Monday, October 16, 2017

நகர்வலம் - சுறுசுறுப்பாகட்டும் சுவை மொட்டுக்கள்

வடசென்னை ஏரியாக்களை ஒரு வலம் வந்தோம் என்றால் வாயில் நுழையாத பெயரைக் கொண்ட பல வகையான உணவுகளைப் பெயர் பலகைகளில் படிக்கவும், பார்க்கவும், ருசிக்கவும் நேரலாம்.


பாரிமுனையின் சாலைகளில்  மாலை நேரங்களில் சிறிய மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு  பெரிய தோசை கல்லில் பரபரப்பாய் விற்றுக் கொண்டிருக்கும் பர்மிய உணவுகளுக்கு ஏககிராக்கியாய்தான் இருக்கும்.

நம் தலைநகருக்கு என்று சில பிரத்யேகமான உணவு வகைகள் இருந்தாலும் பர்மாவிலிருந்து வந்த உணவு வகைகளான அத்தோ , பேஜோ,  மொய்ங்கோ , மோலசம் போன்ற வித்தியாசமான உணவுகளை ஆர்வத்துடன் சுவைக்கும் ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருக்கத்தான்  செய்கிறார்கள்.

பச்சரிசி மாவில் சிறு சிறு கொழுக்கட்டைகள் செய்து அவித்து, தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருக்கிறார்கள். அதை ஒரு குவளையில் அள்ளிப்போட்டு, வெள்ளப்பாகு, பாதாம் பிசின் சேர்த்து தளும்பத் தளும்ப தேங்காய்ப்பால் ஊற்றிக் கலக்கித் தருகிறார்கள். குளு குளுவென்று இருக்கிறது. இதுதான் மோலசம்  பானம்.

ஒரு சில உணவு வகைகள் நூடுல்ஸ் போன்று இருப்பதனால் ,
ஏதேனும் ஆபத்து  ஏற்படுமோ என்ற பயப்படத் தேவை இல்லை. அரிசி மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து சப்பாத்தி போல் பிசைந்து ,  அதை அச்சிட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். பூண்டு , வறுத்த வெங்காயம் , கொத்துமல்லி , புளி ,எலுமிச்சை ,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து  முட்டைக்கோஸ் சேர்த்தால் அத்தோ.பேஜோ என்பது தட்டை போலிருக்கும். மொய்ஞா  வெஜிடபிள் சூப் வகையைச் சார்ந்தது. ஒரு முழு  
குவளை மொய்ஞா குடித்து முடிக்கையில் நம் வயிறு நிறைந்திருக்கும்.
இந்த உணவுகளின் பெயர்கள் வாயில் நுழையவில்லை என்றாலும் உணவு வகைகள்  ருசியாக வாயினுள் நுழைந்து விடும். 

பெரும்பாலும் பர்மா உணவுகளில் வேகவைக்காத பச்சைக் காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்குத் தீங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. எளிதில் ஜீரணம் ஆகி விடுகின்றது. இதனுடன் பரிமாறப்படும் வாழைத்தண்டு சூப்  கிட்னி மற்றும் குடலில் கல்லை  கரைக்கக்கூடிய ஆற்றல் உள்ள மருத்துவ குணம் உடையதாக விளங்குகிறது.

பர்மிய உணவுகளிலும் சைவ அசைவ உணவு வகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. முட்டை, கருவாட்டுக் குழம்பு, இறைச்சி போன்றவற்றை பக்குவமாக சேர்த்து அசைவ அத்தோ செய்யப்படுகிறது

பெரும்பாலும் சாலையோரங்களில் விற்கும் உணவுகளில் 
சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்று ஒரு சிலர் கொடி பிடிக்கிறார்கள் என்பதற்காகவே உணவுகளை விற்பவர்கள் கையுறை போட்டுக் கொள்கிறார்கள்.ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் வெறுங்கையில் அப்பணியாளர்கள் அத்தோ போன்ற உணவுகளைத் தயாரித்துக் தரும் பொழுதுதான் சுவை கூடுதலாக இருக்கின்றது என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகின்றார்கள்.

