Saturday, August 12, 2017

மனத்தூறல்கள் - ரித்துசூர்யா, புத்தகப் பார்வை

முகப்புத்தகத்தின் வழி பல முகங்களை மட்டுமல்லாமல் அவர்களது அகங்களையும் மலரச் செய்து , மழைத் தூறல்களால் கிடைக்கும் சிலிர்ப்பையும் சந்தோஷத்தையும், தன் மனத்தூறல்கள் புத்தகம் வழியே வாசகர்களுக்கு அளித்துள்ள கவிதாயினி ரித்து சூர்யாவிற்கு  நல்வாழ்த்துக்கள்.

காதல் உணர்ச்சி மிக விரைவாக வெளிப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அது போல ஒரு கவிஞருக்கு தன் காதல் உணர்வைவிட கவிதை வார்த்தைகளே விரைவாய் வெளிப்படும். திருநங்கைகளை அர்த்தநாரியாய் உயர்த்திக் கூறி, எழுத்துப்பிழை என்று சமாதானம் செய்தாலும் அவர்களின் இதய வலிக்கு  இதமான ஆறுதல் கூறுகிறார்.

காதலில் ஒற்றைப்புன்னகைக்கும் ஓரப்பார்வைக்கும் உள்ள சக்தி வெளிப்படுகையில் நாமும் கூடல் என்னும் குளிரில் குளிர்காய்ந்து விடுகிறோம். விஞ்ஞான விதிகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வித்தை காதலர்களுக்கு மட்டுமே தெரியும் போல...பூமி உருண்டை என்னும்  விதியில் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்தில் தன் காதலைமட்டும் நிலையாய் வைத்துக்கொள்ளும் வித்தையை காதல் கவிஞர்கள் மட்டுமே செய்வார்கள் .

ஒரு நாள் கூத்தாய் பெண் பார்க்கும் படலத்தில் மணவாழ்க்கைத் தோற்கும் பரிதாபத்தையும் படம்பிடித்து காட்டுகிறார். ஒருதலைக்காதல், காதலின் வலி,  காதலர்களூடே ஏற்படும் நான் என்னும் அகங்காரம் அல்லது ஒருவர் மற்றவரை ஆக்கிரமிப்பது , விவாகரத்துக்கான காரணங்கள் அனைத்தும் மிகுந்த உயிர்ப்போடு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மரபுக்கவிதைகள் அர்த்தம் விளங்குவது கடினம் .அதனில் விவாகரத்தை விளக்குவதற்கு உவமையாய் குறிப்பிட்ட விதம் அருமை.
'உனக்கு விளக்கி விளக்கி
விளங்கவில்லை என் வார்த்தைகள்
விலகுவுவதே சிறந்த முடிவாய்
என்னில் நீ அர்த்தம் காண
விரும்பா மரபுக் கவிதையடா!'

நெருக்கங்கள் மிகுந்து காதல் கசிந்துருகும் கவிதைகளுக்கும் பஞ்சமில்லை.
'ராட்சஷி நீ என்று சொல்லிடுவாய்
எனை விழுங்கி ஏப்பம் விடும்
பேரரக்கனாய் நீ.....
மூச்சு முட்ட முட்ட
காதல் செய்கிறாய்' போன்ற யதார்த்த உணர்ச்சி வெளிப்பாடுகளை கவிதையாக்கியது அருமை.

'உனக்குப் பிடித்த மாதிரி
என்றால்
நானும் உன் விளையாட்டு
பொம்மையாகத் தான்
மாற வேண்டும்!
உயிரும் உணர்வும் அர்த்தமற்று!'

எல்லா காலகட்டத்திலுமே காதல் மிகுதியாய் இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்- பெண் இருவருமே ஒருவொருக்கொருவர் மற்றவரோடு ஊடுருவி ஆக்கிரமித்துக் கொள்ள ஆசைப்படுவதை மேலுள்ள கவிதை வலியுடன் எடுத்துக்காட்டுகின்றது.

ஆண் பெண்ணிற்கு நடுவே தொடுதல் பற்றிய அறியாமையுடனான தேடலின் விளக்கம் அகம் மற்றும் புற விழிப்புணர்வுக்குச் சான்று. சமுதாய அக்கறையில் எழுதப்பட்ட மதுவின் ஆபத்து, பெண்களைத் தந்திரமாய் கவர வரும் விளம்பரங்கள்,  சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு போன்ற கவிதைகள் மனதில் பதிகின்றன.
தாய்பாசம்,  தாயாய் தன் குழந்தைகளின் குறும்புகளை இரசித்தது, தன் மகனுடன் காகிதக்கப்பல் செய்து விளையாடுவது  என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கையாண்டு கவிதையில் மனதையும் தொட்டிருக்கிறார்.

இதிகாசங்களின் கதாப்பாத்திரங்களை தனக்குச் சாதகமாய் எடுத்துக் கொண்டு அனைத்துப் பெண்களின் ஆசையையும் தனது வேண்டுகோளாய் வைக்கிறார்.
சமுதாயத்தில்  ஒரு பெண் தன் சுயத்தை இழந்து சமூகத்திற்காக நிறைய மாறுதல்களை ஏற்றுக் கொள்வதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு சாதனைபடைக்க சொல்லிக்கொடுக்கிறார்.மாற்றங்கள்கொடுக்கும் மாறுதல்களால் பண்பட்டுக்கொள்வது  நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள உதவுகிறது என்ற உண்மையும் நமக்கு விளங்குகிறது.

ஒரு கவிஞராய் அவரது பார்வையில் சிறந்த கவிதையை நிறை பிரசவமாகவும், சற்று சுவை குறைவான கவிதைகளை குறை பிரசவமாகவும் விவரிப்பது அழகு.

திருமணம் பற்றிய கனவுகள் பல இருப்பினும் , ஏற்படும் ஏமாற்றங்களை
கானல் வாழ்க்கையில்
நாணல் போல் வளைந்தே வாழ வேண்டும் என்ற கருத்து சிறப்பாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு தீக்குச்சியின் வாழ்வைக்கூட சுவையாய் கூறும் ஆற்றல் கொண்டவர்கள் கவிஞர்கள். அதையே வேறு சூழ்நிலைக்கு ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மனிதர்கள்.
'எரிய வைத்து
எறிந்து விடுகிறாய் என்னை
எரிந்து விட்டது
எரித்தது யார் என்கிறாய்
எப்படி சொல்வேன்
இறந்தது என்னோடு சேர்ந்து
உண்மையும் தானே!'


சிறிய கவிதைகளோ பெரிய கவிதைகளோ முதல் புத்தகத்திலே முத்திரைப் பதித்திருக்கும் தோழி  தனது திறமையை இன்னும் மெருகேற்றி பல வெற்றிப் படிகள் ஏறி தனது கவிதைகளால் பலரது இதயத்தில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன். 

4 comments:

  1. ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசித்து ரசித்து நேர்த்தியாக எழுதிய திறன்
    மிகச் சாலச் சிறந்த புலமைபெற்ற கவிஞராகி கொட்டிக் குவிந்த வர்ணனைகள்!

    கவிகள் எப்படி இருக்க வேண்டும் எனவும் நீங்க ரசிக்க ரசிக்க உணர்ந்தேன்!

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete