Saturday, September 30, 2017

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்

புத்தகத்தின் பெயரையும் அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே நமக்குத் தெரியாத இரகசியங்களும் வாழ்க்கைமுறையும் பகிரப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் மனதிலே ஓடியது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடனேயே அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
கதவு துவாரத்தின் வழியே சில கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.



பழைய வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் அன்றாடம் கடக்கும் நமக்குப் பரிட்சயமான இடங்களில் நமக்குத் தெரியாமல் ஒரு தனி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று  உணர்கையில் ஒருவிதமான அச்சம் கவ்விக்கொள்கிறது.

இவாஞ்சலின், சோஃபி கன்னியாஸ்திரீகளாக இருந்தாலும் உடல்தேவை, அன்பிற்கான ஏக்கம் போன்ற  சாதாரண பெண்களின் விருப்பம் அவர்களுக்குள்ளும் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறைவனின் பெயரைச் சொல்லி இயங்கும் பாதிரியார்களும் ஒரு சாதாரண ஆணாய் கன்னியாஸ்திரிகளின் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை நடத்தும் பொழுது அவர்களைக் காப்பாற்ற கர்த்தரையே நம் மனம் வேண்டிக் கொள்கிறது.

பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்த நமக்கு பிக்பாக்கெட் அடிக்கும், போதைப் பொருட்களைக் கைமாற்றிவிடும் குருவியான செல்வியின் வாழ்க்கை விசித்திரமாகவே இருக்கிறது. பெண் எங்கு சென்றாலும் ஆணால் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது அவள் பிறக்கும் பொழுதே வாங்கி வந்த சாபம் போல.

பாலியல் தொந்தரவு தருபவனையும்,  தன் மனதிற்குப் பிடிக்காத  போலி மருத்துவர் முத்துலட்சுமியையும்  வதைக்கும் செல்வியின் தோழி தவுடின் தைரியத்தை எல்லாப் பெண்களும் பெற்றுவிட்டால் நன்றாய்த் தான் இருக்கும். தன் தாய் தன் நண்பனுடன் சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சம்பத் , தன் உடல் தேவையை அறிந்திருந்த அளவு தன் தாயின் உடல் தேவையையும்,  அவருக்கும் வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதைப்  பற்றி உணர்ந்திருக்கவில்லை.

பண வாசனையுடன் மட்டுமே தூங்க விருப்பப்படும் கணவனை மணந்திருக்கும் சேட்டுப் பெண் சிவானியின் வாழ்க்கைப் பல குடும்பங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்றே தோன்றுகிறது.கள்ளக்காதல் , ஒழுக்கமற்ற உறவு என்று பல பெயர்கள் வைக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யும் பொறுப்பு அந்த கணவன் மனைவி கைகளிலேயே இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

பிழைப்புக்காக சொந்த ஊர்விட்டு வரும் ஆதம்மாவின் குடும்பம் நம் மனதிலும் இடம்பிடித்துக் கொள்கிறது.கட்டட வேலை செய்யும் ஆந்திரா , ஒரிசா வேற்று மாநிலக்காரர்களின் மனநிலை, அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள், உடல் தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள  முடியாத வசிப்பிடம் ஆகியவற்றை உணரும் பொழுது நம்மையும் அறியாமல் இப்புதினத்தில் வரும் ஆர்த்தியாகிவிடவே நம் மனம் ஆசை கொள்கிறது. முதன்முதலில் சென்னையை பார்க்கும் நமது மனநிலையை ஆதம்மாவின் கண்கள் வழி காண நேர்கின்றது.

புத்தகத்தின் பின்னட்டையில் வெட்டுண்ட நாய் போல பாதி அழிந்தது போலக்  குறிப்பிடப்பட்டிருக்கும் ஓவியத்தின் தாக்கமே மனத்தை அறுக்க நாய்க்கறி வியாபாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பொழுது இந்த சமுதாயத்தில் நாய்களுக்குக் கூடவா பாதுகாப்பில்லை என்று நற்சிந்தனை ஒரு புறம் தோன்றினாலும், அந்த இறைச்சி சமைக்கப்படும் உணவகத்தில் சாப்பிட்டுவிடக்கூடாது என்றே மன ம் அருவருப்புடன் வேண்டிக்கொள்கிறது.




2012 ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்ற இந்த புதினம் ஓரினச் சேர்க்கை, விவாதத்திற்குரிய பல கருத்துக்களைத் தன்னுள் கொண்டிருந்தாலும் நமக்குத் தெரியாத பல வகையான விளிம்புநிலை  மனிதர்களின் வாழ்க்கையை   யதார்தத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

Wednesday, September 6, 2017

நிலவை எச்சரித்த கரடிக் குட்டி - சிறுவர் அறிவியல் கதைகள் - கன்னிக்கோவில் இராஜா


பெரியவர்களோ சிறியவர்களோ நம்மைச் சுற்றி நடப்பதை கவனிக்கையில் எண்ணற்ற கேள்விகள் நமக்குத் தோன்றும்.நமது சந்தேகங்களையாவது நாம் மறந்து விடுவோம்.ஆனால் நமது குழந்தைகளின் சந்தேகங்களுக்கு உடனே பதில் சொல்லியே ஆகவேண்டும்.இணையத்தில் எதற்கு வேண்டுமானாலும் பதில் தெரிந்து கொள்ளலாம் என்று பீற்றிக்கொண்டாலும், இந்த நூலில் உள்ள அறிவியல் கதைகள் நிச்சயமாக நம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் பல செய்திகளைச் சொல்லித்தரும்.












குழந்தையை இரவு உறங்க வைப்பதற்கு முன்னோ அல்லது  கதை சொல்லுங்கள் என்று கேட்கும் நேரத்திலோ இந்த பதினைந்து கதைகளைக் கூறினீர்கள் என்றால் உங்கள் குழந்தையின் கதாநாயகனாகவோ கதாநாயகியாகவோ மாற நிறைய வாய்ப்புள்ளது.ஒரு அறிவியல் செய்தியைப் பெட்டிச் செய்தியாய்க் கூறினால் அது மறந்து விட அதிக வாய்ப்புள்ளது. அதுவே ஒரு கதையாய் தமிழ் மொழியில் கூறும் பொழுது மனதில் என்றும் பதிவாவதுடன், அறிவியலைத் தமிழில் தெரிந்து கொள்ளும் அற்புத வாய்ப்பும் கிடைக்கிறது.


அருமையான தமிழ் அறிவியில் விளக்கங்களுடன் மிருகங்கள் ஏன் பல் தேய்ப்பதில்லை? நாம் ஏன் பல் தேய்க்க வேண்டும்? இரவு மரத்தினடியே படுத்தால் பேய்வருமா?
நீரில் சலசலப்பு ஏற்பட்டால் ஏன் வளையம் வளையமாய் வருகிறது? சிறுநீரகத்தில் கல் எப்படி வந்தது  ? ஆந்தைக்கு இரவில் எப்படிக்கண் தெரிகிறது? நிலவு ஏன் எப்பொழுதுமே நம்முடன் வருகிறது? இனிப்புத் தின்றவுடன் ஏன் தேநீர் சுவைத் தெரியவில்லை? மின்மினிப்பூச்சி எப்படி இரவில் ஒளிர்கிறது போன்ற பல கேள்விகள் சுவாரசியமாக சிறந்த விரிவுரையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பூஜியம் என்ற வார்த்தைக்குப் பதிலாக சுழியம் என்ற வார்த்தை பிரயோகம் அழகு. பறவைகள் வேறு தட்பவெப்ப நிலைக்குச் சென்று திரும்பி வருவதை வலசை போதல் என்ற சிறந்த வார்த்தை வழி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் .
அறிவியிலைத் தமிழில் விளக்க இயலாது போன்ற கருத்துக்களை உடைத்தெரியும் வகையில் அழகு தூயத்தமிழில் குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளின் வாயிலாக கதையை நகர்த்திச் செல்வது நேர்த்தி.சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் அங்கங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் நம்மையும் ஈர்க்கின்றன.


பெரியோர்களிடம் குறைந்து வரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை உயிர்ப்பித்து குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளின் மன ஓட்டத்தைப் புரிந்து கதைகளைப்புனைந்துள்ள ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பெற்றோர் மற்றும் குழந்தைகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் வடசென்னைக்காரன் - பாக்கியம் சங்கர், புத்தகப் பார்வை

இந்த உலகத்தில் எல்லா உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் நம்மைச் சுற்றி உள்ள சமூகம் மட்டும் நமக்குக் கற்றுத் தர முடியாது.நாம் தெரிந்துகொள்ளாத, தெரிய விருப்பப்படாத மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் மறுபக்கத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர்.

வடசென்னையென்றாலே வாடை அடிக்கும் சென்னை என்று மூக்கைமூடும் மனிதர்களையும் அந்தமண்ணின் மணத்தை நுகரச்செய்திருக்கிறார். வடசென்னையைப் பற்றி அறியாதவர்கள் இப்புத்தகத்தைப் படிக்கும் பொழுது அங்கு வசிப்பவர்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம் அவர்கள் மனதில் நிச்சயமாய்ப்பதியும்.

பிணம் அறுக்கும் ஆரோக்கியதாஸ், விலைமாதராய் உடல் ஒத்தாசை செய்யும் இல்லாமல்லி, கல்யாணி  , கட்டணக் கழிப்பறைகளை வரும் வருமானத்தைக் கொண்டு தன் அன்றாட வாழ்க்கையை நடத்தும் ருக்கையா , கானா பாடல் பாடும் ஜிகான், எம்.ஜி.ஆர் ஆகத்தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் மறுபிறவி, பிணம் எரிக்கும் கலியன், அவன் மகன் கோபி, வரையும் கலையைத்தன்னுள் புதைத்து போதைக்கு அடிமையான ஏவான் , பாசத்தைப்பொழியும் களஞ்சியம் மாமா என்று இப்படி நம்மனதில் இடம்பிடிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் ஏராளம்.

போதைக்கு அடிமையானவன், திருடன் என்று நம்மால் பழிக்கப்படும் மனிதனின் மறுபக்கம் நம் கண்களை குளமாக்குகின்றன.மனிதர்களில் இத்தனை வகையினர்களா என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன .

வாழ்வில் இணையாத காதலர்களுக்கு நடுவே இருக்கும் காதல் 
உணர்வை உணரும் பொழுது காதல் தெய்வீகமானது என்ற கூற்றை மறுக்க முடியவில்லை.நம் வாழ்வில் நிச்சயமாக நம் கண்முன்னே ஒரு அக்காவும், அண்ணணும் காதலித்திருப்பார்கள். நாமும் இனிப்புகளுக்காக அவர்களுக்கு காதல் தூது போயிருப்போம்.காதல் உணர்வுகள் நிரம்பி வழிந்து காதலிக்காதவர்களையும் காதலிக்கத்தூண்டும் உண்மைச்சம்பவங்கள் ஏராளமாய் புத்தகத்தில் விரவிக்கிடக்கின்றன.

வடசென்னைக்கு என்ற பிரத்யேகமான வாழ்க்கைமுறையை பொக்னாச் சோறு போன்ற உணவுகள் எளிதாய் விளக்குகின்றன.கவிஞனுக்குக் கோபம் வரக்கூடாது என்று நகைச்சுவையுடன் யதார்த்தங்களை புரிய வைப்பது அருமை.
ஒரு எழுத்தாளனாய் வாசகர்களை சிரிக்க, சிந்திக்க, மற்ற மனிதரை மதிக்க வைக்கும் திறமை பெற்று வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ஆசிரியர்க்கு மனமார்ந்த நன்றிகள்.



இவ்வுலகத்தில் தனது நல்ல குணங்களை மட்டும் காட்சிப் படுத்தி நல்லவனாக பெயரெடுக்கவே அனைவரும் விரும்புவார்கள். அவர்களில் வேறுபட்டு  நான் இப்படித்தான் என்று தன் சுயத்தை எந்த ஒரு பீடிகையுமில்லாமல் கூறிய ஆசிரியர் வியக்க வைக்கிறார்.

கோடிரூபாய் கொடுத்தாலும் நாம் செய்யத்துணியாத வேலைகளை நமக்காக செய்யும் எளிமையான மனிதர்களுடன் பழகி அவர்கள் வாழ்க்கையை விளக்கி , இனிமேல் அத்தகைய மனிதர்களைக்கண்டால் முகம் சுளிக்காமல் சிநேகப்பார்வைப் பார்க்க வைத்த ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.