரைக் கொடுத்தேன்.இவர்களின் வருகைக்காக எல்லா சுற்றுலா தளங்களையும் சிறிது சிரத்தையெடுத்து இணையத்தில் படித்து வைத்திருந்ததுக்கு
பலனாய் "என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு" என்ற அம்மாவின் பாராட்டுதலும் , நெற்றியில் கொடுத்த முத்தமும் உற்சாகத்தைத் தந்தது.
அப்பாவோ நான் தற்காலிகப்
பயணச்சீட்டு வாங்கியபோது பேசிய ஆங்கிலத்தைச் சிலாகித்துப் பேசினார்.மகிழ்ச்சியாக
இருந்தாலும் , அந்த பிலிப்பினோவின் ஆங்கில
உச்சரிப்பிற்கு குத்துமதிப்பாக நான் பேசியதை நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.
இபன்பட்டுட்டா நிறுத்தம் வந்து,
இரயில் நிலையத்திற்கு வெளியே வந்தவுடனேயே பேரங்காடியும், கம்பீரமான இபன்பட்டுட்டா வாயிற்கதவும் வரவேற்றன. இபன்பட்டுட்டாவின்
பிரம்மாண்டமான வாயிற்கதவு தெரியுமாறும், மாதிரி இரும்புக்கம்பி பிரமிடுகளுடனும் சில
ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டு விரைவாக உலகிலேயே கருப்பொருள் கொண்டு
கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரங்காடிக்குள் கால்பதித்தோம். பேரீட்சை
மரங்களிலிருந்து பேரீட்சை காய்களும், பழங்களும் தரையிலும், தலையிலும் விழுந்து
எங்களை வலிமையுடன் தித்திப்பாக வரவேற்றன.
2005லேயே கட்டப்பட்ட பேரங்காடி
என்றாலும் புதிதாய் கட்டப்பட்ட பேரங்காடியைப் போன்று மிளிர்ந்தது. துபாயின்
கடைக்கோடியான ஜெபல்அலியிலிருந்தாலும் உலகப்புகழ் பெற்ற பேரங்காடிக்கு மக்கள் கூட்டம் அலைமோதத்தான் செய்தது.
முதலில் எங்களை வரவேற்றது
எகிப்து அரங்கம்.பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்களும், சித்திரங்களும் சுவர்களை அலங்கரித்தன. அதனை அத்தை ஒரு
குழந்தையைப் போல் ஆர்வமாய்த் தொட்டு இரசித்தார். மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத்
தூண்களுடைய நடைபாதையில் நடந்து கொண்டே கூரான வளைவுகளையும், கம்பீரமான விளக்குகளையும் இரசித்து நடந்தோம்.
குழந்தைகளைக் கவரும் வகையில்
பேரங்காடியினுள்ளே சிறுசிறு இரயில் பெட்டிகள் சுட்டிக்குழந்தைகளைச் சுமந்தபடி வலம்
வந்து கொண்டிருந்தன. ’எவ்வளவு அழகான மனதைப் பறிக்கும் விளக்குகள்’ என்று வியந்த
அத்தையிடம் உங்கள் வீட்டிலுள்ள விளக்குகளை விடவா இந்த விளக்குகள் அற்புதமாக
இருக்கிறது என்று பங்களா வீட்டு அத்தையைக் கிண்டலடித்தேன்.
அங்கு வெளியே அமைந்திருந்த
எகிப்திய கூர்ங்கோபுரம், பேரோக்கள்,கோயில்கள்
எகிப்தின் பண்டைய வரலாற்றை எடுத்துரைப்பதாக அமைந்தது. அந்த பிரமிடு வடிவத்தின்
சிறப்பை அறிவியல் பூரணமான விளக்கத்துடன் அப்பா கூறியது வியப்பைத் தந்தது. அந்தக்
காலத்திலேயே எகிப்தியர்களின் அறிவும், விஞ்ஞானமும் அதிசயத்தக்க வகையில் இருந்தது
ஆச்சர்யமூட்டியது.
