Friday, February 9, 2018

நகர்வலம் - சித்திரம் பேசுதடி. சுவர் ஓவியக்கலைஞர்களும் சுவர் ஓவியங்களும்

https://drive.google.com/file/d/19zYpsfMlUpg6U5B6XguxAxZd1vaqqYjg/view?usp=drivesdk

நம் மாநகரைச் சுற்றி வருகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பட
நடிகர்கள் , குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த நகைச்சுவைக்கதாப்பாத்திரங்கள், இயற்கை எழில் சூழல்கள் , நமது பாராம்பர்யத்தைப் பறைசாற்றும் கலை ஓவியங்கள் போன்ற பலவற்றை பல சுவர்கள், விளம்பர பதாகைகள், பிரம்மாண்ட கட்அவுட்கள், தட்டிகளில் பார்த்து இரசித்திருப்போம்.மனம் மகிழ்ந்திருப்போம்.


தேர்தல் நேரங்கள் என்றால் அனைத்துக் கட்சித்தலைவர்களும் அடுத்தடுத்த சுவர்களில் தங்கள் கட்சி சின்னங்கள், கொடிகள், தொண்டர்களின் பெயர்களுடன் வணக்கம் கூறி சிரித்த முகத்துடன் நமக்குக் காட்சித் தருவார்கள். அவர்களை எல்லாம் நம் கண்முன்னே தத்ரூபமாக காட்சியளிக்கும்படி ஓவியமாய் நிறுத்தும் திறமையும் ஆற்றலும் பெற்றவர்கள் நம் சுவர் ஓவியக்கலைஞர்கள்.

சுவர் ஓவியர்கள் என்றால் சுவரில் ஓவியம் வரைவது மட்டும் இவர்கள் தொழில் இல்லை. முதலில் விளம்பரம் எழுதப்படும் சுவரைச் சுத்தம் செய்து, வெள்ளை அடிக்க வேண்டும். பின்பு இடத்திற்கும் விளம்பரத்திற்கும் ஏற்ப வாட்டர் கலர், சார்கோல், எனாமல் போன்றவற்றினால் எல்லா விதமான பொருட்களைக்கொண்டு எழுதவும் வரையக் கூடிய திறமைசாலியாக இருக்க வேண்டும்.நவீன தொழில்நுட்பங்கள் ஒருபக்கம் நம் மாநகரையும் நம் வாழ்வையும் வண்ணமயமாக்குகிறது என்றால் மற்றொருபுறம் கலைநயமிக்கக் கைவேலைப்பாடுகளை அடியோடு கட்டொழிக்க வழி வகுக்கின்றது.பேனர் , வினைல் ஃப்ளக்ஸ் அச்சுத் தொழில்நுட்பக் கலாச்சாரம் வந்தவுடன் சுவரோவியங்களும் சுவரோவியர்களும் நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்தார்கள்.

வாய்ப்புகள் குறைவதால் , கற்றத் தொழிலைத் திறம்பட செய்து தங்கள் திறமையை நிரூபிக்க முடியாமல் , வேறு தொழில் செய்து வாழவும் முடியாமல் வறுமையில் உழல்கின்றார்கள். ஃப்ளக்ஸ் பேனர்களின் ஆயுட்காலம் குறைவு, சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிப்பது என்றாலும் நேரமேலாண்மையைக் கருத்தில் கொண்டு பலரும் சுவரோவியங்களை விடுத்து பேனர்களின் பக்கம் ஈர்க்கப்படுகின்றார்கள்.

மாநகரங்களில் அரசு சுவர்களில் தேர்தல் நேரங்களில் சுவர் ஓவியங்களுக்கு கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருப்பதால் , ஓவியர்கள் அருகில் உள்ள கிராமங்கள்,ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சென்றே வரைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்களிடமிருந்து தங்கள் உழைப்பால் சாமான்யர்கள் பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு தற்பொழுது வந்துள்ள விதிமுறைகள் முட்டுக்கட்டைப்போட்டிருக்கின்றன.

