Sunday, July 5, 2020

ஏழு இராஜாக்களின்தேசம் - கவிப்பிரியன் ஜீவா வாசிப்பு அனுபவம்

ஜீன் 29 2020, அன்று புத்தகம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து பகிரப்பட்டிருக்கும் வாசிப்பு அனுபவம்❤️

நன்றி - கவிப்பிரியன் ஜீவா


ஏழு ராஜாக்களின் தேசம் - நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் எனக்கு அறிமுகம். இப்புத்தகத்தை வாசிக்கும்வரை அப்படிதான் நினைத்திருந்தேன். வளைகுடா நாடுகளுக்கும் எனக்குமான தொடர்பை நான் இங்கு சொல்லியாக வேண்டும். அப்பாவின் மறைவு, தங்கையின் கல்யாணதேவை, குடும்ப கடன்சுமை என கந்துவட்டிக்கு கடன்வாங்கி விமானம் ஏறி 6க்கு 3 கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்த சராசரி இளைஞர்களில் நானும் ஒருவன். சவுதி அரேபியாவில் 2 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. அங்கு நான் பார்த்து வியந்த அரபிகளின் வாழ்வியல் முறை, உடைகலாச்சாரம், உணவு கலாச்சாரம் அனைத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய திருமறைகளிலும், படங்கள் வழி பார்த்து படித்து வளர்ந்தவன் என்பதால் ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த புத்தகத்தில் அப்படியான அனைத்தையுமே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அமீரகத்தில் 3 மாதகாலம்தான் பணிபுரியும்படியான வாய்ப்பு கிடைத்தது. அங்கு வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்து பெயரும் அதைபற்றியும் தெரியாமலே வியந்து ரசித்தவன். அபிநயா அவர்கள் அவ்ஒவ்வொன்றின் பெயரையும், கடந்தகால வரலாற்றையும், கட்டிய தொழிற்நுட்பத்தையும் எழுதியிருப்பது பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த மூன்றுமாத காலங்களும் பானைக்குள் தலையை செலுத்திய பூனையைபோல்தான் இருந்திருக்கிறேன் என்பதை புரியவைத்து விட்டார். இரண்டு வருடங்கள் கணவரின் வேலை நிமித்தமாக அமீரகத்தில் இருந்ததாகவும் அந்த கால இடைவெளிக்குள் ஆராய்ந்து எழுதியதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை காரணம் இவ்வளவு அரிய தகவல்களை அந்நாட்டு பூர்வ குடிகளே அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏழு மாகாணங்களையும் அவற்றின் பெயர்காரணங்கள் கடந்த கால வரலாறு நிகழ்கால ஆட்சி எதிர்கால வளர்ச்சி என பார்த்து பார்த்து எழுத்துகளால் செதுக்கியிருக்கிறார். பண்டிகைகள், பாரம்பரிய நடனம், தொன்மையான விளையாட்டுக்கள் என பலவற்றையும் அலசி எழுத மெனக்கெட்டிருக்கிறார். பல எழுத்தாளர்கள் சொல்வது போல இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அட்டவணையில் துபாய் பஸ்ஸ்டாண்ட் என்று படித்ததும் வடிவேலு காமெடிதான் சட்டென்று ஞாபகம் வந்தது உள்ளேபோய் பார்த்தால் அவரும் அதையேதான் குறிப்பிட்டுள்ளார். அல்நூர் மசூதி, அல் எஸ்லா ஸ்கூல் மியூசியம்,மஹாட்டா மியூசியம், ரோலா பார்க், மரிடைம் மியூசியம், துபாய்மால், புர்ஜ் கலிபா என நீளுகிறது பட்டியல். மொத்த புத்தகத்தையும் பற்றி எழுதி முடிக்க வேண்டுமென்றால் விமர்சனத்திற்கென்று தனி புத்தகம்தான் எழுத வேண்டும்

ஏழுராஜாக்களின் தேசம்
பிரமிப்பின் உச்சம்

#ஏழுஇராஜாக்களின்தேசம்

No comments:

Post a Comment