Monday, August 14, 2017

தீரர் சத்ய மூர்த்தி - அகில இந்திய வானொலியில் உரையாடல்


https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0Wjhnalh6YTctLTA/view?usp=drivesdk

முத்து : என்னடா கார்த்திக் , சுதந்திர தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி நடக்கப் போகுதே...எந்த தலைவரப் பத்தி பேசப்போற ?
கார்த்திக் :  கொஞ்சம் கூட சுயநலமில்லாம நமக்கு  சுதந்திரம் வாங்கித்தர்றதுக்காகப் போராடிய தீரர் சத்யமூர்த்தியப் பத்தித்தான் பேசப் போறேன்.
முத்து : ஓ …எனக்கு அவரப்பத்தி எதுவுமே தெரியாதே... அவரப்பத்தி தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப   ஆசையா இருக்கு…அவரோட இளமை காலத்துல இருந்து சொல்லேன்....
கார்த்திக் : அவரு புதுக்கோட்டைல உள்ள திருமயம்ல 1887ல பிறந்தார்   அவரோட பிறந்தநாள் வர்ற ஆகஸ்ட் 19ம் தேதிங்கறது கூடுதல்    சிறப்பு
முத்து : அப்ப ...சுதந்திர தினத்தோட இதையும் சேத்து கொண்டாடிடுவோம்..   பள்ளிக் காலத்தில அவரோட வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது சொல்லேன்
கார்த்திக் : விளையும் பயிர் முளையிலேயே தெரியும் அப்படிங்கற மாதிரி சின்ன வயசிலேயே நூலகத்தில் இருந்து பெரிய பெரிய புத்தகங்கள் எடுத்துட்டு போய் இரண்டே நாட்கள்ல படிச்சி முடிச்சிருவாராம்
முத்து : அதெப்பிடி ஒரு சின்னப்பையன் இரண்டே நாட்கள்ல அதிக பக்கங்கள் கொண்ட   பெரிய புத்தகங்கள படிச்சி முடிக்கமுடியும்
கார்த்திக்: உனக்கு வந்த இதே சந்தேகம் தான் நூலகருக்கும் வந்திருக்கு...பள்ளி அதிகாரி ஆய்வுக்கு வந்திருந்த போது மாணவர்கள்களிலேயே  நம்ம சத்யமூர்த்தி அய்யா தான் நிறைய புத்தகங்கள் எடுத்து படிச்சிருக்கிறார் அப்படிங்கறது கவனிச்சிருக்காரு
முத்து : அவரு படிச்ச எதாவது  புத்தகத்தை வாங்கி கேள்வி  கேட்டு சோதனை செஞ்சாங்களா ?
கார்த்திக்: கேட்டாங்களே...கேட்ட எல்லாக் கேள்விக்கும் அருமையா பதிலை சொல்லி அசத்தியிருக்காரு
முத்து : அப்படி திறமையா இருந்ததனாலதான் 130 வருஷங்கழிச்சும் நாம அவரப்பத்தி பேசிட்டு இருக்கோம். சரி..அவங்க அப்பா என்னவா இருந்தாங்க...அவர் கூடப்பிறந்தவங்களப்  பத்திச் சொல்லேன்
கார்த்திக் :  அவங்க அப்பா ஒரு வழக்கறிஞர்...இவர் கூட பிறந்தவங்க எட்டு பேர்.. சரி...அவரு என்ன படிச்சிருப்பாரு...எங்க படிச்சிருப்பாருன்னு எதாவது தெரியுமா? சும்மா தோரயமா யூகிச்சு   சொல்லேன் ?
முத்து : என்ன… நம்ம தலைவர்கள் எல்லாம் அந்த காலத்துல பெரும்பாலும் வழக்கறிஞர்களா இருந்திருக்காங்க... இவரு அப்பாவும் ஒரு வழக்கறிஞர் அப்படிங்கறதுனால இவரும் சட்டம் படிச்சிருக்கலாம்  பெரிய நகரத்தில தான் பெரிய படிப்பு படிக்கமுடியும்னா சென்னைல படிச்சிருப்பாங்க சரியா?