நீண்ட நேரம் வண்ணத்தூரிகைகளை பிடித்து பெரிய சுவர்களில் பல அடி உயரங்கள், உட்கூரைகளில்  கட்டைகள் மேல் நின்றுகொண்டு எழுதுவதனாலும், வரைவதனாலும் கடுமையான உடல்வலி மட்டுமல்லாமல் அபாயகரமான இடத்தில் நின்று வேலைபார்க்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பை இவர்களும் இவர்கள் குடும்பத்தினர் மட்டுமே ஈடுகட்டி ஆக வேண்டியிருக்கிறது.தூய்மையில்லாத இடத்தில் கூட தொழிலுக்காகப் பல மணிநேரம் நின்று வேலை செய்ய வேண்டிய அவசியத்தால் உடல் நலக்குறைவுக்கும் ஆளாகிறார்கள் நம் சுவர்ஓவியக்கலைஞர்கள்.

சில நேரம் உயரம் குறைந்த சுவர்களில் தரையில் குத்துக்காலிட்டு சிரத்தையாக ஓவியம் வரைவதனால் முதுகு, முழங்கால், இடுப்பு போன்ற உருப்புகளில் அதிக வலி ஏற்பட்டு அதனை போக்க சிலர் மதுவிற்கு அடிமையாகும் அவலமும் ஏற்படுகின்றது.

சில நேரம் ஈரம் உறிஞ்சிய சுவர்கள் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது,
எழுதி வரைந்து முடித்தபின், தரமான சாயங்கள், வண்ணங்கள் உபயோகப்படுத்தப்படவில்லை, வேலைக்கச்சிதமாக இல்லை போன்ற பொய்க்காரணங்கால் இவர்களிடம் பேசப்பட்டக்  கூலித்தொகைக் குறைத்துத் தரப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் பூசல்களால் விளம்பரம் செய்யக்கூடாத இடங்களில் வரைந்துவிட்டார்கள் ,மற்றவர்களின் சுவற்றில் விளம்பரப்படுத்திவிட்டார்கள்  போன்ற காரணங்கள் சுமத்தப்பட்டு காவல் துறையினர்களால் எச்சரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகின்றது.இவர்களுக்கென்று சங்கம் என்று எதுவும் இல்லாததால் இவர்களது கஷ்டங்கள் இவர்களுக்குள்ளேயே புதைந்துவிடுகிறது.


மாணவர்களின்  சேர்க்கைக்காலங்களில் தரப்படும் பள்ளிக்கல்லூரி விளம்பரங்கள், அரசியல் கூட்டங்கள், தேர்தல் ,தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் போன்ற நேரங்களில் தரப்படும் விளம்பரங்கள், சிலர் வீடுகளுக்குள் கலையுணர்வுடன் ஓவியங்கள் வரைவதற்கான அழைப்பு போன்றவைதான் இந்த சுவர்ஓவியர்களின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளாக அமைந்திருக்கின்றன.

சுவர்ஓவியர்களுக்கான அருங்காட்சியகம் அல்லது தெருவிழாக்கள்  போன்றவை நடத்தப்படும் பொழுது ஓவியக்கலைஞர்கள் தங்கள் திறமை உலகுக்கு  உணர்த்தப்படுவதை உணர்ந்து புத்துணர்ச்சி கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. அரசு சார்பில் ஓவியங்கள் வரைவது தொடர்பான ஒப்பந்தங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் தரப்படும் பொழுது சுவர்ஓவியர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறுகிறது.


கடின உழைப்பும் , திறமைகளையும் தங்களுக்குள் வைத்திருக்கும் சுவர்ஓவியக்கலைஞர்கள் ஆர்டிஸ்ட், ஓவியர் என்று அழைக்கப்படும் பொழுது அதனைத் தங்களுக்குக் கிடைத்த மரியாதையாகவும், அங்கீகாரகமாகவும் பார்க்கின்றனர். அதுவே பெயின்டர் அல்ல சாயம் பூசுபவர் என்று அழைக்கப்படும் பொழுது அவமானப்படுத்தப்பட்டதாக வருத்தம் கொள்கின்றார்கள். நம் மாநகரத்திற்கு எழில் கூட்டும் சாமானியர்களின் வாழ்க்கையை நம்மால் இயன்ற வாய்ப்புகளாலும், மரியாதையாலும் மேலும் அழகாக்குவோம்.



No comments:

Post a Comment