Saturday, January 14, 2017

ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள் – நாகா



காதலும் காமமும் வேறில்லையென்ற உண்மையைக் காதல் கவிதைகளாய் வரைந்திருக்கிறார் நாகா.அவரது பலகவிதைகளில் காமம் பூனைக்குட்டியாய் எட்டிப்பார்க்கையில் நம் மனதின் ஆர்வமும் திரையை விலக்கி மறைந்து கொண்டு இரகசியமாக அதன் அழகை இரசிக்கிறது.


பிரம்மிக்க வைக்கும் உவமைகளா அல்லது ஒன்றிப்போன உருவகங்களா என்று பிடிபடாத வகையில் கற்பனைக் குதிரைகளைத் தட்டி ஓட வைத்திருக்கிறார்.அன்றாட வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை காதல் தேனைத் தடவி தித்திப்பாக பரிமாறியிருக்கிறார்.


அறிவியல்,விஞ்ஞானம்,பாரதியார்,இதிகாசங்கள்,புராணங்கள், இயற்கை என தான் படித்து இரசித்த ருசித்த அனைத்தையும் இரவல் வாங்கி தன் காதல்கடன்களை அடைத்திருக்கிறார்.
‘காதலின் குவிய தூரத்தில்’
‘சவ்வூடு பரவலாகிறது எங்கள் காதல்’
‘எதிர் எதிர் துருவங்களில் இணைய மறுத்த தருணம்’
இன்னும் இதுபோல பல இடங்களை காதல் கொண்டு அறிவியல் விளக்குகிறார்.

தன் காதலை வெளிப்படுத்த ‘மாதவியின் ஒட்டியாணத்தில் மயில்பீலி ஆகிக்கொண்டிருக்கும் கோவலனாகிறேன்’
அபிமன்யுவின் சக்கரவியூகத்தில் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கிறது உத்தரையின் நேசம்’ என்று புராணங்களில் வரும் வீரபுருஷர்களின் உதவியையும் நாடியிருப்பது காதல் வெளிப்படுத்த நண்பனிடம் கருத்துகேட்பதை ஞாபகப்படுத்துகிறது.


கவிதைகள் காதல் மயக்கம் தருவதனால் அதிலிருந்து மீண்டு வர நேரம் எடுக்கிறது.கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கும் பொழுது வேறுவேறு பொருளுடன் பாடுபொருளும் பிடிபடுகிறது.இக்கவிதைகளை படித்து முடிக்கையில் மனம் காதல்கொண்டவர்களை நிச்சயமாகத்தேடும்.            

5 comments: