சென்ற அத்தியாயத்தில் முன்னுரைக் கொடுத்திருந்த பெராரி வேர்ல்டு பூங்காவிற்குத் திடீரென்று செல்ல வாய்ப்புக் கிடைத்தது சுவாரஸ்யமான அனுபவமாகவே மனதில் பதிந்திருந்தது. சுற்றுலாப் பயணிகளையும் தற்காலிகமாக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற மக்களைக் கவரும் வகையில் பூங்காவிற்குள் சென்று சவாரிகள் செய்யாது சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும் குறிப்பிட்ட காலத்தில் இலவச அனுமதி அறிவித்திருந்ததால் , ஒரு வாரவிடுமுறை நாளில் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு நண்பர்கள் பட்டாளத்துடன் துபாயிலிருந்து அபுதாபிக்கு இரண்டு வண்டிகளில் ராஜி-சதீஷ் , சுஜி-சதீஷ், பாஸ்கர்-ஸ்ரீதேவி தம்பதியினர்களுடன் உற்சாகமாகக் கிளம்பியிருந்தோம்.
அனைவரும் ஆர்வமாய் கிளம்பியிருந்தாலும் நான் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது என் கண்களிலேயே மின்னியதைக் கண்டுபிடித்து கணவரும் நண்பர்களும் கிண்டல் செய்ய , உற்சாகமாய் பூங்காவினுள் உள்ளே நுழைந்தோம். சுற்றுலாவிற்கு ராஜிசதீஷின் அம்மா குமாரி அவர்களும் துபாய் வந்திருந்ததால் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.மாலை ஆறு மணிக்கு மேல்தான் நுழைவு இலவசமென்பதனால் அதனைக் கணக்கிட்டே சென்றிருந்ததால் சற்று இருட்டி விட்டது. நுழைவு வாயிலிலேயே பேரங்காடியைப் போன்று பல கடைகளும் ஆங்காங்கே நிற்கவைக்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு நான்கு சக்கர பெராரி வண்டிகள் எங்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளித்தன.
சிவப்பு வண்ண சொகுசு பெராரியின் அருகே தோழி சுஜி தனிபாங்குடன் நின்று விதவிதமாக நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க அந்த வண்டி 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் வண்டியை எனக்கு ஞாபகப்படுத்த 'அந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி நீங்க தானா? ' என்று நான் கேட்கச் சுஜி செல்லமாய்க் கோபித்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வந்தார்.
ராஜிசதீஷ் தனது அம்மாவின் வயதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரியில் மட்டும் பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க, எதிர்பாரா விதமாக கணவர் எனக்கும் எல்லா சவாரிகளிலும் எண்ணற்ற தடவை பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
நாம் வாழ்வில் ஒருமுறையேனும் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு போவோமா என்றே ஐயத்தில் இருந்த எனக்கு அதை இலவசமாய் பார்வையிட அனுமதி கிடைத்ததே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கையில் எல்லா சவாரியிலும் பயணம் செய்ய வாய்ப்புகிடைத்தால் ஆனந்தமாகத்தானே இருக்கும். தற்காலிக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை உள்ளவர்கள், யாஸ் தண்ணீர் பூங்காவிற்கும் சேர்த்து பயணம் செய்பவர்கள், குறிப்பிட்ட வங்கி அட்டை உள்ளவர்களுக்குயென சலுகை விலையில் பல வழிகளில் நுழைவுச் சீட்டைக் கொடுத்தார்கள்.
ஆனால் யாஸ் தண்ணீர் பூங்காவிலும் , பெராரி பூங்காவிலும் சவாரிகளை சுகமாய் அனுபவிக்க கண்டிப்பாகத் தலா ஒவ்வொரு நாட்கள் தேவை என்பது என்னுடையக் கருத்து .கணவர் நிச்சயமாக நுழைவுச்சீட்டு வாங்கித்தருவார் என்று தெரிந்திருந்தால் "சற்று முன்னரே வந்திருக்கலாமோ?" நுழைவுச் சீட்டுக் கட்டணம் சற்று கூடுதலென்பதால்
பெராரி பூங்காவிலுள்ள அனைத்துச் சவாரிகளிலும் பயணித்துவிடுவோமா? என்ற குழப்பம் என்னை பீடித்திருந்தது.
நானும், குமாரி அம்மாவும் மட்டுமே நுழைவுச்சீட்டு வைத்திருக்க , நேரமும் குறைவாக இருக்க இரவு பணியாளர்கள் பூங்காவைப் பூட்டுவதற்குள் எல்லா சவாரியிலும் ஒருதடவையாவது பயணம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டோம்.
