Monday, June 18, 2018

நகர்வலம் - கல்லூரிகளில் மத்திய அரசின் தொழில்முனைவோர் உதவி மையங்கள்


எல்லா வருடங்களைப் போலவே இந்த வருடமும் லட்சக்கணக்கான  பொறியியல், மருத்துவ, கலை கல்லூரிப் பட்டதாரிகள் பல கனவுகளுடனும் லட்சியங்களுடனும் கல்லூரிகளிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெயர்பெற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். பலர் தனக்குள் புது தொழில் யோசனைகளை வைத்துத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெரும்பாலான தொழில் முனைவோரது கருத்து முதலில் கடினமாக உழைத்துவிட்டு, பணத்தை சம்பாதித்த பிறகு தங்களுக்கு விருப்பமான தொழிலை செய்வதாக இருக்கின்றது.அதைவிட நன்கு தெரிந்து ஆர்வம் உள்ளத்தொழிலைத் தேர்ந்தெடுப்பது லாபகரமானதாக அமையும். 'மக்கள் கல்வி நிறுவனம் ' போன்ற லாபநோக்கமில்லாத அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றால் குறைவான செலவில் தரமான பயிற்சியுடன் சான்றிதழையும் பெறமுடியும்.தொழில் ஆலோசகரின் தொடர்பில் இருக்கும் தொழில் முனைவோரால் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.

பிடித்தமான, நேசிக்கும் விஷயத்தைத் தொழிலாக மாற்றினால் தொழில் லாபகரமானதாகவே இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவே (எம் எஸ் எம் இ டிஐ)  MSME Ti நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 85 கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்களுக்கு உதவுவதற்காகவே உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டதாரிகள் மட்டுமல்லாமல் மாணவர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும், தங்கள் புதிய தொழில் யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உதவி மையங்களில் தெரிவித்து பயன்பெற  சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசின் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதுதான் சென்னையில் உள்ள மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி MSME Ti நிறுவனம்.ஏற்கனவே திறமையான தொழில் நிறுவனங்களைை
கட்டமைப்பது, தொழில்முனைவோரை உருவாக்குவது, தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பது போன்ற பல சேவைகளை அளித்துவருவதால் இந்த புதிய திட்டம் பலரது கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியாளர் விற்பனையாளர் சந்திப்பு, பொருட்களைச் சந்தைப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான தள ஆய்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை வெற்றிகரமான சுயதொழிலிலுக்கு அடித்தளம் வகிக்கும். இவையனைத்தையும் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் தன்னுள் பெற்றிருக்கின்றது.

பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில்,
உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்கும்முறைகள் இது போன்ற உதவிமையங்களால் வழிகாட்டப்படுவது  நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக 250 கல்லூரிகளில் இந்த வகையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை  மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஆர்.எம்.கே கல்லூரி, சாய்ராம் மற்றும் சவீதா பொறியியல் கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வேலூரில் விஐடி பல்கலைக்கழகம், கோவையில் பிஎஸ்ஜி மற்றும் ஆர்எம்கே பொறியியல் கல்லூரிகள், திருநெல்வேலியில் நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, மதுரையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி, திருச்சியில் என்ஐடி, சேலத்தில்  விநாயகா மிஷன் கல்லூரிகள் போன்ற பல கல்லூரிகளில் மத்திய அரசு சார்பில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. 

85 இன்குபேட்டர் சென்டர்கள்  உதவி மையங்களாக செயல்பட்டு அனைத்து மாவட்ட மக்களின் லட்சியங்களுக்கு சிறப்பான பாதை வகுத்துக்கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.புதிய தொழில் யோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் மக்களிடம் குவிந்து கிடக்கின்றது. அதற்கான செயல்வடிவம் கொடுத்து, ஆர்வமாய் செயல்படுத்தத் தயாராய் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வாய்ப்புகள் குறைவாய் இருப்பதால் , பல சிறப்பான யோசனைகளும் திட்டங்களும் பயன்பாட்டிற்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

அத்துடன் நிதிபற்றாக்குறையால் பல நல்ல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.இந்தத் திட்டம் வழியாக ஒவ்வொரு சிறப்பான திட்டத்திற்கும் 75 முதல் 85 சதவீதம் நிதியளிக்கப்படுவதால் நல்ல திட்ட யோசனைகளைச் செயல்படுத்தும் மக்கள் 6.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை நிதியுதவி பெற வாய்ப்பளிக்கப்படுகின்றது.

மின்சாரம், தொழில்நுட்பம், பொறியியல் , எலக்ட்ரானிக்ஸ், உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டும் சேவைகள் என பலதரப்பட்ட துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்யோசனைகளும் இந்தத் திட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக, நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்  இருக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்திருக்கின்றது என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment