Monday, June 26, 2017

நகர்வலம் - ஷேர் ஆட்டோவில் ஒரு சவாரி


மற்ற நகரங்களை விட நம் தலைநகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் அதிகம் தான். சிறுநகரத்திலிருந்தோ கிராமத்திலிருந்தோ நகரத்திற்குப் புதிதாய் வருபவர்களுக்கு ஷேர் ஆட்டோப்பயணம் மறக்க முடியாததாய்த்தான் இருக்கும். பேருந்துப்பயணத்தில் வேறுபாலினத்தவர் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் பக்கத்து இருக்கையில் உட்கார்வதற்கு , ஏன்...சற்றுத்தள்ளி உட்கார்வதற்கே சில மக்கள் யோசிப்பார்கள். ஆனால் இங்கே யாரென்றே தெரியாதவர்களுடன் நாம் இடித்துக்கொண்டு நெருக்கி உட்கார்ந்து பயணம் செய்வதைப் பார்த்தால் அவர்களுக்கு விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பரபரப்பான வேளைகளில் ஷேர்ஆட்டோவில் ஒரு பெண்ணருகே உட்கார ஆண் தயங்க, பெண் துணிச்சலுடன் சற்றுத் தள்ளி உட்கார்ந்து இடங்கொடுக்கும் எதார்த்த புரிதலும் இங்கேதான் அரங்கேறும். கூட்டம் அதிகம் உள்ள சமயத்தில், ஓட்டுநர் இருக்கையே சிறியதாய் இருக்கும். அதிலும் நுனியில் உட்கார்ந்து கொண்டு இரு ஆண் பிரயாணிகளை இருபக்கங்களிலும் ஏற்றிக் கொண்டு பெரிய மனம் கொண்ட பெருமகனாய் ஆட்டோ ஓட்டுநர் நடந்துகொண்டாலும் பணத்திற்காக இவ்வாறு செய்கிறார் என்று பழி போடும் மக்கள் கூட்டத்துள் ஒருவராய் நாமும் இருக்கத்தான் செய்கிறோம்.

புதிதாய் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களா அல்ல விதிவசமா என்று தெரியவில்லை...ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒரு செங்குத்தான மேட்டில் வண்டியை ஏற்ற, அது தலைகுப்பிற விழும் விபத்துக்களும் நடக்கத்தான் செய்கிறது. நல்லவேளை உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து ஆட்டோவைத் திருப்பி உள்ளே உள்ளப் பயணிகளை பத்திரமாக மீட்டார்கள். பிராயணிகளைப் பத்திரமாய் வேறு ஆட்டோக்களில் அணுப்பிவிட்டு, ஓட்டுநரையும் இயல்புநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

இரவு நெடுநேரம் ஆகிவிட்டால் பெண்கள் பெரும்பாலும் தனி ஆட்டோவைத்தேர்வு செய்யாமல் ஷேர்ஆட்டோக்களையே தேர்வு செய்வதற்குதம் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருந்தாலும் மற்ற நபர் உதவுவார் என்ற நம்பிக்கைதானே!அதே இரவு நேரம் ஆண்கள் புடைசூழ தனிஒரு பெண்ணாய் சுபநிகழ்ச்சிகளில் பங்குகொண்டு ஆபரணத்துடன் பயந்து பயணம் செய்கையில், பயப்படாதீர்கள்...என்னை நம்பி என் ஆட்டோவில் ஏறிய பிரயாணியை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் என்று நம்பிக்கைவாக்குக் கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் நாம் வாழும் சமூகத்தில் நம்மோடு தான் இருக்கிறார்கள்.

பேருந்துக்காக கால்கடுக்க நின்று, பேருந்தின் உள்ளே சென்றும் கால்வலிக்க நின்று, இடிபட்டு மூச்சுத்திணறி, சில சமயம் பாலியல் சீண்டல்களுக்கும் பேருந்துப் பயணத்தில் ஆளாக நேரிடுகிறது. தெரிந்தே இடிக்கிறார்களா அல்லது நெரிசலில் தெரியாமல் இடிக்கிறார்களா என்று தெரியாமல் எச்சரிக்கை செய்யவா அல்லது அமைதியாய் இருக்கவா என்ற குழப்பம் பெண்களுக்கு...தனியாக ஒரு ஆட்டோவில் பயணம் செய்வதற்குத் தேவையான பொருளாதார வசதி குறைச்சலாக உள்ளவர்களுக்கு இந்த ஷேர்ஆட்டோ வசதி வரப்பிரசாதம் தான்.

காசு கொடுப்பார்கள் என்றாலும் தன் வண்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறு விழைவிப்பார்கள் என்பதனால் மது அருந்திய மனிதர்களை வண்டியில் ஏற்றாது செல்லும் ஓட்டுநர் சகோதரர்களைக் கையெடுத்துக் கும்பிட்டாலும் தகும்.என்ன... இஷ்டத்திற்குக் கட்டணத்தை நிர்ணயித்து மக்களிடம் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்...இல்லை இல்லை வழிப்பறி செய்து கொள்கிறார்கள் என்பது போன்ற கூக்கூரல்கள் எழுவதால் சிற்றுந்து எனப்படும் சிறிய பேருந்தை எல்லா இடங்களிலும் அரசாங்கம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் வாகன எரிபொருளான டீசலால் செயல்படுவதால் அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல் விலை இவர்களை அதிகமாக பாதிக்காது. நமக்கும் தடாரென்று கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி அளிக்க மாட்டார்கள். அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாத போக்குவரத்து வசதி என்றாலும் அரசு பல கட்டுபாடுகளை இவர்களிடம் விதித்திருக்கத்தான் செய்கிறது.

பெரிய ஷேர்ஆட்டோக்களில் உள்ளே படிபோன்று வைத்துப் பல பயணிகளை ஏற்றுகிறார்கள் என்பதற்காக அந்த படிகளை எடுத்துவிடச் சொல்லி சிலக்கட்டுப்பாடுகளையும் விதிக்கத்தான் செய்திருக்கிறார்கள். ஷேர் ஆட்டோக்களிலும் பல வகையான வண்டிகளை வைத்திருக்கிறார்கள். இதற்காகவே பிரத்யேகமாக சில நிறுவனங்கள் அதற்கேற்றார்போல பல வண்டிகளை தயார்செய்கிறார்கள் என்பதும் ஆச்சர்யமான விசயம் தான்.

நகரத்தின் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை அதற்குச் சான்றாகும்.7 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தாலும் இரண்டு மடங்கு ஆட்களாக சுமார் பதினைந்து பேர் செல்லக்கூடிய வித்தையை மற்றவர்கள் நம்மிடமும் நமது ஆட்டோ ஓட்டுநர்களிடம் மட்டும் தான் கற்க வேண்டும்.

நாம் இருக்கும் சமுதாயத்திலேயே நம்முள் ஒருவராய் இருந்து ஷேர்ஆட்டோவில் பல நவீன வசதிகளைப் புகுத்திய ஆட்டோ ஓட்டுநரை இந்தியன் டைம்ஸ் பத்திரிக்கை மட்டுமல்லாது அமெரிக்க பத்திரிக்கையும் பாராட்டியுள்ளது நமக்கும் பெருமையான ஒன்றுதானே! வெளிநாட்டிலிருந்து நம் நாட்டைச்சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவரைத்தொடர்பு கொள்கிறார்கள் என்பதும் சுவாரசியமான தகவல். சவாரி செய்யும் நேரத்தைக்கூட வீணாக்காமல் பயணிகள் படிப்பதற்கு என்று பல வார, மாத பல மொழிப்புத்தகங்களை வாங்கி அடுக்கியுள்ளார். ஆசிரியர்கள், அடிக்கடி சவாரி செய்யும் வாடிக்கையாளர் என்றால் சிறப்புச் சலுகைகளும் கொடுத்து மகிழ்விக்கிறார்.

சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலி களைப் பயன்படுத்துகிறார்கள் , கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் என்ற குறைகளையும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி ஏற்றவில்லை. எவ்வளவு கூட்டமாய் இருந்தாலும் மக்கள் ஏறுகிறார்கள்...நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கை விரித்து விடுகிறார்கள்.

சொந்தமாக ஷேர் ஆட்டோ வண்டி ஓட்டுபவர்கள் குறைவு. பெரும்பாலும் ஷேர் ஆட்டோ வைத்திருப்போரிடம் வண்டியை வாங்கி ஓட்டிச் சவாரி எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தின வாடகை 300 ரூபாய், எரிபொருள் செலவு 200 ரூபாய் போக ஏதாவது மிஞ்சுகிறது. தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாகவே இருந்தாலும் திடீரென்று போடப்படும் காவல்துறை பணியாளர்களின் அபராதத்தையும் அவர்கள் கட்டித்தான் ஆகவேண்டும்.காலை 6 மணியிலிருந்து இரவு பத்துமணி வரை வண்டி ஓட்டும் ஓட்டுநர்கள் உணவு உண்பதற்கும், சற்று இளைப்பாறுவதற்கு மட்டுமே ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களது கடின உழைப்புக்குச் சான்றாகிறது.

ஒரு சிலர் பயணியைப்போல வண்டியை நிறுத்தி அவர்களிடம் இருக்கும் பணத்தைப்பிடிங்கிக் கொள்ளும் அவலமும் அரங்கேறத்தான் செய்கிறது. வண்டியில் சிலர் பயணிகளைப் போல் ஏறி சக பயணிகளிடம் ஏதாவது திருடுவதையும் தவிர்க்க வேண்டிய பொறுப்பு இவர்கள் தலையில் தான் விழுகிறது. ஏதேனும் பிரச்சனையென்றால் காவல்துறையிடம் இவர்கள் கொடுக்கும் புகார்களும் இவர்களைப் போலவே அலட்சியப்படுத்தப்படுகிறது.
ஷேர்ஆட்டோவில் ஏறி இறங்கினாலே 7 ரூபாய் கட்டணம் என்ற நிலையில் ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து , ஒரு சில நேரம் அதையும் கொடுக்காமல் செல்பவர்களையும் இவர்கள் சமாளிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

ஷேர்ஆட்டோ ஓட்டும் அனைத்து ஓட்டுநர்களும் பெரும்பாலும் தங்களுக்குள் சச்சரவு ஏற்படாமல் நட்புணர்வையேக் கொண்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகிறது. ஓர் பகுதியில் இருந்து மற்றப் பகுதிக்குச் சென்று பயணிகளை ஏற்றினாலும் அவர்களுக்குள்ளும் சில புரிதல்கள் இருக்கத்தான் செய்கிறது. அருகாமையில் உள்ள இலக்குகளுக்கும் சில பயணிகள் கட்டணக்கருவியை இயக்கச் சொல்வதையும் அவர்கள் கூறும் சட்டங்களையும் காது கொடுத்துக்கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பலர்இவர்கள் வண்டியில் ஏறினாலும் அன்னப்பறவையாய் மாறி ஒவ்வொருத்தருக்கும் ஏற்றவாரு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஷேர்ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது பெண்கள் மட்டும் கவனத்துடன் பயணப்பட வேண்டும் என்ற நிலைமை மாறி ஆண்களும் பத்திரமாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது என்று நினைக்கயில் நடுக்கமாய்த்தான் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பத்து ரூபாய்க்கு நூறு ரூபாய் கொடுத்தால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சில அருவருக்கத்தக்க லீலைகள் நடைபெறுவதாக கேள்விப்படும் பொழுது நம் வீட்டு இளைஞர்கள் பத்திரமாய்த்திரும்பி வர வேண்டும் என்று மனது பதறுகிறது.

எரிபொருள் சிக்கனம், விருப்பமான இடத்தில் இறங்கிக்கொள்ளலாம் , வாகன நெரிசலில் வெயிலில் வாடி பெருநகரத்தில் வண்டியோட்டும் சிரமம் இல்லை போன்ற பல நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறது. எல்லோர் மனதிலும் எளிதாய் இடம்பிடிக்கும் ஷேர்ஆட்டோவில் நாம் பகிர்ந்து கொள்வது சவாரிக்கானப் பணத்தை மட்டுமல்ல...நம் தேவைகளையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் தான்.


No comments:

Post a Comment