முதலில் உலகிலேயே வேகமாக ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய அதிவிரைவான சவாரியைத் தேர்ந்தெடுத்து ( formula rossa) நான் பயணிக்க முடிவெடுத்துச் செல்ல, அங்கிருந்த பணியாளர்கள் உலகத்திலுள்ள அனைத்து வியாதிகளையும் குறிப்பிட்டு இவையெல்லாம் இருந்தால் பயணம் செய்ய முடியாது என்று எச்சரித்தார்கள்.அதிலெதுவும் எனக்கில்லையென்று நான் உறுதியளிக்க அதிவேகக்காற்றில் கண்ணிற்கு ஏதும் ஆபத்து நேராமல் இருக்கவும் பூச்சிகள் எதுவும் கண்களை தாக்காத வண்ணம் ஒரு கண்ணாடியைத் தந்தார்கள்.
பெராரி வண்டி போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்தச் சவாரியின் பெட்டியில் மிக தைரியமானவள் என்பது போல நண்பர்கள் நடுவே காட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாலும் மனதின் உள்ளூர இதுபோல சாகச சவாரிகளில் நடந்த விபத்துக்களே நிழலாடியது.
இருக்கைப் பட்டைகளை நன்றாக அணிந்து கொண்டு கதவுகளை மூடிக்கொள்ள கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் பெராரி வண்டியைப் போன்று வேகமாகப் பறந்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு என்ற வாக்கியத்தின் அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
முகத்திலுள்ள தசைகளனைத்தும் பிய்த்துக் கொள்வது போல காற்று வேகமாக அடிக்க மிக உயரத்திற்குச் சென்று அசுர வேகத்தில் கீழே பாய்ந்தது. பயணிகள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு உற்சாக ஓலமெழுப்ப வளைவுகளிலும் நெளிவுகளிலும் பயணித்து ஒருவழியாக பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தோம். பயத்தில் கண்களைத் திறந்து பார்க்கத் தைரியமில்லாததாலும் நன்றாக இருட்டி விட்டதாலும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதென்றேத் தெரியவில்லை. விநாயகர் போல வயிறு உடையவர்களும் எனது கணவரைப் போல ஆறடி உயரத்திற்கும் மேல் உயரமானவர்களும் ஒன்றரை நிமிட சாகசப் பயணத்தின் போது வயிற்றை உள்இழுத்தும் கால்களை மடக்கிக் கொண்டும் பயணப்பட வேண்டியிருக்கும்.
பயணம் செய்பவர்களை ஒளிப்படங்கள் எடுத்துக்கொடுப்பதற்கு ஆங்காங்கே ஒளிப்படக் கருவிகளை பதித்து வைத்திருந்தனர். ஒரு நிழற்படத்தை அச்சிட்டுத் தருவதற்கு 99 திராம்கள் தானென்று அவர்கள் கூறினாலும் அனுபவமே அற்புதமாக இருந்ததுயென்று கூறிவிட்டு நான் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.நண்பர்களனைவரும் மேலிருந்த மாடத்தின் வழி இந்தச் சவாரியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்க நானோ பெருமை பொங்க திரும்பினேன்.
மொத்தம் இப்பூங்காவில் இது போன்று ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய சவாரிகள் மூன்று உள்ளதென கேள்விப்பட்டிருக்க நாங்கள் சென்றிருந்த சமயம் ஒரு சவாரி பராமரிப்பில் இருந்ததால் இரண்டு சவாரிகளில் மட்டுமே பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
சிறு குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டு உயர வரைமுறைக்குள் இருந்தால் சில சவாரிகளுக்கு அனுமதி இலவசமென்று கூற மஹிதா, சான்வி ஆகிய நண்பர்களின் பிள்ளைகளை குமாரி அம்மாவுடன் கூட்டிச் சென்றேன். என் குழந்தையின் உயரத்தைக் காரணம்காட்டி அந்த குடும்பச் சவாரிக்கு பணியாளர் என் பிள்ளையை அனுமதிக்காததால் மனதில் சிறு வருத்தத்துடனேயே மற்ற பிள்ளைகளை என்னுடன் அழைத்துச் சென்றேன்.
ஒருசிலக் குடும்பச்சவாரிகள் நாம் ஒரு பெரிய பெட்டியில் ஏறிக்கொண்டு கையில் ஒளிமி துப்பாக்கியுடன்(laser gun) திரையில் தெரியும் தீயசக்திகளை சுட்டு வீழ்த்தி மதிப்பு புள்ளிகளைச் சம்பாதிப்பது போல இருக்கும்.ஒரு குகைப் போன்று சுற்றுப்புறத்தை அமைத்து பல பரிமாணங்களில் சிறுவர்களைக் கவரும் வகையில் ஒலி ஒளியுடன் அவர்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்களும் மிருகங்களும் பேசும் வண்ணம் சூழ்நிலையை அமைத்திருந்ததனால் பிள்ளைகள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர்.
குழந்தைகளுக்கென்று பல சவாரிகள் அமைத்திருந்தாலும் வயதையும் உயரத்தையும் கணக்கிட்டு பெரியோரின் துணையுடனேயே சிலசவாரிகளுக்கு பணியாளர்கள் அனுமதித்தனர்.நண்பர் சதீஷ் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவர்கள் அம்மா குமாரியையும் அழைத்துக்கொண்டு சில குடும்பச் சவாரிகளைச் சுற்றி வந்தேன். ( bell'italia ) பெல் இடாலியா என்ற சவாரியைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே போனதனால் சவாரி முடியும்வரை அடுத்ததென்ன என்ற ஆர்வம் பற்றிக் கொண்டே இருந்தது. சில சவாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மூடி விடுவார்கள் என்பதால் பறந்து ஓடவேண்டியதாயிற்று.அதில் இத்தாலிக நாட்டைச் சுற்றிக் காண்பிக்கும் இச்சவாரியும் ஒன்று.
மக்கள் இருக்கைகளில் அமர்ந்து பூட்டிக்கொண்ட பின் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் மேலே உயர்ந்து நாம் வானில் பறந்து கொண்டே இத்தாலி நாட்டு மலை, இயற்கை, நகர அழகை இரசிப்பதாய் அமைந்திருக்கும். இவ்வாறு பல வழிகளாய் நான்கு சக்கர பெராரி வண்டியில் அமர்ந்து கொண்டும் அதிவேகமாக காடு, மலை போன்று பலவற்றைக் கடப்பதுபோல சவாரிகளை ஏற்பாடு செய்திருக்க நிஜமாகவே அவற்றின் வழியே பயணம் செய்தது போன்று ஒரு அனுபவம் கிடைத்தது. நமக்கு எதுவுமாகாது , நாம் இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறோமென்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனம் அந்தப் பயணத்தில் லயித்து மலையின் ஓரத்திலே வண்டி சென்றாலோ, சாகசங்கள் புரிந்தாலோ துள்ளிக் குதித்து மயிர்கூச்செரிந்து சிலிர்க்கும்.
உலகிலே போட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர பெராரி வண்டியை நாம் ஓட்டிச்செல்வது போல மாதிரி வாகனத்தை
( simulator) அமைத்திருக்க மொத்தம் எட்டுப்பயணிகளை ஒரே நேரத்தில் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருந்தார்கள். நாம் இருக்கும் இடத்திலிருந்தே வண்டியை ஓட்டினாலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாத நான் வண்டியை ஏடாகூடமாக ஓட்ட சாலையோரத்திலுள்ள பலகையை யெல்லாம் இடித்துத்தள்ள உண்மையாகவே வண்டி ஓட்டிப் பெறும் பேரதிர்வுகளையும் அடிகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லோரும் திரையிலே என்னை முந்தி ஒரு வழியில் சென்று கொண்டிருக்க நான் மட்டும் அதற்கு எதிர் வழியில் தட்டுத்தடுமாறிப் போய்க்கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே இப்படித்தான் என்பதனால் கடைசிப் போட்டியாளராய் வந்ததற்கு கவலையேதும் கொள்ளாமல் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.
கையில் பூங்காவின் முழு வரைபடத்தை வைத்துக்கொண்டும் ஆங்காங்கே நின்றிருந்த காவலாளர்களின் உதவியோடும் விடுபட்ட சவாரிகளில் பயணிக்க விரைந்து ஓடிக்கொண்டிருந்தேன்.
கடைசி நேரத்தில் பூங்கா மூடும்சமயம் ( flying aces) ப்ளையிங் ஏசஸ் என்ற சவாரிக்கு கணவர் அவசரஅவசரமாய் என்னை அனுப்பிவைக்க அதுயென்னவென்று தெரியாமலேயே அழகான வித்தியாசமான சுற்றுப்புறச் சூழலை இரசித்துக் கொண்டே அந்தச் சவாரிக்கு செல்வதற்கான பாதையில் ஓடினேன்.
அருமையான நடை. எங்கே போய் பார்ப்பது? நானும் உன்னுடன் இருந்த உணர்வு ஏற்பட்டது.பயங்கரமான சவாரி எனக்கும் பிடிக்கும்.பள்ளியில் ஆசிரியராக இருந்த போது 10 ஆம் வகுப்பு மாணவிகளுடன் சென்றது நினைவிற்கு வந்தது.
ReplyDeleteஅன்புடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி அத்தை!
Deleteஅபிநயா
ReplyDeleteஉங்கள் வார்த்தையில் ஓர் சுற்றுலாப் பயணம்
தமிழ் கைகொடுக்க ஓர் இலக்கியப் பயணம்
படங்களுடன் பாடங்களாய் குறிப்புகளடங்கிய
அருமையான சவாரி...
உங்களின் அடுத்த பயணத்திற்கு ஒரு ticket parcel ....
மனமார்ந்த நன்றிகள்...உங்கள் வாக்கு மெய்யாகட்டும்
ReplyDeleteசுற்றுலாப் பயணமும்
ReplyDeleteபெரிய ஊர்தி உலாவும்
எம்மை ஈர்த்திடும்
இனிய பதிவு இது!
மகிழ்ச்சி ஐயா
Deleteஅற்புத மான நடை.., அழகான படங்கள்... துபாய் வந்தவர்களை, தீரா தாகத்தோடு போய் பார்க்க வைக்கும். வாழ்த்துக்கள் அபி...!!
ReplyDeleteகருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி
Delete