Sunday, April 9, 2017

மொட்டை மலையின் காலில் வெந்நீருற்று

அபுதாபி, துபாய், அல்எய்ன் ( al ain) மூன்றுமே ஒரு முக்கோணமாக சரியான இடைவெளி தூரத்தில் அமைந்திருந்ததனால் ஒரு விடுமுறை நாளில் அபுதாபியில் அமைந்திருக்கும் அல்எய்னிற்கு விதவிதமான மதிய சாப்பாட்டை வீட்டிலிருந்து கட்டிக்கொண்டு நண்பர்கள் பட்டாளத்துடன் இரண்டு வண்டிகளில் உற்சாகத்துடன் கிளம்பினோம். மிக நீண்ட தூர பயணம் என்பதால் அலுப்பாக உணராத படி இருக்க ஒருவரை ஒருவர் வம்பு செய்து பயணக்களைப்பு தீண்டாத படி , கொண்டு வந்திருந்த திண்பண்டங்களைக் கொறித்துக் கொண்டு ஒட்டகப் பண்ணைகளை குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டே பயணப்பட்டோம்.



போகும் வழியில் வண்டிகளை ஒரு ஓரமாக நிறுத்தி வித்தியாசமான பாலைவன மண்பரப்பில் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள முற்பட எங்கள் குழந்தைகள் விளையாட்டு ஆர்வத்தில் மண்ணைத் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.மண் மிகவும் பொடியாக இருந்ததால் தாய்மார்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிட்டது.
அல்எய்ன் என்ற பெயரில் குடி தண்ணீர், பழச்சாறு, பால்   விற்கப்படுவதால் அந்தப் பெயர்  மக்களிடம் மிகவும் பிரபலமாகி இருந்தது. ஒரு முறை துபாயிலிருந்த பிரபல தமிழ் வானொலி நிலையம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் சில போட்டிகள் நடத்தி அதில் வென்ற சிறுவர் சிறுமியர்களை அல்எய்ன் பால் பண்ணைக்கு சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றது ஞாபகம் வர அத்தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இதைக் கேட்ட சுஜிசதீஷ் நாமும் சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று ஆர்வத்துடன் கேட்க அவரது நெருங்கிய நண்பனான இராஜி சதீஷ்" நீ வருகிறாய் என்றவுடன் கதவைத் திறந்து வாங்க வாங்க என்று வரவேற்பார்களா? " என்று கிண்டலாகக் கேட்டார்.அது போன்ற பால் பண்ணையைப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் பால்பண்ணை நிர்வாகத்திலிருந்து அதனை சுற்றிப் பார்ப்பதற்காக நாளிதழில் அவர்கள் வெளியிடும் அறிவிப்பைக் கொண்டு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விவரமாகக் கூறினார்.பணிநிமித்தமாக தான் அந்த பால் பண்ணையை ஏற்கனவே பார்த்ததை எங்களிடம் பகிர்ந்து கொண்டு எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தினார்.

அல்எய்ன் என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இரண்டாவது உயர்ந்த மலையான ஜெபல்  ஹஃபீத் எனப்படும் மொட்டை மலை. பெயருக்குக் கூட ஒரு புல்லைக் காண முடியாது. ஜெபல் என்றால் மலை என்ற பொருள் தருவதை இராசல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெயிஸ் மலையின் பெயரை ஒப்பிட்டு அரபி மொழி  தெரிந்தது போல நீங்களும் என்னைப்போலக் காட்டிக் கொள்ளலாம். அல்எய்னை அடைந்த பொழுது சரியாக மதிய நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் முதலில் சாப்பிடுவதற்காக மலை அடிவாரத்தில் அமைந்திருந்த சுற்றுலாதளத்தில் சாப்பாட்டுக் கடையை விரித்தோம்.


