speech in the above google drive link
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
சராசரி வாழ்க்கை வாழ்ந்து , தோல்விகளில் துவண்டுவிடாமல் நிமிர்ந்து நிற்க அன்றேச் சொல்லிக் கொடுத்தான் நம் முண்டாசுக் கவிஞன் பாரதி.
தோல்விகள்.... நாம் எல்லோரும் அவனைப்பார்த்து பயப்படுவோம்... அவனை வெறுப்போம். ஆனால் அவன் தான் நமக்குக் குருவாய் உருமாறி வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவான். நாம் செய்த தவறு என்ன என்று நமக்குச் சொல்லித் தருவான்.நாம் புதிதாக ஒரு முயற்சி செய்து , புதிய பாதையில் பயணிக்கையில் பல தடங்கல்களும் தடைகளும் நிச்சயமாக வரும். வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஒரு விதையிலிருந்து விருட்சமாக உருவாக நாம் முயலும் பொழுது, சிறு செடியாய் வளருகையில் நம் வளர்ச்சியைத் தடுக்கவும், நம்மை பின்னோக்கித் தள்ளவும், நம்மை முழுவதுமாய்த் தின்று நிர்மூலமாக்கவும் பலர் ஆடுகளைப் போல் ஆவலாய்க் காத்திருப்பார்கள்.அந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து ஒரு மரமாய் நாம் வளர்ந்த பின் அதே ஆடுகள் நம்மிடம் ஆதாயம் தேடி நிழலுக்காக ஓடி வருவார்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இலக்குகள் நிர்ணயித்துக் கொள்ள எந்தக்கட்டுப்பாடும் இல்லை. சூழ்நிலைக்காகச் சுயத்தை இழக்கும் அவசியமும் இல்லை. நம் மனம் விரும்பியதை படிப்போம். அத்துறையிலேயே முத்திரையும் பதிப்போம்.நேரம் இல்லை என்ற பொய்யுரைகளைப் பலர் கூறக் கேட்டிருக்கிறோம். உலகில் உள்ள அனைவருக்கும் அதே 24 மணிநேரம் தானே...நாம் செய்யவேண்டிய செயல்கள் நிறையத்தான் இருக்கிறது...அதை எந்த வரிசையில் அடுக்கி எப்படிச் செய்து முடிக்கிறோம் என்பதிலேயே நம் வெற்றி ஒழிந்திருக்கிறது.தேடல் நம்மை இயங்க வைக்கிறது.நம்மைத் தூங்க விடாமல் துன்புறுத்துகின்றது.உடல் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டாலும் உள்ளம் தூங்காமல் கனவுகளையும் இலட்சியங்களையும் நிறைவேற்ற ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்ந்த, வாழும் மனிதர்கள் என்று நம் கண்முன்னேதான் எடுத்துக்காட்டாக எத்தனை அறிஞர்கள். ஆண்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் போன்று பல இருந்தாலும் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்துச் சாதனைப் படைத்த மனிதர்களை நாம் அறிவோம். குறிப்பாக பெண்களின் சாதனை வியக்கத்தக்கது. திருமணமாகி குடும்பம் தான் உலகம் என்று சுற்றி இருப்பவர்கள் அவர்களைச் சூழ்நிலைக்கைதி ஆக்கினாலும், குடும்பத்திற்கு குத்துவிளக்காக மட்டும் அல்லாமல் , வெளியுலகில் சூரியனாய் தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி தன்னைச் சார்ந்தவருக்கும் வெளிச்சம் பரப்பும் பெண்கள் நம்மைச் சுற்றித் தான் இருக்கிறார்கள். அதிலும் மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.
அத்திப்பழத்தில் தோன்றி மறையும் கொசுக்களைப் போல் அல்லாமல் தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவனின் வாக்குப்படி பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் மறையாத புகழுடன் செயற்கரிய செயல்கள் பல செய்து வானத்தையும் தொடுவோம் புகழ் மேலும் பெற்று விண்ணையும் கொஞ்சம் வழிவிடச் சொல்வோம்.
Awesome lines...
ReplyDeletethanks a lot
Deleteஅசத்தல் அபி
ReplyDelete