Friday, March 17, 2017
நட்சத்திரத்துடன் ஒரு பிரார்த்தனை
என் அப்பாவின்
அக்காவான மாரீஸ்வரி அத்தையின் மகன் இராம் தன் மனைவி உமாவுடன் புதுமணத் தம்பதியராய்
துபாய்க்கு சுற்றாலா வருகை தந்திருந்த பொழுது அவர்களின் குடும்ப நண்பர்களான சிவகுமார்-சிவகாமி
தம்பதியினர் விருந்திற்கு அவர்களை அழைக்க, பக்கத்து இலைக்கும் பாயாசம் கிடைப்பது
போல, எங்கள் வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததால் எங்களையும் அவர்கள் வரவேற்க,
அவர்களுடன் விருந்தில் பங்கேற்று அபுதாபியைச் சுற்றிப்பார்க்கும் அற்புத வாய்ப்பு எங்களுக்கும்
கிடைத்தது.
சிவகாமி அக்கா பிரபல
சமையல் கலைஞர் ரேவதி சண்முகம் அவர்களின் மகள் மற்றும் வானளாவியப் புகழ் கொண்ட கவிஞர்
கண்ணதாசன் அவர்களின் பேத்தியென்று பல பெருமைகள் பெற்றிருந்ததால் 'பிரபலங்களுடன் ஒரு
நாள்’ என்பது போல அவர்கள் வீட்டிற்குச் சென்று, விருந்துடன் உரையாடி உல்லாசமாக ஊர்
சுற்றப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை.
சிவகாமி அக்கா செய்த
ருசியான காலை உணவை வயிராற உண்டுவிட்டு அபுதாபியைச் சுற்றிப்பார்க்க உற்சாகமாய்
கிளம்பினோம். துபாயிலிருந்து அபுதாபி சற்றுதொலைவு என்பதால் பொழுதுபோக்கிற்காக நான்
சிவகாமி அக்காவையும் அவரது கணவரையும் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்
சரமாரியாகக் கேள்விகேட்டு பேட்டியெடுக்க ஆரம்பித்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக
நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மிகுந்த பொறுமையுடன் சிரித்த முகத்துடன்
பதிலளித்து வந்தார்கள்.
வழியில் புகழ்பெற்ற
ஒருகடையில் குங்குமப்பூ போடப்பட்ட தேநீரை வாங்கிச் சுவைத்துக்கொண்டே
துபாயிலிருந்து அபுதாபிக்கு செல்லும் நீண்ட நெடும்பாதையை பயணகளைப்பில்லாமல் கடந்தோம்.
பிரசித்திபெற்ற ஒரு இடையீட்டு(sandwich) சாண்ட்விச் ரொட்டி கடையில் பல வகையான ரொட்டி, காய்கறிகள், பழவகைகள்,
இறைச்சி, மீன்வகை போன்றவற்றில் நமக்கு பிடித்தமானவற்றை தேர்ந்தெடுத்து நமது
சுவைக்கு ஏற்றவாறு, விருப்ப உணவை வடிவமைத்து உண்டு மகிழ்ந்திடும் வாய்ப்பை
வழங்கியிருந்தனர்.
ஒவ்வொரு
வாடிக்கையாளரின் சுவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பணியாளர்கள் இடையீட்டு ரொட்டியை
தயார் செய்து கொடுக்க அவர்கள் ”இதுவேண்டுமா? அது வேண்டுமா?” என்று கேட்கும் நுனிநாக்கு
உச்சரிப்பு ஆங்கிலத்தில் மின்னல் வேகக் கேள்விக்கு குழப்பமில்லாமல் பதிலளிக்க நான்
சற்று திணறித்தான் போயிருந்தேன்.
அங்கு மதிய உணவை
முடித்துவிட்டு அபுதாபி நகரக்குள் பயணமாக ஆரம்பிக்க, நாணயம் போன்ற கட்டிடத்தைப்
பார்த்து ஆச்சர்யமடைந்தோம். சிவகுமார் அண்ணன் அவர்கள் அந்த அல்தார் (aldar)
தலைமைச் செயலகம் கட்டிடம் தான் ஐக்கிய அரபு அமீரகத்திலே வட்டவடிவிலிருக்கும்
முதல் கட்டடம் என்றும் மனிதனின் உடலை ஒரு பஞ்சகோணத்தில்(pentagon) மையப்படுத்தி நிற்க வைத்தோமாயின் அதன் சுற்றளவு கட்டிடத்தின் வட்டஅளவை
குறிப்பதாகவும், தரையோடு அமைந்திருக்கும் அடித்தளம் பஞ்சகோணத்தின் அடிப்பகுதியை
குறிப்பதாகும் என்றார். இதனை ஆங்கிலத்தில் கோல்டன் ரேசியோ (golden
ratio) தங்க சதவீதம் என்று
கூறுவார்களென படம் வரைந்தும் விவரித்தார்.
இந்த கட்டிடத்தை
வடிவமைப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எதிர்கோணங்களைச் சேர்க்கும் கம்பிச்
சட்டம்(grid) கொண்ட உருக்கு இரும்புகள்(steel) பயன்படுத்தப் பட்டதாகக் கூற, இவ்வளவு முயற்சிகள் எடுத்ததால் தான் ஸ்பெயினில்
நடைபெற்ற மாநாட்டில் “ எதிர்காலத்தின் சிறப்பான கட்டடம் “ என்ற விருதை
வாங்கியிருக்க முடியுமென்று பேசிக்கொண்டோம்.
சிவகுமார்-சிவகாமி அக்கா
தம்பதியினர்கள் பல வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து ஐக்கிய அரபு அமீரகத்தின்
கிடுகிடு வளர்ச்சியை கண்முன்னே கண்டிருந்ததனால், அவர்களால் பல ஆர்வமூட்டும்
முக்கியச் செய்திகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஐக்கிய அரபு
அமீரகத்திலேயே பெரிய மசூதியான பிரம்மாண்டமான சேக் ஷாயித் (sheik
Zayed grand mosque) மசூதிக்குச் செல்வதற்கு
உடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் பெண்கள் அனைவரும் நிர்வாகத்தினர்
வழங்கிய கருப்பு பர்தாவை அடையாள அட்டையைக் கொடுத்து பெற்றுக்கொண்டோம். சிறுமிகளையும் பர்தா அணியச் சொல்லியதிலேயே மசூதியில்
அணியும் ஆடைகளில் அவர்கள் பின்பற்றும் உடைக் கட்டுப்பாட்டை நன்றாக புரிந்து
கொண்டோம்.
மசூதியினுள்ளே
ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும்பொழுது தலையிலிருக்கும் முக்காடு சிறிது விலகினால்
கூட அங்கிருக்கும் பாதுகாவலர் அதைச் சரிசெய்யுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தார்.
2013இல் பிரபல அமெரிக்க பாடகி ரெஹானாவும், சமீபத்தில் செலீனா கோம்சும் மசூதி
தெரியுமாறு ஒளிப்படம் எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளில் எப்படி
சிக்கிக் கொண்டார்கள் என அப்பொழுது தான் புரிந்தது.
மசூதிஉள்ளே சென்று
அதன் பெருமைகளையும், கட்டிடக்கலையின் நுட்பத்தையும் தெரிந்து கொண்டபின் இதை 1996 ஆம்
ஆண்டு முதல் 2007 வரை கட்டிமுடிக்க 11 வருடங்கள் ஆனது சரியென்றே தோன்றியது.
ஐக்கிய அரபு
அமீரகத்தின் தந்தையென்று அழைக்கப்பட்ட சேக் ஷாயித் பின் சுல்தான் அல் நஹியான் (sheik Zayed bin sultan al
nahyan) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய கட்டிடக் கலையும்
கலாச்சார பன்முகத்தன்மையையும் ஒன்றினைக்கும் விதமாக இம்மசூதி அமைய வேண்டுமென்று
எண்ணியதாலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பூதஉடல் மசூதிக்கு பின்னேயே
புதைக்கப்பட்டு இருந்தது.
