Monday, June 26, 2017

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே !



அதிகாலையில் எங்கு திரும்பி நடந்து சென்றாலும் ஏதோ ஒரு ஆன்மிகப் பாடலோ திரைஇசைப்பாடலோ,, செய்தியோ காதில் விழுந்து கொண்டே இருக்கிறதுமக்கள் பயணிக்கும் ஷேர்ஆட்டோக்கள் எனப்படும் மூன்று சக்கர வாகனங்களில் தொடங்கி பேருந்துமின்சார ரயில்மெட்ரோ ரயில்வாடகை நான்கு சக்கர வண்டி எனப் பயணம் செய்பவர் அனைவரும் காதில் கருவியை மாட்டிக் கொண்டு எதையோக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களேவீட்டு வேலை செய்யும் பொழுது கூட மகளிர் எதையோ இரசித்துக் கொண்டே தங்கள் வேலைப்பழுவை மறந்து உற்சாகமாய் வேலை செய்கிறார்களேஅலுவலகங்கள் தொழிற்சாலைகள் என்று நம் நகரைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பணிச்சுமையை மறந்து வேலை செய்ய பணியாளர்கள் எதை ஆறுதலாகவும் ஆர்வமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?

தாங்கள் அலைபேசியில் உள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களையா ? இருக்கலாம்...ஆனாலும் உலகநடப்புகளையும் , உணர்வுகளுக்கு ஆறுதல் அளிக்கும் பாடல்களையும், ஆர்வமூட்டும் வகையில் அள்ளித்தரும் வானொலிப்பண்பலைகளைக் காது கொடுத்துக் கேட்பதில் தான் எத்தனை ஆனந்தம் ? விருப்பமான தொகுப்பாளரின் கனீர் குரலைக் கேட்பதற்காகவே அதிகாலையில் அலுத்துக் கொள்ளாமல் ஆனந்தமாய் எழுந்திருப்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். வர்ணனையாளரின் குரலுக்கும் , வானொலி தொகுப்பாளரின் பேச்சைக் கேட்பதற்காகவும் ஆசையுடன் வானொலிப்பெட்டியை நம் தாத்தா பாட்டிகள் அணைத்திருந்தார்கள். . நாம் அலைபேசியை அணைத்திருக்கிறோம் .... அவ்வளவுதான் வித்தியாசம்.

பணிசெய்யும் பொழுதே இடைஞ்சல் ஏற்படாமல் காதுகளில் மட்டும் கருத்துக்களை வாங்கிக் கொண்டு பணிபுரியும் வாய்ப்பு உள்ளதே , வேலை செய்யும் இடங்களில் மக்கள் வானொலியைக் கேட்க விரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாகிறது. ஆனால் படிக்கும் மாணவர்கள் வானொலிக்கேட்டுக் கொண்டேத் தங்களுக்கான வீட்டுப் பாடங்களைச் செய்யும் பொழுது, sandwich என்றழைக்கப்படும் ஈரொட்டிகள் போல நம் மூளையின் உள்ள மடிப்புகளில் கொஞ்சம் பாடல், கொஞ்சம் செய்தி, கொஞ்சம் படிப்பு என்று பதிந்து விடுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் தேர்வு அறைகளில் மாணவர்கள் தங்கள் பதிலளிக்க படித்தப் பாடங்களை நினைவூட்டுகையில், தங்கள் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த பொழுது கேட்ட பாடல்களும், செய்திகளும் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல முக்கியமானப் பணி செய்யும் அனைவருக்குமே பொருந்தும்.. இதனால் வேலை செய்பவர்கள் கவனச்சிதறல் வராமல் பார்த்துக் கொண்டு வானொலியின் பெயரைக் காப்பற்றலாம்..
தொழில்நுட்பம் சற்று வளரத்தொடங்கியிருந்த காலத்தில் அலைவீச்சுப் பண்பேற்றம் என அழைக்கப்படும் AMகளிலும் , அதிர்வெண் பண்பேற்றம் என்று அழைக்கப்படும் FM களிலும் மக்கள் அனைவரும் மயங்கித்தான் கிடந்தோம்.. இன்று எவ்வளவோ தொழில்நுட்ப அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும் பரபரப்பான தூங்கா நகரங்களை தூங்கவிடாமல் இயக்கிக்கொண்டிருப்பதில் பெரும்பங்கு வகிப்பது நம் வானொலி நிலையங்கள் தான். தொலைக்காட்சி, , இணையம் என்று பற்பல வழிகளில் செய்திகளையும் , மனம் கவர்ந்த பாடல்களையும் கேட்கப் பல வாய்ப்பிருந்தாலும், . இந்த மந்திரப் பெட்டிக்குப் பலரும் மயங்கித்தான் கிடக்கின்றோம் .நெடுந்தூரப் பயணங்கள் , போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் பயணங்களின் பொழுது அலுப்பு ஏற்படாமல் பயணம் செய்யவும் , எந்தெந்த இடங்களில் நெரிசல் அதிகமாய் உள்ளது ? வேற்றுப்பாதைகள் என்னென்ன என்பதை நண்பனாய்க் கூறி வழிநடத்துவதும் இந்த வானொலித் தொகுப்பாளர்கள் தானே !

இளைஞர்களைக் கவரும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொழுது கேலி, கிண்டல்கள் சற்று எல்லை மீறுவதாக புகார்கள் எழத்தான் செய்கின்றன. தனியார் வானொலி மையங்கள் சில நேரத்தில் ஒருதலைப்பட்சமாக ஒருபிரிவினருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதனால் நடுநிலைமை தவறி விடுகின்றனர் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சுவாரசியமாக பேசுகின்றோம் என்று இரசிகர்களை கிண்டல் பேசும் தொகுப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள் . வானொலிப் பண்பலையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கும் இரசிகர்கள் சில நேரம் தனது மனம் கவர்ந்தத் தொகுப்பாளர்களால் காயப்படுத்தப்பட்டு விட்டதாகவும் வருத்தப்பட்டுக் கொள்கின்றனர் . தனியார் வானொலி நிலையங்கள் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சியைக் கொடுத்தாலும் , அவர்களுக்கு இணையாக அரசு வானொலி நிலையங்களும் சில வரையறைகளோடு இயங்கி அவர்களுக்கு நிகராக போட்டிப்போடுகையில் அது ஆரோக்யமான போட்டியாகவே தோன்றுகிறது.

வானொலி தொகுப்பாளர்கள் மக்களைக்கவரும் வகையில் பேசுகின்றேன் என்று சில நேரம் உளறல்களுடன் இரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர். தமிழ் வானொலி நிலையம் தான்....ஆனால் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளின் விளையாட்டுத்தான் அதிகமாய் இருக்கிறது. கேட்டால் யதார்த்தமான உரையாடல்கள் என்று கண்சிமிட்டி மழுப்பிவிடுகிறார்கள். .ஒரு தொகுப்பாளரின் பேச்சைத் தினமும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் கேட்கும் பொழுது தினமும் பார்த்து பேசும் நண்பர்கள் போல் ஆகிவிடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் அவர் அந்த வானொலி நிலையத்திலிருந்து விலகிவிட்டாலோ, அந்த வானொலி நிலையமே மூடப்பட்டாலோ இரசிகர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பது மிகப்படுத்தப்படாத உண்மைதான் . சில நேரம் இனிமையான பாடல்களையும், முக்கியமான செய்திகளையும் கேட்கலாம் என்று வானொலியை இயக்கினால் விளம்பரப்பதிவுகளை ஒலிபரப்பியே நம் பொறுமையைச் சோதித்து விடுகிறார்கள்

ஒரு தொகுப்பாளர் என்பவர் நடுநிலையோடு உணர்ச்சிவசப்படாமல் தெளிவாகத் தன் மொழியைப்பேச வேண்டும். ஆனால் சில தொகுப்பாளர்கள் பேசுவதைக்கேட்டால் நமக்கே மூச்சடைப்பு ஏற்பட்டு வாய் வலித்திடும் போல் இருக்கிறது. விளம்பரங்கள் , பாடல்கள் இவற்றின் இடம்பெறுதலுக்குப் பின்னையே நடுவில் தரப்படும் சில நிமிடங்களில் தாங்கள் கூறவிரும்பும் தகவல்களை அவர்கள் கூறவேண்டியிருப்பதால் வேகமாக பேசுவதாகத் தொகுப்பாளர்கள் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.. சில குறும்புக்கார இரசிகர்கள் தொலைபேசியில் கிண்டலுடன் வம்புப்பேச்சு பேசுகையில் , ஒரு சில தொகுப்பாளர்கள் வல்லவனுக்கு வல்லவனாக பதில் வாய்ஜாலம் காட்டிவிடுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டு விடுகிறார்கள்..

நாம் சோர்வான மனநிலையில் இருந்தாலும் , ஒரு சில தொகுப்பாளரின் பேச்சைக் கேட்கையில் நம் மனநிலையையே மாறி உற்சாகமாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.தன் நகைச்சுவைப் பேச்சு அம்புகளால் நம்மை சுழ்ந்திருக்கும் கவலைகளை சிதறவிடும் ஆற்றல் பெற்றவர்கள் இந்தத் தொகுப்பாளர்கள். . அடுப்படியில் அடைந்து கிடப்பவள் என்று ஏளனம் செய்யப்படும் பெண்களின் விரல்நுனியில் வண்ணங்களை மட்டும் காணச்செய்யாமல் அண்டத்தின் அன்றாட நிகழ்வுகளையும் அடைக்கும் ஆற்றல் பெற்றது வானொலி அலைவரிசைகள். என்றால் மிகையாகாது.. வானொலி நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகள் மக்களிடம் சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும், தங்கள் திறமைகளை வெளிகொண்டுவரும் ஆர்வத்தை மட்டும் ஏற்படுத்தாமல், சிறுசிறு பரிசுகளையும் வெல்ல வாய்ப்பளிப்பது சிறந்த விஷயம் . திரைப்படங்களுக்கான நுழைவுச்சீட்டு , ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு என்று அவர்கள் தரும் பரிசுகளில் பல வியாபார சூழ்ச்சிகளும் சந்தைப்படுத்துதலுக்கான தந்திரங்கள் நிறைந்திருந்தாலும் கடைக்கோடி மக்களுக்கும் மகிழ்ச்சிக் கிடைக்கிறது என்று தெரிகையில் பகலவன் கண்ட பனித்துளியாய் அந்த உள்ளீடுகள் அனைத்தும் மறைந்துப் போய்விடுகின்றன.

வானொலி நிலையத்திற்கு கடிதங்கள் வாயிலாக தங்க விருப்பப் பாடல்களையோ, தெரிந்தவர்களுக்குச் சுபதின வாழ்த்துக்கள் கூறும் முறை இப்பொழுது குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்களின் வழியே தெரிவிப்பதாக மாறி இருந்தாலும் , நம் பெயரை வானொலியில் கேட்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அள்ளித்தரும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. வானொலி நாடகங்கள் எனப்படுகின்ற நிகழ்ச்சிகளை அரசாங்க வானொலிகள் மட்டும் கைக்கொடுத்து மறைந்து போகாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.. சமூக அவலங்களையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் நம் முந்திய சந்ததியினர்கள் வானொலி நாடகங்கள் வழியாக தெரிந்து கொண்டார்கள் என்றால் இப்பொழுது நாம் தொகுப்பாளர்களுடனான கலந்துரையாடல் , நம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் வழி புரிந்துகொள்கின்றோம்.

இப்பொழுதைய சுழ்நிலையில் வானொலி வழி காதுகளில் இன்பத்தேன் வந்துப்பாய்வது உண்மைதான்....ஆனால் குறைகள் என்று மக்களால் கருதப்படும் இரைச்சல்கள் குறைக்கப்பட்டால் சிறப்பாக தேன்சுவையை இரசிக்கலாம்.

2 comments:

  1. வானொலி - தற்போதைய சூழலை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளாய்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

      Delete