Wednesday, December 6, 2017

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா

34 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் ஒரு பிராமண சமூகத்தைப் பற்றிய வாழ்வியலை மட்டும் தெரிந்து கொண்டோம் என்று தளர்வாய் இருந்து விட முடியவில்லை.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டு விவரிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒரு சமுதாயத்தைப் பற்றிய வெளிப்பாடாய் மட்டும் இல்லாமல் பல வகையான மனிதர்களின் இயல்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது.

கதைகள் அனைத்தும் புதினமாய் உண்மையும் கற்பனையும் கலந்திருந்தாலும் சுவாரசியத்திற்கு கொஞ்சமும்  குறைச்சல் இல்லை.குண்டு ரமணி போன்று மந்தமான வித்தியாசமான மனிதர்களை நம் வீட்டுத் தெருக்களில் நாமும்  நிச்சயம் பார்த்திருப்போம். அவளுக்குள் மறைந்திருக்கும் சோகக்கதை தெரிந்தவுடன் நாம் கேலி பேசி கடந்து சென்ற மனிதருக்குப் பின்னும்
எவ்வளவு சோகம் ஒளிந்திருக்கும் என்றே மனம் எண்ணுகிறது.

பால்ய கால நட்பு, சேட்டை, பகை , துரோகம் என்று அவர் கூறும் அனைத்துக் கதைகளும் நம் மனதில் அழுத்தமாய் பதிவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் அவர் கூறும் சேட்டைகளை ஏதோஒரு வகையில் நாமும் செய்திருப்பதுதான். வீட்டு வேலை 
செய்தவரின் சம்பளப் பணத்தை செலவழித்துவிட்டு , பணம் எங்காவது தொலைந்திருக்கும் என்று கூறிச் சமாளித்ததை விவரிக்கையில் நம் வாழ்வில் நாம் செய்த சிறிய அல்ல பெரிய திருட்டுதான் ஞாபகம் வருகிறது.


கல்லூரியில் தன் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரின் மகனின் குறைப்பாட்டிற்கான காரணத்தையும் மருந்தையும் தன் ஆராய்ச்சியால் கண்டுபிடித்திருப்பது புனைவாய் இருந்திருந்தாலும் நெகிழ்ச்சியைத்தான் தருகிறது.தற்பொழுது ஸ்ரீரங்கமும் அதன் சுற்றமும் வெகுவாய் மாறி  இருந்தாலும், எழுத்தாளர் தன் காலத்தில் இருந்த கதை மாந்தர்களையும் , வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருப்பது பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.

தன்னைவிட பத்துவயது மூத்த பம்பாய் மாலினி மேல் ஏற்படும்  இனம் புரியா ஈர்ப்பு,  நம்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஈர்த்த எதிர்பாலினத்தின் மேல் நாம் கொண்ட போதையையே ஞாபகப்படுத்துகிறது. ஓலைப்பட்டாசு, வீட்டிலேயே சினிமா பார்க்க வாங்கி பொசுங்கிப்போன  சினிமா ப்ரொஜக்டர், இளவயது ஆட்டங்களை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள்.
சாவித்திரி போன்ற முகஜாடை உடைய பெண்ணை சாவித்திரி என்று நம்பவைத்து நடத்தப்பட்ட நாடகம் , பால்காரரின் மாட்டையே அதிர்ஷ்ட குலுக்கல் பரிசாக பால்காரருக்கு அளிக்க முயற்சி செய்த லாவகம் என்று பரபரப்பை ஏற்படுத்தி நகைக்க வைக்கும் கதைகளை  ஆர்வமாய் எழுதச்செய்யும் கலையை எழுத்தாளரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.



ஶ்ரீரங்கத்துத் தேவதைகளின் மீது காதல் கொள்ள இந்த ஶ்ரீரங்கத்துக் கதைகள் தூதுவிடுகின்றன.

No comments:

Post a Comment