ஒரு  சிலருக்கு சாலையோர உணவகங்களில்  உணவுகளை சாப்பிட்டவுடன் உணவு விஷமாகி விடுவதும்  நடக்கத்தான் செய்கின்றது . குறைந்தபட்ச சுத்தத்தைப் கருத்தில் கொண்டு சாலையோர உணவு    கடைகளைத் தேர்வு செய்வது நமது கையில் தான் இருக்கின்றது.   

பர்மாவிலிருந்து திரும்பிய நம் தமிழர்களின் வாழ்வாதரத்திற்காக நம் அரசாங்கம் பல பகுதிகளையும் தொழில்களையும் ஒதுக்கி தந்திருந்தாலும் இந்த பர்மிய உணவுக் கடைகள் அவர்களுக்கு வாழ்வில் ஏற்றத்தை தருவதுடன் நமக்கும் பர்மிய உணவுகளை சுவைத்துப்  பார்க்கும் வாய்ப்பைத் தருகின்றது.     


அரபு நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சவர்மா எனப்படும் அசைவ உணவும் தற்பொழுது பல உணவகங்களில் கிடைக்கின்றது.  ஒரு பெரிய இரும்புக் கம்பியில் அடுக்கடுக்கான  கோழி இறைச்சித் துண்டுகளை அடிக்கி வைத்து சுற்றிலும் நெருப்பு மூலமாக வேக வைத்து   பின்பு அதை கொஞ்சம் ஓரமாக அறுத்து  எடுத்து  ஒரு ரொட்டியில் வைத்து சுற்றி கொடுப்பார்கள். உப்பு நீரில் ஊற வைத்த கேரட் ,மிளகாய், முள்ளங்கி தொட்டுக் கொள்வதற்காகத் தரப்படும்

முறுக்கு சாண்ட்விச் எனப்படும் முறுக்கு இடையீட்டு ஈரொட்டிகள் ஜெயின், வடநாட்டு உணவுகள்  கிடைக்கும் சௌகார்பேட்டை போன்ற இடங்களில் மிகப் பிரபலம்.ரொட்டித் துண்டுகளுக்குப் பதிலாக முறுக்குகளுக்கு நடுவே சில காய்கறித் துண்டுகள் இடம்பெறும். தக்காளி , வெள்ளரிக்காய் , புதினாவின் சுவை நம்மை மயக்கும் .  அதிலும் பாலாடைக்கட்டி நிரப்பப்பட்ட முறுக்கு இடையீட்டு ஈரொட்டிகள் இன்னும் சுவையாக இருக்கும்.


 ஜில் ஜிகர்தண்டா என்று மதுரைப் பகுதிகளில் கடற்பாசி, பால், சக்கரை, ஜவ்வரிசி, நன்னாரி, பனிக்கூழ், சர்பத் போன்றவைகள் கலந்து தயாரிக்கப்படும்   பிரபலமான பானம் தற்பொழுது நம் மாநகரத்திலேயே கிடைப்பதால் தெற்கு திசையில் வாழ்ந்து தற்பொழுது தங்கள் மண்ணின் உணவுகளுக்காக ஏங்கும் மக்களுக்கு கொண்டாட்டம் தான்.


நட்சத்திர உணவு விடுதிகளில் சுவையான பிரபலமான உணவுகளை நாம் வாங்கி உண்டாலும் கிடைக்காத மன நிறைவு இந்த ரோட்டோர கடைகளில் வாங்கி உண்ணும் பொழுது நமக்கு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதுபோன்ற சிறு குறு வியாபாரிகள்    தங்கள் சுவைமிகுந்த உணவுகளால் உணவுக்காக நாம்  செய்யும் செலவுகளை கணிசமாக குறைக்கின்றனர். இதுபோன்ற சாலையோரக் கடைகளில் நம் நண்பர்களுடன் நின்றுகொண்டே சாப்பிட்டாலும்  நமது கால்கள் ஏனோ வலிப்பதில்லை.

சாப்பிட்ட உணவுகளையே சுவைத்து சோர்வானவர்கள் நிச்சயமாக நம் தலைநகரிலேயே கிடைக்கும் விதவிதமான சுவையான உணவுகளை சுவைத்து விட்டு வரலாம். சோர்ந்து போன நம் சுவை மொட்டுக்களுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தரலாம்.சுறுசுறுப்பாகட்டும் நம் சுவை மொட்டுக்கள் சிறக்கட்டும் நம் சாலையோர வணிகர்களின் வியாபாரம்.

No comments:

Post a Comment