Friday, March 10, 2017

ஜில்லென்று ஒரு காதல்

அமீரகப் பேரங்காடி (mall of emirates) என்றவுடன் உலகத்திலே உள்ள பெரிய பேரங்காடிகளில் முக்கியமானது, துபாயில் பார்க்க வேண்டிய பேரங்காடிகளில் ஒன்று என்று பலபெருமைகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் முதலில் ஞாபகம் வருவது அப்பேரங்காடியில் அமைந்து உள்ள ஸ்கி துபாய் (ski dubai) என்று அழைக்கப்படும் உலகிலேயே பெரிய உள்ளரங்க பனிபூங்கா அரங்கம் தான். மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதன்முறையாகக் கட்டப்பட்ட பனிபூங்காவிற்குள் ஒருதடவையாவது சென்று பார்க்க வேண்டும் என்று என்னைப்போல எல்லோரும் நினைப்பது இயல்பான ஒன்றுதானே.

ஒவ்வொரு தடவையும் அமீரகப் பேரங்காடிக்கு பெற்றோர், அத்தை, மாமா, நண்பர்கள் என்று பலருடன் பலதடவை சென்றிருந்த பொழுதும் அந்தப் பனிபூங்கா அரங்கத்திற்குள் எப்பொழுது செல்வோம் என்று ஏங்கி வெளியிலேயே நின்று அவ்வரங்கம் தெரியுமாறு பல ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கும் குளிர்(-4 degree Celsius) இருந்ததால் குழந்தையுடன் செல்வதற்கு யோசித்து யோசித்து, கட்டணத்தையும் கருத்தில் கொண்டு இந்த குளிர்பயணத்தை நானும் என் கணவரும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோம்.

கணவர் ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு தன் நண்பருடன் ஒருதடவை கூட்டம் நிறைந்த கோடைகாலத்தின் பொழுது சென்று ஒவ்வொரு கேளிக்கை சவாரியையும் அனுபவிக்க கால்கடுக்க நின்ற கதையைக் கூறியிருந்தார். துபாயிலிருந்து நிரந்தரமாக வந்துவிட்டோம், கற்பனையில் தான் பனிபூங்கா அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்த எனக்கு கணவரின் காதலால் குழந்தையைப் பெற்றோரின் கவனிப்பில் விட்டுவிட்டு இரண்டாம் தேன்நிலவை பனிபூங்காவில் செலவழிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.

பனிபூங்கா பயணத்தை அனுபவித்து விட்டு எழுதினால்தான் உணர்ச்சி ததும்ப எழுதமுடியுமென்று கணவரிடம் பல பீடிகை புரிந்திருந்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடியுரிமை அட்டை வைத்திருந்தாலோ, குறிப்பிட்ட வங்கியின் அட்டைவழி பனிபூங்காவிற்கு நுழைவுச்சீட்டைப் பெற்றாலோ சலுகைகளும் தள்ளபடிகளும் நம் பணத்தைச் சிக்கனப்படுத்தும். எங்களுக்கு சேவை அளித்த பணியாளர் எங்களுக்கு எந்த வழியில் நுழைவுச்சீட்டைப் பெற்றால் பணத்தைச் சிறப்பான முறையில் சிக்கனப்படுத்த முடியும் என்று வழிகாட்டினார்.

விதவிதமான கேளிக்கை சாகசசவாரிகளை நம் விருப்பத்திற்கும், கட்டணத்திற்கும் ஏற்றார் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒருசில சவாரிகள் குறிப்பிட்ட தடவைதான் என்றும், மற்ற சாகச சவாரிகள் எண்ணற்ற தடவை மேற்கொள்ளலாமென்று சில விதிமுறைகள் விதித்திருந்தார்கள். சராசரியாக ஒரு நுழைவுச்சீட்டு அதிகபட்சம் 250 திராம்கள் மதிப்பிருக்கும்.

நுழைவுச்சீட்டைப் பெற்ற அனைவருக்கும் கடுங்குளிரை எதிர்கொள்வதற்கு நிர்வாகத்தினரே குளிரைச் சமாளிக்கும் கம்பளியாலான மேல்சட்டை, காற்சட்டை, கையுறைகள், காலுறையுள்ள காலணிகள் என்று எல்லாவிதமான உருவளவிலும் தேவையானவற்றை விநியோகித்தனர். எப்பொழுதுமே காலணிகள் சரியான அளவு கிடைக்காமல் அல்லாடும் என் ஆறேகால் அடி உயரக் கணவருக்கே காலணிகள் சுலபமாகக் கிடைத்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அவ்வாறு அளவு கேட்டு சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த கேரள பணியாளர் காலணிகளுக்கான உருவளவு எண்ணை எங்களிடம் கேட்க, அளவு தெரியாமல் தமிழில் நாங்கள் பேசிக் கொண்டதைக் கவனித்து தமிழிலேயே கிண்டலாகப் பதில் கூறி ஆச்சரியப்படுத்தினார். கையுறைகள் மட்டும் நாம் திரும்பிச் செல்லும் பொழுது நம்முடன் எடுத்துக் கொள்ளலாம்.

நாங்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் உடையின் மீது அவர்கள் கொடுக்கும் கம்பளியாலான மேல்சட்டை, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களது உடைமைகளை கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துபூட்டி அதன் திறவுகோளான அட்டையை முழங்கையின் மேலிருந்த பையில் பத்திரமாய் வைத்துக்கொண்டோம். சில நுழைவு வாயில்களில் நாம் இயந்திரங்களில் அட்டையைக் கையால் எடுத்துக் காண்பிக்காமல் கைகளையே காண்பித்துக் கடக்கவும், கேளிக்கை சவாரியை பலமுறைகள் அனுபவிக்க பணியாளர்களிடம் காட்டவும் அந்த மின்னனுஅட்டை உபயோகப்படும்.

பனிபூங்காக்குள் நுழைந்தவுடனேயே பனியால் செய்யப்பட்டிருந்த சிலைகளருகே எங்களை நிற்கவைத்து ஒரு பெண் பிலிப்பினோ பணியாளர் சிரித்தமுகத்துடன் எங்களுக்குள் காதல் உணர்வு ததும்பும் வண்ணம் விதவிதமாக நிற்கவைத்து நிழற்படங்கள் எடுத்து ஒரு எண்சீட்டைப் பட்டையாய் மணிக்கட்டில் கட்டிவிட்டார்.

பனிபூங்காவைவிட்டு திரும்புகையில் நமக்கு விருப்பமான ஒளிப்படங்களை எண்சீட்டைக் கொண்டு தேர்ந்தெடுத்தால், நிழற்படங்களாய் அச்சிட்டு, பனிபூங்காவை விவரிக்கும் உறையில் வைத்துத்தருவார்கள். ஒரு ஒளிப்படத்திற்கு 100 திராம்கள் கொடுக்கும் பணக்காரரென்றால் நீங்களும் வாங்கிக் கொள்ளலாம். தென்துருவ பறவைவகையான பென்குவின் மற்றும் டைனோசர் போன்ற பலவகையான உயிரனங்களைச் பனிச்சிற்பங்களாய்ச் செதுக்கியிருந்தார்கள்.

பென்குவின்களோடு பழகி, தொட்டுப்பார்த்து சில நேரம் செலவழித்து ஒளிப்படம் எடுத்துக்கொள்ள கட்டணத்தின்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் பென்குவின்களோடு நேரம் செலவழிப்பதற்கு பதிலாக, அரங்கத்தின் ஒரு முடிவிலிருந்து மற்றொரு முடிவை திரைப்பட கதாநாயகர்கள் போல அடைய பலநூறுஅடி பனிதரைக்கு மேல் கம்பியின் வழி ஒரு உருளையின் உதவியுடன் பயணம் மேற்கொள்ளும் சாகசச் சவாரியைத் தேர்ந்தெடுத்திருந்தோம். நாங்கள் குளிர்காலத்தில் சென்றிருநத்தால் கூட்டத்தில் சிக்கி  வரிசையில் நிற்காமல் பல முறைச் சவாரிகளை சுகமாக அனுபவித்தோம்.              

இந்தச் சவாரியை தைரியமாகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் இருவருக்குமே மனதில் பயத்துடன் கயிற்றில் சவாரி செய்யும் பொழுது கயிறு அறுந்துவிட்டு பலஅடி உயரத்தில் இருந்து பனிப்பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அபசகுன எண்ணம் எல்லாம் தோன்றி மறைந்தது. தைரியம் என்பது பயமில்லாதது போன்று நடிப்பது என்று அப்பொழுதுதான் தெரிந்துகொண்டோம்.

எடையைச் சரிபார்த்து அதற்கேற்றார் போல் உருளையைத் தேர்வுசெய்த பணியாளர்கள், உங்களுக்கு அந்தப் பிரச்சனை இருக்கிறதா? இந்த பிரச்சனை இருக்கிறதா? உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தைப் பார்த்தால் தலைசுற்றல் ஏற்படுமா? இரத்த அழுத்தம் இருக்கிறதா? முதல் அனுபவமா ? என்று மருத்துவர்கள் போல பல கேள்விகள் கேட்டுவிட்டு எங்களுக்கும் இது முதல் அனுபவம் என்று சிரித்தார்கள். அவர்கள் விளையாட்டாகச் சொல்கிறார்கள் என்றாலும் எங்கள் கண்களில் மிரட்சி தெரிந்தது.

அரங்கத்தின் ஒரு முடிவிலிருந்து அவர்கள் எங்களை வேகமாக தள்ளிவிட, சென்ற அசுரவேகத்தில் மற்றொரு முடிவிலிருக்கும் தூணில் இடிக்கப்போகிறோம் என்று பயந்திருக்கையில் வேகத்தை உடனடியாகக் குறைத்தார்கள். திகிலான பயணத்தை கீழே இருந்த பனிப்பள்ளத்தாக்கைப் பார்த்தபடி வெகுவாக இரசித்தோம்.
85 அடி உயர பனிமலையில் அமைந்திருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்தில் தான்முன்னே நண்பருடன் வந்திருந்த பொழுது காபி குடித்ததை பகிர்ந்து கொண்டார் கணவர்.    

பிரம்மாண்ட பனி அரங்கை ஐந்துவகையான உயரத்திற்கு பனிச்சரக்கு விளையாட்டுக்கு ஏற்றார்போல அமைத்திருந்ததனால் ஒவ்வொரு முறையும் இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி (winch) வழி அமர்ந்து, அனுபவிக்க ஆசைப்படும் சவாரிகளுக்கு ஏற்றார் போல வெவ்வேறு நிறுத்தத்தில் இறங்கி பயணப்பட வேண்டியிருந்தது. குளிரைச் சமாளிப்பதற்கு வெதுவெதுப்பை ஏற்படுத்தும் வகையில் வெப்பத்தை வெளியேற்றும் மின்விளக்குகளை  அங்கிருந்த கம்பிகளில் அமைத்திருக்க, கணவரும் நானும் கையுறையைக் கழட்டிவிட்டு குளிர்காய்ந்து ஒருவர் மற்றொருவர் கண்ணத்தைத் தொட்டு வெதுவெதுப்பு ஏற்படுத்தி கண்களில் காதல் பொங்க கண்ணடித்துக் கொண்டோம்.

கணவரும் நானும் ஒரு ரப்பர் பலகை போன்ற அமைப்பில் படுத்துக்கொண்டே இருமுறை சறுக்கி பனிச்சறுக்கு விளையாட்டை இரசிக்கலானோம். கட்டணத்திற்கு ஏற்றார் போல சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பனி நடைக்கட்டைக் கொண்டு பனித்தரை வழுக்கு விளையாட்டை அனுபவிக்க பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். சிறுசிறு குழந்தைகள், இளைஞர்கள் எல்லாம் மிகச்சாதாரணமாக பனிச்சறுக்கு விளையாட்டை விளையாடி சாகசம்செய்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை வெவ்வேறு சாகசப் பயணங்களுக்காக இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி (winch) வழி அமர்ந்து நானும் கணவரும் செல்லும் பொழுது பனிச்சறுக்கு விளையாட விரும்புவோர் ஒரு நகரும் கம்பியைப் பிடித்து உயரத்தை அடைந்து நண்பர்களுடன் போட்டி போட்டு கொண்டு பனிச்சறுக்கு செய்து கீழ்தளத்தை அடைந்தனர்.சிலர் விரைவாக வருகிறேனென்கிற பேர்வழி வேகமாக வந்து வழுக்கிக்கீழே விழுந்து புதையல் எடுத்துக்கொண்டதைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? அல்ல அவர்களாவது முயிற்சி செய்கிறார்கள்...நாம் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறோமே என்று வெட்கம் கொள்ளவா? என கணவரும் நானும் பேசிக்கொண்டோம்.

இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி பயணத்தின் பொழுது மொத்த பனி அரங்கின் அழகைப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள பல முறை பல சவாரிகள் செய்வதற்கு அதன் வழி பயணம் செய்ததால், ஒரு முறை பணியாளரே எங்கள் நுழைவுச் சீட்டை வந்து சரிபார்த்தார். அப்பயணம் செய்யும் பொழுது நிழற்படம் எடுத்துத்தரும் ஒளிப்படக்காரரும் எங்களை மறுமுறை நிழற்படம் எடுக்க ஆயத்தமாக நாங்கள் அவருக்கு ஏற்கனவே பயணம் மேற்கொண்டு நிழற்படம் எடுத்துக் கொண்டதை விளக்கவேண்டியதாயிற்று

தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்த பனிச்சறுக்கு, சறுக்குப்பலகை, பனி நடைக்கட்டைப் போன்றவற்றை நேரில் சிலகுழந்தைகளின் சாகசங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, இக்குழந்தைகளெல்லாம் ஐரோப்பிய பனிப்பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது பணத்தைப்பற்றி கவலைப்படாது பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் பிள்ளைகளாகவோ இருக்க வாய்ப்பு அதிகமென்றார் கணவர்..

பனித்தரை என்பதனால் பெரிதாகக் காயம்படாவிட்டாலும் உடல்வலி உறுதி என்று கணவர் மிரட்டலாகத் தெரிவித்தார். அங்கிருந்த அனைத்துப் பணியாளர்களுமே தினமும் கடுங்குளிரில் வேலை செய்தாலும் சிரித்த முகத்துடன் எங்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆப்ரிக்க, வடஇந்திய, பிலிப்பினோ மக்களை மட்டுமே பணியாளர்களாக பார்த்திருந்த எங்களுக்கு பனிப்பூங்காவில் இராமநாதபுரம் , திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்களை பார்த்தவுடன் தமிழ்பாசம் பீறிட்டு வந்தது.

இராட்சத பந்திற்குள் நான் ஏறிக்கொள்ள சற்று மேடான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி உருட்டி விட முதல் தடவையைக் காட்டிலும் இரண்டாம் தடவை நன்றாக உருண்டுவந்து   பந்திலிருந்து வெளியே வந்த பொழுது தலை சுற்றி நிலமே ஆடுவதை நன்றாக உணர்ந்தேன். கணவர் எனது தொந்தரவு தாங்காமல், எல்லா சாகசச் சவாரியிலும் விருப்பமிருக்கோ இல்லையோ எனக்குத் துணையாய் வந்தார். எட்டு மற்றும் வட்ட வடிவ ரப்பர் இருக்கைகளில் அமர்ந்து தலா இரண்டு முறை எல்லா பனிச்சறுக்கு விளையாட்டையும் உற்சாகத்தோடு அனுபவித்தோம்.

கணவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று நிழற்படம் எடுத்துக்கொள்ளும் போதுதான் அங்குள்ள பனி உப்பத்தண்ணீரில் செய்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். கீழே இருந்த பனித்துகள்களை ஒன்றாய்ச் சேர்த்து மேலே தூக்கிப்போட கணவர் நான் பனிப்பொழிவில் இருப்பது போல் ஒளிப்படம் எடுத்தபின் தலையில் இருந்த பனித்துகள்களை அக்கறையுடன் தட்டிவிட்டு, உன் மகள் சேட்டையைவிட உன்சேட்டையைத் தான் தாங்க முடியவில்லை என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். இன்னும் ஏதாவது சவாரிகள் இருக்கிறதா என்று நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க இனிமேல் தான் இதை வடிவமைத்த போமகல்ஸ்கி நிறுவனம் யோசித்து கட்டவேண்டும் என்று என் கரம்பற்றி வெளியே இழுத்து வந்தார்.

முன்னொரு தடவை இப்பேரங்காடிக்கு வந்திருந்த பொழுது அங்கு அமைந்திருந்த ‘அடிடாஸ்’ (adidas) எனும் விளையாட்டுத் துறையைச் சார்ந்த கடையை பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் தேவிட்பெக்காம் திறந்து வைத்தார் என்று கேட்டு ஆச்சர்யப்பட்டோம். குழந்தைகளை மட்டும் கவரும் வகையிலல்லாது பெரியவர்களும் அதிசயிக்கும் வகையில் பெரிய பெரிய உருவங்களில் ஹல்க் எனப்படும் ஆஜானுபாகுவான பச்சை மனிதன், உலகைக் காப்பாற்றும் சூப்பர்மேன் எனப்படும் அதிசய மனிதன், யானை போன்றவற்றை நிறுவியிருந்தனர்.

ஒரு கடையில் குழந்தைகளின் பிஞ்சுகை மற்றும் கால்கள் போன்றவை மட்டுமல்லாமல் தம்பதியினரின் கைகளையும் என்றும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி ஆர்வமூட்டும் செய்முறைப்படி கட்டணத்திற்கு அச்சு ஏற்படுத்தித் தந்தார்கள். நான் அதைப் பார்த்துவிட்டுக் கணவரையும் ஒரு பார்வைபார்க்க “நம் ஊரில் களிமண்ணில் இதைவிட சிறப்பாக உனக்கு அச்செடுத்து தருகிறேன்” என்றார் கணவர்.  

உலகிலேயே குடும்பத்துடன் குதூகலமாயிருக்குமாறு கட்டமைக்கப்பட்ட உள்ளரங்கப் பூங்காவான மேஜிக் பிளானட்(magic planet) எனப்படும் மாயக்கிரகம் குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் பணம் செலவழிக்க வைத்து மாய உலகில் மயக்கிவிடும். ஒவ்வொரு விளையாட்டு இயந்தரத்திற்கும் கட்டணம் செலித்திக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

வண்ண வண்ண குளிர்பாலேடையை (ice cream)  கூழாக்கிச் சொட்டு சொட்டாய் விட்டு குளிர்நிலையில் உறைய வைக்கும்பொழுது  அது சின்ன சின்ன உருண்டைகளாய் மாறி இருந்த குளிர்பாலேடை  அப்பேரங்காடியிலிருந்த ஒரு கடையில் கணவரின் விளக்கத்துடன் சுவைத்துபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

டாய் ஸ்டோர் (toy store) எனப்படும் பிரசித்தி பெற்ற பொம்மைக் கடையில் கிடைக்காத பொம்மைகளே இல்லையோ என்று தோன்றியது. குழந்தைகளைக் கவரும் விதவிதமான கதாப்பாத்திரங்களிலிருந்த பொம்மைகளை குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பார்களோ இல்லையோ என்னைப் போன்ற பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் வாங்கித் தரச்சொல்லி நச்சரிப்பார்கள்.

இங்கு கோல்டுஸ்டோன் (cold stone) என்றழைக்கப்படும் பிரசித்திபெற்ற குளிர்பாலேடை கடையில் வித்தியாசமாக ஒரு பனிக்கல்லின் மீது நமக்கு விருப்பமான சுவையுடைய குளிர்பாலேடைகளையும் முந்திரி திராட்சைகளையும் போட்டு கலந்து தயார் செய்து துள்ளலலான இசைக்கேற்றவாறு பணியாளர்கள் ஆடியபடி சற்று தூரத்தில் நின்று கொண்டு கலவை குளிர்பாலேடையை தூக்கி தூக்கி எறிவார்கள். பணியாளர்களோ சிரித்துக்கொண்டு சத்தமெழுப்பி குளிர்பாலேடையை பந்தாடுவர்கள். நமக்கோ விலையுயர்ந்த குளிர்பாலேடைகளை கீழேபோட்டு விடுவார்களோ என்ற பயத்தில் மனது பதறும். பின்பு ஒரு வழியாக கண்ணிற்கு வேடிக்கை காட்டிவிட்டு வாய்க்கு குளிர்பாலேடையை கொண்டுதருவார்கள்.

தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்திருந்த மேலை நாட்டுப் பெண்களின் ஒய்யாரமான நடையையும் ஆடை அலங்காரங்களையும் இந்த பேரங்காடியில் ஒரு தடவை நிகழ்ச்சியாய் பார்த்தவுடன் நாமும் உலகப் புகழ்பெற்ற ஆடை அலங்கார அணிவிப்புகளை நேரிலேயே பார்த்தோம் என்று திருப்திபட்டுக் கொண்டோம்.

இப்பேரங்காடியின் இரண்டாம் தளத்தில் இசைபள்ளி, நூலகம், நாடக ஒத்திகை அறை, பாட அறை போன்ற எல்லாவசதிகளும் பெற்ற துபாய் கலை மையம் (dubai community theatre and arts centre) என்றழைக்கப்படும் பெரிய நாடகக் கலை அரங்கத்தில் குறுநாடகப்போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் எனக்குத் தெரிந்த நன்கு பரிட்சையமான தமிழ் சங்கத்தை சார்ந்த பல திறமையான மனிதர்கள் தங்கள் சிறப்பான பேச்சு, நடிப்பு, சிந்தனைத் திறமையால் பரிசுகளை வென்றிருந்தார்கள்.

கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சியைப் பற்றி தெரியவந்ததால் என்னால் எந்த பங்களிப்பையும் கொடுக்க  முடியாமல் போய்விட்டது. சற்று முன்னால் தெரிந்திருந்தால் உலகப்புகழ்பெற்ற பேரங்காடியின் கலை மையத்தில் நானும் என் திறமையை வெளிப்படுத்தினேன் என்றொரு பெருமை கிடைத்திருக்குமே என்ற ஏக்கம் எனக்குள் இப்பவுமுண்டு..

திரைப்பட அரங்கங்களுடன், பல பரிமாணங்களான காற்று, நெருப்பு, ஒலி, ஒளி, அசைவுடன் பிரத்யேகமான காட்சிகளை மக்களுக்குகாக ஒளிபரப்ப தயார்செய்திருந்தார்கள். பெருநகர தொடர்வண்டி இணைப்பு இப்பேரங்காடிக்கு உள்ளதால் எளிதாக வீடு திரும்பலாம்.

15 comments:

  1. இரண்டாம்
    தேன் நிலவு
    பனிப்பயணம்
    இனிமை...
    நேரில் கண்ட உணர்வு


    சமீபத்தில் குடும்பத்துடன் சென்று வந்த நினைவுகள் நிழாடியது


    படங்களுடன் இன்னும் அழகாகும் இந்த சில்லென்ற பயணக்காதல்



    அருமை.....

    ஆடலரசன்@Natarajan

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. உன்னுடன் பயணித்த உணர்வு அபி உன் தமிழ் அருமை

    ReplyDelete
  3. உன்னுடன் பயணித்த உணர்வு அபி உன் தமிழ் அருமை

    ReplyDelete
  4. பயண இலக்கியம்
    படைப்பதென்பது
    இலகுவானதல்ல - அதில்
    தாங்கள் வெற்றி பெற்றுள்ளதை
    நான் உணருகிறேன்...

    இப்பதிவைப் படித்தவர்கள்
    ஆங்கே உங்களோடு பயணித்தவாறு
    அவ்விடங்களை
    அழகுறப் பார்வையிட்டதாக உணருவர்!

    ReplyDelete
  5. மனமார்ந்த நன்றிகள் அய்யா

    ReplyDelete