உலகத்தில் உள்ள பிரசித்தமான
பொருட்களையும் திறமையானவர்களையும் கொண்டு பல இஸ்லாமிய கட்டிடம் மற்றும் மசூதிகளின்
கட்டமைப்பின் தாக்கத்தையும் மனதில் வைத்து பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டிருந்த
மசூதியைப் பார்த்து அதிசயிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
மசூதியினுள் அழகிய
வேலைப்பாடு கொண்ட மிகப்பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருக்க , அதுதான்
இரண்டுவருடங்களாக ஒரு இரானிய நிறுவனத்தால் நியுசிலாந்து மற்றும் இரான்
நாட்டிலிருந்து பிரத்யேகமான கம்பளி கொண்டுவரப்பட்டு பின்னப்பட்ட உலகத்திலேயே பெரிய
கம்பளி என்று தெரியவர அதனை ஒரு முறை தடவிப்பார்த்துக் கொண்டேன். சுமார் 1300
கம்பளி செய்யும் பணியாளர்கள் இணைந்து தயாரித்த கம்பளியின் எடை 35 டன் எனக்கேட்டு
புருவம் உயர்த்தினோம். சிவகுமார் அண்ணன் அவர்களுக்குப் போட்டியாக அவர்களது மனைவி
சிவகாமியும் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த மசூதியின் பெருமைகளை அடுக்கிக்
கொண்டிருந்தார்கள்.
மசூதியிலிருந்த ஏழு
சரவிளக்குகளுமே எங்கள் கவனத்தை ஈர்க்க அவையனைத்தும் ஜெர்மனியிலிருந்த இறக்குமதி
செய்யப்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் (crystals) ஆனவையென்றும், அங்கிருந்த பெரிய சரவிளக்குதான் உலகத்திலேயே மூன்றாவது
பெரிய சரவிளக்கு , மசூதியிலிருக்கும் சரவிளக்குகளில் உலகத்திலேயே இரண்டாவது இடமென
ஆச்சர்யங்களை அடுக்கிக் கொண்டே போனார் சிவகுமார் அண்ணன்.
இறைவனின் 99
பெயர்களை அழகான கையெழுத்துகளுடன் சுவற்றில் இடம்பெற ஐக்கிய அரபு அமீரகத்தின் திறமை
வாய்ந்த கையெழுத்து நிபுணர்கள் மட்டுமல்லாது
சிரியா , ஜோர்டானைச் சேர்ந்த நிபுணர்களும் காரணமாக இருந்தார்கள். இரவிலும்
பெயர்கள் தெரியும் வண்ணம் கண்ணாடி இழை விளக்கு தொழில்நுட்பம்(fibre
optic lighting) வழி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மசூதியில், மேலே
மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதை அருகே தண்ணீர் நிரப்பிய குளத்தை
வடிவமைத்திருக்க குளத்தில் மசூதியின் அழகிய பிம்பம் பிரதிபலிப்பது காலை வேளையைக்
காட்டிலும் இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் அட்டகாசமாய் இருக்கும். நிலவொளியின்
அழகு வெளிப்படுவதற்கு ஏற்றவாரு சுவரில் நீலச்சாம்பல் நிறத்தில் மேகம் போல பிரகாசம்
கூடியும் குறையும் வண்ணம் மின்விளக்குகளால் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மசூதியின் முற்றத்தில்
பூவேலைப்பாடு கொண்டு பெரிய நிலப்பரப்பில் உலகிலேயே மிகப்பெரிய மொசைக் பளிங்கு
சலவைக்கல்லை பதித்திருந்தார்கள். பெண்களுக்கென தனிதொழுகை அறையுடன், 40,000 பேர்
ஒரே நேரத்தில் அமர்ந்து தொழுகை செய்யக்கூடிய வசதியுள்ள மசூதியின் மெல்லிய உயர்ந்த
கோபுரமாக நான்கு உயர்ந்த ஸ்தூபிகள் நான்கு மூலையில் நிறுவப்பட்டிருந்தது.
