Saturday, October 7, 2017

சூரியப் பெண்ணே - குமரி உத்ரா

28 கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சாயலில்  காதல், நகைச்சுவை, பெண்களோட காதல் தோல்வி, குடும்ப வாழ்க்கை, விவசாயம், பெண்கல்வியோட முக்கியம் என்று பல உணர்வுகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கின்ற வகையில் இருக்கின்றது.

சிறுகதைகள் வடிவில் சில கதைகள் இருந்தாலும் ,ஒரு பக்கக் கதைகள் சாயலிலும் பல கதைகள் இருக்கின்றது. ஒரு கதை ஆரம்பிக்கும் பொழுது வாசகர்களுக்கு ஒரு வகையான எண்ணத்தையும் புரிதலையும் கொடுத்துவிட்டு அந்த மனநிலையோடவே கதை முழுவதுமாக பயணிக்க வைத்து, கடைசியில வேற ஒரு பரிணாமத்தில்  கதையை முடிக்கும் பொழுது நமக்கு சின்ன அதிர்ச்சி கலந்த திருப்பத்தை கொடுக்கிறார் குமரி உத்ரா.  இதுதான் இவர்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி.

இவரின் எழுத்தில் நேர்மறைத்தன்மை நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற எல்லா மனிதர்களும் நல்லவர்களாகவும், நல்ல நிகழ்வுகளும் நம்மைச் சுற்றி நடந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த கதைகளுள் ஒரு கதாபாத்திரம் எட்டாத தூரத்தில் யாருக்கும் தெரியாத
விண்மீனாய் வாழ்வதைக் காட்டிலும் அனைவருக்கும் தெரிந்து நொடியில் மறைந்து விடும் மின்னலாய் வாழ்வது நல்லது என்று சொல்லும் ஒரு  வசனம் வாழ்வியல் உண்மையை சொல்வதாக அமைந்திருக்கிறது.

ஒரு கருத்தை வெறும் கருத்தாகச் சொன்னால் நம் மனதில் ஏறாது. அதுவே  உவமையுடன் உவமேயத்துடன் கூறும்பொழுது நம் மனதில் நிற்கும் வாய்ப்பு அதிகம்.
இவருடைய கதைகளை ஒலிச்சித்திரம் ஆக வானொலியில் கேட்கும் பொழுது சுலபமாக நம்மால் அக்கதைகளை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

'எனக்குள்ளே காதல் பயிரை வளர்ப்பதற்குள் நித்யா அறுவடை செய்துவிட்டாள். '
' மனதில் ஓரத்தில் அகல் விளக்காய் எரியும் ஆசை'  இப்படி சிறுகதைகளில்   இவர் உபயோகப்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளைப் பார்க்கும் பொழுது  இவர்  ஒரு சிறந்த கவிதாயினி  என்பதை நம்மால் உணர முடிகிறது. தலைப்புகளும் கவித்துவமாக இருப்பதை மறுக்க முடியாது.

சூரியப் பெண்ணே என்னும் தலைப்பு பெண்கள..., ஒரு மெழுகுவர்த்தியாய் இருந்து தன்னைத் தானே உருக்கி கொள்வதை விட , குடும்பத்தில் சூரியனாய்  பிரகாசித்து, மற்றவர்களுக்கு வாழ்வு எனும் ஒளியை தர முடியும்.கதிரவன் தோன்றினால் இந்த உலகமும், இயற்கையும் ஒளி பெறுவது போல , பெண்களினால் இந்த புவியும் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை..என்ற கருத்தை தான் எனக்குள் விதைத்தது.

4 comments:

  1. அருமை அபி கதைகளை படிக்க ஆவல் ஏற்படுகிறது உன் நடை

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete