Saturday, January 14, 2017

ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள் – நாகா



காதலும் காமமும் வேறில்லையென்ற உண்மையைக் காதல் கவிதைகளாய் வரைந்திருக்கிறார் நாகா.அவரது பலகவிதைகளில் காமம் பூனைக்குட்டியாய் எட்டிப்பார்க்கையில் நம் மனதின் ஆர்வமும் திரையை விலக்கி மறைந்து கொண்டு இரகசியமாக அதன் அழகை இரசிக்கிறது.


பிரம்மிக்க வைக்கும் உவமைகளா அல்லது ஒன்றிப்போன உருவகங்களா என்று பிடிபடாத வகையில் கற்பனைக் குதிரைகளைத் தட்டி ஓட வைத்திருக்கிறார்.அன்றாட வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை காதல் தேனைத் தடவி தித்திப்பாக பரிமாறியிருக்கிறார்.


அறிவியல்,விஞ்ஞானம்,பாரதியார்,இதிகாசங்கள்,புராணங்கள், இயற்கை என தான் படித்து இரசித்த ருசித்த அனைத்தையும் இரவல் வாங்கி தன் காதல்கடன்களை அடைத்திருக்கிறார்.
‘காதலின் குவிய தூரத்தில்’
‘சவ்வூடு பரவலாகிறது எங்கள் காதல்’
‘எதிர் எதிர் துருவங்களில் இணைய மறுத்த தருணம்’
இன்னும் இதுபோல பல இடங்களை காதல் கொண்டு அறிவியல் விளக்குகிறார்.

தன் காதலை வெளிப்படுத்த ‘மாதவியின் ஒட்டியாணத்தில் மயில்பீலி ஆகிக்கொண்டிருக்கும் கோவலனாகிறேன்’
அபிமன்யுவின் சக்கரவியூகத்தில் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கிறது உத்தரையின் நேசம்’ என்று புராணங்களில் வரும் வீரபுருஷர்களின் உதவியையும் நாடியிருப்பது காதல் வெளிப்படுத்த நண்பனிடம் கருத்துகேட்பதை ஞாபகப்படுத்துகிறது.


கவிதைகள் காதல் மயக்கம் தருவதனால் அதிலிருந்து மீண்டு வர நேரம் எடுக்கிறது.கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கும் பொழுது வேறுவேறு பொருளுடன் பாடுபொருளும் பிடிபடுகிறது.இக்கவிதைகளை படித்து முடிக்கையில் மனம் காதல்கொண்டவர்களை நிச்சயமாகத்தேடும்.            

Thursday, January 12, 2017

இரும்புபெண்மணி இந்திராகாந்தி

செல்வச்செழிப்பு சூழ்ந்தாலும் பாதுகாப்பற்றத்தனிமை 
பின்தொடர்ந்தாலும் 
புத்தகத்துடன் சோதனைகளை சாதனைகளாக்கிய சரித்திரநாயகியே!
இளமைகால விளையாட்டாய் வானரசேனை பாலசர்க்கார சங்கம்
சுதந்திரவேட்கையுடன் தந்தையிடம்கற்ற இராஜதந்திரமும் சங்கமம்

அண்டைநாடாயினும் தம்மக்களாய்துயர் துடைக்க 
புதுதேசம் பெற்றெடுத்த அன்னையே!
வங்கதேச உருவாக்கம் வங்கிகளும் தேசியமயமாக்கம்
வேளாண்திட்டங்களுடன் உணவளிக்க பசுமைப்புரட்சி
சிரிக்கும் புத்தராய் பொக்ரானில் அணுஉலகில்புரட்சி

கெட்டசெய்தி கொண்டுவருமா வால்நட்சத்திரம்
பயங்கரவாதத்திற்கு பரிசாயின்னுயிர் பறித்ததே நீலநட்சத்திரம்
ஊமைபொம்மை என்றோரை அவசரநிலைகொண்டு
வாயடைக்கச் செய்த வனிதையே!

இருபதாம் நூற்றாண்டில் இருபதுஅம்சதிட்டத்தால்
இதயங்களில் இடம்பிடித்து இந்தியாவை
இமயம்தொடச்செய்த இந்திரா(ணி)நீ!!!


Monday, January 9, 2017

வரவேற்பு



ஆதவனின் ஆதாயமில்லா
சிவப்புக்கம்பள விரிப்பு
சொல்லித்தந்திடும்
சந்திக்கும் சகமனிதரிடம் 
சிந்தவைத்திடும் 
சந்தோஷச் சிரிப்பு

தீண்டுந்தென்றல் காற்றாய்
வீட்டிற்கு அழைத்திடும் சிறப்பு
உதடுகள் மட்டும் அழைத்திடாது 
உள்ளமது உருகிடும்
அதிதிகளிடம் அன்புபொங்கிடும் 
ஆனந்த அழைப்பு

விலையுயர் உணவகத்திலிருந்து
வரவழைக்கும் விருந்தும்
வீழ்ந்திடும் 
வீட்டுச்சமையலின் முன்னே

அன்பும் அக்கறையுடன்
விருந்தினர் விருப்பமறிந்து
சமைத்து சுவையாய்
பரிமாறுகையில்
அதுவே அமிர்தம் என்றுமே

பல்லாயிரம் செலவழித்து
கடைகளில் கிடைத்த
பொருட்களைப் பரிசாய்
கொடுப்பது சோர்வு

கருத்தாய் சிரத்தையுடன்
சிலநேரம் செலவழித்து
எண்ணமறிந்து என்றும்
நினைவில் நிற்க
செய்திடலாம் பரிசுகளில்
தெரிவானத் தேர்வு

வீட்டிற்கு வந்திடும் 
விருந்தினருக்கு
கொடுத்திடும் உபசாரம்
இறைவனிடம் பெற்று
தந்திடும் ஆசிர்வாதம்

Friday, January 6, 2017

வாட்ஸப் - பகிரி (புலனம்)



நெஞ்சில் நிறைந்த
நினைவில் நின்ற
தொடர்பில்லாமல் தொலைந்த 
பால்யகால நட்பூக்கள் துளிர்க்க
தண்ணீர்த் தெளித்து 
பழைய ஞாபகங்களைப்
பாசத்துடன் பகிரச்செய்த பகிரியே! 

நண்பர்கள்குழுவில் 
நீளும் முடிவில்லா 
அரட்டைகளை 
அடக்கி அரட்ட ஆசான்கள்
யாருமில்லையே!

ஒருநாளேனும் 
வாழ்வில் வழிகாட்டிய 
ஆசான்களிடம் ஆசிபெறும்
அற்புதங்களைச் செய்து
ஆச்சரியமூட்டிப் புலன்களை
புல்லரிக்கவைத்த 
என்னருமைப்புலனமே!

காதலர்களின் 
காதல்பொங்கி வழிய 
சத்தமில்லாத முத்தத்தில்
மையலை மென்மையாய்
மொழியஉதவும் மொழியில்லா 
உணர்ச்சிக் குறுநகைகளே!

எண்ணங்களில் நிறைந்தவரின்
சுயவிவரபடத்தை
எண்ணிலடங்கா தடவை
எடுத்தெடுத்துப் பார்க்கவைத்து
இதயத்தை இதமாக்குவது இரகசியமே!

பகிர்ந்த புகைப்படங்களும்
காணொளியும் 
நம்மையும் நம்திறன்பேசியின் 
நினைவுத்திறத்தை
நில்லாது நிரப்பி
நிலைகுலையச் செய்யுமே!

தடங்கலேதுமில்லாது
தடங்காட்டிவழி
விவரமாய் வழிகாட்டி
நேரவிரயம் நேராமல் 
பயணஇலக்கைச் சேர்த்திடுமே!