இபன்பட்டுட்டா என்ற அறிஞர் உலகைச்
சுற்றி வந்த பயணங்களை மையமாகக் கொண்டு அதன் தாக்கத்தில் இந்தப் பேரங்காடி ஆறு
நாடுகளைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றவுடன், அம்மா தான் வரலாற்றுப் புத்தகத்தில் இந்த பண்டிதரைப் பற்றிப்
படித்ததை ஞாபகப்படுத்தினார்.
அடுத்து வந்த இந்திய அரங்குகள், முகலாயர்களால் ஆட்சிசெய்யப்பட்டபின் ஏற்பட்ட இந்திய இஸ்லாமிய
கட்டடக் கலைகள், நினைவுச் சின்னங்கள், மகத்தான
செல்வங்களை எடுத்துரைப்பதாக இருந்தது. நம்மநாட்டு அரங்கம் தான் செல்வசெழிப்பாக
இருப்பதாகப் பெருமிதமாகப் பேசிக்கொண்டோம்.
பன்னிரெண்டு இராசிகளை விளக்கும்
வகையில் அமைந்திருந்த சின்னங்கள் அருகே ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
முதல் தடவை வந்திருந்த பொழுது
மறைவில் இருந்ததால் கவனிக்காமல் சென்று விட்டோம்.இரண்டாம் முறை சென்ற பொழுது எல்லா
அரங்கங்களையும் பொறுமையாகத் தேடித்தேடிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு இருந்த யானைமணிக்கூண்டு ஒவ்வொரு
மணிநேரமும் சிறப்பான முறையில் நேரத்தை தெரிவிப்பதாக அமைந்தது. குவிந்த கூரைகளில் தாஜ்மஹால், செங்கோட்டையின் தாக்கம் தெரிந்தது.
அத்தை வடநாட்டுச் சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்ததால் அவரால் அரங்கத்தின் சிறப்பை எளிதில் ஒப்பிட்டுக்
கொள்ளமுடிந்தது.
அதன் அருகிலியே பட்டையால்
செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற இனிப்பைச் (cinnabon) சுவைக்கும் வாய்ப்புக்கிட்டியது.
முன்னொரு தடவை கணவர் ஏற்கனவே இந்த இனிப்பைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
பார்த்து தெரிந்திருந்ததனால் நாங்கள் ஏற்கனவே வாங்கிச் சுவைத்திருந்தோம்.
அதை செய்யும் முறையை ஆர்வமாக
வேடிக்கைப் பார்த்தோம். அத்தை உடல் எடையைக் குறைப்பதற்கு பட்டை உறுதுணை
செய்யுமென்றும், அதன் மற்ற சிறப்பைக் கூறியவுடன், இனிமேல் பிரியாணியில் போடப்படும்
பட்டையைக் கடித்து மென்று சாப்பிடுவேன் என்று சூழுரைத்தேன்.
சீன அரங்கம் இபன்பட்டுட்டாவின்
கடினமான கடல்பயணத்தைக் குறிக்கும் வகையில் புயல், சுழல்
காற்று, மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள், கடற்கொள்ளையர்கள்
என்று ஒருபுறம் பிரதிபலித்தாலும், மறுபுறம் பழங்கால
சீனநகரத்தின் கடந்த காலத்தை நினைவூட்டுவதாக வெள்ளைப்பளிங்கு சலவைக்கல்,ஏகாபத்திய சீனப்பேரரசின் வளமையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும்
உட்கூரை என கண்களை கவர்ந்தன.
அச்சமயம் சீனப்புத்தாண்டு
என்பதால் மேலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புராண விலங்கு வகையான பறக்கும் நாகம், இறக்கையுள்ள முதலை (dragon) தத்ரூபமாகவும்
மிரட்டலாகவும் காட்சி அளித்தன. நிறையசீன உணவு விடுதிகளை கண்டதால் வித்தியாசமாய்
என்ன உணவுகளெல்லாம் தருவார்கள் என்று பேசிச்சிரித்துக் கொண்டோம். சீன உடைகள்
கண்களைக் கவர்ந்தன.