கார்த்திக் : ஏய் ...சரியாய் சொல்லிட்டியே ...அவரும் ஒரு வழக்கறிஞர் தான்.. ஆனா இவரோட சின்ன வயசிலேயே இவரு அப்பா தவறிட்டதால சிரமப்பட்டு படிச்சு தன்னோட சகோதரர்களையும் காப்பாற்றி இருக்காரு…...சென்னைல உள்ள மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரிலையும், மெட்ராஸ் சட்டக் கல்லூரிலையுந்தான் படிச்சிருக்காரு.
முத்து : சரியாய் கண்டுபிடிச்சிட்டேனா... அவரு எப்படி அரசியல்ல நுழைஞ்சாரு ?  அதுக்கு எது காரணமா அமைஞ்சது?
கார்த்திக் : சின்ன வயசிலேயே ஒழுக்கமான பையனா நல்ல பேச்சாளரா இருந்து , கல்லூரில நடந்த தேர்தல்ல எல்லாம் ஜெயிச்சு  கம்பீரமா அரசியல்ல நுழைஞ்சு தன்னோட பயணத்தை தொடங்கியிருக்கிறாரு
முத்து :  தேர்தல்ல ஜெயிச்சதுனாலதான் மக்களாட்சி மேல அதிக நம்பிக்கை வந்திருக்குமோ …. பேச்சுத் திறமையா …வழக்கறிஞர்னா நல்லாத்தான் பேசுவாரு ..இதுலஎன்ன அதிசயம்?
கார்த்திக் :  1919ல மொண்டகு கேம்ஸ்போர்ட(montagu-chelmsford ) சீர்திருத்தங்கள் , ரவுலட்(rowlatt) ஆக்ட் போன்ற நிகழ்வுகளுக்கு எதிரா இந்தியா சார்பா தன்னோட கருத்துக்களை தெரிவிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட குழுவில்  பால கங்காதர திலகரோட 32 வயதான நம்ம சத்யமூர்த்தி இருந்தாரு...
முத்து : ஆஹா … அப்பயே வெளிநாடெல்லாம் போனாரா?..கேட்கவே ஆர்வமா இருக்குடா ...மேல சொல்லேன் ... இங்கிலாந்துல வேற எண்ணலாம் பண்ணாரு ?
கார்த்திக் : அழகான ஆங்கிலத்துல சொற்பொழிவு மட்டும் பண்ணாம , தி இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் 10 நாள் விடுப்புல இருந்த போது ஒரு நாளிதளோட ஆசிரியரை இருந்த பெருமையும் இவரையேச் சேரும்
முத்து : ஆங்கிலத்துல சொற்பொழிவா ?அவருக்கு இன்னும் எந்தெந்த மொழிகளெல்லாம் தெரியும்?
கார்த்திக் : அவரோட அப்பா சமஸ்கிரத பண்டிதரா  இருந்ததுனால சமஸ்கிரதத்துல மட்டும் ஆற்றலோடு இல்லாம தமிழ் மேலவும் மிகுந்த பற்றோட இருந்திருக்காரு.
முத்து : மூன்று மொழிகள்ல திறமையா இருந்தாலும் ஏதாவது ஒரு மொழி மனசுக்கு நெருக்கமா இருந்திருக்கணுமே?
கார்த்திக் : இதிலென்ன சந்தேகம் …தமிழ் மொழிதான்.. தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடி இருக்காரு. அவரோட தமிழ் ஆளுமையப் பாத்து சொல்லின் செல்வர், நாவரசர் அப்படின்னு பட்டங்களும் கொடுத்திருக்காங்க
முத்து :  அருமை …அருமை ..அவரு எந்தெந்த போராட்டகங்கள்ள   பங்கேற்றுருக்காரு… கொஞ்சம் சுருக்கமா சொல்லேன்?
கார்த்திக் : வங்காளப் பிரிவினை , ரௌலட்ட (rowlatt )ஆக்ட் , ஜாலியன்வாலாபாக் படுகொலை, சைமன் கமிஷன் இப்படி பல நிகழ்வுகளுக்கு  எதிரான போராட்டங்கள்ல  பங்கேற்றது மட்டுமல்லாம வெள்ளையனே வெளியேறு,  ஒத்துழையாமை இயக்கம், வங்காளப் பிரிவினையத் தொடர்ந்து நடந்த சுதேசி இயக்கம் இது போல பல இயக்கத்துல ஈடுபடுத்திகிட்டு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சிருக்கார்.
முத்து :  இவ்வளவு தீவிரமா அரசியல்ல உலா வந்தவர் எதாவது பதவிகள்  வகிச்சிருந்தாரா ?
