Wednesday, October 18, 2017

வற்றாநதி - கார்த்திக் புகழேந்தி

படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம்  போன்ற பல காரணங்களால் ஊரை விட்டுப்பிரிந்தவர்களின் மனதின் ஆழத்திற்குச் சென்று , அவர்கள் பத்திரமாய் பூட்டி  வைத்திருக்கும்  ஞாபகப்  பட்டாம்பூச்சிகளை , எழுத்து என்னும்  கள்ளச் சாவியைக் கொண்டு திறந்து, சிறகடித்துப் பறக்கச் செய்துவிடுகிறார் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி.


22 கதைகளிலும் நாம் ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருப்போம்.அல்லது அந்த கதாபாத்திரமாக வாழ்ந்த மனிதர்களையாவது நிச்சயமாக பார்த்திருப்போம்.அவர் உபயோகப்படுத்திய சொற்களை வாசிக்கும் பொழுது அந்த ஒரு நொடியாவது நம் ஊருக்குச் சென்று வாழ்ந்துவிட்ட நிறைவு ஏற்பட்டுவிடுகிறது .

எத்தனையோ ஊர், வெளிநாடு என்று சுற்றி விட்டு , எத்தனை வருடம் கழித்து வந்தாலும், நம் சொந்த ஊர் மண்ணில் கால் வைத்து , அந்தக் காற்றைச் சுவாசித்து, நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் பார்த்து உரையாடி அளவளாவிக்கொள்ளும் சம்பவங்கள் பொக்கிஷமானவை.

சொல்லப்படாத காதலை நம் மனதில் என்றுமே புதைத்து வைத்திருப்போம் . பார்வை ஒன்றே போதுமே என்ற பாணியில் தெய்வ தரிசனத்திற்காக காத்திருப்பதைப்போல நம்மை வசீகரமாய் ஈர்த்தவர்களுக்காக ஏங்கியிருப்பதும் ஒரு அலாதியான விஷயம்தான்.உறங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கு உசுப்பேற்றி நம் பழைய காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டு  நம்மைப் பித்துபிடித்தவர்களாய் அலையவைப்பதில் எழுத்தாளருக்கு அப்படி என்ன சந்தோஷமோ என்று தெரியவில்லை.



தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள மனிதர்களையும், அந்த வாழ்க்கைச் சூழலையும் நம் கண்முன்னே கொண்டுவருபவர், அங்கிருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் அந்த வாழ்வியல்களையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். ஒரு ஊருக்கு என்று இருக்கும் பிரசித்திப் பெற்ற உணவுகள், உணவகங்கள், அடையாளங்களை நம் மனதில் எளிதாய் பதிய வைத்துவிடுகிறார்.

நகரங்களில் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நமக்கு ஏற்றவாறு நாம் மாற்றிக் கொண்டாலும் , அன்றைய கொண்டாட்டங்களின் நினைவலைகள் நம் நெஞ்சத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.

திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஊரைப்பற்றிய நினைவுகளும் , பால்யகால ஞாபகங்களும் உயிர்பெற்று நம்மை நிச்சயமாய் தொந்தரவு செய்யும்.
அதுவே வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  என்றால் எங்கள் மண்ணின் மனத்தை நுகர்ந்துபார் என்று போட்டிக்கு கூப்பிடுவது போல அவர்களது அனுபவங்களையும் வாழ்வியலையும் எழுதத் தூண்டிவிடும் ஆற்றல் மிகுந்த பாசமான கலகக்காரர் இந்த எழுத்தாளர்.



இவரது எழுத்துக்களால் இயற்கை, இயற்கை விவசாயத்தின் மேல் காதல்  துளிர்கிறது. ஊருக்குப் போய் நான்கு மாதங்கள் ஆகிறதே என்று ஏற்பட்ட ஏக்கத்தீயில் எண்ணையை ஊத்திவிட்டார் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்.

2 comments:

  1. /* திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஊரைப்பற்றிய நினைவுகளும் , பால்யகால ஞாபகங்களும் உயிர்பெற்று நம்மை நிச்சயமாய் தொந்தரவு செய்யும். */



    திருநெல்வேலியில் இருந்து அகதிகளாய் மாறிப்போன
    இந்த தலைமுறையின் வாழ்வியலை ஒவ்வொரு கதையும் பிரதிபலிக்கும்


    "பட்டணம் சந்தோசத்தைக் கொடுக்குதுன்னா பின்ன ஏம்ல ஊருக்கு வாரும் போது அப்படி மூஞ்சில சந்தோசம் வருது. அங்க செத்துப் பொழச்சிட்டு இங்கன வந்து செலவு பண்ணுறது"

    ஊருக்கு செல்லும்போது இதை கேட்காத நண்பர்கள் இல்லை

    ReplyDelete