7 வகையான அளவுகளில்
82 குவிமாடங்கள் அழகுக்கு அழகு சேர்த்திருந்தன. மசூதியின் பிரமிப்பு விலகாமலே
அபுதாபி என்றவுடன் நினைவுக்கு வரும் பெர்ராரி
வேல்டை (ferari world) வெளியிலிருந்து
பார்க்க ஆவலாய்ச் சென்றோம். லிங்கா படத்தில் அறிமுகப் பாடலில் மேலிருந்து
காட்டப்படும் சிவப்பு வண்ணத்தில் இருந்த
கேளிக்கைப் பூங்காதான் உலகத்திலேயே பிரத்யேகமாக பெராரி வண்டியை கருப்பொருளாகக் கொண்டு
கட்டப்பட்டிருந்தது.
அத்தைமகன் இராம்
இந்த பூங்காவைப் பார்வியிட மிகுந்த ஆர்வமாய் இருந்த போதிலும் அச்சமயம் நான் இந்த
சாகசப்பூங்காவை பார்வயிடாததால் எனக்கு இதன் சிறப்பு புரிந்திருக்கவில்லை. ஏற்கனவே
சென்ற நண்பர் ஒருவரும் அந்த பூங்காவிற்கு
போய் வந்த அனுபவத்தை சுமாராக விவரிக்க சற்று குழம்பி அவனது சுற்றுலா
அட்டவணையிலிருந்து அந்தபூங்காவை விலக்கியிருந்தேன்.
பின்னொரு நாள்
நண்பர்களுடன், சலுகைச்சமயம் அனைத்து மக்களும் இலவசமாக உள்ளே வந்து அனைத்து சாகச
இராட்டினங்களையும் வந்து பார்வையிடலாமென அறிவித்திருந்த சமயம் சென்ற
பொழுது தான் இங்கு அவனைக்கூட்டிவராமல்
போய்விட்டோமென மிகவும் வருந்தினேன். அந்த அனுபவத்தைப் பற்றி நான் அடுத்த
அத்யாயத்தில் உங்களுக்கு விவரமாக விவரிக்கிறேன்.
சிவகுமார் அண்ணன்
பூங்காவிற்கு அருகே வண்டியை ஒட்டிச் சென்று பூங்காவை காண்பிற்க முற்பட்ட பொழுது
மிகஉயரத்திலிருந்து பல ஏற்றங்கள் இறக்கங்களுடனான உலகத்திலேயே மிக வேகமாக போகும்
சாகச சவாரியில்(roller coaster) மக்களின்
உற்சாகக்கூக்குரலைக் கேட்டு நாங்களும் ஆர்வமானோம்.
இப்பூங்காவிற்கு
அருகிலேதான் பிரசித்தி பெற்ற பெராரி பந்தய வண்டிகளின் பார்முலா ஒன் (formula
one) போட்டி நடைபெறும் மைதானமும் அமைந்திருக்க, அதனருகே இருந்த
யாஸ் தண்ணீர் பூங்காதான் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தலைசிறந்த சாகசத்தண்ணீர்
பூங்காயென முன்னுரை கொடுத்தார்கள்.
5.5 கிமீ கொண்ட யாஸ்
மரினா சுற்றுப்பாதை தான் உலகத்திலேயே எல்லா வகையான எந்திர வண்டிகளின் பந்தயம்
நடுத்தவும், வழி முழுவதும் இரசிகர்கள் அமர்ந்து இரசிக்கும் அமைப்பும்
கொண்டிருந்தது
பெஃராரி பந்தய
மைதானத்தின் நடுவே ஒரு ஐந்து நட்சத்திர விடுதி அமைந்திருக்க, உலகத்திலேயே பந்தய
மைதானத்திற்குள் அமைந்திருக்கும் முதல் நட்சத்திர விடுதியென்ற பெருமையை அந்த
சொகுசு விடுதி தட்டிச் சென்றிருந்தது. யாஸ் தீவிலுள்ள சில சொகுசு விடுதியிலும்
இந்த ஐந்து நட்சத்திர விடுதியிலும் விடுமுறை நாட்களில் நண்பர்கள் குடும்பத்துடன்
உற்சாகமாக செலவிட்ட நாட்களை மலரும் நினைவுகளாக சிவகாமி அக்கா பகிர்ந்து
கொண்டார்கள்.