கார்த்திக் : சரியாய் கண்டுபுடிச்சிட்டியே ...சென்னை மாநகராட்சி மன்றத் தலைவரா அதாவது மேயரா  1939ல பதவி வகிச்சிருக்காரு...அப்ப சென்னை மக்கள் என்னைக்கும் அவருக்கு கடமை படுற மாதிரி ஒரு பெரிய சாதனை செஞ்சிருக்காரு...
முத்து : அப்படியா ! என்ன சாதனை பண்ணாரு…தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு
கார்த்திக் : இரண்டாம் உலகப்போர் நடந்துட்டு இருந்த சமயம் சென்னைல பெரிய தண்ணி பஞ்சம் வந்துருக்கு...அந்த நேரத்துல ஒரு  நீர்த்தேக்கம் கட்டுறது சாத்தியமே இல்லனு நினைச்ச வங்கமுன்னாடி  தன்னோட பேச்சுத் திறமையால ஆங்கிலேயர்கள்கிட்ட அணைகட்ட ஒப்புதல் வாங்கி நாலே வருசத்துல இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்பத்திற்கு சவால் விடற மாதிரி நீர்த்தேக்கம் அமையறதுக்குக் காரணமா இருந்திருக்கிறாரு
முத்து : அந்த நீர்த்தேக்கம் எங்க இருக்கு...அத பாக்கணும்னு இப்பவே ஆசையா இருக்கு
கார்த்திக் : சென்னைல இருந்து மேற்கு பக்கம்  50 கிலோ மீட்டர் தொலைவில உள்ள பூண்டில தான் அந்த நீர்த்தேக்கம் இருக்கு ...அவரு இறந்த அடுத்த வருடம் தான் அந்த அணை கட்டி முடிக்கப்பட்டாலும் அதுக்கு அவரோட பெயர வெச்சவரு காமராஜர்.
முத்து : ஓ … சத்யமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அப்படின்னு பேரே வெச்சாங்களா ?காமராஜருக்கும் இவருக்கும் உள்ள பிணைப்பைப்பத்தி தெரிஞ்சிக்க  ஆவலா இருக்கு
கார்த்திக் : காமராஜர் முதன்முதலா முதலமைச்சர் பதவி எடுத்துக்குறதுக்கு முன்னாடி சத்யமூர்த்தி அவர்களோட படத்தை வணங்கிட்டு தான் பொறுப்பயே ஏத்திருக்கார். அதே மாதிரி தீரர் சத்தியமூர்த்தியோட கொள்கைகளைப் பின்பற்றி அவரோட முதன்மைத் தளபதியாகவும் இருந்திருக்கிறாரு
முத்து :  மற்றத்  தலைவர்களோட நம்ம அய்யாவிற்குத் தொடர்பு எப்படி இருந்துச்சு ? கருத்து வேறுபாடுகள் எதாவது இருந்ததா என்ன?
கார்த்திக் : கருத்து வேற்றுமைகள் பல இருந்தாலும் சத்யமூர்த்தி மாதிரி 10 பேர் இருந்திருந்தா இன்னும் சீக்கிரமாகவே சுதந்திரம் வாங்கியிருக்கலாம் அப்படின்னு மஹாத்மா காந்தியே சொல்லிருக்காரு.. சர்தார் வல்லபாய் படேல்  அவர்களுக்கும் ரொம்ப நெருக்கமானவரா இருந்திருக்காரு. ராஜாஜி  அவர்களோட கருத்து வேற்றுமை இருந்தாலும் மக்கள் நலனுக்காக இணைந்து பணிபுரிஞ்சிருக்காரு
முத்து : மக்கள் மனசுல மட்டும் இல்ல தலைவர்கள் மனசுலயும் இடம் பிடிச்சிருந்தாருன்னு சொல்லு …சத்யமூர்த்தி அவர்களோட வாழ்க்கை எளிமையாத்தான் இருந்ததா?
கார்த்திக் :  ஆமா , தன்னோட எல்லா சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணிச்சிட்டு, வீட்டு வாடகைக் கூட  கொடுக்க முடியாம சிரமப்பட்டிருக்கிறாரு.


முத்து :ஆமா…நம்ம வருங்கால சந்ததியினர்கள் தீரர் சத்யமூர்த்தியை     ஞாபகமா முன்னுதாரணமா வச்சி உழைக்கறதுக்கு  அரசாங்கம்  என்னென்ன செஞ்சிருக்காங்க ?
