ஹைக்கூக்கள் ...மூன்று வரிகளில் ஏதோ ஒரு வலியை, சிந்தனையை மனதில் மின்னல் வேகத்தில் கடத்தி விடுகிறது. முதல் இரண்டு வரிகளில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின் அதர்வலையை மனதில் பாய்ச்சுகிறது.
அணிந்துரைகளில் இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பழநிபாரதி குறிப்பிட்டுள்ள ஹைக்கூக்கள் வானத்தில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திர வகைகள்.பறந்து விரிந்திருக்கும்
விண்வெளியில் நட்சத்திரங்களை சுட்டிக் காட்டுவது எளிது தான். இந்த புத்தகத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஹைக்கூக்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.புத்தகம் முழுவதும் கடற்கரையில் உள்ள மணல் போல சிறப்பான ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கிறது.
திண்டுக்கல் தமிழ்பித்தனின் ஓவியங்கள், ஹைக்கூ விவரிக்கும் உணர்ச்சிகளுக்கு கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நவீன கலை
ஓவியங்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்துகின்றது.ஒரு உணர்ச்சியை மக்களுக்குச் சொல்வதில்
மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூவிற்கும், தமிழ்பித்தன் அவர்களுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியில் கொண்டாட்டம் வாசகர்களுக்குத்தான்.
'பசியை அடக்காமல்
குழந்தையின் அழுகையை நிறுத்தியது
சூம்பிய முலை'
வறுமையின் விளிம்பில் பாலில்லாமல் இருக்கும் தாயின் தவிப்பு.
மேல்தட்டு மக்களாய் இருந்தாலும் தற்பொழுது உணவு முறைகள், வாழ்வியல் முறைகள் வேறு சில காரணங்களால் தாய்ப்பால் இல்லாமல் கலங்கும் தாயின் ஏக்கம். இரண்டு வகையான அம்மாக்களின் உணர்வுகளைக் கடத்துகிறது.
'செத்தான் புத்தன்
இன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்'.
நம் ஈழத்தில் புத்தன் கண்ட தத்துவங்களுடன் நமது உடன் பிறப்புகளும் இறந்ததன் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம் குரல்வளையை அறுக்கும்.குற்ற உணர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.
'வறண்ட குளம்
சட்டென உறிஞ்சிக் கொள்கிறது
ஆடு மாடுகளின் உமிழ்நீரை'
'துவைத்து போட்ட
சட்டையிலிருந்து சொட்டு நீர்
அலகை நீட்டும் குருவி'
அலைபேசிக் கதிர்வீச்சில் சிட்டுக்குருவி இனம் ஏற்கனவே சிறகு முறிந்து சோர்ந்து இருக்கிறது.ஹைக்கூவைப் படித்தவுடன் சாளரத்தின் வழியே குவளையில் தண்ணீர் வைக்கவே மனம் அனிச்சையாய் ஏங்குகிறது.உமிழ்நீரும் உறிஞ்சப்படும் பொழுது தண்ணீர் வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மழலையிடம் உதைவாங்கினால் வலிக்கவே வலிக்காது.வயிற்றுக்குள் எட்டி உதைக்கும் பொழுது மிகப்பெரிய கால்பந்து வீரனாவன் என்று நினைப்பவளே தாய். ஆசையாய் அருகில் வரும் அப்பனை பிஞ்சுக் குழந்தை காலால் எட்டி உதைக்கும்.
அந்த கொலுசுக் கால்களைச் சிரித்து கட்டிக் கொள்வதே அவனது மகிழ்ச்சி.
எட்டி உதைத்த கால்களை
இறுகக்கட்டிக் கொண்டேன்
சிரித்தன கொலுசுகள்.
'இலைகளுக்குள்
மறையும் பிறைநிலா
அசையவேயில்லை மரக்கிளை'
'சோளக்காட்டுப் பொம்மை
பூப்போட்ட சட்டையெங்கும்
பறவை எச்சம்'
இயற்கை நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை படித்தவுடன் கண்ணாமூச்சி விளையாடத் தோன்றுகிறது.நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதைச் சாரணமாக கடந்துவிடுபவர்கள் மனிதர்கள். அதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கவிஞர்கள். இயற்கையைக் கவிஞர்கள் பார்வையில் பார்க்கும் பொழுது இந்த உலகத்தையே நாம் இரசிக்க ஆரம்பித்து விடுவோம்.
'வாசலோரமாய்த் தொட்டிச்செடி
விடிகாலையிலேயே வாய்க்கிறது
சூரிய முத்தம்' என்ற ஹைக்கூவை
'வாசலோரமாய்
விடிகாலையிலேயே வாய்க்கிறது
தொட்டிச்செடிக்கு சூரிய முத்தம்' என்று மாற்றி அமைத்திருந்தால்
இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும் என்பது தாழ்மையான கருத்து.
கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு என்று ஏதோ ஒரு உறவை நிச்சயமாய் ஞாபகப்படுத்து விடுகிறது.
நெடுஞ்சாலையில் குட்டி நாய் ஒன்று அடிபட்டுக்கிடந்தது. அதன் தலை மேலேயே பல வாகனங்கள் ஏறி இறங்கிச் சென்றது என்னைப் பாதித்த நிகழ்வு.அந்த துன்பமான சம்பவத்தை ஞாபகப்படுத்தி விட்டது
அடிபட்டுச் செத்த நாய்
மீண்டும் மீண்டும் அடிபட்டது
நெடுஞ்சாலையில் என்ற இந்தக் கவிதை.
சுருங்கக் கூறவதே அறிவின் ஆன்மா.புத்தகம் சிறியதாக இருக்கிறது. விரைவாய் படித்து முடித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அதில் உள்ள ஒவ்வொரு ஹைக்கூவும் இயற்கையின் அழகையோ, சமுதாய அவலத்தையோ படம்பிடித்துக் காட்டுகிறது. அதனால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களும் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் நல்ல ஒரு தேடலை ஏற்படுத்துகிறது.
சிந்திக்கச் சில வரிகள்
ReplyDeleteஅருமையான கண்ணோட்டம்
மனமார்ந்த நன்றிகள்
ReplyDelete'செத்தான் புத்தன்
ReplyDeleteஇன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்'.
கவிதை விமர்சனம் மிகவும் அருமை . ஸ்ரீதரன்
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
DeleteSuper..... Congrats
ReplyDelete