Tuesday, June 19, 2018

நகர்வலம் - மாறும் வானிலைக்கு தயாராய் இருப்போம்


வெயில் காலத்தில் சூரியன் சுட்டெரித்தாலும் வெளியில் செல்லாமல் இருக்க முடியாது. தேவையான ஆயத்த நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் நடைமுறைப்படுத்தும் பொழுது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மிகச் சுலபமாகவே நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
கோடைகாலத்தில் மோர்,இளநீர், பதநீர், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு வகைகள், பழரசங்கள் மற்றும் தண்ணீர் போன்று இயற்கை பானங்கள் மட்டுமே உடலை இதமாக்கும். இயற்கை பானங்களின் சுகாதாரத்தன்மையையும், பழக்கடைகளின்‌‌‌ சுத்தத்தையும் சரிபார்த்து  நம் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் நம் கடமையே. 
பழச்சாறுகளில் ஐஸ்கட்டிகளையும், பிரத்யேகமாக சேர்க்கப்படும் சர்க்கரையையும் தவிர்த்தால் பழங்களின் இயற்கையான இனிப்புச் சுவையை உணர முடியும்.பலரது தாகத்தைத்தீர்த்து எளிய மக்களுக்கு உதவியாய் இருக்கின்றது என்பதற்காகவே பலரும் தங்கள் அரசியல்கட்சி , கடை மற்றும் விருப்பமான நடிகர்களின் பெயரில் மோர்பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் 
கோடைகாலங்களில் திறப்பதுண்டு. எந்த ஏற்றத்தாழ்வும் வேறுபாடும் இல்லாமல் விலையில்லாமல் அன்புடன் தரப்படும் கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி சேர்த்த மோரும் , தண்ணீரையும் குடித்தாலே வெயிலின் உஷ்ணத்தை விரட்டி விடலாம்.
பயண நேரங்களில் பழச்சாறு உட்கொள்வது மிகவும் வசதியானது என்றாலும், அலுவலகம் செல்பவர்கள் இடைத்திண்பண்டங்களாக பழங்களை எடுத்துச் செல்வதுண்டு.கோடைக்காலத்தில் எண்ணையில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அதிலும் பழங்களை பழச்சாறாய்ப் பருகுவதை விட கடித்து சாப்பிடுவதால் நிறைய நார்சத்து கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.
அதிக சர்க்கரை அளவுள்ள காற்றுகலக்கப்பட்ட அயல்நாட்டுக் குளிர்பானங்கள் தற்காலிகமாக தாகத்தைத் தீர்த்தாலும் அதனால் ஏற்படும் ஆரோக்யக்கேடை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். 
அங்காடிகளில் கிடைக்கும் சர்க்கரை அதிகளவுள்ள பதப்படுத்தப்பட்ட பழச்சாறை விட நம் கண்முன்னே தயாரித்துத் தரப்படும் பழச்சாறுகள் பழச்சத்துக்களில் முன்னிலை வகுக்கின்றன.
அதிக சர்க்கரை அளவுடன் பற்களைப் பதம்பார்க்கும் குளிர்பாலேடுகளை உட்கொள்வதை விட சிறு வணிகர்கள் விற்கும் நுங்குகளால் நம் உடல் சூட்டை சிறப்பாகவே குறைக்க முடியும். குழந்தைகளுக்கும்  இயற்கையான ஜெல்லியை வாங்கிக் கொடுத்தோம் என்றும் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரை விட மண்பானைத் தண்ணீரை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான செய்தி. வெல்லம் குளிர்ச்சியைத் தரும் என்பதால், இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் போது, சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். பானை தண்ணீரில் வெல்லம் கரைத்து, வடிகட்டி, சுக்கு, ஏலக்காய் பொடி கலந்தால் சுவையான, சத்தான பானகம் கிடைக்கும்.
வெயில் காலங்களில் சூடான, காரமான உணவுகளுடன் அசைவ உணவுகள் உட்கொள்ளுவதைப் பலரும் குறைப்பதுண்டு.சிலர் தவிர்ப்பதும் உண்டு.வெயிலின் உஷ்ணத்தால் ஆடு, கோழி இறைச்சிகளின் வழி கிருமிகள் பரவாமல் இருக்க பலரும் இது போன்ற முயற்சிகளை எடுப்பது வரவேற்கத்தக்கதாகவே கருதப்படுகின்றது.அஜீரனம் மற்றும் வயிற்றுக்கோளாறிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இருசக்கர வாகனங்களில் பாதுகாப்புக்காக நாம் அணிந்துகொள்ளும் தலைகவசம் வெயிலின் தாக்கத்திலிருந்தும் நம்மை காப்பாற்றிவிடும்.தூசியிலிருந்து  பாதுகாக்க மட்டுமல்லாமல் வெயிலின் சூட்டிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும் சூரியக் கண்ணாடியை நிச்சயம் அணிந்தே ஆகவேண்டும்.அதிகமான வியர்வை கசிவால்  ஏற்படும் பொடுகு, அரிப்பு,  அழற்சி, வியர்க்குறு போன்ற பிரச்சினைகளுக்கு 
தலைமுடியைக்குறைக்கும் சிகை அலங்காரங்கள் துணை நிற்கும்.
சரும பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் என்றல்லாமல் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருமே ஆயுர்வேதக் கீரீம்களையும், சருமத்திற்கு பொருத்தமான திரவங்களையும் களிம்புகளையும் வாங்கி உபயோகிப்பது அதிகரித்திருக்கின்றது.
வெப்பத்திலிருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள பலரும் நீச்சல் குளங்களையும், தண்ணீர் பூங்காக்களையும் நாடுவதுண்டு.பலதரப்பட்ட மக்களின் புழக்கத்தால் நீர்மாசு ஏற்பட்டு கிருமிகள் பரவி நோய்தொற்றும் அபாயம் இருப்பதால் நீச்சல் குளங்களையும்,  தண்ணீர் பூங்காக்களையும் தேர்ந்தெடுக்கும் பொழுது சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் என்றாலும் இறுக்கமான உடைகளுடன் வெப்பத்தை உள் இழுக்கும் கருப்பு ஆடையைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.

கடும் வெயிலைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது சில்லென்று குளிர்தென்றல் வீசி சாரல் மழை பெய்தால் சுகமாய்தான் இருக்கும். மழைத்துளிகளை மகிழ்வாய் வரவேற்க நாமும் தயாராக இருக்க வேண்டும். கோடைகாலத்தை முன்னி்ட்டு நாம் கடைபிடித்த அனைத்து பழக்கங்களையும் உடனே மாற்றுவது கடினம் என்றாலும் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தைக்
கொடுத்து நம்மைப் பரவசப்படுத்தும் கோடை மழைக்காக நாம் நமது பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம்.

சுள்ளென்று அடித்துக்கொண்டு இருக்கும் வெயில் திடீரென்று மறைந்து கொண்டு மழையைத் தூது அனுப்பும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் குடைகளை எப்பொழுதும் நம் பைகளில் வைத்துக்கொள்வது உத்தமம்.வானம் மேகமூட்டமாய் இருந்தால் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தங்களது மழைக்கால ஆடையை அணிந்து கொண்டே பயணத்தை தொடரலாம். திடீர் மழையில் நனைந்து ஈரஉடையுடன் அலுவலகம் செல்லும் சங்கடத்தையும் தவிர்க்கலாம்.

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு ஒவ்வாமல் அலர்ஜியை உண்டாக்கும்.நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  அவதிப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும்  சளி இருமல் வரும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.மாறும் வானிலைக்கு விழிப்புணர்வுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எல்லா சீதோஷ்ண நிலையும் சிறப்பாகவே அமையும்.

No comments:

Post a Comment