கார்த்திக் : 1987ல இவரோட 100வது பிறந்தநாளைக் கொண்டாடுற மாதிரி அஞ்சலகத்துறையில இருந்து தபால்தலை வெளியிட்டுருக்காங்க...
முத்து:  அவரோட உருவம்  மனசுல பதியிரமாதிரி சிலை எதாவது நிறுவியிருக்குறாங்களா ?



கார்த்திக் : வெச்சிருக்காங்களே ..அவரு பிறந்த ஊரான திருமயத்தில மட்டுமில்லாம,   ...பாராளுமன்ற வளாகத்துலயும் வெச்சிருக்காங்க… பாராளுமன்றத்தில அதைத் திறந்து வெச்சது அப்துல்கலாம் அவர்கள்
முத்து :  ரொம்பப் பெருமையா இருக்கு ....ஒரு தமிழனோட சிலைய இன்னொரு தமிழன் திறந்து வைச்சாரா ....சபாஷ்
கார்த்திக் : அரசியல்ல மட்டும் முத்திரை பதிக்காம வியப்பூட்டுற மாதிரி வேற பல துறைகள்ல ஈடுபாடோட இருந்தாரு அப்படின்னா உன்னால நம்ப முடியுதா?
முத்து :  சாதாரணமா அரசியல்வாதிகள் அரசியல்ல தான முழு கவனத்தையும் செலுத்து வாங்க ..  அப்படி இவரு கவனத்தை ஈர்த்த துறை எது?
கார்த்திக் : எல்லாரையும் ஈர்க்கிற கலைத்துறைதான்...நம்ம பாரம்பர்ய நடனமான பரதநாட்டியத்தோட பெருமைய எல்லாருக்கும் சொல்ற மாதிரி தன்னோட கட்சியோட 50வது ஆண்டு விழாவில பரதக்கலைஞர்களை அரங்கேற்றம் செய்ய வெச்சு சிறப்பிச்சிருக்காரு...
முத்து :  அதுமட்டும் தானா இல்ல பாட்டு, நடிப்பு இது மேலயும் ஆர்வமா இருந்து எதாவது செஞ்சிருக்காறா ?
கார்த்திக் : எதையும் விட்டுவைக்கலையே...சென்னைல மியூசிக் அகாடமி ஆரம்பிக்கிறதுக்கு மட்டும் காரணமா இல்லாம சென்னைப் பல்கலைக்கழகத்தோட கலைத்துறை தலைவரா இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவும் காரணகர்த்தாவ இருந்திருக்குறாரு...
முத்து :  கலைகள்ல இவ்வளவு ஆர்வமா இருந்தவறு கண்டிப்பா நடிச்சிருக்கணும் இல்ல நடிப்புத்துறைல எதாவது பதவியாவது வகிச்சிருக்கணுமே ?
கார்த்திக் : சரியா கண்டுபிடிச்சிட்டியே...புகழ் பெற்ற மனோகரா நாடகத்தில நடிச்சிருக்காரு , 1937,38ல தென்னிந்திய திரைப்பட சங்கத்தோட தலைவராவும் இருந்திருக்காரு
முத்து : இந்த கலை ஆர்வத்தை சுதந்திர போராட்டத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கிறாரா ?
கார்த்திக் : நிச்சயமா… பல மேடைகள்ல  கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்கள்ட்ட சுதந்தர எழுச்சியை விதைச்சிருக்காரு  .
முத்து : ஆஹா …அவ்வளவு தானா இல்ல வேற ஏதாவது இருக்கா ?
கார்த்திக் :  பாரதியின் கவிதைகளை அரசு 1928-ல் தடை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, சட்டசபையில் இவர் ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது.
முத்து :  அற்புதம்...ஆச்சர்யம் ஏற்படுத்துற மாதிரி தகவலாச் சொல்ற? இவரோட குடும்பம் , வாரிசுகள் அப்படின்னு யாராவது இப்ப இருக்காங்களா? என்ன பன்றாங்க?
கார்த்திக் : லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்படிங்கற இவங்க பொண்ணும்   அரசியல்வாதியா இருந்திருக்காங்க..
