காலையில் எழுந்தவுடன் மணிச்சத்தமோ , விசில்சத்தமோ கேட்டவுடனேயே கண்களைக் கூடத்திறந்தும் திறக்காமலும் குப்பைத்தொட்டியைக் கொண்டு வெளியே வைக்கிறோம்.. குப்பை வண்டியைத் தள்ளிவரும் பணியாளர்கள் நாம் கொண்டு வரும் குப்பையைப் போடப் பல வண்ணங்களில் பெரிய தொட்டிகளைப் பிரித்து வைத்து இருப்பார்கள்.. குப்பைகளை மக்கும் குப்பை, , மக்காத குப்பை என்று பிரித்துப், பணியாளர்கள் கொண்டு வரும் பெரிய தொட்டியில் போடும் சிறந்த மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்... நாம் நமக்குப் பிடித்த வண்ணத்தொட்டியில் மொத்தமாக அனைத்துக் குப்பையையும் கொட்டிவிட்டு வந்துவிடுவோம். ஆனால் அதற்காகவா வண்ணத்தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். ? மக்கும் குப்பைகள் , மக்கா குப்பைகள் என்று குப்பைகளைச் சேகரிப்பதில் தான் எத்தனை வகைப்படுத்தியிருக்கிறார்கள் .
அப்படிப் பிரிக்கப்படும் மக்கும் குப்பையை உரமாக மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் எடுப்பதைத் தெரிந்து கொண்டால் அனைவரமே புருவம் உயர்த்துவார்கள்.....
துப்புறவுப் பணியாளர் தெளிவாய்ச் சொல்லுவார்...பிரித்துப்போடும்படி ...ஆனால் நமக்கெங்கே நேரம்...மொத்தமாய்க் கொட்டிவிட்டு வந்திடுவோம்.. இப்படி எல்லாக்குப்பையையும் ஒன்றாய்ப் போடுவதால் அவர்களுக்கும் பிரச்சனை நமக்கும் பிரச்சனை . நம் வளம்தரும் குப்பைகள் தான் வீணாய்ப் போகிறது . என்ன வளம் தரும் குப்பைகளா ? ஆம்..நம் வீட்டுக் குப்பையில் பெரும்பாலும் என்ன என்னப் பொருட்கள் இருந்துவிடப் போகிறது...பெரும்பாலும் காய்கறித் தோல்கள், அதன் சமையல் கழிவுகள், காகிதம் அதன் வகைச் சேர்ந்த அட்டைகள் , பெண்கள் உதிரப்போக்கு காலத்தில் பயன்படுத்திய சுகாதார துடைப்பான்கள் , குழந்தைகளின் கழிவுகளைத் தாங்கிய சுகாதார அரையாடைகள், , பிலாஸ்டிக் , துணி , டயர் ,தெர்மக்கோல் , கண்ணாடி, செருப்பு , நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தீன் பைகள்...
நம்மில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் பயனுள்ள காய்கறிச் செடிகள் வளர்க்கிறார்களோமோ இல்லையோ...அழகுக்காகப் பூச்செடியாவது வளர்ப்போம். . அப்படி உள்ள செடிகளுக்கு நம் வீட்டு மக்கும் குப்பையிலிருந்து மண்ணுடன் கலந்து தயாரிக்கப்பட்ட உரத்தை ஒருதடவைப் போட்டுத்தான் பார்ப்போமே...காய்கறிகளோ , பூக்களோ அதன் உற்பத்தியைப் பெருக்கி நம்மைப் பார்த்துக்கண் சிமிட்டிச் சிரிப்பது நிச்சயமாய் நடக்கும்.. மக்கும் குப்பைகளில் உள்ள நுன்னுயிர்கள் வளரும் செடிகளுக்கு நிறைய நன்மைகளைத்தரும். அதுவே நாம் அக்குப்பைகளை நெருப்பு மூட்டி விட்டோமானால் அந்நுன்னுயிர்கள் இறந்து பயனற்றுப் போய்விடும்..
சமையலறைக்கு என்ற தனியாக ஒரு குப்பைத் தொட்டியை வைப்பதில் நமக்குப் பெரிய கஷ்டம் எதுவுமில்லை.. வீட்டுற்கு வண்ணம் பூச உபயோகித்த வாளியைக்கூட பல வீடுகளில் குப்பைத் தொட்டிகளாக உபயோகித்துக்கொள்கிறார்கள் . சமையலறைக் கழிவுகள் பெரும்பாலும் மக்கும் குப்பைகளாய்த்தான் இருக்கும் .விதைகள் , கொட்டைகளை வைத்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும்படி விதைப் பந்துத் தயாரிக்கவும் சொல்லிக்கொடுக்கலாம்..
விதைப்பந்தா ...அது என்ன என்று யோசிக்கிறீர்களா ? ...மண்கலந்த உரத்துடன் சிறுதானியங்களையும் சேர்த்து நமக்கு விருப்பமான மரங்களின் கொட்டைகளை உள்ளே வைத்து மூடிவிடலாம்...பின் நெருக்கமான நகரைவிட்டு வெளியே ஊருக்கு ஒதுக்குப் புறமாகச் செல்லும் பொழுது நம் குழந்தைகளுடன் உற்சாகமாக அந்த விதைப்பந்துகளை எல்லா இடத்திலும் எரிந்து காடுகள் உருவாகக் காரணமாக அமையலாம்.. விதையாகவோ கொட்டையாகவோ எறிந்தோமானால் சிதைவதற்கு அதிக வாய்ப்புள்ளது அல்லவா ? அதுவே இப்பந்தாக எறிந்தோமானால் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தும் தக்க சீதோஷ்ண நிலையை வைத்தும் சுற்றுப்புறத்திற்கு ஏதுவாக அதுவே வளர்ந்து கொள்ளும்...
நம் வேலைபார்க்கும் இடத்தில் பெண்கள் உதிரப்போக்கு காலத்தில் பயன்படுத்திய சுகாதார துடைப்பான்கள் , குழந்தைகளின் கழிவுகளைத் தாங்கிய சுகாதார அரையாடைகள் அப்படியே கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால் நம்மால் வேலைசெய்ய முடியுமா? முடியாதல்லவா...எப்படி முகத்தைச் சுழிப்போம் ?அதுபோலத்தானே நம் துப்புறவுத் தொழிலாளர் நண்பர்களுக்கும் இருக்கும்... வீட்டில் எத்தனையோ பழைய செய்தித்தாள்களை , இதழ்களை விலைக்குப் போடுகிறோம்..அதில் கொஞ்சத்தை எடுத்து இது போன்ற சுகாதார துடைப்பான்கள் மற்றும் அரையாடைகளைச் சுற்றிக்குப்பையில் போட்டுவிடுவதற்கு நமக்கு சில நிமடங்கள் தான் ஆகும்...அதில் சிகப்பு நிறக்குறீயிடு செய்து விட்டோமென்றால் ரொம்ப நல்லது. அவர்களுக்கும் அதைத் திறந்துப்பார்க்கும் அவலநிலை ஏற்படாது .
நாம் நிரப்பிய குப்பையைத் திரும்பவும் பிரித்துப் பார்க்க நாமே முகம் சுளித்துக்கொள்வோம். . ஆனால் அருவருப்புடன் நாம் போடும் , அல்லத்தூக்கி எறியும் குப்பையைப் பொறுமையாய்ப் பிரித்து , அதனை மக்கும் குப்பை , மக்கா குப்பை என பிரிக்கும் துப்புரவுத் தொழிலாளர்களிடம் சிநேகப்பார்வையாவது வீசினால் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்...... நாம் குப்பையைப் பிரித்துப் போடாவிட்டால் , கையுறையில்லை என்றாலும் அவர்கள் அதனைப்பிரித்து விடுவார்கள்.. கொடுக்கப்படும் கையுறைகள் கிழிந்து விடுகிறது அல்ல வசதியாய் இல்லை என்ற பல காரணங்களால் அரசாங்கம் எப்பொழுதாவது தரும் கையுறைகளையும் அவர்களால் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகிறது .
நம் குடும்பத்தினர் உபயோகித்த கழிவறையைக் கழுவுவதற்கும் , வீட்டுக்குப்பையைப் பொதுக்குப்பைத் தொட்டியில் போடுவதற்கே நாம் நம் முகத்தை அஷ்டக்கோணலாகச் சுழித்துக் கொள்கிறோம் . அந்தப் பணிகளைச் செய்து வந்துவிட்டு கைகளை நன்றாகக் கழுவி விடுகிறோம் ஆனால் இந்தத் துப்புறவுப் பணியாளர்களுக்குத்தான் எத்தனை சகிப்புத்தன்மை...நம் குழந்தையின் கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கே நாம் அருவருப்பு படுகையில் , கையுறைக் கூட இல்லாத தற்காலிகத் துப்பறவுத் தொழிலாளர்களின் பணிகளைப் பாராட்டியே ஆகவேண்டும். . இவர்களுக்கென்று நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் பெரும்பாலும் கண்துடைப்பாகவே இருக்கின்றன எனும் இவர்களின் கூக்குரல்கள் ஈனசுவரத்திலேயே அரசாங்கத்தின் காதுகளில் விழுகிறது . மருத்துவக் காப்பீட்டு அட்டையும் பெரிய அளவில் ஏற்படும்......குறிப்பாக இதய நோய் ,சீறுநீரக நோய் போன்ற பெரிய அறுவை சிகிச்சை நோய்கள் ஏற்பட்டால் மட்டுமே உபயோகப்படுகிறது. . தினமும் குப்பைகளுக்கு நடுவே வேலைப்பார்க்கும் இவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் , தலைவலி, போன்ற நோய்களுக்கு இவர்கள் தான் செலவு செய்து மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தால் அந்த நோய்கள் கூட இவர்களை அண்டாது ஓடிவிடும் .
நம் தெருக்களில் ஏதேனும் பாதாளச்சாக்கடை அடைத்து விட்டால் வழிந்தோடும் கழிவுநீரை மிதித்து அதைத் தாண்டிச் செல்லவே நாம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, அரசாங்கத்தை க்
குறை சொல்லுவோம்.. ஆனால் உண்மையில் அரசாங்க சார்பில் வேலை செய்பவர்கள் இந்த உயர்ந்த மனிதர்கள் தான். நாற்றம் என்று நாம் மூக்கைப் பொத்துகையில் மதுவருந்திவிட்டு அந்த துர்நாற்றத்தை மறந்து சாக்கடைக்குள் செல்பவருக்கு நாம் கொடுப்பது அருவருப்பான பார்வை மட்டுமே . இதனால் தேவையில்லாத மதுப்பழக்கத்திற்கும் ஆளாகி விடுகிறார்கள்.. பண்டிகைக் காலங்களில் அவர்கள் நம்மிடம் பரிசு எதிர்பார்க்க நாம் தருவதோ அலட்சியப் பார்வைகள் தான். நமது சுகாதாரத்திற்காக தன் சுகாதாரத்தைக் கூடக்கவலைப்படாமல் அதிகப்பட்சம் 7 மணிநேரம் இடைவிடாது எல்லா காலநிலையிலும் உழைக்கும் ஊழியர்களுக்கு சிறிய ஊக்குத்தொகையை தருவதால் நிச்சயமாய் நாம் குறைந்து விட மாட்டோம்....எவ்வளவோ செலவழிக்கின்றோம் ...நம் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் இவர்களுக்கு இதைக்கூடவா செய்ய மாட்டோம்...இலட்ச ரூபாய் கொடுத்தாலும் நாம் இந்த துப்புறவு வேலையைச் செய்வோமா ? நிச்சயம் செய்ய மாட்டோம்..
அரசாங்கத்தில் தான் இவர்களுக்குச் சம்பளம் தருகிறார்களே ? அது போக பல வருடப்பழக்கம் காரணமாக சிலர் வீட்டில் தனியாகவும் அவர்களது சொந்தப்பணிகளைச் செய்து சம்பாதிக்கவும் செய்கிறார்களே. என்று சிலர் கேட்கலாம் . பணம் அவர்களது கணக்கில் அரசாங்கத்தால் நிச்சயம் போடப்படும் . ஆனால் காலதாமதமாகப் போடப்படும் வாய்ப்புகள் அதிகம் . பணிநிறைவு ஆனபின்
கொடுக்கப்படும் தொகைகூட அவர்களைச் சென்றடைய பல மாதங்கள் ...ஏன் போதாத காலம் என்றால் சில வருடங்கள் கூட ஆகலாம்.. அதுவரைத் தங்கள் குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்....வட்டிக்குக் கடன் வாங்குவார்கள்.....பின்னர் பணம் வந்து அசல்கடனைக்கட்டினாலும் வட்டியையும் இவர்கள் தானே கட்ட வேண்டும் .
நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தின் பைகள் கட்டணம் என்றாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் காசுக்கொடுத்து வாங்கி விடுகிறோம்.. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் இப்பொழுது அழகஅழகானப் பைகளை அன்பளிப்பாய்த் தருகிறார்கள்.. அதையெல்லாம் எப்படி உபயோகிக்கலாம் ? இப்படித்தான் கடைகளுக்குச் செல்லும் பொழுது விதவிதமான துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம்.... அந்தப் துணிப்பைகளுக்குள் பல துணிப்பைகளை வைத்து வகையான காய்கறிகள் வாங்கும் பொழுது பிரித்தே வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திடலாம்.... வீட்டுக்கு வந்து பிரிக்கும் அவசியம் இல்லாமல் போகுமே...
மஞ்சள்பையின் மகிமை தெரியாமல் அதனை அவமானமாக எண்ணி நெகிழிப்பை
என்றழைக்கப்படும் பாலித்தின் பைகளை உபயோகிப்பதால் 200 முதல் 1000 ஆண்டுகள் வரை நம்மண்ணை மலடாக்குவதோடு,, விலங்குகள் அதைத் தின்று உயிர்விடுவதற்கும் காரணமாகி நம் வருங்கால சந்ததியினருக்குப் பெரிய துரோகத்தைச் செய்கிறோம்.. நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தின் பைகளை தெருவில் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்தும் புது தொழில்நுட்பத்தையும் நம் இளைஞர்கள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.. உறுதியான பாதையை வாகனத்துக்கு மட்டுமல்லாது நம் வருங்கால சந்ததியனருக்கும் அமைத்துத்தந்திருக்கிறார்கள் நம் நாட்டின் வருங்காலத்தூண்கள்.....பொது இடங்களில் குப்பையைப் போடுகிறவர்களை விட குப்பையைச் சுத்தம் செய்பவர்களை மதித்தால் நாமும் நலம் பெறலாம்...இந்த நாடும் நலம் பெறும்...
No comments:
Post a Comment