இயற்கையாய்
உருவாகாமல் செயற்கையாய் வடிவமைக்கப்பட்ட யாஸ் தீவில் குழிப்பந்தாட்டம் (golf) ஆடுவதற்குத் தேவையாக அமைக்கப்பட்டிருந்த சொகுசு மைதானம் அனைத்து வசதி
கொண்டு உலகப்புகழ் பெற்றதென அறிந்து கொண்டோம். வான்குடை மிதவை வழி (parachute) சாகச விரும்பிகள் பறந்தும், கீழே படகுகள் வேகமாக
சீறிப் பாய்கின்ற காட்சிகளைப் பார்த்துக் கொண்டும் யாஸ் தீவில் பயணித்தோம்.
பேரங்காடிகள்,
வீட்டுக்குத்தேவையான தரமான பொருட்கள் வாங்க பிரசித்தமான அய்கியா
IKEA கடை போன்றவை அமைந்திருக்க, உலகத்திலேயே பெரிய மூன்றாவது
புகழ்பெற்ற வார்னர் சகோதரர்களின் கதாப்பாத்திரங்களைக் கொண்டு அமைக்கப்படும்
பூங்காவை யாஸ் தீவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
பின்னொரு நாளில்
கணவர் எனக்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு தண்ணீர் பூங்காவிற்கு அழைத்துச்செல்வேன் என அளித்திருந்த உறுதிப்படி அட்லாண்டிஸ்
அக்வாவெஞ்சர் தண்ணீர் பூங்கா(Atlantis aquaventure), யாஸ் தண்ணீர் உலகம் (yas waterworld), புர்ஜ் அல் அராப் அருகேயிருந்த வொயில்வாடி தண்ணீர் பூங்கா (wildwadi) என்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று சிறந்த தண்ணீர் பூங்காக்களில்,
துரதிஸ்டவசமாக அட்லாண்டிஸ் அக்வாவெஞ்சர் தண்ணீர் பூங்காவும், யாஸ் தண்ணீர் உலகமும்
நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் பராமரிப்பு காலத்தில் இருந்ததால் சில சவாரிகள்
இயங்காது என கேள்விப்பட வொயில்வாடி தண்ணீர் பூங்காவிற்குச் சென்றிருந்தோம்.
யாஸ் தண்ணீர் உலகத்தில்
கிட்டத்தட்ட எல்லா சவாரிகளும் வொயில்வாடி தண்ணீர் பூங்காவிலிருப்பது போல
இருந்தாலும் பலவகையான வண்ண சறுக்குகளில் நாம் மட்டும் வழுக்கி வருவது, சறுக்கு
பலகையின் மேல் படுத்துச் சறுக்குவது போன்றவை மட்டுமே விடுபட்டிருந்தது.
யாஸ் தண்ணீர்
பூங்காவில் தண்ணீர் வழி மிக உயரத்திலிருந்து பல ஏற்றங்கள் இறக்கங்ளுடனான மிக
வேகமாக போகும் புதிய,பெரிய சாகச சவாரி(roller
coaster) உலகப் புகழ்பெற்றதென
கேள்விபட எனக்கோ அதில் பயணம் செய்யும் ஆசை தொற்றிக் கொண்டது.
உலகத்திலேயே செயற்கை
கடல் அலைகளை ஏற்படுத்தி அதில் சாகசச்சவாரி செய்யும் பெரிய விளையாட்டு அரங்கமிங்கு
உள்ளதென தெரியவர ஒரு முறையாவது அச்சவாரியை செய்து கடலலையில் நாமும் சாகசம் செய்து பார்க்க
வேண்டுமென ஆர்வம் தோன்றிற்று.
சாதாரணமாக ஒரு
நபருக்கு நுழைவுச்சீட்டு அதிகபட்சம் 185 திராம்களென்றாலும் தண்ணீர் பூங்காவைப்
பராமரிக்கும் காலங்களில் அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடியுரிமை
வைத்திருப்போருக்கு 95 திராம்கள் தானென விளம்பர அறிவுப்புகளைப் பார்க்க எனக்கோ ஆசை
அதிகமானது.
இணையத்தில் யாஸ்
தண்ணீர் பூங்காவைப் பற்றிய சில காணொளியைப் பார்த்தபின் ஓரளவு எல்லா சவாரியும்
செய்தாகி விட்டதென மனம் சற்று ஆறுதலடைந்தாலும் ஓரிரு சவாரியின் அனுபவம்
கிடைக்கவில்லையோயென மனிதமனம் சிறிது குறைபட்டுக் கொண்டது. என்ன செய்தாலும் உன்னை
திருப்தி அடையச் செய்ய முடியாது என்று கணவர் கூறுவது உண்மைதானோ என குறைபட்டுக்கொண்டேன்.
சிவகுமார்-சிவகாமி
தம்பதியினர் அவர்கள் எங்களுக்கு அபுதாபியில் எல்லா இடங்களையும் பெருமையையும்
விவரித்துக்கொண்டிருக்க இங்கே அமைந்திருக்கும் எல்லாமே உலகப்புகழ் பெற்றதுதானா
என்று அலுத்துக்கொண்டோம்.
அபுதாபியில் முக்கியமான
பாலம், சாலைவழியே என்று ஓரளவு எல்லா இடங்களையும் சுற்றிபார்த்துவிட்டு துபாயை
நோக்கிப் புறப்பட, துபாய் நகரின் நுழைவுவாயிலில் இருந்து சிறு தொலைவில் பழைய உயர்தர
பெருமை வாய்ந்த பாரம்பர்ய நான்கு சக்கர வண்டிகளைக் கொண்டு அதைக் கருப்பொருளாக்கி திறந்த
வெளி உணவகத்தை (last exit) நிறுவியிருந்தார்கள்.
ஒன்றின் மீது
ஒன்றாகயென்று பலவண்ணங்களில் எந்திர ஊர்திகளை நிறுத்திவைத்தும், எந்திர
வண்டிகளுக்குள்ளே உணவகத்தை அமைத்தும் சுற்றுலா பயணிகளை ஈர்த்திருந்தனர்.
எங்களுக்கு இயற்கை உபாதை ஏற்படாவிட்டாலும் எங்களை சிவகாமி அக்கா அங்குள்ள
கழிவறைக்கு போய்வாருங்களென்று சிரித்தபடி கூற அங்கு கழிவறையையும் வித்தியாசமாக
சிந்தித்து எந்திர வண்டிகளின் உதிரி பாகங்களைப் போல வடிவமைத் திருந்தார்கள்.
கைகழுவுமிடத்தில்
தண்ணீர் வருவதற்கு எந்திர வண்டியின் வேகத்தை விரைவுபடுத்தும் பொறியை காலால்
அமுக்குவது போல அமைத்திருந்தது ஓர் உதாரணம். உதிரி பாகங்கள், எந்திர வண்டிகளை
சரிசெய்ய உதவும் கருவிகள் போன்றவற்றை கொண்டு சுற்றுப்புறத்தை அலங்கரித்திருந்தனர். உணவு விலை எல்லாம் சற்று அதிகமென்றாலும் உணவகத்தைப் பார்க்கவாவது
அவ்வுணவு விடுதிக்கு நிச்சயமாகப் போய் வரலாம்.
வாகன எரிபொருளை
நிரப்ப உதவும் கருவியை விளையாட்டாக வாயினருகே வைத்து நிழற்படம் எடுத்துக் கொண்டு நாங்கள்
கிளம்பலாம் என்று நினைக்க பல விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் போட்டியில் கலந்து
கொள்வதுபோல இளைஞர்கள் கும்பலாக வந்திருந்தார்கள். என் கணவரும் இதுபோல விலையுயர்ந்த
இருசக்கர வண்டி வைத்திருந்தாலும் வந்தவர்களின் வண்டி அதைவிட பல இலட்ச ரூபாய்
அதிகமிருக்குமென்றே தோன்றியது.
இளைஞர் கூட்டம்
ஆரவாரத்துடன் கிளம்பியதும் நாங்களும் துபாயிலுள்ள ஒரு பழைய பிரபல கதாநாயகியின்
பெயரில் அமைந்த ஆப்பக்கடைக்குச் சென்று இரவு உணவு முடித்து வீடு திரும்பலாமென
முடிவு செய்திருந்தோம். ஆப்பக்கடை அந்த பிரபல கதாநாயகியோடதா ? இப்பொழுது ஏன்
ஆப்பக்கடை என்று மட்டும் வைத்திருக்கிறார்கள் என்று பல முக்கிய கேள்விகளைக் கேட்டு
எங்களுக்குள் நக்கலாக விவாதித்து வந்தோம்.
இதை கவனித்துக்
கொண்டிருந்த சிவகுமார் அண்ணன் அது தனக்குத்
தெரிந்த நண்பர் ஒருவரின் கடைதானென்றும், உங்களைப் போன்று நாலுபேர் இவ்வாறு
நாலுவிதமாக பேசுவதனால் தான் தன்னுடைய மகளின் பெயரை நீக்கிவிட்டார் என்றுகூறி
சிரிக்க நாங்கள் அனைவருமே நன்றாக அசடு வழிந்தோம்.
ஆப்பக்கடையில்
காளைமாட்டின் கண் என்று புல்ஸ் ஐயை (bulls eye)உணவாகச் சிலர் கொண்டுவரச் சொல்ல நான் மிகவும் குழப்பத்துடன் எதிர்பார்த்திருந்தது
ஆப்பத்தில் ஊத்தப்பட்ட அரை வேகாத முட்டை தான் என்று தெரிந்தவுடன் எனக்குள்ளேயே சிரித்துக்
கொண்டேன்.
நிறைவான இரவு உணவை
உண்டுவிட்டு நல்ல நினைவுகளைச் சுமந்து சிவகாமி-சிவகுமார் தம்பதியினர் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகூறி பிரியாவிடை கொடுத்து, அவர்கள் என் மகளுக்கு பரிசாய் கொடுத்த அழகு
உடையுடன் வீடு வந்து சேர்ந்தாலும், இன்னும் அபுதாபியில் பார்க்க வேண்டிய இடங்களைக்
குறித்துக் கொண்டு தூங்கிப்போனேன்.
Subscribe to:
Post Comments (Atom)
😊
ReplyDeleteThanks dear
DeleteU have lot of patience....Keep going...
ReplyDelete"7 வகையான அளவுகளில் 82 குவிமாடங்கள் அழகுக்கு அழகு சேர்த்திருந்தன. மசூதியின் பிரமிப்பு விலகாமலே அபுதாபி என்றவுடன் நினைவுக்கு வரும் பெர்ராரி வேல்டை (ferari world) வெளியிலிருந்து பார்க்க ஆவலாய்ச் சென்றோம்." என அழகாக விவரித்துள்ளீர்.
ReplyDeleteபதிவு நீண்டிருப்பினும் சுவையாக அமைந்திருப்பதால் வாசகருக்குச் சலிப்புத் தட்டாது.
மிக்க நன்றி ஐயா
Deleteசிவகுமார் சிவகாமி தம்பதியினரின் விருந்தினராக உங்களுடன் வந்தது போன்ற உணர்வு
ReplyDeleteசிவகுமார் சிவகாமி தம்பதியினரின் விருந்தினராக உங்களுடன் வந்தது போன்ற உணர்வு
ReplyDeleteமிக்க நன்றி
Delete
ReplyDeleteதுபாய் பயணம் பலருக்கும்,பாடமாக..,பிரமிப்பாக அமையும் என்பது உண்மை அபி ..,
மனமார்ந்த நன்றிகள்
Delete