“உலகிலேயே மிகப்பெரிய
பிரம்மாண்டமான பேரங்காடிக்குக் கூட்டிச்செல்கிறேன்! கால் வலிக்கிறது என்று
கதறக்கூடாது!” என்று எச்சரித்தபின் எங்களைத் துபாய் பேரங்காடிக்குக் கூட்டிச்
சென்றார் கணவர். அலுவலக நிமித்தமாக சிலநாட்கள் துபாய் வந்திருந்த கல்லூரித் தோழி செல்வமீனா,
என் பெற்றோர், அத்தை, கணவரின் பெற்றோர் என பலபேரை பலதடவை மெட்ரோ இரயில் வழி
பிரசித்தி பெற்ற பேரங்காடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம்.
துபாய் பேரங்காடி, 2717
அடி கொண்ட உலகத்திலேயே உயர்ந்த கட்டிடமான புர்ஜ்கலிஃபா ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்வதற்கான
மிகச்சுலபமான போக்குவரத்து வழி மெட்ரோ இரயில் பாதைதான்.
துபாய் பேரங்காடி/புர்ஜ்கலிஃபா
என்று சிவப்பு வழிப்பாதையில் அமைந்திருந்த மெட்ரோ இரயில் நிறுத்தத்தில் இருந்து
துபாய் பேரங்காடிக்குச் செல்ல குளிரூட்டப்பட்ட மூடு நடைபாதையை அமைத்திருந்தார்கள்.
அந்த நடைபாதையில் கூட நாம் முழுதூரம் நடக்கத்தேவையில்லை. பேரங்காடிக்கு உள்ளே
நடக்க நமக்கு தெம்புவேண்டும் என்பதற்காகவே தரையில் இயங்கும் படிக்கட்டு (Walking escalator) பதித்திருந்தினர்.
நாம் அதில் ஏறி நின்றாலே
போதும் குறிப்பட்ட தூரத்திற்கு அதுவே நம்மை கொண்டு சேர்த்துவிடும். அவசரமாக செல்ல
நினைப்பவர்கள் அதிலும் ஏறி ஓட்டுமும் நடையுமாய்ச் செல்வார்கள்.
மாற்று பாதையாக மெட்ரோ
இரயில் நிருத்தத்தின் கீழ்தளத்தில் இருந்து பேருந்து வழியாகவும் மக்களை ஏற்றிக்
கொண்டு பேரங்காடிக்குக்கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பேரங்காடிக்குச்
செல்வதற்கான மூடுநடைபாதை வழியே நடக்கும் போது வானுயர வெள்ளியானால் ஆன கட்டிடம்
சூர்யஒளியில் ஜொலிஜொலிப்பது போன்ற புர்ஜ்கலிஃபாவை அனைவருமே அங்கிருக்கும் பெரியக்
கண்னாடிச் சாளரங்கள் வழியே கழுத்து வலித்தாலும் நிமிர்ந்து பார்ப்பார்கள்.
ஒளிப்படம் எடுத்துக் கொள்வார்கள். மூடுநடைபாதையில் வழி நெடுகிலும் ஒளி டையோடுகளால்
உருவாக்கப் பட்டிருந்த பல தொலைக்காட்சியில் (LED) பேரங்காடிக்கு வெளியே நடைபெறும் பிரசித்தி பெற்ற ஒலி ஒளியுடன் நடைபெறும் நீருற்று
நிகழ்ச்சி , பேரங்காடியின் சிறப்பை விளக்கும் காட்சிகளை ஆர்வமூட்டும் வகையில் விளம்பரப்படமாக
ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
பேரங்காடியின்
நுழைவுவாயிலில், ஒவ்வொரு கடையிலிருந்தும் தங்கள் கடைகளில் மக்கள் சிற்றிடை உணவு
உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறுசிறு கிண்ணங்களில் தங்கள்
கடைகளின் பிரசித்திப் பெற்ற உணவுகளைச் சுமந்தபடி பணியாளர்கள், மக்கள் எடுத்துச்
சுவைப்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். இலவசம் என்பதால் நாம் எடுத்துச்
சுவைத்திவிட்டுச் சென்றாலும் ஏதும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அக்கடையில் உணவு
ஏதேனும் வாங்காமல் மாதிரி உணவைச் சுவைக்க அனைவரும் ஒருவிதக்கூச்சம் கொள்வார்கள்.
நுழைவுவாயிலின் ஓரத்தில்
ஓர் கடையில் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களான சீப்பு, குடை
போன்றவற்றையும் அழகுடன் இரசிக்க வைக்கும்படி பொம்மை முகங்களுடன் மனதைக்கவரும்
வண்ணம் படைத்திருந்தார்கள். மிகப்பெரிய பேரங்காடியென்பதால் மக்கள் ஆங்காங்கே
அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்று விதவிதமான நீள் சாய்வு
இருக்கைப் பலகைகளையும், உயர்தர ஆடம்பர மெத்தை வைத்த ஆசனங்களையும் பல இடங்களில்
அமைத்திருந்தார்கள்.
மிகப்பெரிய பேரங்காடியில்
தொலைந்துவிட்டாலோ அல்ல சில குறிப்பட்ட இடங்களுக்குச் செல்லவேண்டுமென்று நினைத்தாலோ
ஆங்காங்கே இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ , வழிப்பலகைகள் வழியாகவோ வழியைத்
தெரிந்து கொண்டு செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றிடலாம்.
(yoghurt land) யோகர்ட்லேண்ட் எனப்படும் ஒருகடையில் விதவிதமான பழச்சுவையையும் நறுமணத்தையும்
கொண்ட தயிரை விற்பனைசெய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் அது பார்ப்பதற்கோ, சுவைப்பதற்கோ தயிர் போன்றல்லாமல் ஒருவிதமான புளிப்பு குளிர்பாலேடு
(ice cream) போல் இருந்தது. விருப்பப்பட்ட
வகைவகையான தயிர்களை ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்துக்கொண்டு அதைவிதவிதமாக திராட்சை,
முந்திரி போன்றவற்றினால் மேல்புறத்தில் அலங்கரிக்க, அதன் எடையைப் பொருத்து பணம்
பெற்றுக் கொண்டார்கள்.
கொடுத்த பணத்தை இந்திய
மதிப்பிற்கு நாங்கள் கணக்கிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு
வாடிக்கையாளர் ஒரு வாய் ருசித்துவிட்டு அவரது கிண்ணம் முழுதும் நிரம்பியிருந்த வண்ணவண்ணமான
தயிரைக் குப்பைத்தொட்டியில் போட அதைப்பார்த்த நானும் என் தமிழ்ச்செல்வி அத்தையும்
கண்களாலேயே அதிர்ச்சி அலைகளைப் பரிமாறிக் கொண்டோம்.
உலகிலேயே பேரங்காடியினுள்ளே
அமைந்திருக்கும் பெரிய நீர்வாழ்காட்சி சாலையைப் பார்த்தபின் எல்லோருமே மலைத்துத்
தான் போயிருந்தோம். பிரமாண்டமான நீர்வாழ்காட்சிசாலைக்கு நடுவே ஒரு குகைப் பாதையை
அமைத்து சுமார் நூறு திராம்கள் கட்டணம் வசூலித்து மக்களை உள்ளே
அனுமதித்திருந்தார்கள். குகைப் பாதை வழியே சென்றவர்கள் அனுபவம் பிரமாதம் என்று
கூறினாலும், எங்களுக்கு நீர்வாழ்காட்சிசாலையைச் சுற்றியிருந்த கண்ணாடி வழியும், அருகிலிருந்த
படிக்கட்டில் ஏறி முதல் தளத்தில் உள்ள கண்ணாடிக் கூண்டின் வழியே அனைத்து வகையான
மீன்களையும் பார்த்ததே நீர்வாழ்காட்சிசாலையை (aquarium) முழுதாய்ப் பார்த்த மனநிறைவைத் தந்தது.