மூன்று அரங்கங்கள் தான்
பார்த்திருந்தோம் என்றாலும், புதுப்பது இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால்
நடந்து நடந்து ஏற்பட்டிருந்த கால்வலி பெரிதாய்த் தெரியவில்லை. நடக்க இயலாதவர்கள் மின்கலத்தில்
இயங்கும் சிறு வண்டிகளில் (battery car) பயணம்
செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு கட்டணமா இலவசமா என்று எனக்குத்
தெரியாவிட்டாலும், உங்களுக்கு கால்வலிக்கிறது என்றால் அதில் காசுகொடுத்து பயணம்
செய்யலாமா என்றவுடன் “இல்லை! இல்லை! எங்களுக்கு கால் வலிக்கவேவில்லை” என்று
மொத்தமாக ஒரு சேர சிரித்துக் கொண்டே கூறினர்.
பாரசீக அரங்கங்களின் மகத்தான
மிகப்பெரிய மண்டபம், நீலப்பச்ச வண்ணம் கொண்ட இரத்தினக்கல்
பதித்த குவிமாடம், உயர்வான பித்தளைச் சரவிளக்குகள் அனைத்தும்
பாக்தாத் நகரத்துக்குள் அழைத்துச் சென்றது. பிரம்மாண்டமும் , எழிலும் ஒருசேர்ந்து
அசத்தியது. பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட சித்திர வேலைகளைக்
கண்டு அம்மா பிரமித்து விட்டார்.
துனிசியாவும், ஆண்டலூசியாவும் ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள். இந்த இருபெயருமே
எங்களுக்கு மனதில் நிற்கவில்லை என்றாலும் அரங்கங்கள் மனதில் நின்றது. அப்பாவிற்கோ இபன்பட்டுட்டா
என்ற பெயரே வாயில் நுழையாமல் ரிப்பன்பக்கோடா என்று அடிக்கடி கூறி எங்களை நகைக்க
வைத்தார்.
இவ்விரண்டு அரங்கங்களுமே உள்ளே
நடந்து செல்லும் பொழுது உண்மையாகவே நகரத்திற்குள் நடப்பதைப் போன்ற உணர்வைக்
கொடுத்தது.
துனிசியா அரங்கங்கள் கடலோர
நகரங்களின் மாதிரி வடிவமைப்பு, வெள்ளையடிக்கப்பட்ட
கட்டிட முகப்பு, நீல கதவுகள், அழகாய்
செய்யப்பட்ட இரும்புவேலைகள், படிந்த கண்ணாடிச் சாளரங்களுடன் வசீகரத்தை
வெளிப்படித்தியது. மேற்கூரை வானம் போன்று உருவாக்கப்பட்டிருந்ததால் திறந்த
வீதியில் நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாரீஸ்வரி அத்தையும், பின்நாளில் பயணம் செய்த
அவரது மகன் இராமும் இந்த அரங்கம்தான் மனதிற்கு மிகவும் நெருக்கமாகி விட்டது என்றது
எனக்கு வியப்பைத் தந்தது. அற்புதமான மசூதிகள், அரண்மனைகள் , பொது தோட்டங்கள், கல்லூரிகளை ஒருங்கே பெற்றிருந்த துனிசியாவை காட்சிப்படுத்தியது துனிசியா அரங்கம்.
கலை, கவிதைகள், காவியங்கள், கட்டிடக்கலை, சிற்பசாஸ்திரம்,
அறிவியல் ,விஞ்ஞானத்தின் சங்கமமாய் விளங்கிய நாடு ஆண்டலூசியா என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆண்டலூசியா அரங்கம்.
