Tuesday, June 20, 2017

புள்ளிகளும் கோலங்களும்...

மார்கழி மாதம்
அவளுக்கும் பிடிக்கும்
எனக்கும் பிடிக்கும்...
வைகறையில்  பொழுது
புலர்கையில்
புலம்பாமல் எழுந்திடுவேன்
பாவை இவளுடன் நேரம்
கழித்திடவே!  

கம்பிக்கோலம் போடுவாள்
நான் கிறுகிறுத்து விழுவேன்
எத்தனை  நெளிவுகள்?
எத்தனை சுளிவுகள்?
வாழ்க்கைப்பாடம் கற்றுத்தரும்
வாத்தியாரும் இவள்தானோ ?
வண்ணக்கோலங்கள் அழகா 
அதை வரைந்து
இரசிக்கும் இவள்
நிலவுமுகம் அழகா? 

பனி கொட்டுகிறது
பாசமாய்ச் சொல்லுவாய்
வெளியில் நிற்காதே என்று!
கோலம்போட ஆசை என்றேன்
கைப்பிடித்து வரையச் 
சொல்லிக் கொடுத்தாய்
நானோ  உன்வாசம் 
நுகர்ந்து கிறங்கிக் கிடந்தேன்

ரங்கோலி போட்டுக்
கட்டாந்தரைக்
கோலத்தில் மட்டுமா 
வண்ணம் தூவினாய்?
என் வெறுமை வாழ்க்கையிலும்
நிறங்கள் தடவிச் செல்லும் 
வண்ணப் பண்டிகை ஆனாய்!

தேடுகிறேன்
அந்த நாட்களையும்
அதிகாலைகளையும்
அயராது நீ பயிற்சி 
செய்த கோலப்புத்தகத்தையும்
இரசிக்கிறேன்
தரையில் ஒட்டிய கோலங்களை அல்ல
நெஞ்சில் நின்ற காலங்களை அம்மா!

No comments:

Post a Comment