புதிதாய் துபாய் வந்திருந்த
பொழுதே, சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை இணையத்தில் மேய ஆரம்பித்திருந்தேன். ஓங்கிலும்(dolphin), நீர்நாயும்(seal) பங்குகொண்டு நம்மை இரசிக்க
வைக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று கேள்விப்பட்டிருந்ததில் இருந்து
கணவரைக் கூட்டிச்செல்லுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தேன்.
குழந்தை சற்று பெரியதாகட்டும், உறவினர்கள் யாரேனும்
சுற்றுலாவிற்கு வருகைத் தரும் வேளையில் அவர்களுடன் செல்லலாம் என்று கணவர் பல
காரணங்கள் கூறியும் கேட்காமல் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தேன். மத்தியகிழக்கு நாடுகளிலேயே ஆரம்பிக்கப்பட்ட முதல் உட்புற குளிரூட்டபட்ட
ஓங்கில்நீர்நாய்க்காட்சிசாலைக்கு செல்ல யாருக்குத்தான் ஆசைஇருக்காது?
என் தொல்லை தாங்க முடியாமல்
கணவர், நண்பர் பாஸ்கர் அவர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டைவழி நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு செய்து
பெற்றுக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட
வங்கி அட்டைவழி முன்பதிவு செய்யும் பொழுது அது சில பரிசுகளுக்கோ , சிக்கனத்திற்கோ வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்.
திங்கள் மற்றும் வெள்ளி காலை
11மணி காட்சிகள் என்றால் 70 திராம்களுக்கு நுழைவுச் சீட்டைப்
பெற்றுக் கொள்ளலாம். அதுவே மற்ற நாட்கள் என்றால் 100 திராம்கள்
செலவழிக்க வேண்டியிருக்கும். கேரிபோர் (Carrefour) எனும்
பிரசித்தி பெற்ற பலபொருள் அங்காடியில் பொருள்கள் வாங்கியிருந்தோமானால் அந்த
இரசீதின் பின்பக்கத்தில் ௐங்கில் நீர்காட்சிசாலையின் சலுகை விளம்பரத்தை உபயோகப்படுத்தி
எந்த நாட்களிலும்
செல்வதற்கான 75 திராம்கான நுழைவுச்சீட்டை பெற இயலும்.
முதன் முதலில், சமீபத்தில் துபாய் வந்திருந்த சுஜி-சதீஷ் தம்பதியனருடன் கிரீக்
பூங்காவிற்கு( creek ) பயணப்பட்டோம். கடற்கழி எனப்படும் சிற்றோடை அமைந்திருந்ததால் அப்பூங்கா
அப்பெயர்பெற்றிருந்தது. அப்பூங்காவில் தான் ௐங்கில் நீர்காட்சிசாலையும், வண்ண
வண்ணப் பறவைகளின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
வாடகை வண்டியில் அப்பூங்காவிற்குச் செல்வதே மிகச்சிறந்த போக்குவரத்து
வழியாகும்.சுஜி-சதீஷ் தம்பதியனர், பெற்றோர், அத்தை-மாமா, அத்தை மகன் இராம்-உமா
தம்பதியனருடன் என்று நான்கு தடவை ௐங்கில் நீர்காட்சிசாலைக்கு சென்றிருந்தாலும்,
ௐங்கிலும் நீர்நாயும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சாகசங்கள் செய்து ஆச்சர்யமூட்டின.
இரு
வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுக்கும் 70 திராம்களுக்கு நுழைவுச்சீட்டு
வாங்கவேண்டும். என் குழந்தையின் இரண்டாம் பிறந்தநாளுக்கு முந்திய தினம்
சென்றிருந்த பொழுது பாதுகாவலப் பெண்மணி , உயரமான என் குழந்தையின் வயதைக் கேட்க
நான் ஒன்றரைவயது என்று அடித்துவிட , வயதை நிரூபிக்கும் வகையில் தற்காலிக அமீரகக் குடியுரிமை
அட்டையைக் கேட்டார். அட்டையைப் பார்த்து விட்டு ஒன்றரைவயது அல்ல இரண்டு என்று
முறைத்து விட்டு உள்ளே அனுப்பினார். பிறந்தநாள் அன்று என்றால்கூட நுழைவுச்சீட்டு
எடுக்க வைத்திருப்பார்.
திங்கள்கிழமை தள்ளுபடி விலை
என்பதனால் 1250 பேர் அமர்ந்து இரசிக்கக்கூடிய ஓங்கில் நீர்காட்சிசாலை அரங்கத்தினுள்ளே பள்ளி சிறுவர் சிறுமியர் கூட்டம் நிரம்பியிருந்தது.
நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்த நேரம் முதல் அரங்கில் உற்சாகக்குரல்கள் ஓங்கியிருந்தது.
விருப்பமானவர்களுக்கு சில திராம்களை கட்டணமாகப் பெற்று சில எண் பதித்த பந்துக்களை
அரங்கத்தில் கட்டணம் செலுத்தியவர்களிடம் கொடுத்திருந்தார்கள். அனைவரும் ஒரே நேரத்தில்
பந்தை தண்ணீருக்குள் எறிய ௐங்கில் எடுத்துத்தரும் பந்தின் உரிமையாளருக்கு நிர்வாகத்தினர் பரிசு
கொடுத்தனர்.
பள்ளிச் சிறுவர் சிறுமியரின்
உற்சாகம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நமக்கும் கடத்தப்படும். ஓங்கில்களும் நீர்நாய்களும் செய்யும் சேட்டைகளைக் கண்டு பெரியவர்களும் குழந்தைகளாவது நிச்சயம்.
பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்
தங்கள் ஆசிரியரிடம் பணம் கொடுத்து அரங்கத்தினுள்ளே விற்றுக்கொண்டிருந்த திண்பண்டங்கள் வாங்கித்தரச்
சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்
ஓங்கில்கள் ஆடி, பாடி,
சாகசங்கள் பல செய்து மக்களின் மனதில் நண்பனாய் இடம் பிடித்திருந்தது.
பயிற்சியாளருக்கும் ௐங்கிலுக்கும்
இரகசிய மொழி உள்ளதை எல்லாராலும் உணர முடிந்தது. எதிர்பாராத உயரத்தை அசாத்தியமாகத்
தாவி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நீர்நாய்கள்
பந்துவைத்து விளையாடி, ஆடி ஒவ்வொரு சாகசம் முடித்த பின் அந்த ஆண்பயிற்சியாளரிடமிருந்து
பரிசாக தன் உணவை ஆர்வமாய் வாங்கிக்கொண்டது . அங்கிருந்த பெண்பயிற்சியாளரும் ஓங்கிலுக்குத் தேவையான உணவை தாய் தன் குழந்தைக்கு உணவைத் தயாராய்
வைத்திருப்பது போல் வைத்து ஒவ்வொரு சாகசம் முடித்த பின்னும் வழங்கினார்.
ஓங்கில்கள் வரைந்த புதுவகை
ஓவியங்கள் எவ்வளவு விலையாயினும் ஏலம் நடைபெற்று கண்சிமிட்டும் நேரத்திற்குள்
விற்றுத்தீர்ந்தன.கட்டணத்திற்கு ஏற்றார் போல் ஓங்கில்களைத் தொட்டுப்பார்த்து, கட்டிப்பிடித்து,
முத்தம் கொடுத்து ஒளிப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
ஓங்கில்களையும் நீர்நாய்களையும் அழகான பெயர்கொண்டு அழைத்து சாகசங்கள்
செய்யவைத்தனர். பெரிய பெரிய பந்துகள் வைத்து அரங்கத்திலுள்ள அனைத்து மக்களுடன் ஓங்கில்கள் விளையாடி வலுவலுப்பு பாதையெல்லாம் தண்ணீர் தெளித்து வைத்ததனால் கவனமாகப்
பார்த்து நடக்க வேண்டியதாயிற்று.
ஓங்கில்நீர்நாய்காட்சி சாலையில்
நிகழ்ச்சி காலை 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் நிறைவுபெற்றுவிட,
12.15க்கு உடனே பறவைக்கான நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும்
ஓங்கில்நீர்நாய்காட்சிசாலை நுழைவுச்சீட்டைக் காட்டினோமானால் பறவைகள்சாகச
நிகழ்ச்சிக்குப் பத்து திராம்கள் சலுகை செய்து 40 திராம்களுக்கு நுழைவுச்சீட்டு தருவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஒரே ஒருமுறை சுஜி-சதீஷ் தம்பதியனருடன் சென்றிருந்தோம். உள்ளே
நுழைந்தவுடனே எங்களனைவரையும் கையைநீட்டச் சொல்லி இயற்கைக்காட்சிகளின்
பின்புலத்தில் ஒளிப்படம் எடுத்தனர்.
எதுவும்
புரியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட எங்களுக்கு நிகழ்ச்சி முடிந்தபின் தான்
விஷயம் விளங்கியது. பெரியவர்களின் கைகளிலும் , குழந்தைகளின் தலையிலும் பறவைகள்
இருப்பது போல மாற்றிய ஒளிப்படத்தை இயற்கைக்காட்சியும் பறவைகளும் நிறைந்த மேலுறைக்குள்
வைத்துக் கொடுத்தார்கள். நல்ல நினைவுகளை சேமிப்பதற்காக சற்று விலை அதிகமென்றாலும் ஒளிப்படத்தை
வாங்கிக்கொண்டோம்.
ஒளிப்படம்
எடுத்துமுடிக்க எங்களை யாரோ அழைப்பதாய்க் கூறினார்கள். யாரும் தெரியாத ஊரில் யாரடா
நம்மை அழைக்கிறார்கள் என்று நினைத்து திரும்பிய போது எங்களை அழைத்தது ஷார்ஜாவில்
வசிக்கும் என் பள்ளிகால கணினி ஆசிரியைக் குடும்பத்தினர் தான். 13வருடம் கழித்து
என் பிரியமான ஆசிரியரை சந்தித்ததால் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அவர்களுடன்
சேர்ந்து பறவைகளின் சாகச நிகழ்ச்சிகளை இரசிக்கலானோம்.
விதவிதமான
அழகிய வண்ணவண்ண பறவைகள் அறிவுக் கூர்மையுடன் சாகசங்கள் செய்தது பிரமிப்பை
ஏற்படுத்தியது. பறவைகள் அதன் பயிற்சியாளருடன் பேசிக்கொண்டும், அவர்களது கட்டளைக்கு
கட்டுப்பட்டும் நம்பமுடியாத பல அற்புதங்களை அரங்கேற்றியது.
இதுவே எங்களுக்கு நம்ப
முடியாமல் இருக்க சிங்கப்பூரில் இதைவிட பிரமாதமாக இருந்தது என்று என் கணினி ஆசிரியைக் கூற அசந்துவிட்டோம். பறவைகள்
மிதிவண்டி ஓட்டியும், புதிர்களுக்கு சரியான விடையைக் கண்டுபிடித்தும் எங்கள் புருவங்களை
உயரச் செய்தன.
அரங்கத்தின்
வெளியே ஓங்கில் போன்று வேடமிட்ட கலைஞர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.
ஓங்கில் மற்றும் பலகடல்வாழ் உயிரனங்களைப் போன்று மிருதுவான பொம்மைகளும், ஓங்கில் நீர்நாய்கள்
படம்பதித்த சட்டைகளும், குவளைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கட்டணம்
செலுத்தினால், உள்ளே சென்று சரியான வழி தெரியாமல் மிகுந்த குழப்பத்துடன்
வழிகண்டுபிடித்து வரும்படி ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்திருந்தார்கள்.
