பொம்மையைக் கட்டிக்கொண்டு
அம்மையின் சமையலில்
கமகமக்கும் காலையுணவில்
கனவுகளோடு கண்விழித்தவளோ
அதிகாலையிலேயே அதிவிரைவாய்
அடுப்படியை அடைந்தாள்
உவகைகொண்ட உணவுகளை
உண்டு வயிறுநிறைத்தவளோ
உற்றார்உறவினருக்கு உளமாற
உபசரித்தே உள்ளம்நிறைந்தாள்
சிறிதுநேரம் தவறினாலும்
பசிபொறுக்காதவளோ அனைவரும்
புசித்தபின் நேரம் தவறிய
பின்னேயே பசியாறினாள்
நவநாகரிகப் பைகளுடன்
நகர்வலம் வந்தவளோ
காய்கறிப் பைகளுடன்
பேரங்காடியைக் கடந்தாள்
சிகையலங்காரச் சிந்தனைகளோ
சுவையாய் சமைக்க
வகைவகையான சமையல்களாயின
சிறுவலியும் பொறுக்காதவளோ
பிரசவவலியில் பரவசப்பட்டாள்
துணிவுடன் தேர்வில்
முதல்வகுப்பில் தேர்ச்சிபெற்றவளோ
பரிகாசப்படும் சமையலறை
பரீட்சைகளுக்கு பயந்தாள்
பளபளக்கும் மேனியழகுக்கு
தேடிதேடிப்
பலவழிகள் மேற்கொண்டவளோ
பாத்திரமும் வீடும்
பளபளக்கவே
தேய்த்துதேய்த்து
சிரத்தைக் கொண்டாள்
சிறுபல்லியைக் கண்டு பதறியவளோ
சுடுசொல்லைக்கூட அசட்டை செய்தாள்
ஆசைகொண்ட ஆடையடைய
ஆயிரங்கடை அலைந்தவளோ
சுட்டிக்குழந்தையின் சுறுசுறுப்பைச்
சமாளிக்கமுடியாமல் சோர்வானாள்.
அலுவலகத்திற்குச் சென்று
விடுமுறைகளில் தோழர்களுடன்
துள்ளித் திரிந்தவளோ
வீட்டுவேலைக்குள் மூழ்கிக்கிடந்து
விடுமுறைகளையே மறந்தாள்
உலகத்தையே வெல்ல
வேண்டுமென்ற பெற்றோர்
குடும்பந்தான் உலகமென்றார்கள்
கனவுகளை நிறைவேற்றவே
நானென்றார் கணவர்
திருமணம் திருப்பம்தர
மணவாழ்க்கையும் மாற்றம்தர
ஏமாற்றங்களை ஏளனம் செய்து
மாற்றங்களை மனதாரயேற்று
ஏற்றங்களை எட்டிப்பிடிப்பவள்தான்
பெண்ணோ!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அபிநயா....
ReplyDeleteஇனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அபிநயா....
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deleteதிருமணம் திருப்பம்தர
ReplyDeleteமணவாழ்க்கையும் மாற்றம்தர
ஏமாற்றங்களை ஏளனம் செய்து
மாற்றங்களை மனதார ஏற்று
ஏற்றங்களை எட்டிப்பிடிப்பவள் தான்
புரட்சிப் பெண் என்பேன்...
பெண் முயன்றால்
ஆகாதது ஏதுமில்லை!
மகளிர் நாள் வாழ்த்துகள்
மனமார்ந்த நன்றிகள்
Delete