நீர்வாழ்காட்சிசாலையின்
கண்ணாடியைத் தொட்டுத்தட்டிப் பார்த்துவிட்டு “கண்ணாடி வலிமையானதா? கீரல்
விழுந்துவிட்டால் என்ன செய்வது?“ என மாரீஸ்வரி அத்தை மிரட்சியுடன்
கேட்டார்.ஏற்கனவே ஒரு முறை இப்படி தண்ணீர் கசிந்தது அதனை உடனே நிர்வாகத்தினர்
கடைக்காரர்களை வெளியேற்றிவிட்டு சரிசெய்துவிட்டனர் என்று நான் கூற அத்தை கண்ணில்
ஒரு பயம் தெரிந்தது.
கட்டணத்திற்கு ஏற்றார்
போல் நீர்வாழ்காட்சிசாலையில் கண்ணாடி அடிப்பாகத்தின் வழி மீன்கள், உயிரினங்களைப் பார்வையிடுவது கொண்ட
படகுச்சவாரி (glass bottom ride)
ஆழ்கடல் நீச்சல்(scuba diving), ஒரு
கூண்டின் வழி உயிரினங்களுக்கு உணவு வழங்குவது போல பல சாகசங்கள் புரிய வாய்ப்பளித்திருந்தனர்.
குழந்தைகள்,
மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் படி கடல் உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு
அவற்றைப் பாதுகாக்கும் எண்ணத்தை மனதில் விதைக்கும் வகையில் நீருக்கடியில் பூங்கா (underwater zoo) அமைத்திருந்தனர். கட்டணத்தின்படி மக்களை நீருக்கடியில்
இருந்த பூங்காவிலிருக்கும் முதலை,பெரிய நண்டுகள், பனிப்பாடி எனப்படும் பென்குவின்
(penguin), தண்ணீரில் வசிக்கும் எலிகள், ஆபத்தான மீன்கள், கடல்
குதிரைகள், நுங்குமீன் (மெதுசா) எனப்படும் ஜெல்லி மீன்(jelly fish) போன்றவற்றைப் பார்வையிட அனுமதித்தார்கள்.
நீருக்கடியில்
அமைந்திருந்த பூங்காவிலுள்ள மிக நீளமான முதலையைப்
போன்ற மாதிரி சிலையை நீர்வாழ்காட்சிசாலை அருகே உண்மையான முதலை போன்று தத்ரூபமாக அமைத்திருந்தனர்.
பேரங்காடிக்கு வெளியே
நடைபெறும் பிரசித்தி பெற்ற ஒலி ஒளியுடன் நடைபெறும் நீருற்று நிகழ்ச்சியைக் காணச் சரியான
இடத்தைக் கண்டுபிடித்துத் தயாராய் உட்கார்ந்து இருந்தோம். நீருற்று நிகழ்ச்சி
நடைபெறும் இடத்திலிருந்து எல்லோரையும் தன் கம்பீரத்தால் சிறைக்குள் அடைத்திருந்த
புர்ஜ்கலிஃபாவை எங்கள் ஒளிப்படங்களுக்குள் சிறைபிடித்துக் கொண்டோம். நீருற்று
நிகழ்ச்சியுடன் ஒலிபரப்பப்பட்ட இசை உலகத்தர இசையாய் இருந்தாலும் இசையமைப்பாளர்
ஏ.ஆர் ரஹ்மானின் மனதை வருடும் இசை போலவே எனக்குத் தோன்றியது.
ஒவ்வொரு அரைமணி
நேரத்திற்கு ஒரு முறை வெவ்வேறு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்றாற்போல் எண்ணற்ற
நீருற்றுக்கள் வளைந்து நெளிந்து ஆட்டமாடி எல்லோர் மனங்களையும் வசியப்படுத்தியது. ஒலிபரப்பப்படும்
பாடல் உச்சஸ்தாயியைத் தொட நீருற்றுக்களும்
விண்ணைத் தொடுவது போல் வானைநோக்கிப் பீறிட்டன.
நீருற்று நிகழ்ச்சியைப் பார்த்து
முடித்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தி ஏற்பட்டாலும் அடுத்த நீருற்று
நிகழ்ச்சியை அரைமணி நேர இடைவேளையில் திரும்பவும் பார்க்க பலர் ஆயத்தமானார்கள்.
கம்பீரமான புர்ஜ்கலிபாவின்
மேல் ஒளி,ஒளிமி (laser) வழி
விதவிதமான பூ மற்றும் வடிவங்களை விசேஷ காலங்களில் ஒளிபரப்பினர். சில நாடுகளுடனான
நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் மற்ற நாடுகளின் சுதந்திர தினம் அல்ல குடியரசு
தினத்தை முன்னிட்டு அந்த நாட்டுக்கொடிகளை வண்ணங்களாய் புர்ஜ்கலிபாவின்மேல் படரவிட்டு
நட்பு பாராட்டினர்.
பேரங்காடிக்குள் உலகிலேயே
மிகப்பெரிய மிட்டாய் கடையான கேண்டி ஸ்டோரில் (candy
store) பணியாளர்கள் செய்யும் மிட்டாய்களை கண்கொட்டாமல் பார்த்து
கொண்டிருந்தோம். மேஷ்மலோஷ் (mashmallows) எனப்படும் குழந்தைகள்
விரும்பிச் சாப்பிடும் பஞ்சு போன்ற பலவண்ண மிட்டாயில் பெரும்பாலும்
மாட்டிறைச்சியின் பசை(beef gelatin ) கலந்திருப்பாக
மிட்டாய்களின் உறையிலேயே குறிப்பிடப் பட்டிருந்ததால் மீன்இறைச்சிப் பசை(fish
gelatin) கலந்துள்ள மேஷ்மலோஷ் மிட்டாய்களைக் கணவர் தேர்ந்தெடுக்கலானார்.
பல வண்ணங்களில் பல வடிவமைப்புகளில் இருந்த மிட்டாய்களைச் சுவைக்க சிறுவர்கள் மனம்
மட்டுமல்லாது பெரியவர்கள் மனமும் கண்டிப்பாக ஏங்கும்.
பேரங்காடியினுள் குழந்தைகள்
முதல் பெரியோர் வரை சாகசங்களுடன் விளையாடுவதற்கு பனிச்சறுக்கு மைதானம்
அமைத்திருந்தார்கள். “உள்ளம் கொள்ளைபோகுதடா” என்றொரு மொழிபெயர்கப்பட்ட தொலைக்காட்சித்
தொடரில் இந்த குளிரூட்டப்பட்ட பனிச்சறுக்கு அரங்கில் தான் கதாநாயகி அமர்ந்து தன்
குழந்தை பனிச்சறுக்கு விளையாடுவதை இரசிப்பாள் என்று மாரீஸ்வரி அத்தை உற்சாகம்
பொங்கக் கூறினார்கள்.
அருவி போல எண்ணற்ற சிறுதுளைகளில்
வழி தண்ணீர் வழிய ஏற்பாடு செய்து அதில் பல மனித உருவங்கள் குதித்து நீந்துவது போல
சிலைகள் செய்து வைத்திருந்தார்கள்.
“உலகத்திலேயே 828 மீட்டர் உயர்ந்த கட்டிடமான
புர்ஜ் கலிஃபாவிற்கு செல்வதற்கு ஆசையாக இருக்கிறதா?” என்று என் பெற்றோரிடமும்,
மாரீஸ்வரி அத்தையிடமும் கேட்க அம்மாவும், அத்தையும் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு
விமானத்தில் இருந்தே துபாயின் அழகை இரசித்துவிட்டோம் என்றார்கள்.
அப்பாவோ “இவ்வளவு தூரம்
வந்து பெருமைவாய்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடத்தைப் பார்க்காமல் செல்வதா?” என்று தன்
ஆசையை வெளிப்படுத்த புர்ஜ்கலிஃபாவில் பணிபுரியும் ஒரு தெரிந்த நண்பரின் உதவியுடன்
சில சலுகையுடன் 105 திராம்களுக்கு தனிநபர் நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டோம்.
காலை மற்றும் இரவு
வேளைகளில் புர்ஜ்கலிஃபாவிற்குச் சென்று வெளியுலக
அழகை இரசிக்க 130 திராம்களென்றும், மாலை வேளையென்றால் காலை, இரவு என்ற
இருவேளையிலும் துபாயின் எழில், புர்ஜ்கலிஃபாவிலிருந்து நீருற்று நிகழ்ச்சி, சூரியன்
மறையும் அழகு போன்ற பல விஷயங்களைப் பார்க்க வாய்ப்புள்ளது என்பதால் 180
திராம்களென்றும் கேள்விப்பட்டிருந்தோம்.
புத்தாண்டுக்
கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகப் பிரசித்து பெற்ற வண்ண பட்டாசு வேடிக்கையை வானில்
ஏற்படுத்தாமல் வித்தியாசமாக புர்ஜ்கலிஃபாவைச் சுற்றி ஏற்பாடு செய்வார்கள். இந்த கட்டிடத்தைச் சுற்றி வண்ண பட்டாசு
வேடிக்கையை ஒவ்வொரு வருடமும் நடத்துவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னேயே ஏற்பாடு
செய்வார்கள் என்று கேள்விபடும் அனைவருமே ஆச்சர்யபடுவார்கள். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுக்
கொண்டாட்டத்தைக் முன்னிட்டு இந்த வண்ண பட்டாசு வேடிக்கையைப் பார்வையிட
லட்சக்கணக்கானோர் திரண்டு வருவார்கள்.
2016 புத்தாண்டுக்கான பட்டாசு நிகழ்ச்சியைக் காண
கணவரும், தமிழ்செல்வி அத்தையும் சென்றிருந்த பொழுது தான் புர்ஜ்கலிஃபாவிற்கு அருகே
இருந்த நட்சத்திர தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசு நிகழ்ச்சி
நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்த வேளையில் புர்ஜ்கலிஃபாவில் நடைபெற்ற பட்டாசு
நிகழ்ச்சியைப் பார்த்தபின்னரே கணவரும், அத்தையும் வீடு திரும்பினர்.
எங்களுக்குக் காலை 11.00
மணிக்கு புர்ஜ்கலிஃபாவிற்குச் செல்ல அனுமதி கிடைத்திருந்ததால், காலை வேளை
பரபரப்புடன் ஓடும் மெட்ரோ இரயிலில் மக்கள் கூட்டத்திலிருந்து எங்களை விடுவித்துக்
கொண்டு ஓட்டமும் நடையுமாக துபாய் பேரங்காடி வழியாக புர்ஜ்கலிஃபாவிற்கு உள்ளே செல்லும் வாயிற்கதவு (at the top@burj khalifa) அருகே சென்றோம்.
பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து, வழியில் அமைந்திருந்த மாதிரி புர்ஜ்கலிஃபாவிற்கு
அருகே ஒளிப்படம் எடுத்துக் கொண்டு, 124 வது மாடியை அடையக் கூடிய மின்தூக்கியை (lift) நோக்கி ஆர்வத்துடன்
நடக்கலானோம்.
துபாய் அரசுக்கு
பொருளுதவி செய்த அபுதாபி அரசரை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரைச் சூட்டி புர்ஜ்
துபாய் புர்ஜ் கலிஃபாவாக மாறிய நிகழ்ச்சியைப் பெற்றோருக்கு விளக்கினேன்.
வழிநெடுகில் அந்த மிகப்பெரிய
கட்டிடத்தை எவ்வாறு கட்டினார்கள், எந்தெந்த வருடம் எத்தகைய உயரத்தை அடைந்தது, அதன்
அடித்தளமான Y வடிவமைப்பு போன்றவற்றை
காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
போகும்வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நின்று பார்த்தோமானால்
புர்ஜ்கலிஃபாவில் எத்தனையாவது மாடிக்குச்
செல்கிறோம் என்பதைப் பார்க்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.
வழிநெடுகிலும்
பாதுகாவலர்கள் விரைப்பாக நன்றாக உடையணிந்து நம்மை சிரித்தமுகத்துடன் வரவேற்று
சிறப்பாக வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.
கட்டிடத்தில் 124வது மாடியை 1
நிமிடத்திற்கும் குறைவாக 58 நொடியில் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இயங்கும்ஏணி(lift) எங்களை
ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மின்தூக்கியிலும் அந்த 58 நொடியும் அலுக்காமல் இருக்க
அங்கும் ஒலிஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அப்பா ”மொத்தம் எத்தனை மாடிகள்?”
என்று ஆர்வமாய் வினவ மொத்தம் 163 மாடிகள் இருந்தாலும் 154 மாடிகள் மட்டுமே
உபயோகத்தில் இருக்கின்றன. 9 மாடிகள் பராமரிப்பு காரணத்திற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது என்று விளக்கினேன்.
124, 125வது மாடிகளில்
இருந்து கண்ணாடிகளால் மூடப்பட்ட முகப்புகளின் வழியே பார்த்த பொழுது சாலைகளில்
போகும் வண்டிகள் அனைத்துமே குழந்தைகள் விளையாடும் பொம்மை வண்டியைப் போலவே காட்சி
அளித்தன. அங்கே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வழி பல வருடங்களுக்கு
முன், இரவில் என்பது போன்ற பலகாலநிலைகளில் துபாயின் வளர்ச்சியையும், அழகையும்
கண்டுகளிக்க ஏற்றவாறு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
10திராம்கள் கொடுத்தால் புர்ஜ்கலிஃபாவின்
உருவத்தைப் பதித்த நினைவுசின்னங்கள் நமக்குக் கையில் கிடைக்கும்படி தரும்
இயந்திரத்தை நிறுவியிருந்தார்கள். அது மட்டுமல்லாது புர்ஜ்கலிஃபாவின் உருவம்
பதித்த குவளைகள், சட்டைகள் போன்ற பல பொருட்களை ஞாபகச் சின்னமாக
விற்றுக்கொண்டிருந்தார்கள்.
இப்பெருமைவாய்ந்த
கட்டிடத்தில் அலுவலகங்கள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்களென
அனைத்துமே அமைந்திருந்தன.
சாலைகளில் கழுத்துவலிக்க
தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்த கட்டிடங்களை தலை குனிந்து தேடிப் பார்ப்பது
வித்தியாசமாய் இருந்தது. துபாயில் ஒரு கட்டிடம் மற்றொரு கட்டிடம்போல் இல்லாமல்
தனித்தன்மையுடன் காட்சிதர அவைகளை கட்ட உதவிபுரிந்த அனைத்து நாட்டைச் சேர்ந்த கட்டடப்
பொறியாளர்களையும், கட்டிடப் பணியாளர்களையும் எண்ணி வியந்தோம்.
திரும்பி வருகையில்
பெருமை வாய்ந்த புர்ஜ்கலிஃபா தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அந்த
கட்டிடத்தின் வளர்ச்சிக்கு உழைத்த அனைத்து துறையைச் சேர்ந்த மக்களும் தங்கள் அனுபவத்தைப்
பகிர்ந்த கானொளியை சொகுசான மெத்தை இருக்கையில் அமர்ந்து காண நேர்ந்தது. அதில் புர்ஜ்கலிஃபாவின்
கண்ணாடிகளை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளி நேர்காள்ளும் ஆபத்துகளைக் கண்டு
நடுங்கிவிட்டோம்.கின்னஸ் சாதனைகளில் இடம்பெற்றிருந்த கட்டடத்தை நாமும் சென்று
பார்வையிட்டோம் என்ற பெருமையுடன் வீடு திரும்பினோம்.
Makes me feel like visit this place once in a life time!!☺
ReplyDeleteThanks for the comments dear
Deleteஅருமையான சுற்றுலா இடங்கள்
ReplyDeleteபகிர்ந்த தங்கள் கைவண்ணத்திற்குப் பாராட்டுகள்!
மனமார்ந்த நன்றி
Delete