Friday, February 10, 2017

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா?

சாலையினோரம் அமைந்திருந்த சுற்றுலா அலுவலகம் பெரிய சொகுசு படகு, சிறிய படகு, துள்ளும்  ஓங்கில்களையுடைய 
(dolphin) ஒளிப்படங்களை முசண்டம்  என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.  உடனே என் கணவரிடம் அதைக் காட்டி ”ஏங்க முசண்டம் என்றால் என்ன?” என்று ஆர்வமாய் வினவினேன். உன் கண்ணில் இருந்து எதையும் மறைக்க முடியாதடியம்மா! உடனே விசாரிக்கிறேன் ராணியார் அவர்களே! என்று பணிந்து சிரித்தார்.

அதனைப் பற்றி கணவர் விசாரிக்கும் பொழுது , நண்பர்கள் இருவகையான முசண்டம் சவாரி உள்ளதென்றார்கள். சுற்றுலா வருபவர்கள் என்றால் ஷார்ஜா , ஓமன்  எல்லை அருகே டிப்பாவிலும் (Dibba) , எங்களைப் போன்று தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் கசாபா என்ற ஓமனுக்குள்ளே உள்ள முசண்டம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள்.

இந்தவிவரம் மிகவும் தாமதமாக தெரிந்ததால் என் பெற்றோரையும், மாரீஸ்வரி அத்தையையும் முசண்டம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடியாத வருத்தம், பயணம் செய்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் வந்திருந்த பொழுது தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் முசண்டம் சவாரி செய்யலாம் என்ற அறியாமையில் இருந்தோம்.

என் அத்தைமகன் இராமும், அவனது மனைவி உமாவும் மிகவும் குறைவான நாட்கள் அமீரகச் சுற்றுலாவிற்கு திட்டமிட்டிருந்ததால் அவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்ய முடியாமல் போயிருந்தது.   

எத்தனை வருடங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்தாலும் , தொழில்செய்தாலும் மற்ற நாட்டினவருக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்காது. தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமையை அங்கே பணிபுரிபவர்கள் அலுவலகத்தின் உதவியுடன் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

என் அத்தையும், மாமாவும் சுற்றுலா வந்திருந்த பொழுது இத்தகவல் தெரிந்ததால் உற்சாகத்துடன் அவர்களுடன் , நான்,  என் கணவர் , குழந்தையுடன் அப்பயணத்துக்கு ஆர்வத்துடன் தயாரானோம்.

ஓமன் பக்கத்து நாடு என்பதனால்நாங்கள் அனைவரும் அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa) பெறுவதற்காக  எங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்தோம். 

அதிகபட்சம் 225 திராம்கள் என்பதனால் என் மாமா கண்டிப்பாக இதற்குச் செல்ல வேண்டுமா என்று கடிந்து கொண்டார். நாங்கள் அச்சமயம் அருமையான காலநிலை என்பதாலும் அனைவருமே முதல் தடவை அந்த பயணத்தை அனுபவிக்க போகிறோம் என்பதாலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தோம். 

சுற்றுலா நிறுவனத்திலிருந்து அவ்விடத்திற்குச் செல்லவும் , திரும்பி அழைத்து வரவும் சிற்றுந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தாங்களே  வாகனத்தை ஓட்டிப் பயணத்தை இரசித்தவாறு செல்லும் வாய்ப்பும் இருந்தது.

சுற்றுலா நிறுவனத்தில் அதற்கேற்றார் போல் போக்குவரத்துச் செலவைக் கழித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தனர். தடங்காட்டியின் (GPS) உதவியோடு சரியான பயண இலக்கைக் குறிப்பிட்டால் சேரவேண்டிய இடத்தைச் சரியாகச் சேர்ந்திடலாம்.

அதிகாலையிலேயே வீட்டின் அருகிலே உள்ள பர்ஜுமான் (burjuman) நிறுத்தத்திற்கு முதல் ஆட்களாக வாடகை வண்டியில் சென்றோம். ரொட்டி , பழஊறல் (jam) ஆகியவற்றை காலை உணவாக எடுத்து வைத்திருந்தோம். கேரளாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் எங்களுடன் பயணத்தில் இணைந்தனர்.

அதிகாலை நெடுந்தூரப் பயணம் என்பதனால் அனைவருக்கும் நன்றாக தூக்கம் வந்தது. இடையில் சற்று நேரம் இயற்கை உபாதைக்காக சிற்றுந்தை நிறுத்தினார்கள். நாங்கள் போகும் வழியில் ஷார்ஜா என்ற பெயர் பலகைகளைப் பார்த்து அடைந்த குழப்பத்தை , ஷார்ஜா இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது என்ற விவரம் அறிந்தவுடன் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa), அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு எங்களை ஓமனின் எல்லையான (dibba) டிப்பாவிற்குள் அனுமதித்தனர். உள்ளே நுழையும் பொழுது வரிசைச்சற்று குறைவாக இருந்ததால்  சீக்கிரம் சென்றுவிட்டோம். இதுவே பண்டிகை விடுமுறை நாட்கள் என்றால் வரிசையில் நின்று காத்துக் காத்து அலுத்துவிடுவோம் என்றறிந்தோம்.

ஒமன் எல்லை வந்தவுடன் எனக்கு அங்கு வசித்த மருத்துவர் அமுதா அத்தையின் ஞாபகமும், என் கணவருக்கு அவரது தாசு மாமா ஞாபகமும் வந்து சென்றது. பின்னொரு நாட்களில் ஒமனுக்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டோம்  

பின்பு சிறிது தூரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம்
மலைகளால் சூழப்பட்டு நல்ல தட்பவெப்பத்துடன் வரவேற்றது.
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்பம் என்பதனால் அழகுகடலும் உயரமும் கம்பீரமும் உடைய மலைகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன. திரைப்படப் படப்பிடிப்பு எடுப்பதற்கு நல்ல இடம் என்று நானும் என் அத்தையும் பேசிக்கொண்டோம். 

சிற்றுந்திலிருந்து இறங்கி வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை பதட்டத்துடன் அதிரடியாக தாவி குதித்து நாங்கள் எங்களுக்கான படகை அடைந்தோம். எங்களால் படகுகளை தனியே தாவி குதிக்க இயன்றாலும், நானும் என் அத்தையும் மிகவும் பயந்தது போன்று பாவணை செய்ய, என் கணவரும்,என் மாமாவும் தங்களது கைகளை நீட்டி எங்களை பத்திரமாக படகுகளை கடக்க உதவிசெய்ய நானும் என் அத்தையும் கண்களில் காதல் தெரிய சிரித்துக்கொண்டோம்.

குழந்தையை வைத்திருந்ததால் படகுகளைத்தாவி குதிக்க நான் மிகவும் பயந்துதான் போயிருந்தேன். இரண்டு அடுக்குப் பெரிய படகில் மெத்தை தலையணையெல்லாம் வைத்து பயணத்தை சொகுசாக ஏற்பாடு செய்திருந்தனர். அயல்நாட்டினர் மற்றும் வடநாட்டினருடன் எங்கள் பயணத்தை காற்றின் வரவேற்பு முத்தத்துடன் ஆரம்பித்தோம். ஒரு சிலர் படகு புறப்படுவதற்குத் தாமதமானதால் தங்கள் சுற்றுலா நிர்வாகத்தினருக்கு தொலைபேசியில் அழைத்து திட்டி தாங்கள் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு கத்திக் கொண்டிருந்தார்கள்.

படகிற்குள் இளவெயில் அடித்ததால் வெயிலடிக்காத பக்கத்தில் உட்கோர்ந்தோம். ஆனால் படகு திரும்பி கடலுக்குள் வேறுவேறு திசையில் பயணம் செய்ய இளவெயிலும், நாங்கள் எங்கள் உடைமைகளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக படகில் முதலுதவி பெட்டியில் தேவையானவற்றை வைத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் ஈரட்டிகள் (biscuits) , பழங்கள், தண்ணீர், காபி ,தேநீர் ,
 குளிர்பானம் போன்றவற்றை கட்டுப்பாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் அடுக்கில் கடற்கரைகளில் போடப்பட்டிருக்கும் சாய்வு படுக்கைகளை போட்டிருந்தனர். அதில் நமக்கென தனிபாங்குடன் படுத்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்தவாறு உடலைத் தழுவும் குளிர் காற்றுடன்  பயணம் செய்வது சுகமான ன்றே!

நல்ல சீதோஷ்ணநிலையில் நாங்கள் சென்றிருந்ததால் படகு செல்ல செல்ல குளிர் காற்று வீசியது. அந்த குளிர்ந்த காற்றில் என் தமிழ்செல்வி அத்தையின் கூந்தல் ஒரு தனிபாங்குடன் அழகாகப் பறக்க அதை என் கணவர் தெளிவாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார். கதாநாயகி போல் இருக்கிறீர்கள் அம்மா என்று என் கணவர் கூற வெட்கத்தில் அத்தை சிரித்தார்.


பெரிய படகிலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரித்து சிறு சிறு  படகுகளில் அனைவரையும் பாதுகாப்பு  உடையுடன் அங்கு சற்று தொலைவிலிருந்த வித்தியாசமான பாறைகள் அடியே கூட்டிச் சென்றார்கள். சுண்ணாம்புக் குகைகள் அருகே சென்று பார்த்தபொழுது சிறு பறவைக்கூட்டையும், வெவ்வேறு காலத்தில் தண்ணீரின் அளவுகள் பாறைகளில் பதிந்திருந்ததையும் காணநேர்ந்தது.

மிகுந்த தைரியசாலிகள், நீச்சல் தெரிந்தவர்கள் , சாகச விரும்பிகளை வாழைப்பழம் (banana ride) போன்ற படகில் வேகமாகக் கூட்டிச் சென்றனர். வாழைப்பழம் போன்றிருந்த படகில் பயணம் செய்யும் ஆசையிருந்தாலும் நீச்சல் தெரியாத காரணத்தால் விஷப் பரீட்சையில் ஈடுபடவில்லை.


சில இடங்களில் தண்ணீர் கண்ணாடியைப் போன்று இருந்ததால் கீழே உள்ள மணல்,  மீன்கள், கல்,  பவளப்பாறைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. நீரடி காற்றுவழங்கி (snorkelling) வழி சுவாச நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மூச்சுவிடுவதை திறமையாய்க் கற்றுக் கொண்டோமானால் கடலினுள்ளே உள்ள  உயிரனங்களையும்,  பாறைகளையும் இரசித்தவாறு வேறு உலகிற்குச் செல்லும் வாய்ப்புகிடைக்கும்.

நீச்சலும் தெரிந்துவிட்டால் பிரமாதம்.யாருடைய உதவியில்லாமல் கடலுக்கு அடியில் உள்ள உலகத்தை உணரலாம். அந்த அனுபவத்தை அந்தமானில் அனுபவத்திருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாததால் வழிகாட்டி ஒருவரின் துணையுடன் நானும் என் கணவரும் கடலுக்கடியில் உள்ள அற்பத உலகைப் பார்த்திருக்கிறோம்.

கடலில் ஓரிடத்தைக் காட்டி இங்கேதான் ஓங்கில்கள் ( dolphin) வர வாய்ப்பு அதிகம் என்றார்கள். ஓங்கில்களின் வருகை மிகவும் அரிதானது என்றும் கூறியிருந்தார்கள். நாங்கள் ஒரு ஓங்கிலைக் கூட பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்திருந்தோம்.

அதுவே ஓமனுள்ளே அமைந்திருந்த கசாபா முசண்டம் என்றால் நிறைய ஓங்கில்கள் வரவாய்ப்புள்ளது என்றும் அவைக்கு உணவளிக்க அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
பின்னொரு நாள் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஓமனுள்ளே அமைந்திருக்கும் கசாபா முசண்டத்திற்கு வண்டியில் செல்ல வேண்டுமென்று நானும் என் கணவரும் பேசிக்கொண்டோம்.

வயதான பாட்டிகளாயினும் பலர் குடும்பத்துடன் சுற்றுலா வந்தது ஆச்சர்யத்தை தந்தது. நம் நாட்டில் பாட்டிகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வந்தபின் இவையெல்லாம்  என்னால் முடியாது என்று கூறி சுற்றுலாவைத் தவிர்த்துவிடுவார்கள். வயதான பாட்டிகளாயினும் படகில் ஏறி, இறங்க, மகிழ்ச்சியாய் தன் வயதை ஒத்தவர்களுடன் பேசிச்சிரித்து குடும்பத்துடன் களிப்பிலிருந்தனர்.

பெண்கள் உடலை மூடிக் கொள்ள புர்கா என்னும் கருப்பு உடையைத்தான் உடுத்துவார்கள் என்றெண்ணிய எனக்கு பல வண்ண வண்ண நிறத்தில் பல பல வடிவமைப்புகளுடன் உடலை மறைக்கும் பாவாடை சட்டை போன்று அணிந்திருக்கும் பெண்களைப் பார்க்கையில் விந்தையாய் இருந்தது.

சுகமான காற்றை இரசித்து என் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய படகில் என் மாமாவை துணைக்கு அமர்த்திவிட்டு நான், என் கணவர், அத்தை ஆகியோர் பெரிய
படகிலிருந்து சிறுபடகு வழி சிறுதூரம் வந்து ஒரு தீவுபோலிருந்த மலையடிவாரம் அருகே சிறுசிறு குழுக்களுடன் இறங்கினோம்.

மக்கள் நடமாட்டமில்லா அந்தத்தீவில் ஒரு குடிசையும் சில ஆட்டுக்குட்டியும் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. ஒரு பகுதிக்கு வந்தவுடன் நீந்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வர நீச்சல் தெரிந்தவர்கள் ஆர்வமாய் நீந்த ஆரம்பித்தார்கள். நாங்களோ நீச்சல் தெரியாததால் தீவின் கரையிலே கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம். கல்யாணமான புதுமணத் தம்பதிகள் பலர் அச்சுற்றுலாவிற்கு வந்திருந்ததனால் அத்தனித்தீவில் மிகவும் தள்ளிச் சென்று செங்குத்தான மலைகளில் எல்லாம் ஏறி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களுக்கு முன்னால் கடலில் குளித்தனர். அக்குடும்பத்தில் தந்தை தன் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிக்கொண்டிருந்தார். அக்குழந்தை பயந்தாலும் நிதானமாக்க் கோபப்படாமல் கற்றுத்தந்தது எல்லா தந்தையர்களின் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மதிய நேரம் வந்தவுடன் சுடச்சுட சுவையான இந்திய சைவ அசைவ உணவை நம் தேவைக்கேற்றார் போல பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்கள். சுவையான உணவினால் அனைவரும் உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



பின் மீன்பிடிப்பதற்குத் தேவையான தூண்டில், இரை மற்ற தேவையான பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தனர்.
நானும் என் கணவரும் முதல்முறையாக மீன்பிடிக்க ஆயத்தமானோம்.

என் அத்தை பின்னாலிருந்து நாங்கள் செய்யும் கலாட்டாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் கணவர் தூண்டிலை ஆழமாக இறக்க மீன் நிதானமாக இரையை தின்றுவிட்டு போய்விடும் என்று நான் கூறியது போலவே நடந்தது. இறக்கிய தூண்டிலை மேலே கொண்டுவரவே வெகுநேரமானது.

பெரிய படகை வங்காள மொழி பேசும் இளைஞர்கள் கடலிலே செலுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் பேசியது இந்தி மொழிதானா என்று ஐயம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் பேசியது வங்காள மொழி என்று தெளிவுபடுத்தினார் கணவர்.

படகின் கீழ்தட்டில் முழுக்கட்டுப்பாடு இருந்தாலும் மேலடுக்கில் படகின் திசையை தீர்மானிப்பது போன்று கருவியும் சில எந்திரங்களும் இருந்தன. பெரிய படகையையே ஓட்டுவது போன்று தோற்றமளிப்பதற்காக அக்கருவியை இயக்குவது போன்று பலரும் ஒளிப்படமெடுத்துக் கொண்டனர்.

வங்காள இளைஞர்கள் அடிக்கடி மேல்அடுக்கில் வந்து எந்திரங்களை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த எந்திரங்களின் அருகே நாங்கள் அமர்ந்திருந்ததால் மொழி வேறானாலும் என் குழந்தையுடன் சைகை மொழியிலும் புன்னகையிலும் அன்பை வெளிப்படுத்தினர்.

சில வடநாட்டுக் குடும்பங்கள் தங்களுக்குள் நிறைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அதிகமாக செலவாகிவிட்டது என்று அங்கலாய்த்த மாமா பயணத்தின் முடிவில் பயணத்திற்கேற்ற கட்டணமென்று சிரித்த முகத்துடன் கூறினார்.
அத்தையும் சுற்றிப்பார்த்த எல்லா இடங்களில் இந்த இடம்தான் மிகவும் மனம் கவர்ந்தது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

சில சுற்றுலா நிறுவனங்கள்  சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இரவு தங்குவதற்கான கூடார வசதி, உணவு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் அறிந்தேன். அருமையான இயற்கைச் சூழலில் இத்தகைய வசதிகளுடன் குடும்பத்தினர் , நண்பர்களுடன் கொண்டாடுவது நிச்சயம் சிறந்த அனுபவமாகத் தான் இருக்கும்.

படகிலிருந்து இறங்கி சிற்றுந்து பயணத்திற்கு தயாரானோம். பல சுற்றுலா சிற்றுந்துக்கள் அணிவகுத்து நின்றாலும், அந்நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் வாகனத்தை லாவகமாக ஓட்டிச்சென்று சிறுசிறு தெருக்களின் வழியே புகுந்து வந்து பொதுச்சாலையில் இணைந்து முந்திச் சென்றது நம் நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை நினைவூட்டியது. தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் வண்டிகள் சுற்றுலா சிற்றுந்துக்களை முந்திச் சென்றதால் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேர காத்திருப்பு எரிச்சலைத் தந்து   , ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் துபாயை நோக்கிப் பயணமானோம். தினமும் வீட்டு வேலையிலும், குழந்தையைக் கவனிப்பதிலும் ,வெளிஇடங்களுக்கு கூட்டி செல்வதிலும் களைப்பாகி குடும்பத்துடன் மனம் விட்டுப் பேச நேரமில்லாமல் இருந்த வருத்தத்தை இந்த நீண்ட நேர சிற்றுந்துப்பயணம் போக்கியது.

கணவரைப்பற்றி நான் புகார் கடிதம் வாசிக்க என் மாமாவும் , அத்தையும் எனக்கு சாதகமாகப் பேசி என் பக்கம் தீர்ப்பு கூற சற்று அதிர்ந்து போனார் என் கணவர். இது போன்று நெடும்பயணங்களில்
தானே மனம் விட்டுப்பேசிக் கொண்டு நம் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

ஈடுபாடில்லை என்றாலும் மற்றவர் எழுந்து எங்கும் ஓட முடியாது அல்லவா??  வழியெங்கும் கார்இருள் சூழ்ந்து இருந்தாலும், தெரு விளக்கின் வெளிச்சம் பரவாத இடங்களிலும் ஓட்டுநர் சாதாரணமாக வழியைக் கண்டுபிடித்து ஓட்டினார். எங்களுக்குத் தான் இரவு நேரத்தில் மிகவும் திகிலாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லா சாலைவழி ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது.
மனம் மயக்கும் ஒரு நாள் பொழுதை அசைபோட்டுக்  கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.


4 comments:

  1. பக்கத்து நாட்டுக்குப் போகலாமா?
    என்றவாறு
    உள்ளத்தில் (மனத்தில்) தோன்றும் வகையில்
    சுற்றுலா இடத்தைப் பார்வையிட்டேன்!

    ReplyDelete
  2. பல மாதங்கள் ஷார்ஜாவில் இருந்தாலும்இப்போது தான் அறிகிறேன்.ஒரு நல்ல பயண இலக்கியம் வாசகனுக்கும் அந்த பயண அனுபவத்தைத் தர வேண்டும். You achieved the goal through this genre

    ReplyDelete