இந்த ஆண்டலூசிய அரங்கத்தின் நட்சத்திர வடிவக்கூரை, சிங்கங்களின்
நீரூற்று ஆகியவை அல்ஹம்பரா மாளிகையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும் என்று
நான் விவரித்த பொழுது, அல்ஹம்பரா மாளிகையையே பார்த்துவிட்டு வந்தது போல்
விவரிக்கின்றாயே என்று மொத்தமாக கேலிப்பேசினார்கள்
உயர்ந்த அரங்குகள், புத்துயிர் பெற்ற வளைவுகள் கர்டோபாவின் பெரிய பள்ளிவாசலுக்கே
அழைத்துச் செல்வதாக அமைந்திருந்தன. சிவப்பு கல்சுவர்களும், சுடுமண்
ஓடுகளும் தனித்துவமான
ஆண்டலூசியா மணத்தைப் பரப்பின.
உணவு, உடை, பலபொருள் அங்காடிகள், பொழுது போக்குகள், அழகு, வாசனை மற்றும் ஆடம்பரப்
பொருள்கள் ,
திரையரங்குகள் என்றனைத்துமே மற்ற பேரங்காடியைப் போல இருந்தாலும்
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும்
பறைசாற்றுவதாகவே அமைந்திருந்த இபன்பட்டுட்டா பேரங்காடி இதயத்தில் இடம்
பிடித்திருந்தது.
என் பெற்றோருக்கும், அத்தைக்கும் சுற்றுலா வழிகாட்டியாய்
செயல்பட்டிருந்ததால் , சில மாதங்கள் கழித்து வருகை தந்திருந்த என் கணவரின்
பெற்றோரான மாமா கருப்பசாமி அவர்களுக்கும்,
அத்தை தமிழ்செல்வி அவர்களுக்கும் சிறந்த சுற்றுலா வழிகாட்டியாய் செயல்பட
நல்ல அனுபவமாய் இருந்தது.
மாமனார், மாமியாரை இப்பேரங்காடிக்கு அழைத்துவந்திருந்த பொழுது கணவரும் உடன் வந்திருந்ததால், நீ உன்
பெற்றோருக்கும், அத்தைக்கும் சிறப்பான சுற்றலா வழிகாட்டியாய் செயல்பட்டதைக் காட்டிலும்
சிறந்த வழிகாட்டியாய் என் பெற்றோருக்கு நான் செயல்படுவேன் என்று ஆரோக்யமான போட்டிக்குத் தயாராய்
சுற்றுலா வழிகாட்டி பொறுப்பை என் கணவர் ஏற்றிருந்தார்.
தேர்வுக்கு முன் நன்றாக படித்திருந்த அல்லது ஏற்கனவே தேர்வு
எழுதியிருந்த நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது போல என்னிடம் விவரங்களை
தெரிந்து கொண்டு சுற்றுலா வழிகாட்டியாய் செயல்படமுயற்சி
செய்தார்.
அத்தைமகன் இராமும், அவனது மனைவியும் ஏற்கனவே சிலநாடுகளைத்
தனியே சுற்றிப்பார்த்திருந்ததால் எங்களிடம் ஆலாசனையைக் கேட்டுவிட்டு தனியே
இபன்பட்டுட்டாவை இரசிக்கச் சென்றிருந்தார்கள்.
குழந்தையைக் கவனிப்பதிலும் , வீட்டு வேலையிலும் சுழன்று
கொண்டிருந்ததால் என்னை மேலும் அலைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவர்கள்
கூறியிருந்தாலும், உன் மொக்கைப்பேச்சுக்களைத் தாங்க முடியாமலும், அவர்களின் தனிமையில்
இடையூறு செய்கிறாய் என்பதாலும் உன்னைக்
கழட்டிவிட்டுச் சென்றார்கள் என்று கூறி இடிஇடியெனச்
சிரித்தார் குறும்புக் கணவர்.
பேரங்காடிக்கேச் சென்றதில்லை
என்ற பெற்றோரின் ஏக்கத்தை உலகத்திலேயே மிகப்பெரிய கருப்பொருள் கொண்ட
பேரங்காடிக்குக் கூட்டிச் சென்று, அக்குறையை
நிறைவேற்றிய ஆனந்தக் களிப்புடன் அனைவரும் வீடு திரும்பினோம்
No comments:
Post a Comment