இந்த உலகத்தில் எல்லா உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் நம்மைச் சுற்றி உள்ள சமூகம் மட்டும் நமக்குக் கற்றுத் தர முடியாது.நாம் தெரிந்துகொள்ளாத, தெரிய விருப்பப்படாத மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் மறுபக்கத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர்.
வடசென்னையென்றாலே வாடை அடிக்கும் சென்னை என்று மூக்கைமூடும் மனிதர்களையும் அந்தமண்ணின் மணத்தை நுகரச்செய்திருக்கிறார். வடசென்னையைப் பற்றி அறியாதவர்கள் இப்புத்தகத்தைப் படிக்கும் பொழுது அங்கு வசிப்பவர்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம் அவர்கள் மனதில் நிச்சயமாய்ப்பதியும்.
பிணம் அறுக்கும் ஆரோக்கியதாஸ், விலைமாதராய் உடல் ஒத்தாசை செய்யும் இல்லாமல்லி, கல்யாணி , கட்டணக் கழிப்பறைகளை வரும் வருமானத்தைக் கொண்டு தன் அன்றாட வாழ்க்கையை நடத்தும் ருக்கையா , கானா பாடல் பாடும் ஜிகான், எம்.ஜி.ஆர் ஆகத்தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் மறுபிறவி, பிணம் எரிக்கும் கலியன், அவன் மகன் கோபி, வரையும் கலையைத்தன்னுள் புதைத்து போதைக்கு அடிமையான ஏவான் , பாசத்தைப்பொழியும் களஞ்சியம் மாமா என்று இப்படி நம்மனதில் இடம்பிடிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் ஏராளம்.
போதைக்கு அடிமையானவன், திருடன் என்று நம்மால் பழிக்கப்படும் மனிதனின் மறுபக்கம் நம் கண்களை குளமாக்குகின்றன.மனிதர்களில் இத்தனை வகையினர்களா என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன .
வாழ்வில் இணையாத காதலர்களுக்கு நடுவே இருக்கும் காதல்
உணர்வை உணரும் பொழுது காதல் தெய்வீகமானது என்ற கூற்றை மறுக்க முடியவில்லை.நம் வாழ்வில் நிச்சயமாக நம் கண்முன்னே ஒரு அக்காவும், அண்ணணும் காதலித்திருப்பார்கள். நாமும் இனிப்புகளுக்காக அவர்களுக்கு காதல் தூது போயிருப்போம்.காதல் உணர்வுகள் நிரம்பி வழிந்து காதலிக்காதவர்களையும் காதலிக்கத்தூண்டும் உண்மைச்சம்பவங்கள் ஏராளமாய் புத்தகத்தில் விரவிக்கிடக்கின்றன.
வடசென்னைக்கு என்ற பிரத்யேகமான வாழ்க்கைமுறையை பொக்னாச் சோறு போன்ற உணவுகள் எளிதாய் விளக்குகின்றன.கவிஞனுக்குக் கோபம் வரக்கூடாது என்று நகைச்சுவையுடன் யதார்த்தங்களை புரிய வைப்பது அருமை.
ஒரு எழுத்தாளனாய் வாசகர்களை சிரிக்க, சிந்திக்க, மற்ற மனிதரை மதிக்க வைக்கும் திறமை பெற்று வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ஆசிரியர்க்கு மனமார்ந்த நன்றிகள்.
இவ்வுலகத்தில் தனது நல்ல குணங்களை மட்டும் காட்சிப் படுத்தி நல்லவனாக பெயரெடுக்கவே அனைவரும் விரும்புவார்கள். அவர்களில் வேறுபட்டு நான் இப்படித்தான் என்று தன் சுயத்தை எந்த ஒரு பீடிகையுமில்லாமல் கூறிய ஆசிரியர் வியக்க வைக்கிறார்.
கோடிரூபாய் கொடுத்தாலும் நாம் செய்யத்துணியாத வேலைகளை நமக்காக செய்யும் எளிமையான மனிதர்களுடன் பழகி அவர்கள் வாழ்க்கையை விளக்கி , இனிமேல் அத்தகைய மனிதர்களைக்கண்டால் முகம் சுளிக்காமல் சிநேகப்பார்வைப் பார்க்க வைத்த ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
Nice summary...wish to read this book.,
ReplyDeletethanks a lot
ReplyDelete