பலமுறை
அங்கிருந்த விஞ்ஞான கூடத்தை பார்வையிட வேண்டுமென்ற ஆசை கடைசியில் அத்தைமகன்
இராம்-உமா தம்பதயினருடன் வந்த பொழுதுதான் நிறைவேறியது. மிகவும் தரமான அறிவியல்
கூடத்திற்கு 15 திராம்கள் கட்டணம் கூடுதலாகத் தெரியவில்லை. சிறுவர்கள்
மட்டுமல்லாது பெரியவர்களையும் இரசிக்க வைக்கும்படி எளிய வகையில் அறிவியல்
கூற்றுகளை ஆர்வமூட்டும் வகையில் எடுத்துரைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சலிப்பு
ஏற்படாமல் சுவாரசியமான வகையில் அமைந்திருந்த இயந்திரங்கள் இதயத்தில் இடம்பிடித்தது.
உலகத்தில் உள்ள புகழ்பெற்ற கட்டிடங்களை தொட்டு இயக்கினால் அதைப்பற்றிய முழு விவரங்களையும் ஆர்வமூட்டும் வகையில் தெரிந்து
கொள்ளுமாறு அமைந்த கருவி நெஞ்சில் நின்றது.
அங்கிருந்த உட்புற அரங்கம் சென்னையில் இருக்கும்
பிர்லா கோளரங்கத்தை நினைவுபடுத்துவது போல பிரபஞ்சம் தோன்றியது பற்றிய சுவையான
தகவல்களை ஆங்கிலத்தில் ஒலிஒளிவடிவில் ஒளிபரப்பியது.. 12.30க்கு ஆங்கிலத்தில் கோளரங்கத்தில் கோள்கள் பற்றிய காணொளியுடன்
விளக்கப்படம் ஒளிபரப்பப்படும்.ஒவ்வாரு கிழமையும் ஒவ்வாரு மணியளவில் ஒவ்வாரு
மொழியில் காணொளியுடன் விளக்கப்படம் ஒளிபரப்பப்படும் என்று
விளம்பரப்படுத்தியிருந்தனர்.
என் மாமா அத்தையுடன் வந்திருந்த
பொழுது ஓங்கில்நீர்நாய் காட்சிசாலை பார்த்தபின் கொண்டு வந்த புளியோதரையை
பூங்காவின் சிற்றோடை அருகே புல்தரையில் அமர்ந்து சாப்பிட்டபொழுது சுற்றுலாவில் கிடைக்கும்
இன்பத்தை முழுவதுமாகப் பெற்றோம். அதிலும் என் புளியோதரைக்கு மாமா அத்தை தந்த
பாராட்டில் சற்று மிதந்துதான் போயிருந்தேன்.
பூங்காவில் கட்டணம்
செலுத்தினால் குதிரை மற்றும் ஒட்டகச் சவாரி செய்ய வாய்ப்பளித்தனார்.சில நேரம்
நண்பர்கள் குடும்பத்துடன் காலை உணவுடன் வந்து குழந்தைகளை அவர்களுக்கான
விளையாட்டுத் திடலில் விளையாடவிட்டு விட்டு உணவு உண்டு கதைகள் பேசிப் பொழுதை
மகிழ்ச்சியாய்க் கழித்திருக்கிறோம். பெரும்பாலும் வார இறுதி விடுமுறை நாட்களில்
பூங்காக்கள் குறிப்பாகக் குளிர்காலங்களில் நிரம்பி வழிந்தோடும். கோடைகாலமென்றால் பேரங்காடிகளில் பொழுதைக்கழிக்கலாம்.
அழகாகப் பராமரிக்கப்பட்ட
பூங்காவிற்கு 5 திராம்கள் கட்டணம் அதிகமில்லை.அமீரகத்தில் வாழும் அனைத்து நாட்டுமக்களும்
குளிர்காலத்தில் தங்கள் வீட்டிலிருந்து பாய், தலையணை, சிறு கூடாரங்கள், தேநீர்
கொதிகெண்டி(kettle), பழங்கள், குளிர்பானங்கள் , மடக்கு
நாற்காலி, அசைவ உணவில் மசாலா தடவிய கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சி,மீன் , இறால் போன்றவற்றையும்
சைவ உணவில் மசாலா தடவிய பாலாடைக் கட்டியான பன்னீர் (paneer),
காளான், காய்கறி ஆகியவற்றை எடுத்து வந்துவிடுவார்கள்.
அருமையான காலநிலையில் கபாப் (kebab) எனப்படும் தந்தூரி வகைகள் போன்று மசாலா தடவப்பட்ட சைவ, அசைவ
உணவுகளை அடுப்பில் வாட்டிச் சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு பூங்காவில்
சாப்பிடுவதற்காக அடுப்பு, உணவு சமைப்பதற்கும் உண்பதற்கும் ஏற்றவாறு பூங்காவில்
வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. அடுப்பு மூட்டுவதற்கு தேவையான அடுப்பு,
அடுப்புக்கரி, அதைத் தூண்டுவதற்காக
தேவைப்படும் திரவம் போன்ற பல சாமான்களை பலபொருள் அங்காடியில் சரியான
விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலான மக்கள் சொந்த
வண்டியில் வரும்பொழுது தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அடைத்தவாறு
எடுத்து வந்துவிடுவார்கள். வாடகை வண்டியில் வருபவர்கள் முக்கியமான சாமான்களை
மட்டும் எடுத்து வருவார்கள். மக்கள் அனைவரும் தந்தூரி உணவு வகைகளை உண்டு, தேநீர்
அருந்தி, ஒலிபெருக்கியில் விருப்பமான பாடல்கள் கேட்டு, மனதின் கவலை தீர ஆட்டம் ஆடி
விடுமுறைகளை கொண்டாடுவது வழக்கம்.
பூங்காவில் தந்தூரி வகைகளைப்போன்று
உணவுகளை வாட்டும் பொழுது கிளம்பும் மணம் போவோர் வருவோரின் பசியை தூண்டிவிடும். என்
அப்பாவையும், மாமாவையும் பூங்காவில் அழைத்துவரும் பொழுது அவர்கள் இருவருமே “நாம்
கேட்டால் நமக்கு சுவைக்க ஏதேனும் இறைச்சித்துண்டு தருவார்களா என்று கேட்டு என்னை
அதிர்ச்சியுடன் சிரிக்கவும் வைத்தார்கள். எங்கள் நண்பர்கள் குழுவில் என் கணவர்
தந்தூரி வகைகளை சமைப்பதில் நளபாகன். அதனால் அவரது உதவியுடன் விருந்தினர்களுக்கு
வீட்டிலேயே விருந்துடன் தந்தூரி வகைகளும் சமைத்துக் கொடுத்தோம்.
பூங்காவில் அமைந்திருந்த சிறிய
உபநதியில்(creek)
பலவகையான மீன்களைப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில்
காணப்படும் மெல்போன் கோபுரத்தைப் போன்ற ஒரு மாதிரி கோபுரத்தை சிறிய உபநதியில்
காணலாம். தண்ணீரில் இறங்கிப் புறப்படும் சிறிய விமானத்தை அந்நீரோடையில் காண
நேர்ந்தது.
திருகுவிட்டம் (winch) உதவியுடன் அந்தரத்தில் ஒரு கூண்டின் வழியே அப்பெரும்
பூங்காவை பார்க்க வசதி செய்திருந்தார்கள். ஆனால் அந்த எந்திரம் பழுதாகியிருந்ததால்
எங்களால் அந்தப் பயணத்தை இரசிக்க முடியவில்லை அங்கு அமைந்திருந்த பலகைகளில்
அமர்ந்து பறவைகள், மீன்களைப் பார்ப்பதுடன் குளிர்காற்றை அனுபவிப்பது சுகமான ஒன்று.
பூங்காவிலிருந்து சிறிது தூரம்
வாடகைவண்டியில் சென்றோமானால் எகிப்திய கூர்ங்கோபுரம் போன்று காட்சியளிக்கும் வாஃபி
பேரங்காடியை அடைந்து விடலாம். கோடை காலங்களில் குளிரூட்டப்பட்ட புதுப்புது
பேரங்காடிகளை இரசித்தவண்ணம் பொழுதைக் கழிக்கலாம்.நண்பர்கள் குடும்பத்துடனும், மாமா
அத்தையை அழைத்துக் கொண்டு என்று இரண்டு தடவை இப்பேரங்காடிக்கு வந்திருக்கிறோம்.
முதல் தடவை வந்திருந்த பொழுது
இங்கு நடைபெறும் ஒலி,ஒளி,ஒளிமி கண்காட்சியைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. பின்பு
இணையத்தின் வழி குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட மணியளவில் கட்டணமில்லாமல்
கண்டுகளிக்கலாம் என்று தெரிந்து கொண்டோம். பிரம்மாண்ட எகிப்திய சிலைகள் மேல் வண்ண
வண்ண கண்கவர் காட்சிகள் நடத்தப்பட்டன.
பேரங்காடியுடன் ராபல்ஸ்
துபாயெனப்படும் ஐந்துநட்சத்திர விடுதியும் இணைந்திருந்தது. அங்கு அமைந்திருக்கும்
தங்கும் விடுதியின் அறையின் அளவு துபாயிலேயே பெரியது என்று தெரிந்து ஆச்சர்யம் கொண்டோம்.
பேரங்காடிக்குள் சென்று உட்கூர கூர்ங்கோபுரத்தை பார்த்தோமானால் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய எகிப்திய
ஓவியக்கலையைக் கண்டு வியக்கலாம். பல விதமான உலக இஸ்லாமிய கட்டிடத்தின் தாக்கம்
கொண்டு கண்ணாடி மேற்கூரையும் அங்காடியும் அமைக்கப்பட்டிருந்தது
பேரங்காடிக்குள்ளே நடந்து
செல்கையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கிடார்(guitar), வயலின்(violin) போன்ற நரம்பிசைக்கருவிகளை வாசிப்பது
போன்று பாவணை செய்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். கணவரும், அவரது நண்பர்களும்
நரம்பிசைக்கருவிகளை வாசிக்கையில் திரைப்பட நாயகர்கள் போன்று உடல்மொழி செய்து
தத்தமது மனைவியரிடம் காதல் சொல்வது போல நின்றார்கள்.
பிரபல பாடகி
ஆஷாபோன்ஸ்லேவிற்குச் சொந்தமான ஆஷாஸ் உணவகத்தைப் பார்த்த பொழுது அவர்களையே
பார்த்ததுபோன்று மகிழ்ச்சி அடைந்தோம். வாபி பேரங்காடிக்குப் பாத்தியப்பட்ட
குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பேரங்காடியில் அமைந்திருந்த ஆரோக்கிய
நீரூற்றுக்கு (spa) எண்ணற்ற அனுமதி
வழங்கியிருந்தார்கள். அழகி கிளியோப்பட்ராவின் பெயரில் அமைந்திருந்த ஆரோக்கிய
நீரூற்று (spa) எங்களைக் கவர்ந்தது.
கடந்த கால எகிப்திய
கட்டடக்கலையை நினைவூட்டும்படி
பேரங்காடியின் சுவர்கள் இளம்பழுப்பு (light brown) வண்ணத்தில் கட்டப்பட்டிருந்தன. பேரங்காடிக்கு அருகிலேயே
நிலப்பரப்பிற்கும் கீழே இருந்த சந்தை (souq) உண்மையாகவே
அரபிய பாரம்பர்யத்தை எடுத்துரைப்பதாக
அமைக்கப்பட்டிருந்தது.
ஒளிப்படங்கள்
எடுத்துக்கொள்வதற்கென்று பல அருமையான இடங்களும் உருவச்சிலைகளும் இருந்ததால்
தம்பதியனர்களாக, குடும்பங்களாக, நண்பர்களாக என எண்ணற்ற ஒளிப்படங்கள் எடுத்துக்
கொண்டு எகிப்து நாடு சென்றவந்தது போல ஆனந்தத்துடன் வீடு திரும்பினோம்.வாபி
பேரங்காடியைப் பார்த்தபின்பே நீங்களும் துபாயிலிருந்து திரும்புங்கள்....
வாவ்..வெகு அருமை...தமிழ் பெயர்கள் கண்டு பிடிக்க அபி.., முயற்சி செய்தது பாராட்டி ற்கு உரியது..
ReplyDeleteமிக்கநன்றி!
ReplyDelete