முத்து : புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
கார்த்திக் : ஆமா ஆமா …தன்னோட அப்பா உடம்பு சரியில்லாம மருத்துவமனையில இருந்தப்போ தனக்கு எழுதுன கடிதங்கள், பல தலைவர்கள் அவங்க அப்பாவுக்கு எழுதின கடிதங்கள் , அவர் அனுப்பிய பதில் கடிதங்கள் எல்லாத்தையும் பத்திரமா சேகரிச்சு தொகுத்து ஒரு புத்தகமாவும் போட்டிருக்காங்க...
முத்து : ஒரு நல்ல மகளாய் தன்னோட அப்பாவோட பெருமையை பரப்புர மாதிரி தன்னோட கடமைய செஞ்சிருக்காங்கன்னு சொல்லு
கார்த்திக் :  வருங்கால சந்ததியினர் வரலாற்றை தெரிஞ்சிக்கிறதுக்கு, சிறப்பா ஒரு காரியத்தை செஞ்சிருக்காங்கன்னுதான் நான் நினைக்கிறேன்
முத்து: அப்போ அந்த புத்தகங்களை படிச்சா இன்னும் சத்யமூர்த்தி அய்யாவை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு சொல்ற
 கார்த்திக் : நிச்சயமா…The Satyamurti Letters: The Indian Freedom Struggle Through the Eyes of a Parliamentarian...அப்படிங்கற புத்தகம் கிடைச்சா நிச்சயம் வாங்கிப் படிச்சுப் பாரு
முத்து: ஆங்கிலப் புத்தகம் மட்டும் தானா… தமிழ்ல ஏதும் புத்தகம் இல்லையா?
கார்த்திக் : ஏன் இல்ல? சத்யமூர்த்தி கடிதங்கள் அப்படின்னு இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகங்கள் இருக்கு.. சாருகேசியும் , கே.வி .ராமநாதன் அவர்களும் தொகுத்திருக்காங்க
முத்து :  படிச்சிருவோம் …அவுங்க குடும்பத்துல வேறுயாராவுது பிரபலமானவங்க இருக்காங்களா என்ன?
கார்த்திக் : கிரேட் லேக்ஸ் ஆப் மேனேஜ்மென்ட் அப்படிங்கற வணிக நிர்வாக மேலாண்மை பள்ளியோட நிறுவனர் பாலா வி பாலச்சந்திரனோட மாமா தான் நம்ம சத்யமூர்த்தி அய்யாங்கறது கொஞ்ச பேருக்குத்தான் தெரியும்…
முத்து : தெரியாத தகவல் நிறைய சொல்ற...சரி....அய்யா எப்படி இறந்து போனாரு ? ஏதாவது போராட்டத்துல கலந்துக்கிட்ட போது ஆங்கிலேய அடக்குமுறையில மாட்டிக்கிட்டாரு இல்ல வயசானதால இறந்துட்டாரா ?
கார்த்திக்: தெளிவாத்தான் கேள்வி கேட்கிற ... 55 வயசு ங்கறது பெரிய வயசு இல்லதான்... போராட்டங்கள்ல பங்கேற்றபோது முதுகுத்தண்டுல ஏற்பட்ட காயம் ...இதயம் சரியாய் வேலைசெய்யாத காரணம் எல்லாம் சேந்து அவரோட இன்னுயிரைப்பறிச்சிருச்சு
முத்து : இவ்வளவு விஷயங்கள் அய்யாவாப் பத்தி தெரிஞ்சி  வெச்சிருக்க...நிச்சயம் உனக்குத்தான் பேச்சுப்போட்டியில முதல் பரிசு கிடைக்கும்
கார்த்திக்: பரிசு அப்படிங்கிற விஷயத்தைத் தாண்டி ஒரு மிகச் சிறந்த சுதந்தர போராட்ட வீரரைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கு
முத்து : சத்யமூர்த்தி அய்யாவோட வாழ்க்கையை இன்னைக்கு உன்னோட புண்ணியத்துல தெரிஞ்சுகிட்டேன் டா…. ரொம்ப ரொம்ப நன்றி.
கார்த்திக்: எனக்கும் ரொம்ப சந்தோசம்டா ... நான் தெரிஞ்சிகிட்ட விஷயத்தை எனக்குள்ள மட்டும் வச்சிக்கவிடாம , ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சிகிட்ட உனக்குத் தான் முதல்ல நன்றி சொல்லணும்.

No comments:

Post a Comment