பக்கத்தில் ஒரு பெரிய குடும்பம் பழங்கள், பிரியாணி என்று பல வகையான உணவு, திண்பண்டம், குளிர்பானம், பழச்சாறு ஆகியவை அடுக்கி வைத்திருக்க ஆர்வக்கோளாறில் அதைநான் எட்டிப்பார்க்க இராஜியோ அவர்கள் உணவுப் பொருட்களை எல்லாம் வெறித்துப் பார்க்கக் கூடாது , அவர்கள் அதை இடைஞ்சலாகக் கருதினார்கள் என்றால் காவலர்களிடம் புகார் செய்துவிடுவார்கள் என்று அச்சமூட்டினார். அதே போல அந்த குடும்பத்தில் உள்ள சிறுமி ஒருத்தி என்னை முறைத்து பார்க்க சற்று பயந்துதான் போய்விட்டேன்.

பல குடும்பங்கள் வீட்டிலிருந்து உணவுகள் ,  நெருப்பில் சுட்டுச்சாப்பிட ( barbeque) அசைவ உணவுகளை எடுத்து வந்திருந்தாலும் , அங்கேயும் உலகப் பிரசித்தி பெற்ற உணவகங்கள் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவைப் பற்றிக் கவலை கொள்ளத்  தேவையில்லை.


இயற்கையிலேயே  அந்த மலை அடிவாரத்தில் வெந்நீரூற்று உற்பத்தி ஆவதைக் கண்டு அதிசயித்திருந்தோம். வாரவிடுமுறை என்பதால் ஏற்கனவே பல அரபு குடும்பங்கள் மட்டுமல்லாது பல பிலிப்பினோக்கள், சூடானியர்கள் கூட்டமாக வந்து உணவு உண்டு வெந்நீருற்று ஓடையில் குடும்பத்துடன் குதூகலமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட ஓடை முழுவதுமே பச்சை வண்ணத்தில் பாசம்பிடித்திருக்க , அங்கு ஏற்கனவே வந்திருந்த ராஜிசதீஷ் வழுக்கி விழாமல் ஓடும் வெந்நீருற்றில் கால் வைப்பது எப்படி என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.அதை அலட்சியமாக கேட்ட அனைவருமே  கால் வழுக்கிக் கீழே விழுந்து அசடு வழிந்தோம்.

ஓடையின் விளிம்பில் அமர்ந்து கொண்டபின் இரு கால்களையும் வெந்நீருற்று ஓடையில் விட வேண்டும் என்று அவர் கூறியதைக் கண்டு கொள்ளாமல் நான் ஓடையின் விளிம்பில் ஒரு காலை வைத்துக் கொண்டு மற்றொரு காலை ஓடைக்குள் விட என்ன நடக்கிறது என்பதை சுதாரித்துக் கொள்ளுமுன் பச்சை  பாசியால்   நான் வழுக்கி விழுந்தேன். முதலில் அவமானம் பிடிங்கித் தின்றாலும் பின்பு ஓரிரு தோழர்களும் தோழிகளும் அதுபோலவே கீழே விழ மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு இயல்பு நிலையை அடைந்தேன்.

நண்பர்கள் அனைவருமே குடும்பத்துடன் வெந்நீருற்று ஓடையில் காலை வைத்து மகிழ்ந்து கொண்டிருக்க பல சுற்றுலாப்பயணிகள் படுத்து உருண்டு பிரண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
என் அருகிலே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சூடான் நாட்டுச் சிறுமிகள் திடீரென்று என் மீது ஓடையிலுள்ள தண்ணீரைக் கைகள் கொண்டு என் மீது அடித்து தெளித்தார்கள்.முதலில் அதை எதிர்பாராத நான் சற்று மிரண்டு அவர்களிடம் ஆங்கிலத்தில் இது போலச் செய்யாதீர்கள் என்று அன்பாக எடுத்துரைத்தேன். 

பின்பும் அவர்கள் நான் கூறிய அறிவுரையை காதுகொடுத்துக் கேட்காமல் என் மீது திரும்பவும் தண்ணீர் தெளிக்க நானும் அவர்களுக்கு இணையாக சிறுமியாய் மாறி தண்ணீரை அவர்கள் மீது தெளித்து சிறிது நேரம் விளையாட , எனக்குள் இருந்த குழந்தைத்தனம் அவர்களை விட அதிகமாவிட்டது என்று கணவர் என்னைச் செல்லமாக எச்சரித்தார். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல தற்காலிக கழிவறையை அரசு அமைத்திருந்தாலும் , அங்கு சுத்தத்திற்கு காரணமாக ஓயாது துப்புறவு தொழிலில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மாலை நேரம் ஆகிவிட்டதால் ஜெபல் ஹபீத்திற்குப் போகலாமா அல்லது அல்எய்ன் மிருககாட்சிசாலைக்குப் போகலாமா என்ற கேள்வி எங்கள் நண்பர்களுக்குள் எழ மொட்டை மலைக்குப் போய் என்ன பார்த்து விடப் போகிறோம் என்று எண்ணி அல்எய்ன் மிருககாட்சிசாலைக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற பொழுதே மெதுவாக இருட்ட ஆரம்பித்ததால் பெரியோர்களுக்கு 30 திராம்களும், சிறியவர்களுக்கு 10 திராம்கள் கொடுத்தும் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டுமா என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில்  விதவிதமான இடங்களுக்கு குறைந்த செலவில் சிக்கனமாக  நிறைவான நினைவுகளைக் கொண்டு பயணம் செய்வதற்குக் கணவரின் நண்பர் பாஸ்கர் பெரிதும் உதவி செய்வார்.எங்களுக்கு முன்னரே சில வருடங்கள் துபாயில் வசித்ததால் எல்லா இடங்களுக்கும் எப்பொழுது? எப்படி? போக வேண்டுமென்று தெளிவாக எடுத்துரைத்து நண்பர்களுக்கு ஆலோசனைக் கொடுப்பார். இரவு நேரமானதால் மிருககாட்சி சாலை அல்லது (hilli funcity) ஹிலி ஃபன் சிட்டி என்னும் சாகச சவாரிகள் நிறைந்த பூங்காவிற்குச் செல்லலாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்களிடமே விட்டு விட்டார்.

அல்எய்ன் மிருககாட்சி சாலையைப்பற்றி ஏற்கனவே நண்பர்கள் வழி கேள்விபட்டிருந்ததால் ஆர்வமிகுதியில் சிறுகுழந்தையைப் போன்று 
மிருககாட்சி சாலைக்குத் தான் செல்ல வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னொரு நாள் இது போன்று இவ்வளவு தூரம்  பயணம் செய்து மிருககாட்சி சாலையை சுற்றிப் பார்க்க வரமுடியுமா? அல்ல நபருக்கு 50 திராம்கள் கொடுத்து ஹிலி ஃபன் சிட்டிக்கு கட்டாயம்  கூட்டிச் செல்வார்களா? அல்லது ஏமாற்றி விடுவார்களா?   என்ற சந்தேகமே என் பிடிவாதத்திற்கு காரணம் ஆயிற்று.

சில நண்பர்கள் இரவில் மிருகங்களைச் சரியாகப் பார்க்க முடியாது என்று குறைபட்டுக் கொண்டாலும் இரவு 8 மணி வரை மிருககாட்சி சாலை திறந்திருக்கும் என்ற அறிவிப்பைக்காட்டி, இவ்வளவு நேரம் திறந்திருந்தால் கண்டிப்பாக போதுமான வெளிச்சத்திற்கு  ஒளி ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று கூறி எல்லாரையும்
ஒருவிதமாக சமாளித்து உள்ளே அழைத்துச் சென்றேன்.

மிருககாட்சி சாலையை மட்டும் சாதாரணமாக நடந்து சுற்றிபார்ப்பதற்கும் , குடும்பத்துடன் மொத்தமாக வண்டியெடுத்து உள்ளே மிருகங்களைத் தனியாக ஆய்வுப் பயணம் செய்வதைப்போல சொகுசாக வண்டியில் பயணம் செய்வது பார்வையிடுவதற்கும் , எல்லா மக்களுடன் சேர்ந்து வண்டியில் பயணம் செய்து விலங்குகளைப் பார்வையிட  தனி கட்டணம்  என்று பல வசதிகளை அளித்து கட்டணங்களை உயர்த்தி இருந்தார்கள்.


நுழைவு வாசலிலேயே விலங்குகளைப் போன்று தத்ரூபமாக மிருதுவான பொம்மைகளை விலைக்கு வைத்திருக்க , எல்லா பொம்மைகளையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது போல தோன்றியது. உள்ளே இருக்கும் விலங்குகளைப் போலவே இருந்த பொம்மைகள் அங்கே மட்டும் தான் கிடைக்குமோ என்று எண்ணும் அளவு சிறப்பாக இருந்தது.

அமீரகத்தில் எங்கு சென்றாலும் கையில் அந்த இடத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுத்துவிடுவார்கள். அதனை வைத்தே எந்த இடமும் விடுபடாமல் எல்லா இடங்களையும் பார்த்து இரசித்துவிடலாம். 1969 லேயே ஆரம்பிக்கப்பட்டு 990 ஏக்கர் நிலபரப்பில் அமைந்திருந்த மிருககாட்சிசாலையை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே சற்று களைப்பாக இருக்கத்தானே செய்யும். ஒட்டகச் சிவங்கிக்கு நாமே உணவு அளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு கட்டணம் செலுத்தினால் அதற்குத் தேவையான உணவையும், அதை நம் அருகே அழைப்பதற்கு கைகளால் ஆட்ட ஏதுவாக பூஜைகளுக்கு உபயோகிப்பது போன்று ஒரு அழைப்பு மணியையும் தந்தார்கள்.


ஏணிகள் எல்லாம் வைத்திருந்ததால் குழந்தைகள் அதிலேறி ஒட்டகச் சிவிங்களுக்கு உணவளிக்க ஆவலாய் இருந்தார்கள்.ஏற்கனவே பலர் உணவு கொடுத்துவிட்டதால் அது உண்ட மயக்கத்தில் தள்ளியே சுற்றித் திரிந்தது. ஒரு குடும்பத்தினர் உணவு கொடுப்பதற்குத் தயாராய் அதன் கவனத்தை ஈர்க்க மணியை ஆட்டிக்கொண்டே இருக்க , ஒட்டகச் சிவங்கிகளோ கண்டு கொள்ளவே இல்லை. அக்குடும்பத்தினரோ ஏக்கத்துடன் கையில் உள்ள இலைதளைகளை ஏமாற்றத்துடன் உள்ளேயே போட்டுச் சென்றார்கள். 

நாங்கள் இரவு நேரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளக்குகளை வைத்து வழிகண்டுபிடித்துச் செல்லுகையில் ஒரு காட்டிற்குள் பயணம் செய்வது போலவே திகிலாக இருந்தது. ஒவ்வொரு பெரிய பரப்பளவு  கூண்டினுள்ளும் விலங்குகளைத் தேடித்தேடிப் பார்ப்பதும் வித்தியாசமாகத்தான் இருந்தது. அனைத்து விலங்குகளுக்கும்  காட்டில் வசிப்பது போன்றே வசதியாய் இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தாலும் காட்டுக்கே இராஜாவான சிங்கம் கூட அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றி சுற்றித்தான் வலம் வந்து கொண்டிருந்தது.


ஏற்கனவே துபாய் மிருககாட்சிசாலைக்கு மதிய நேரம் சென்றிருந்த போதிலும் ஆமைகளின் களவியியல் காட்சிகளை பார்க்க நேரிட்டது. இப்பொழுது இரவுநேரம் ஒவ்வொரு விலங்கும் எந்தெந்த மனநிலையில் சுற்றித் திரிகின்றதோ என்று பேசி தோழிகளுக்குள் சிரித்துக் கொண்டோம். நண்பர்களுடன் சென்ற இரவுபொழுதில் வாலற்ற குரங்கு, தீக்கோழி(ostrich), இராட்சத ஆமைகள், வெள்ளை சிங்கம் போன்று பல விலங்குகளைப் பார்வையிட்டாலும் , அதிர்ஷ்டவசமாக அத்தை மகன் இராம்-உமா தம்பதியினருடன் இராமின் கல்லூரி  நண்பன் வினயின்  வண்டியில் மற்றொரு முறை இப்பூங்காவை வெளிச்சத்தில் குடும்பத்துடன் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது.


இதற்குமுன் இம்மிருககாட்சிசாலைக்கு வந்திருந்த பொழுது இராட்சத ஆமையின் மேல் தனது இரண்டுவயது மகளை
நிற்க வைத்துப் ஒளிப்படம் எடுத்துக்கொண்டதை நண்பர்  பாஸ்கர் பெருமையாகப் பகிர்ந்து கொண்டார்.

குடும்பத்துடன் ஆடு, ஒட்டகங்கள், வாத்து, கோழிகள் போன்று பல விலங்குகளுக்கு உணவு உண்ணக்கொடுத்து மகிழும்படி, குழந்தைகளுக்கும் இயற்கை , விலங்குகளின் மேல் புரிதல் ஏற்படும் வகையில் அமைத்திருந்த எலிசுபா சிறப்புப் பூங்கா மிகவும் அருமையாய் இருந்தது. வெள்ளை காண்டாமிருகம் வெயிலுக்கு பயந்து தண்ணீரிலேயே சுகமாய்   மூழ்கிக் கிடந்ததைப் பார்க்க நமக்கும் தண்ணீரில் சிறிது நேரமாவது படுத்துக்கிடக்கலாம் என்றே தோன்றும். 


4000 உயிரனங்கள் கொண்ட மிருகக்காட்சிசாலையை பறவைக்காட்சிகள், நெடுநாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த டைனோசர்களைச் செயற்கையான முறையில் அதன் வாழ்வு, உணவுப் பழக்கத்தை விளக்கும்  பூங்கா ஆகியவற்றுடன் சேர்த்து
இரசித்து சுற்றிப் பார்க்க அதிகபட்சம் மூன்று மணிநேரம் ஆவது சரியான கணக்கீடு என்றே தோன்றியது.


ஊர்வன மிருகங்களான பல நாடுகளைச் சேர்ந்த பாம்பு, பல்லி,  முதலை போன்றவைக்கு என்று தனியாக அமைத்திருந்த பூங்கா அருவருப்பையும், அச்சத்தையும் சேர்த்தே தந்தது. விதவிதமான வண்ண வண்ணப் பறவைகளுக்கு திறந்தவெளியில் சற்று உயரமாக வலையமைத்து கூடாரம் ஏற்படுத்தி மக்களையும் உள்ளே அனுப்பி அழகுபறவைகளுடன் ஆனந்தமாய் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள அனுமதியும் தந்தார்கள்.

ஏற்கனவே மிருககாட்சிசாலைக்கு வந்திருந்த நண்பர்களான ராஜி-சதீஷ், பாஸ்கர் - ஸ்ரீதேவி தம்பதியினர் கூட இரவுநேரத்தில் வழியெது வாசலெது என்று தெரியாமல் விழிக்க,  பூங்காவை இழுத்துச் பூட்டிச் செல்லும் நேரம் நண்பர்களுடன் நாங்களும் வெளியே வந்தோம்.பகல் நேரத்தைக்காட்டிலும் இரவு நேரம் விளக்குகளின் ஒளியில் ஜெபல் ஹபீத் மலை அட்டகாசமாக ஜொலித்தது. ஒளியைக்கண்டு ஈர்க்கப்படும் பூச்சியைப் போல நண்பர்கள் அனைவரும் மலையை நோக்கி மலைச்சவாரிக்குத் தயாரானோம். 

வண்டியை ஓட்டிய இரண்டு நண்பர்களுமே வளைந்து நெளிந்த மலைப்பாதையில் உற்சாகமாக வண்டியைச் செலுத்த , நாங்கள் அனைவரும் கீழே சதுரமாக காட்சிதரும் மின்னும் நகரத்தை பார்வையிட்டு அதிசயித்திருந்தோம். ஏற்கனவே வரையருக்கப்பட்டு, வடிவமைத்த நகரத்தில் குடியிருப்புக்களும், தொழிற்சாலைகளும் அமைந்திருந்ததால் நகரம் மனம்போன போக்கில் காட்சி அளிக்காமல் வடிவாய்க் காட்சியளித்தன் காரணம் புரிந்தது.

மலைப்பாதையில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நின்று பார்ப்பதற்கென்று சில இடங்களை பிரத்யேகமாக அமைத்திருந்தார்கள். குளிர்காலம் என்பதனால் பல மக்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் என்று ஒலிபெருக்கிப் பெட்டியுடன் வருகைதந்து மொட்டைமலையின் மேல் ஆடல், பாடல்,  உணவு என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கோ அந்த உற்சாகச் சூழலுடன் பலவிதமான இசையும் சேர ஆடவேண்டும் என்ற ஆசை தோன்ற தோழிகள் யாரும் துணைக்கு வராததால்  அங்கு மகிழ்ச்சியாய் ஆடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மனம் ஏங்கி நிற்க வேண்டியதாயிற்று.

மலைஉச்சியில் தேநீர் விடுதி அமைந்திருக்க குளிருக்கு இதமாக தேநீர் குடித்துவிட்டு மலையின் கீழே இறங்கி உணவுவிடுதிக்குச் சென்றோம். அல்எய்னில் வீட்டுவாடகையும்,  அன்றாட வாழ்விற்கான செலவும் குறைவு என்று கேள்விப்பட்டிருக்க உணவு உண்டதற்கான செலவுச் சீட்டைப் பார்த்தவுடன் சற்று மிரண்டுதான் போய்விட்டோம். துபாயைவிட உணவு பதார்த்தங்களின் விலை அதிகமாயிருந்தாலும் பணத்தைக் கொடுத்து விட்டு துபாயை நோக்கிப் பயணமானோம். நடுஇரவு நீண்ட நேர பயணம் என்பதால் சுஜிசதீசிற்கு தூக்கம் வராதபடி பேட்டி காண்பவராய் மாறி சில சுவாரசியமான கேள்விகளைக் கேட்டு அவருடன் அனைவரையும் தூங்க விடாது துபாய்க்கு பத்திரமாய்த் திரும்பக் காரணமானேன்.

பின்னொரு நாளில் அல்எய்னில் விடுபட்ட ஹிலி ஃபன் சிட்டிக்கு (hilli fin city) சுஜிசதீஷ் தம்பதியினருடன் செல்லும்  ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. எப்பொழுதும் போல  பிரியமான பிரியாணியை வாங்கிக் கொண்டு பூங்காவை அடைய மதிய நேரம் ஆகிவிட்டது. 
நுழைவுச்சீட்டு சில வேலைநாட்களிலும், நண்பர்கள் குடும்பம் என்று பெரும் பட்டாளத்துடனும் வந்தால் மிகக் குறைவு என்பதைப் பார்த்து வியந்து போனோம்.


அனைவருக்குமே  பசிவயிற்றைக் கிள்ளினாலும் மயிர்கூச்செரியும் சாகசச் சவாரிகளை அனுபவித்தப்பின்னேயே சாப்பிட வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தோம். மனஉறுதி என்றில்லை, சவாரியின் பொழுது வயிற்றைப் பிரட்டி வாந்தி எடுத்து அவமானப் படுவதுடன் அபராதமும் கட்டிவிடக்கூடாது என்ற காரணம்தான்.குழந்தைகள் மட்டும் , குடும்பத்தினர் அனைவரும் , மனதைரியம் உள்ள மனிதர்கள் மட்டும் பயணம் செய்ய என்று சவாரிகளைப் பவவழிகளில் பிரித்திருந்தார்கள்.

அனைத்துச் சவாரிகளிலும் உச்சக்கட்டமாய் தலைகீழாய் நிற்கவைக்கும் சவாரியில் நானும் சுஜியும் தைரியமாக ஏறிவிட்டோம்.
எங்களது கணவன்மார்களின்முன் பயமறியாதப் பெண்களாய்ச் சவாரியில் ஏறிவிட்டாலும், பசி மயக்கத்தில் மயங்கியோ அல்லது வாந்தியோ எடுத்துக் கேவலப்பட்டுப் போய் விடக்கூடாது என்கிற அச்சத்தோடு சவாரியை இரசிக்கலானோம். நல்லவேளை பயப்படும்படி எதுவும் ஆகவில்லை.

எங்கள் கணவன்மார்கள் சவாரியின் போது எங்களின் முகபாவங்களை கவனித்து நாங்கள் கீழே வந்ததும் கிண்டல் செய்து சந்தோஷப்படலானார்கள். "நாங்களாவது அச்சமில்லாமல் சவாரியில் பயனப்பட்டோம். நீங்கள் அதைக் கூட பயணம் செய்யாது எங்களைக் கேலிபேசுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆகிறீர்கள்" என்று கூறி கூட்டணி அமைத்து பதில் பேசி கிண்டலடித்தோம்.



ஏற்ற இறக்கங்களுடன் வேகமாகச் செல்லும் சவாரியில் பயணிக்கும் பொழுது உலகிலேயே வேகமாகச் செல்லும் சவாரியிலேயே நான் பயணம் செய்திருக்கிறேன்.இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம் என்று சுயதம்பட்டம் அடித்து பெருமை பீற்றிக்கொண்டேன். நண்பர் சதீஷ் தலைசுற்றல் ஏற்பட்டால் நீண்ட தூரப் பயணத்தில் வண்டியை ஓட்டிச் செல்ல முடியாது என்று காரணம் கூறித் தப்பித்துக் கொள்ள, என் கணவரோ சவாரிகளில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை என்று கூறி சமாளித்துக் கொண்டார்.

ஆக நானும், சுஜியும் எந்த இராட்டினத்தையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் சவாரி செய்து மகிழ்ந்தோம்.1990 களில் பிரசித்திபெற்றிருந்த இந்த பொழுதுபோக்கு பூங்கா தற்பொழுது வாழ்ந்து கெட்ட குடும்பத்தையே நினைவுபடுத்தியது. பாழடைந்த பழைய இராட்டினங்கள் பல அங்குமிங்குமாய் இறைந்து கிடந்தன. பூங்காவைச் சுற்றிப்பார்க்க என ஒரு இரயில்வண்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பயணம் செய்யும் பொழுது எப்படி இருந்த பூங்கா இப்படி ஆகிவிட்டதே   என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது.

இரண்டு வகையான இரயில் பயணத்திலும் ஓட்டுநரும், நடத்துனரும் தமிழ் பணியாளர்களாக இருந்ததால் ஒரு சில இடங்களை  எங்கு இறங்கி பார்வையிட வேண்டும் என்று வழிகாட்டினார்கள். தரையிலேயே ஒரு ஓரத்தில் இரயில் வண்டி செல்வதற்கு ஏதுவாக தண்டவாளம் அமைத்திருந்தார்கள். பெரியோர்கள் துணையில்லாமல் வந்திருந்த சிறுவர் கூட்டம் மிகுந்த சேட்டை செய்து கைகால்களை நீட்டி அருகிலிருந்த மரம், செடி, கொடிகளை பிடிப்பது போன்று ஆட்டம் போட்டுக்  கொண்டிருந்ததால் ஓட்டுநரும், நடத்துநரும் இரண்டு மூன்று தடவை தரையில் மேல் ஓடும் இரயிலை நிறுத்தி அச்சிறுவர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

பூங்காவில் பல இராட்டினங்களில் பணிபுரிந்த பல பணியாளர்கள் தமிழர்கள் என்று அறிந்ததும் பாசமும் வியப்பும் பொத்துக் கொண்டு வந்தது. எல்லா தமிழ் பணியாளர்களுமே சிரித்த முகத்துடன் நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியாய் உரையாட ஆரம்பித்தார்கள். உரையாடிய அனைவருமே சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் அந்த பூங்காவில் தான் பணிபுரிகிறார்கள் என்று தெரிய வர மனம் ஏனோ கனத்துவிட்டது.



படகுச்சவாரியில் ஓட்டுநர்கள் இல்லாது நாமே கால்களால் மிதித்து படகைச் செலுத்துவது போன்று செய்திருந்த ஏற்பாடு சிறிது அச்சத்தையே தந்தது. எங்கள் கணவன்மார்களை முன்னால் படகைச் செலுத்த உட்கார வைத்து விட்டு நானும் சுஜியும் பின்னால் படகுச்சவாரியை மகிழ்ச்சியாய் அனுபவிக்கலானோம். பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் தனியாக பூங்காவிற்கு நண்பர்களுடன் வந்திருந்ததைப் பார்க்க சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.சில குறும்புக்காரச் சிறுவர்கள் படகுடன் வெகுநேரம் குளத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்க பணியாளர்கள் தனியாக ஒரு படகில் சென்று அச்சிறுவர்களைக் கூட்டி வர வேண்டியதாயிற்று.

படகில் செல்கின்ற  உற்சாகத்தில் அச்சிறுவர்கள் சற்று நேரத்திற்கு முன்தான் எங்களை இடிப்பது போன்று பாவனை செய்து கைஅசைத்து சிரித்த முகத்துடன் கொண்டாட்டமாய்ச் சென்றிருந்தார்கள். ஆழம் சற்றுக்குறைவாகவே இருக்கும் என்றாலும்  படகுச் சவாரியின் போது சிறுது அச்சம் ஏற்படுவது வியப்பில்லை தானே?படகுகள் அனைத்தும் வண்ண வண்ண வாத்துக்கள் போல அமைந்திருந்தது எங்கள் படகுச்சவாரிக்கு மேலும் உற்சாகத்தை அள்ளித் தந்தது.

 படகுச்சவாரிக்குப் பின் நாங்கள் சென்ற இடித்து இடித்து விளையாடும்  சிறு எந்திர வண்டிச் சவாரி எல்லோருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.
நானும் என் கணவரும் ஒரு சுற்றுச் சவாரியில்  வேறு வேறு வண்டியில் பயணமானோம். நான் யாரையும் இடிக்காமல் லாவகமாக ஓட்டிச் செல்ல வேண்டுமென்று நினைக்க கணவரோ அவரது வண்டியில் பாய்ந்து வந்து என்னை இடித்து விளையாடுவதிலேயே குறியாய் இருந்தார். மின்கலத்தில் இயங்கும் அந்த வண்டியில் நான் வேகத்தைக்கூட்ட குறைக்க, வண்டியை நிறுத்த , திருப்ப , முன்னால் செல்ல, பின்னால் செல்ல என்று பல நடவடிக்கை எடுத்தாலும் எனது வண்டிமட்டும் தனக்குத்தானே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

பின்பு ஒரு வழியாக சவாரி முடித்தபின் அந்த சவாரியை இயக்கும் தமிழ் இளைஞர் எங்களுக்கு அடுத்தடுத்த சவாரிகள் எப்படிச் செல்லவேண்டும், எதையெல்லாம் தவறாது பார்த்து பயணம் செய்து இரசிக்க வேண்டும் என்று அன்புடன் வழிகாட்டினார். இந்தப் பூங்காவிலும் பனிச்சறுக்கு விளையாட , பழக என சிறுவர், இளைஞர் கூட்டம் பனிச்சறுக்கு மைதானத்தில் குழுமியிருந்தது.

சிறுவர், சிறுமியரென்று பேதமில்லாமல் பெண்பிள்ளைகள் அசத்தலாக பனிச்சறுக்கு செய்து காண்பவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டிருந்தார்கள். இது போன்ற பனிச்சூழலை ஏற்படுத்த எல்லா நாளும் தடையில்லாத மின்சாரத்தை உபயோகிக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டு மிரண்டுபோனோம். இரவு நேரம் ஆகிவிட்டது என்று நாங்கள் கிளம்ப ஆரம்பிக்க பலர் அப்பொழுது தான் நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து எங்களை வியப்புக்குள்ளாக்கினார்கள்.  எல்லா சவாரியிலும் விடாது பயணப்பட்டதை அசைபோட்டுக் கொண்டே  அபுதாபியை மொத்தமாகச் சுற்றிப் பார்த்த திருப்தியுடன்  துபாய்க்குத் திரும்பினோம்.

4 comments:

  1. அருமை . போன இடங்கள் தான். மறுபடியும் போன திருப்தி தந்தது. படங்கள் அபாரம்...அபி..

    ReplyDelete
  2. அருமையான கண்ணோட்டம்
    இனிக்கும் சுற்றுலாவாகத் தெரிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete