Monday, October 30, 2017

வெண்கடல் - ஜெயமோகன்

பிரபல எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் ஜெயமோகன் அவர்களின் ஏதேனும் ஒரு படைப்பையாவது வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக்கடையின் பெயரில் கிடைத்தப் பரிசுச்சீட்டில்  11 சிறுகதைகள் கொண்ட வெண்கடல் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன்.



எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின்  பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல்  .....கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் 
சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது.

விசாரணை படித்தின் மற்றொரு பரிணாமமாய் இருந்த கைதிகள் கதையில், சுட்டு விதைக்கப்பட்ட  அப்பு கடைசியாய் என்ன கூறினான் என்பதைக் கேட்டபின் கொஞ்சம் திகலுடன் சிறிது நேரம் உறைந்திருந்தேன்.பெரியப்பா பையனான  அருண் தம்பி என் அம்மாவிடம் ' சித்தி ...ஓட்டப்போட்ட இட்லி தாங்க'  என்று கேட்பான். அம்மா இட்லி வெந்ததா இல்லையா என்று பார்ப்பதற்காக குத்திப்பார்க்கும் இட்லியை மிகவும் ஆசையாய் அவன் கேட்டு வாங்கிச்செல்வதே அம்மையப்பம் கதையைப் படித்துக் கொண்டிருந்த போது நினைவில் நிழலாடியது.


பிறந்த குழந்தை இறந்த வேதனையைவிட அதிக துன்பம் தரும் பால்கட்டினை வைத்தியர் அட்டையால் சரிசெய்யும் பொழுது, பிறந்தவுடன் இறந்த என் முதல்  தம்பியால்  அம்மா பட்ட வேதனையுடன், தன்னிடம் பால் குடித்த அட்டைகளை கோழிக்கு உணவாக்காமல் தடுத்த தாயின் தவிப்பும் சேர்ந்து என்னை ஏதோ செய்தது. பிள்ளை இல்லாத வலி இராமலட்சுமிக்கு ஒரு வகையில் வெளிப்பட, நிலத்தின் மீது ஈர்ப்பு கொண்ட பெருமாளுக்கு வேறு வகையில் வெளிப்படுவதை, ' எல்லாச் செடியும், மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு...விட்டா காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல..'  என்ற பண்டாரத்தின் வார்த்தைகள்  எவ்வளவு உண்மையானது அப்படின்னே என் மனசுல பட்டுச்சு.

சேத்துக்காட்டார், நிலத்தோட முக்கியத்துவத்தையும் பெருமையையும் சுடலைக்கு மட்டும்  முகத்தில் அறைஞ்சு சொன்ன மாதிரி தெரியல்லை....நம்ம கன்னத்திலையும் அறை வாங்கின வலி தெரியும் பொழுது நமக்கும் சேர்த்து சொன்ன மாதிரித்தான் இருந்துச்சு.எங்க பேச்சியம்மன் கோவில்ல கிடா வெட்டி பொங்கல் வெக்கிற காட்சி கண்ணுமுன்னாடி வந்து, எல்லாரும் நல்லா இருக்கனுங்கிறதுக்காகத்தான் தன்னோட உயிரத் தியாகம் செய்யிற கெடா மேல வர்ற அதே இரக்கம்  , தம்பியோட காதலுக்கும் காதலியோட காதலும் ஜெயிக்கனும்ங்கிறதுக்காக  தன்னோட காதல தியாகம் செய்ஞ்ச அண்ணன் மேலயும் வர்றத தவிர்க்க முடியலை.....


பேச்சுவழக்கு மொழிகளால் கதைகளுக்கு பல உணர்வுகள் சேர்த்து மனதிலே ஒரு ஆழமான அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெண்கடல்.

Saturday, October 28, 2017

உடையார் ( 1- 6 பாகங்கள்) - பாலகுமாரன்

ஆறு பாகங்கள் அதிகபட்சம் 3000 பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துமுடித்து விடுவேனா என்ற எனது எண்ணம், 1000 வருடத்திற்கு முந்திய மக்களின் வாழ்வியலையும் , பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயில் உருவான வரலாற்றையும் பதிவு செய்த முயற்சிகளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லாமல் போனது. ராஜ ராஜ சோழன் கும்ப ராசி சதய நட்சத்திரம் என்ற குறிப்பைத் தாண்டி என்  வாழ்வின் முக்கிய ஆண்களான அப்பாவும் , கணவரும் அதே ராசி நட்சத்திரம் என்று தெரிய வர இனம்புரியாத ஈர்ப்பு ஒட்டிக்கொண்டது.



ஏதோ ஒரு மூலையிலிருந்து , எங்கேயோ எந்த நூற்றாண்டிலோ நடந்த  ஒரு நாகரிகத்தை வெறும் கற்பனையாய் எழுதியிருந்தால் , நம்மால் அதனோடு ஒன்றியிருக்க முடியாது.களப்பணி செய்து, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடுகள் என்று ஆராய்ச்சி செய்து, 
கோயிலிலும், அதன் சுற்றுவட்டாரத்தையும் பித்தனாய் சுற்றி வந்து
ஒரு ஆய்வு நூலாய் எழுதியிருந்தாலும் சுவாரஸ்யம் குறைந்து வரலாற்றைத் தெரிந்திருக்க முடியாது. இவை இரண்டுமே கலந்து புதினமாய் படைத்ததால் வாசிப்பில் எந்த சோர்வும் ஏற்படவில்லை.அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு கதைசொல்லியின் வாயிலாக நடந்த கதையைக் கேட்டது போன்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படுகின்றது.

கல்கியின்  பொன்னியின் செல்வன் படித்தபின் ராஜ ராஜன் கட்டிய பெரிய கோவிலையும் , ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்து பிரஹதீஸ்வரர் கோவிலையும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த புத்தகங்களின் அனைத்துப் பாகத்தைப்படித்தபின் எழுத்தாளரைப் போல் ஒரு இரு சக்கிர வாகனத்தின் வழியாய் குதிரை சவாரி செய்வது போலவே சோழ சாம்ராஜ்யத்தை சுற்றி வர வேண்டும் என்கிற ஆசை மேலோங்குகிறது .

மறுபடியும் கோவிலைச் சுற்றி வந்து, பேராற்றல் பெற்ற கருவூர்த்தேவர் , ஒற்றர்களையே ஒற்று வேலைப் பார்த்த பிரம்மராயர்,
அவரது புதல்வன் அருண்மொழி , அறிவாற்றல் பெற்ற ஈசான சிவபண்டிதர், இந்த கோவில் கட்டுவதையே தன் கனவாகக் கொண்டிருந்த இராஜ இராஜர் இவர்கள் அனைவரும் எங்கெல்லாம் நின்றிருந்து தற்பொழுது கோவில் முழுவதும் நிறைந்திருப்பார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

அக்காலத்திலேயே திருமணம் செய்து கொள்ளாமல் தான் விருப்பப்பட்டவனுக்கு நல்ல அனுக்கியாய்( தோழி) வாழ்ந்த கதைகளுக்கு உதாரணம் அருண்மொழி-இராஜராஜி உறவு.நித்த வினோதப் பெருந்தச்சன், குஞ்சரமல்லப் பெருந்தச்சன், சீராளன் , இலத்தி, குணவன்  போன்றோர்கள் தான் நம் கலைக்கும், பொறியியல் நுட்பங்களுக்கும் முன்னோடியாய் இருந்தார்கள் என்று உணரும் பொழுது பெருமைப் பட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.


தலைவர்களுக்கும், பொறுப்புள்ள அதிகாரிகளுக்கும் இருந்தத் திறமைகளை மட்டும் வெளிப்படுத்தாமல் சாதாரண குடிமக்களான கணபதி - அம்மங்கை  போன்றோர்களின் ஆற்றலையும்  வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. 

அதிகாரிச்சி (பெண் அதிகாரிகள்) முத்தான பொன்நங்கை , குதிரை ஏற்றம் போன்று பல வீரச் செயல்களை அநாயாசமாகச் செய்யும் இராஜ இராஜரின் மனைவி பஞ்சவன்மாதேவி, ஆதூரச் சாலைகள் ( வைத்தியசாலை) பல நிறுவி யானை மேல் ஒய்யாரமாய் வலம் வரும் குந்தவை, ஒற்று வேலையுடன் இராஜ இராஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நாட்டிய நாடகமாய் அரங்கேற்றிய ராஜ ராஜி போன்று அறிவும் , மேலாண்மைத்திறமையும் பெற்றிருந்த பெண்களின் செயல்பாடுகள் வாசிகர்களுக்கு புதுத்தெளிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

பொன்னியின் செல்வனில் இளமையாய் மனம் கவர்ந்திருந்த வந்தியத்தேவரையும், அதிகாரமும் ஆற்றல் நிறைந்த குந்தவை 
பிராட்டியாரை இங்கே சற்று வயது முதிர்ந்தவர்களாய்ப் பார்த்தாலும் மனநிறைவு.அருண்மொழியாய் இருந்து இராஜ இராஜ சோழனாய்  மாறிய பரிணாமம் , ஆதித்ய கரிகாலனின் இறப்புக்கு பழிவாங்கல், பஞ்சவன்மாதேவிக்கு  கிடைக்கும் ஆன்மீகத் தெளிவு என்று அனைத்துமே நம்முள் மாற்றத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது.

தொழில் நிமித்தமாகவே சாதிகள் தோன்றியிருந்தாலும், ஒவ்வொரு சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வாழ்க்கை முறையான தங்குமிடம், உணவு, தொழில் போன்றவை மிக விவரமாக விவரித்துள்ளது, யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை, யாருடைய தொழிலும் தரம் குறைந்தவை அல்ல என்பதையே நம் மனதில் நிறுத்துகிறது.

ஒரு கற்கோவில் கட்டப்படும் பொழுது நடக்கும் சமுதாய மாற்றங்கள் மக்களின் நாகரீகத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைத் தெளிவாய் உணரமுடிகிறது. போக்குவரத்திற்காக கற்களைக் கொண்டு செல்வதற்காகப் போடப்படும் தரமான சாலைகள் தொடங்கி, குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளைக் கண்டுபிடிப்பது, உணவு வகைகள் உற்பத்தி, ஆடை ஆபரணங்கள் பயன்பாடு, கலைகள் வளர்த்தல் வரை எத்தனை பரிணாமங்கள்?

ஒரு போரின் ஆயத்தம், அதற்காக ஆகும் பொருட் செலவு, துணிச்சல் மிகுந்த வீரர்கள், முதுகில் குத்தும் துரோகிகள் என்று படையெடுப்புக்களின் மற்றொரு பக்கமும் உறையவைக்கிறது. சைவச் சமயத்தை வளர்க்க சிவனுக்குக்  கோயிலை கட்டும் இராஜ ராஐர், அவருக்கு வலது கையாய் விளங்கும் பிரம்மராயர் வைணவத்தைச் சேர்ந்தவர், அரசரின் மகள் சமண மதத் துறவி மாதேவியடிகள்.சமய மத நல்லிணக்கத்திற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் வேண்டுமா என்ன?


எதிரிகளின் ஆயுதங்களையும் உருக்கி நேர்த்தியான ஆயுதங்கள் செய்யும் கருமார்கள், உழைத்துக் களைத்தவர்களுக்கு கலைகளினால்  ஊக்கம் கொடுக்கும் தேவரடியார்கள், அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்யும் வேளாளர்கள்,  மனதை ஒன்றுபடுத்தி இறைவனை வேண்டி நாட்டுக்கே நல்லவை வேண்டும் அந்தணர்கள் , காலத்தால் அழியாத சிற்பங்களைச் செய்த சிற்பிகள் என்று ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து நபர்களின் மீதும் நமக்கு மரியாதை ஏற்படுகின்றது.

கைது செய்யப்பட்ட  மேல், கீழ் சாலுக்கிய வீரர்கள் , குணசீலன் போன்ற திறமையான  பாண்டிய நாட்டுப் போர் வீரர்கள், மற்ற நாட்டு வீரர்கள் என்று அனைத்துச் சமூக மக்களையும் இறைபணியில் ஈடுபட வைத்து , என்றும் நம் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்த தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை அகிலத்திற்கு எடுத்துரைத்த பாலகுமாரன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல.

Friday, October 27, 2017

பறக்கும் யானையும் பேசும் பூக்களும் - உமையவன்(சிறுவர்களுக்கான கதைகள்)

குழந்தைகளுக்கான உலகத்தைப் புரிந்து கொண்டு அவர்களது கனவு உலகில் புகுந்து கொள்வதற்கு முதலில் நாம் குழந்தையாய் மாறி நமது பால்ய காலத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது நமது கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விடும்.அந்தக் கற்பனைக்கதைகளை நாம் ஆராயாமல் அனுபவிக்கும் பொழுது நாம் சிறுவர்களாய் மாறி வேறு உலகில் குதூகலிக்க வாய்ப்புண்டு.



15 கதைகள் எளிமையாய் இருப்பதாய்த் தோன்றினாலும், அனைத்துக் கதையிலும் குழந்தைகளுக்குக் கற்பிக்க ஏதுவாய் நீதிகளும், கருத்துக்களும் நிரம்பியே இருக்கின்றன. நாம் கற்பனை செய்யும் பறவைகள், விலங்குகள், மனித கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டும் விதமாக ஓவியம் தீட்டிய ஜமால் அவர்கள், குழந்தைகளுக்கு படம் பார்த்து கதை சொல்லும் முறையை எளிமைப் படுத்தியிருக்கிறார்.

பொங்கல், தீபாவளி பண்டிகளை எப்படி இயற்கையாய் கொண்டாடலாம் என்று குழந்தைகளுக்கு  கற்றுத்தரும் பொழுது ,  கற்றுக் கொள்வது சிறுவர்கள் மட்டுமல்ல நாமும் தான். செம்பருத்தி, ஆவாரம் பூக்களில் இருந்து சிவப்பு , மஞ்சள் இயற்கை வண்ண சாயங்கள் உருவாக்குவதிலிருந்து , வேப்பமரத்து பிசின் தடவிய குச்சியில் ஒட்டப்பட்ட மின்மினிப்பூச்சிகள் என்று இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கம்பி மத்தாப்பு வரை அனைத்தும் நமக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறது.

கதையில் வரும் சின்னப் பட்டாம்பூச்சிக்கு மட்டுமல்லாமல்
நெத்திச்சுட்டிக்காயை தரையில் தட்டி இயற்கைத் தந்த பட்டாசை வெடிக்கும் ஆசை நமக்குள்ளும் பிறக்கிறது. டெங்குக் காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வை விலங்குகள் வழியாய் சிறுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது நல்ல யோசனை. சுற்றுப்புறத்தை பாதுகாத்து தூய்மையாய் வைத்துக் கொள்ள கூவம்நதியைச் சுத்தப்படுத்தும் கருவை எடுத்துக் கொண்டிருப்பது சிறுவர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதையே நமக்கும் சிறுவர்களுக்கும் உணர்த்துகிறது.


அனைத்துக் கதைகளிலுமே இக்காலத்து சிறுவர்களுடன் பெரியோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இயற்கை, கிராமம் பற்றிய புரிதல் , அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்தும் இழையோடி இருக்கிறது. கோழிகள் தோல் முட்டைப் போட்டால் கால்சியம் சத்து அதிகமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்று அங்கங்கே பயனுள்ள தகவல்களும் தரப்பட்டிருக்கிறது.கல்வி வியாபாரமாகி வருவதையும் , கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் கதை நாம் விலங்குகளுக்குச் செய்யும் அநீதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.


நம் குழந்தைகள் சோர்வடையும் நேரத்தில் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் , முயன்றால் முடியும் என்பதை வலியுறுத்துவதற்காகவே சொல்லப்பட்ட கதைகளில் எலிகள் கொண்டாடிய சுதந்திர தினமும் ஒன்று.
பெரியார்களை நேசித்து அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் போன்று, பெற்றோர் விரும்பும் கருத்துக்களும் உபதேசமாக அல்லாமல் சுவாரஸ்யமான கதையாய் விலங்குகள் வழியாய் கூறிப்பட்டு இருப்பதால், குழந்தைகள் நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நம்பி நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது இந்த பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

(கி.ராஜநாரயணன்) கி.ராவின் கதை சொல்லி - தொகுப்பாசிரியர் கழனியூரன்

சிறுகதைகள், கட்டுரைகள், சுவை சேர்க்கும் சம்பவங்கள் என்று கி.ரா அவர்கள் நடத்திய சிற்றிதழான கதை சொல்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு . 'ராஜாவீட்டுக் கல்யாணத்துக்குப்  பூசணிக்காய்' நாட்டுப்புறக்கதை தற்போது உள்ள அரசியல் வாழ்வியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாய் அமைந்திருப்பது கவலை.



கி.ராஜநாராயணன் அவர்கள் மட்டுமல்லாது, கழனியூரன்,இரட்டை எழுத்தாளர்கள் பிரேம்: ரமேஷ், இரா.கோதண்டராமன் போன்ற பலரது படைப்புகளைப் படிக்கையில் கதைசொல்லி சிற்றிதழை வாசிக்க முடியாத குறை களையப்படுகிறது. கதை சொல்லி, தாத்தாவாய்த் தான் இருக்க வேண்டுமா? பாட்டியாக இருக்கக்கூடாதா?அட்டைப்படத்தில்மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை  பேரனாகத்தான் இருக்க வேண்டுமா ?  என்ற அம்பையின் கேள்விகள் கி.ராவுடன் 
சேர்ந்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

அலியுடன் ஒரு பொழுது, அலிகள் : மர்மங்களும் தெளிவுகளும் படைப்புகள் மருத்துவ ரீதியான பல வகையான விளக்கங்களுடன் , சட்டரீதியான விழிப்புணர்வும் தந்து, மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியத்தை வெகுவாக குறைக்கிறது.பல கிராமத்து கதை சொல்லிகளிடம் இருந்து கிடைத்த நாட்டுப்புறக் கதைகள் ஒரு சில இடத்தில் நம்பகத்தன்மைக்கு அப்பாற்ப்பட்டாலும் நெஞ்சத்தைக் கணக்கச் செய்கின்றன.


செவத்தம்மாவின் கருகிய கால்களுக்கும், இறப்புக்கும்  பலனாய் சாபம் பெரும் நொண்டிக் குடும்பம், கணவனைக்காப்பாற்ற இளவட்டக்கல்லைத்தூக்கிய சுந்தரம் போன்று பெண்களை மையமாய் கொண்டு உலா வரும் நாட்டார்க்கதைகள் என்றுமே நினைவில் நிற்கக்கூடியவை.

பரமபத பாதைகள் கதை திகில் கலந்து மிரட்டுகிறது.இன்று நடக்கும் உலகளவிலான உடல் உறுப்பு தான மோசடிகள் அன்றே பேசப்பட்டுவிட்டதா? இன்றும் அதற்கு சரியான முடிவு கிடைக்கப்படவில்லையா என்று எண்ணும் பொழுது மனம் பதை பதைக்கிறது. வெளிநாட்டு நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்ப்பு கதைகளாகப் படைத்திருப்பது எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் எதுவுமே தடையில்லை , வரையறையும் இல்லை  என்பதையே உணர்த்துகிறது.

நாட்டுப்புறப் பாலியல் கதைகளை சேகரிக்க கழனியூரன் மேற்கொண்ட முயற்சிகளே கதையாகி இருப்பது அந்தக் கதைகளைக் கேட்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது.நாசரின் தேவதைப் படத்தைப் பற்றிய கலந்துரையாடல், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகையின் பேட்டி போன்றவை நமக்கு கலையுலகின் மீது வேறொரு கண்ணோட்டத்தைக் கொண்டு சேர்க்கிறது.


இலக்கியத்தில் மொழி வழக்குகள் என்று செவ்வியல்வழக்கு, பொது வழக்கு, வட்டார வழக்கு, நெல்லை வழக்கு, நாஞ்சில் வழக்கு, இலங்கைத்தமிழ் என்று வகைப்படுத்தி அதனை விளக்கிய விதம் நமது பேச்சு வழக்கு வார்த்தைக்களுக்கு உயிர் ஊட்டுகிறது.கழனியூரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் கதை சொல்லியின் இணைஆசிரியராய்  செயல்பட்டு , இந்த தொகுப்பு நூலை வெளியிட்டிருப்பது பலகாலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் ஆக்கப்பூர்வமான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

Wednesday, October 25, 2017

காட்டில் ஒரு மான் - அம்பை

காலச்சுவடு,இந்தியா டுடே, தினமணி போன்ற பல பிரபல பத்திரக்கைகளில் பிரசுரமான 17 சிறுகதைகள் கொண்டது இந்த தொகுப்பு.  எழுதப்படாத அல்லது சொல்லப்படாத பெண்களின் 
உணர்வுகளைப் பதிவு செய்வதனால்,  நிச்சயமாக பெண்களுக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல், ஆண்களுக்கும் ஒரு புரிதலை கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது இந்த காட்டில் ஒரு மான்.


வெவ்வேறு சூழ்நிலைகள், மனிதர்கள், என்று எழுத்தாளர் கையாண்டிருப்பதால் நமக்கு பரிட்சயமில்லாத வாழ்க்கை முறைகூட பரிட்சயமாகிறது. வடநாட்டு, வெளிநாட்டு வாழ்க்கை, ஒட்டகம், அரவாணிகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குள் இருக்கும் அன்பு, 
பூப்பெய்தாத தங்கம் அத்தை என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது.' கிருஷ்ணன் மானத்தைக் காத்தான்... மானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்புரியாமல் வானத்தைக் காட்டும் அயல்நாட்டு வாழ் சிறார்கள்'  சிரிப்பதா..? வருத்தப்படுவதா?

கதை சொல்லப்பட்ட காலகட்டங்கள் பல வருடங்களுக்கு முந்தயவையாக இருந்தாலும், அந்த காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்று , இன்னும் நம் மனிதர்களின் குணங்கள் எதுவும் இன்று வரை மாறாமல் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டே இருப்பதை தெரியப்படுத்தத் தவறவில்லை.'நீ எல்லாம் பொம்பளையா?' சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் கேள்வி...

யாரும் எதிர்கேள்விகேட்காத புராணங்கள், பல காலங்களாகச் 
சொல்லப்பட்ட வந்த செய்திகளை , வேறு கண்ணோட்டத்தில் கண்டு, புதிதாய் படைக்கப்பட்டிருக்கும் கதைகள் , புராணங்களின் கதைகள் மாற்றத்துடனேயே இருக்குட்டுமே என்று மனம் விரும்புகிறது. 'தூங்கும் விஷ்ணுவின் காலடியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் லஷ்மியை விட தனியாக இன்னொரு பாம்புப் படுக்கையில் தாராளமாகப் படுத்தபடி இருக்கும் லஷ்மியை கற்பனை செய்ய நன்றாய்த் தான் இருக்கிறது.'


வாகனங்களுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள பிணைப்பை விளக்கி ,பின் பெண்களுக்கு வாகனங்களின் மீதுள்ள காதல் விளக்கப்படும் பொழுது என் அம்மாவின் நான்கு சக்கர வாகன ஆசை ஞாபகம் வந்தது.மலை போன்ற திறமை கொண்டிருந்த மனைவியைப் புரிந்து  இறுதியில் செண்பகத்துடன் பாடிய ஷண்முகம் கழற்றியது சரிகைச் சால்வையை மட்டுமல்ல ஆண்ணென்ற அகங்காரத்தையும் தான்.

'பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்'. அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்துத்தான் தனி ஒரு உலகை ஏற்படுத்திக்கொண்டார்களா அல்லது வேறுவழியில்லாமல் உண்டாக்கிக் கொண்டார்களா என்ற கேள்வியே என் மனதைக் குத்தியது.

பெண்கள் காதலிகளாக , மனைவியாக, என்று பல பரிணாமங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  ஒரு பெண்ணின் பார்வையில் ஆண் காதலும் காமமும் கலந்து வர்ணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம். 'மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றியதாம்'.'வற்றிய நீர்வீழ்ச்சி போல் இறங்கிய தொடைகளும்,கால்களும். வாடி உலர்ந்துபோன பழம் போல் லேசாகக் கிடந்த மென்சிவப்பு ஆணுறுப்பு'

'கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்' பழக்க வழக்கங்களின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து மிடுக்குக்காக சுற்றம் சீரழிக்கப்படுவதை வலியுடன் பதிவு செய்கிறது.' பயணம்'  சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுடன் மாரியம்மன் வழிபடப்படும் பொழுது நாமும் அவர்களுடன் சேர்ந்தே கோழிச் சோறைத் தையல் இலையில் சாப்பிட்டு படம் பார்த்து வருகிறோம்.


எழுபதுகளின் காலக்கட்டத்திலேயே பெண்ணியத்தைப் பற்றி எழுதிய சி.எஸ்.லஷ்மி பெயரில் மட்டும் அம்பை அல்ல , ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த எழுத்துலகில் தனக்கென முத்திரை பதித்திருப்பதால் நிஜத்திலும் பேராற்றல் பெற்ற அம்பைதான்.

Monday, October 23, 2017

ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ( காதலியக் கவிதைகள்) - அமிர்தம் சூர்யா

ஒரு சில கவிதையைப் படித்தவுடன் அதரம் என்றால் என்ன என்று என்னுள் கேள்வி ஏற்பட இணையத்தில் தேடி, உதடு என்று அர்த்தம் தெரிந்தவுடன் இது கூடத் தெரியவில்லையே என்று உதடுக் கடித்துக் கொண்டேன். 


அரூபம் என்ற வார்த்தைக்கு உருவமில்லாதவன் என்ற பொருளை அர்த்தப்படுத்திக் கொண்டாலும் , காதலும் காமும் அரூபத்தின் சுவரூபங்களாய்த் தான் நம்முள்ளே நிரம்பிக் கிடக்கிறது . ஆலிங்கனம் ஆரத்தழுவுதலின் அங்கம் என்று புரிய வெட்கம் வந்துகட்டிக் கொள்கிறது.

பாட்டிகளின் நினைவுகளுடன் காதலியையும் குலதெய்வங்களாய்ச் சேர்த்துக் கொள்ள, எப்பொழுதும் அவர்களின் நினைவு சுகமாய் நெஞ்சில் நிற்க ஏதுவாய், இவர் எழுதியிருக்கும் வாக்கியத்தைப் போலவே, 'வார்த்தையாயிருக்கும் நெகடிவ் ஃபிலிம்மை நாம் படிக்கும் பொழுது நம் வாழ்க்கையைத்தான் பிரிண்ட் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம்' என்றே தோன்றியது.


'ஒவ்வொரு நாளும் அவள் நள்ளிரவைக் குழைத்து
தூக்கத்தை தானமாய் அனுப்பிய குறுஞ்செய்தியின்
சொற்களைத் தியானிக்கிறபோது
அவளின் இரவு இங்கு என்னை அணைத்தபடி தூங்கும்'
பெரும்பாலானவர்கள் இந்த கவிதை வரிகளை வாழ்ந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காதலி எத்தனை முறை எந்தெந்த வகையில் தவிர்த்தாலும், மயான காண்டத்தில் முளைத்த நம்பிக்கையாய் அரிச்சந்திரனின் கண்களுக்கு மட்டுமே தெரிந்து விடுகிறது அவளின் தாலியும் காதலும்.

முத்தத்திற்கு எப்படி ஒப்பனையிடலாம் என்று கவிஞர் எடுக்கும் காதல் பாடம் முத்தத்தை மட்டுமல்ல அன்பின் ஆழத்தையும் அழுத்தமாய் பதிவு செய்கிறது.

மாதாந்திர விருட்சம் , கவிஞர் தன்னுள் இருக்கும் பெண்தன்மையைத் தட்டி எழுப்பி எழுதிய கவிதையை , யதார்த்த வலிகளாய் உணர்ந்து கடந்து போக முடியவில்லை.


குச்சிகளைக் கலைத்து விடுவதாய் குற்றம் சாட்டினாலும் , எச்சத்தின்  துர்வாசம் பரப்புவதாய் புகார் சொன்னாலும், கத்தும் குஞ்சுகளை அரவணைக்கும் பேரன்பில் மிதக்கும் உன்மத்தக் காற்று , நம்மை நேசிக்கும் உள்ளத்தையே நமக்கு நினைவூட்டுகிறது.

காதல், காமத்தைத் தாண்டி புரிதல், ஈர்ப்பை நம் மனதிலே பறக்க விடுகிறது இந்த ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்....

Thursday, October 19, 2017

அடுப்பங்கரைப் புல்லாங்குழல் - முனைவர் மரியதெரசா

பெண்களின் பெரும்பாலான நேரங்கள் சமையலறையில் என்ன உணவுவகைகள் செய்யலாம் என்று யோசிப்பது,  அதற்கான ஆயத்தங்கள் செய்வது, சமையல் செய்வது, அதற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கெட்டுவிடாமல் பாதுகாப்பது , சமையலறையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலேயே கரைந்துவிடுகிறது என்பது பரவலான கருத்து.

சமையலறை, காய்கறி , மளிகைச் சாமான்களுடனேயே அதிக நேரம் செலவிடும் கவிதை எழுதும் தாகம் கொண்ட பெண்ணின் கண்ணோட்டத்தில்  இந்த புத்தகம் கவிதைகளால்  நிறைந்துள்ளது.
தான் சொல்ல வரும் கருத்துக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், காய்கறி , மளிகைச் சாமான்களுடன் ஒப்பிட்டு உருவகித்துக் கூறியிருப்பதால் கூறப்படும் கருத்துக்கள் எளிதாய் ஜீரணமாகி விடுகின்றன.

குறிப்பிட்ட சில மூலப்பொருள்களைக் கொண்டு இத்தனை  வகையான உணவு வகைகளைத் தான் செய்ய முடியும் என்று ஒரு வரையறை இருக்கலாம். ஆனால்
குறிப்பிட்ட சில கருப்பொருளைக் கொண்டு இத்தனை வகையான  கவிதைகள் மட்டும் தான் படைக்க முடியும் என்று எந்த வரையறையும் இல்லை என்று நிரூபித்துவிட்டார் முனைவர் மரியதெரசா.



ஒரு காய்கறியோ, மளிகைப்பெருளோ எதை மையப்பொருளாய் எடுத்துக் கொண்டாலும் அதன் தனித்துவம், தோற்றம் ஆகியவற்றை கற்பனை கலந்து சொல்வதுடன், அதற்கு பொருத்தமான வாழ்க்கைக்  குறிப்புகளையும் அங்கங்கே சொல்லியிருப்பது,....தினமும் நாம் பார்த்து உண்ணும் உணவைக் கண்டு, நமக்கு இத்தனை நாளாய் தோன்றவில்லையே என்ற எண்ணத்தையும், இயற்கையின் படைப்பில் இத்தனை உள்ளீட்டு அர்த்தங்கள் இருக்கின்றதா என்றும் வியக்கத் தோன்றுகிறது.

பச்சை குடுமிக்காரி
வெள்ளைப் புடவைகாரி
முள்ளங்கி
வெள்ளை சேலை உடுத்தியவளுக்கு 
பசுமை மறுக்கப்படும் - இது
வாழ்க்கையின் கோணங்கி!

வட்டவட்டமான பருப்பு
வனிதையின் பொட்டுப் போன்ற அமைப்பு
மங்கள நிறம் கொண்ட சிறப்பு
மங்கையருக்கு உதவும் மணிவிளக்கு
தங்கத்தில் செய்தார் போல் அழகு
தண்ணீரில் வேகும் மஞ்சள் நிலவு
தன்னை கரைத்து உருவாக்கும் குழம்பு
தண்ணீகரில்லா சுவை நல்கும் மெருகு
எல்லோர் சமையலறையோடும் உறவு
நல்லோர் நலிந்தோர்க்கும் விருந்து
செல்லக் குழந்தை அது அடுப்பங்கரைக்கு 
செல்வக் களஞ்சியமாய் என்று  பராமரிப்பு


இந்தக் சிறு கவிதைப் பலகாரங்கள் இடைத்தீணி தான்.
அடுப்பங்கரையில் அடைத்து ஊதுகுழலால் அடுப்பை  ஊதச்சொன்னாலும் அதைப்புல்லாங்குழலாய் மாற்றும் பக்குவம் பெண்களிடம் உள்ளது என்று தன் கவிதைகள் வழி காட்டியிருக்கும் முனைவர் மரியதெரசாவிற்கு வாழ்த்துக்கள். 

Wednesday, October 18, 2017

வற்றாநதி - கார்த்திக் புகழேந்தி

படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம்  போன்ற பல காரணங்களால் ஊரை விட்டுப்பிரிந்தவர்களின் மனதின் ஆழத்திற்குச் சென்று , அவர்கள் பத்திரமாய் பூட்டி  வைத்திருக்கும்  ஞாபகப்  பட்டாம்பூச்சிகளை , எழுத்து என்னும்  கள்ளச் சாவியைக் கொண்டு திறந்து, சிறகடித்துப் பறக்கச் செய்துவிடுகிறார் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி.


22 கதைகளிலும் நாம் ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருப்போம்.அல்லது அந்த கதாபாத்திரமாக வாழ்ந்த மனிதர்களையாவது நிச்சயமாக பார்த்திருப்போம்.அவர் உபயோகப்படுத்திய சொற்களை வாசிக்கும் பொழுது அந்த ஒரு நொடியாவது நம் ஊருக்குச் சென்று வாழ்ந்துவிட்ட நிறைவு ஏற்பட்டுவிடுகிறது .

எத்தனையோ ஊர், வெளிநாடு என்று சுற்றி விட்டு , எத்தனை வருடம் கழித்து வந்தாலும், நம் சொந்த ஊர் மண்ணில் கால் வைத்து , அந்தக் காற்றைச் சுவாசித்து, நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் பார்த்து உரையாடி அளவளாவிக்கொள்ளும் சம்பவங்கள் பொக்கிஷமானவை.

சொல்லப்படாத காதலை நம் மனதில் என்றுமே புதைத்து வைத்திருப்போம் . பார்வை ஒன்றே போதுமே என்ற பாணியில் தெய்வ தரிசனத்திற்காக காத்திருப்பதைப்போல நம்மை வசீகரமாய் ஈர்த்தவர்களுக்காக ஏங்கியிருப்பதும் ஒரு அலாதியான விஷயம்தான்.உறங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கு உசுப்பேற்றி நம் பழைய காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டு  நம்மைப் பித்துபிடித்தவர்களாய் அலையவைப்பதில் எழுத்தாளருக்கு அப்படி என்ன சந்தோஷமோ என்று தெரியவில்லை.



தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள மனிதர்களையும், அந்த வாழ்க்கைச் சூழலையும் நம் கண்முன்னே கொண்டுவருபவர், அங்கிருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் அந்த வாழ்வியல்களையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். ஒரு ஊருக்கு என்று இருக்கும் பிரசித்திப் பெற்ற உணவுகள், உணவகங்கள், அடையாளங்களை நம் மனதில் எளிதாய் பதிய வைத்துவிடுகிறார்.

நகரங்களில் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நமக்கு ஏற்றவாறு நாம் மாற்றிக் கொண்டாலும் , அன்றைய கொண்டாட்டங்களின் நினைவலைகள் நம் நெஞ்சத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.

திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஊரைப்பற்றிய நினைவுகளும் , பால்யகால ஞாபகங்களும் உயிர்பெற்று நம்மை நிச்சயமாய் தொந்தரவு செய்யும்.
அதுவே வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  என்றால் எங்கள் மண்ணின் மனத்தை நுகர்ந்துபார் என்று போட்டிக்கு கூப்பிடுவது போல அவர்களது அனுபவங்களையும் வாழ்வியலையும் எழுதத் தூண்டிவிடும் ஆற்றல் மிகுந்த பாசமான கலகக்காரர் இந்த எழுத்தாளர்.



இவரது எழுத்துக்களால் இயற்கை, இயற்கை விவசாயத்தின் மேல் காதல்  துளிர்கிறது. ஊருக்குப் போய் நான்கு மாதங்கள் ஆகிறதே என்று ஏற்பட்ட ஏக்கத்தீயில் எண்ணையை ஊத்திவிட்டார் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்.

Tuesday, October 17, 2017

நகர்வலம் - பூக்களைக் கொண்டு செல்கிறோம்... கசக்கி விட வேண்டாம்

அதிகாலை நேரத்திலே  கண்களை விழித்தும் விழிக்காமலும், குழந்தைகளை பரபரப்பாக தயார் செய்து  வேக வேகமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களில் ஏற்றி அனுப்புகின்றோம்.

https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0Tk5vQXRER1diVkE/view?usp=drivesdk

நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பள்ளி  நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுபவை அல்ல என்பது கொஞ்சம் அதிர்ச்சியளிக்கும் தகவல் தான்.


 பெரும்பாலான பள்ளிகளில், பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு செய்யும் செலவைவிட போக்குவரத்து வசதிக்காக  செய்யும் செலவு நம்மை மலைக்க வைத்துவிடும்.  குழந்தையை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் திரும்பி  அழைத்து வருவதற்கும் பள்ளி நிர்வாகத்தில் இருந்தே தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. போக்குவரத்திற்காக பள்ளி நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் தொகையைவிட இந்தத் தனியார் நிறுவனத்தினர் மூன்று மடங்கு  குறைவான தொகையை பெற்றோர்களிடமிருந்து வசூலித்து கொள்கின்றனர்.    

பள்ளி நிர்வாகத்தின் போக்குவரத்து வசதியை உபயோகிக்க வேண்டும் என்றால் வருடத்தின் ஆரம்பத்திலேயே அந்த முழு வருடத்திற்கான போக்குவரத்து   கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்திவிட வேண்டும். அந்தக் கட்டணம் பல பள்ளிகளில் லட்சங்களைத் தாண்டி விடும் என்பது மறைக்கப்பட்ட உண்மை .
இதுவே தனியார் நிறுவனத்தின் மூலம் நம் குழந்தைகளின் போக்குவரத்து வசதியை முடிவு செய்கிறோம் என்றால் பள்ளி போக்குவரத்து கட்டணத்தை காட்டிலும்  மிகக்குறைந்த தொகையை மாதாமாதம் கட்டணமாக செலுத்தி கொள்ளலாம்.

இந்தத் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பள்ளிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அவர்களுக்குள் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கத்தான் செய்கின்றது. பள்ளி நிர்வாகத்தின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்துகின்றோம்  என்றால்  நமது  பிஞ்சுக் குழந்தைகள்  அமர்ந்து கொண்டு பயணம் செய்வதற்கு பயணஇருக்கை  நிச்சயமாக கிடைத்துவிடும். இதுவே குறைந்த கட்டணத்தில்  இயக்கப்படும்   தனியார் நிறுவனத்தின் வழியாக குழந்தைகளுக்கு போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்தோமென்றால் நம் குழந்தைகள் உட்கார்வதற்கு பயண இருக்கை கிடைப்பது நிச்சயம் அல்ல. 

எவ்வளவு நேரமானாலும் நமது பிஞ்சுக் குழந்தைகள் கால்கடுக்க நின்று கொண்டு பயண நேரம் முழுவதும் பயணிக்க வேண்டிய அவலமும் நடக்கத்தான் செய்கின்றது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் தங்களை விட சிறிய குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்கின்றார்கள்.பள்ளி வாகனங்கள் வேகமாக செல்லும் பொழுது திடீரென்று சில வேகத்தடைகள் ஏற்படும்பொழுது மடியில் இருக்கும் சிறு குழந்தைகள் கீழே விழும் வாய்ப்பும் அதிகமாய்த் தான் இருக்கின்றது.




பெண் குழந்தைகள் இருக்கும் பள்ளி வாகனத்தில் நிச்சயமாக ஒரு பெண் பணியாளர் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் அதனை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்று பேதம் இல்லாமல்  வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது நம் குழந்தை பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் பள்ளி வாகன ஓட்டுநர் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது நாம் அறிந்த உண்மைதான்.

இவ்வகையான சம்பவங்களை நினைவில் கொண்டாவது பள்ளி நிர்வாகம் வாகன ஓட்டுனர்களை கண்காணிக்க வேண்டியிருக்கிறது.
இதுபோன்ற சில சம்பவங்களினால் அன்பாக பழகக் கூடிய பள்ளி வாகன ஓட்டுநர்களும் சந்தேக பார்வைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதும் வருத்தப்பட வைக்கும் உண்மை. பள்ளி வாகனங்கள் உறுதியானவையாக இல்லாமல் ஓட்டை உடைசலுடன் இருக்கத்தான் செய்கின்றன. பல கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி நிறுவனங்கள் பள்ளி  வாகனங்களின் தரத்தில்  அலட்சியம் காண்பிப்பது ஏற்புடையதாக அல்ல. பள்ளி வாகனத்தில் ஓட்டை ஏற்பட்டு அது ஒரு குழந்தையின் உயிரைப் பலிவாங்கியது நம்மால்  எளிதில் மறக்க முடியாத துன்பமான சம்பவம்.




அரசின் உத்தரவுப்படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில்தான் வண்ணம் பூசப்பட்டிருக்கவேண்டும் என்று விதிமுறை விதித்திருந்தாலும் பல பள்ளிகளும், கல்லூரிகளும்  அதனை பின்பற்றுவதே இல்லை.
வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது இது போன்ற மஞ்சள் நிற வண்டிகளை கண்டவுடன் நம்மையறியாமல் அந்த வண்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முற்படுவோம் என்பதனால்தான் அரசு வண்ணம் விஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது.

காலை நேரங்களில் பல பள்ளி வாகனங்கள் வேகமாக போவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகின்றது .பள்ளி நிறுவனங்கள் பள்ளி வாகன ஓட்டுநர்களை நியமிக்கும் பொழுதும்  திறமையானவர்களாகவும்  , அனுபவ முதிர்ச்சி  உடையவர்களாகவும் தேர்வு செய்வது அவர்களுக்கும் நல்லது நம் குழந்தைகளுக்கும் நல்லது.வருங்கால இளைய தலைமுறைகளை பாதுகாப்புடன் பேணிக் காக்கும் பொறுப்பு நம் கையில்தானே இருக்கிறது. அன்போடும் அக்கறையோடும் அவர்களைப்  பாதுகாப்போமா ?

Monday, October 16, 2017

நகர்வலம் - சுறுசுறுப்பாகட்டும் சுவை மொட்டுக்கள்

வடசென்னை ஏரியாக்களை ஒரு வலம் வந்தோம் என்றால் வாயில் நுழையாத பெயரைக் கொண்ட பல வகையான உணவுகளைப் பெயர் பலகைகளில் படிக்கவும், பார்க்கவும், ருசிக்கவும் நேரலாம்.


பாரிமுனையின் சாலைகளில்  மாலை நேரங்களில் சிறிய மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு  பெரிய தோசை கல்லில் பரபரப்பாய் விற்றுக் கொண்டிருக்கும் பர்மிய உணவுகளுக்கு ஏககிராக்கியாய்தான் இருக்கும்.

நம் தலைநகருக்கு என்று சில பிரத்யேகமான உணவு வகைகள் இருந்தாலும் பர்மாவிலிருந்து வந்த உணவு வகைகளான அத்தோ , பேஜோ,  மொய்ங்கோ , மோலசம் போன்ற வித்தியாசமான உணவுகளை ஆர்வத்துடன் சுவைக்கும் ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருக்கத்தான்  செய்கிறார்கள்.

பச்சரிசி மாவில் சிறு சிறு கொழுக்கட்டைகள் செய்து அவித்து, தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருக்கிறார்கள். அதை ஒரு குவளையில் அள்ளிப்போட்டு, வெள்ளப்பாகு, பாதாம் பிசின் சேர்த்து தளும்பத் தளும்ப தேங்காய்ப்பால் ஊற்றிக் கலக்கித் தருகிறார்கள். குளு குளுவென்று இருக்கிறது. இதுதான் மோலசம்  பானம்.

ஒரு சில உணவு வகைகள் நூடுல்ஸ் போன்று இருப்பதனால் ,
ஏதேனும் ஆபத்து  ஏற்படுமோ என்ற பயப்படத் தேவை இல்லை. அரிசி மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து சப்பாத்தி போல் பிசைந்து ,  அதை அச்சிட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். பூண்டு , வறுத்த வெங்காயம் , கொத்துமல்லி , புளி ,எலுமிச்சை ,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து  முட்டைக்கோஸ் சேர்த்தால் அத்தோ.பேஜோ என்பது தட்டை போலிருக்கும். மொய்ஞா  வெஜிடபிள் சூப் வகையைச் சார்ந்தது. ஒரு முழு  
குவளை மொய்ஞா குடித்து முடிக்கையில் நம் வயிறு நிறைந்திருக்கும்.
இந்த உணவுகளின் பெயர்கள் வாயில் நுழையவில்லை என்றாலும் உணவு வகைகள்  ருசியாக வாயினுள் நுழைந்து விடும். 

பெரும்பாலும் பர்மா உணவுகளில் வேகவைக்காத பச்சைக் காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்குத் தீங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. எளிதில் ஜீரணம் ஆகி விடுகின்றது. இதனுடன் பரிமாறப்படும் வாழைத்தண்டு சூப்  கிட்னி மற்றும் குடலில் கல்லை  கரைக்கக்கூடிய ஆற்றல் உள்ள மருத்துவ குணம் உடையதாக விளங்குகிறது.

பர்மிய உணவுகளிலும் சைவ அசைவ உணவு வகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. முட்டை, கருவாட்டுக் குழம்பு, இறைச்சி போன்றவற்றை பக்குவமாக சேர்த்து அசைவ அத்தோ செய்யப்படுகிறது

பெரும்பாலும் சாலையோரங்களில் விற்கும் உணவுகளில் 
சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்று ஒரு சிலர் கொடி பிடிக்கிறார்கள் என்பதற்காகவே உணவுகளை விற்பவர்கள் கையுறை போட்டுக் கொள்கிறார்கள்.ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் வெறுங்கையில் அப்பணியாளர்கள் அத்தோ போன்ற உணவுகளைத் தயாரித்துக் தரும் பொழுதுதான் சுவை கூடுதலாக இருக்கின்றது என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகின்றார்கள்.

ஒரு  சிலருக்கு சாலையோர உணவகங்களில்  உணவுகளை சாப்பிட்டவுடன் உணவு விஷமாகி விடுவதும்  நடக்கத்தான் செய்கின்றது . குறைந்தபட்ச சுத்தத்தைப் கருத்தில் கொண்டு சாலையோர உணவு    கடைகளைத் தேர்வு செய்வது நமது கையில் தான் இருக்கின்றது.   

பர்மாவிலிருந்து திரும்பிய நம் தமிழர்களின் வாழ்வாதரத்திற்காக நம் அரசாங்கம் பல பகுதிகளையும் தொழில்களையும் ஒதுக்கி தந்திருந்தாலும் இந்த பர்மிய உணவுக் கடைகள் அவர்களுக்கு வாழ்வில் ஏற்றத்தை தருவதுடன் நமக்கும் பர்மிய உணவுகளை சுவைத்துப்  பார்க்கும் வாய்ப்பைத் தருகின்றது.     


அரபு நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சவர்மா எனப்படும் அசைவ உணவும் தற்பொழுது பல உணவகங்களில் கிடைக்கின்றது.  ஒரு பெரிய இரும்புக் கம்பியில் அடுக்கடுக்கான  கோழி இறைச்சித் துண்டுகளை அடிக்கி வைத்து சுற்றிலும் நெருப்பு மூலமாக வேக வைத்து   பின்பு அதை கொஞ்சம் ஓரமாக அறுத்து  எடுத்து  ஒரு ரொட்டியில் வைத்து சுற்றி கொடுப்பார்கள். உப்பு நீரில் ஊற வைத்த கேரட் ,மிளகாய், முள்ளங்கி தொட்டுக் கொள்வதற்காகத் தரப்படும்

முறுக்கு சாண்ட்விச் எனப்படும் முறுக்கு இடையீட்டு ஈரொட்டிகள் ஜெயின், வடநாட்டு உணவுகள்  கிடைக்கும் சௌகார்பேட்டை போன்ற இடங்களில் மிகப் பிரபலம்.ரொட்டித் துண்டுகளுக்குப் பதிலாக முறுக்குகளுக்கு நடுவே சில காய்கறித் துண்டுகள் இடம்பெறும். தக்காளி , வெள்ளரிக்காய் , புதினாவின் சுவை நம்மை மயக்கும் .  அதிலும் பாலாடைக்கட்டி நிரப்பப்பட்ட முறுக்கு இடையீட்டு ஈரொட்டிகள் இன்னும் சுவையாக இருக்கும்.


 ஜில் ஜிகர்தண்டா என்று மதுரைப் பகுதிகளில் கடற்பாசி, பால், சக்கரை, ஜவ்வரிசி, நன்னாரி, பனிக்கூழ், சர்பத் போன்றவைகள் கலந்து தயாரிக்கப்படும்   பிரபலமான பானம் தற்பொழுது நம் மாநகரத்திலேயே கிடைப்பதால் தெற்கு திசையில் வாழ்ந்து தற்பொழுது தங்கள் மண்ணின் உணவுகளுக்காக ஏங்கும் மக்களுக்கு கொண்டாட்டம் தான்.


நட்சத்திர உணவு விடுதிகளில் சுவையான பிரபலமான உணவுகளை நாம் வாங்கி உண்டாலும் கிடைக்காத மன நிறைவு இந்த ரோட்டோர கடைகளில் வாங்கி உண்ணும் பொழுது நமக்கு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதுபோன்ற சிறு குறு வியாபாரிகள்    தங்கள் சுவைமிகுந்த உணவுகளால் உணவுக்காக நாம்  செய்யும் செலவுகளை கணிசமாக குறைக்கின்றனர். இதுபோன்ற சாலையோரக் கடைகளில் நம் நண்பர்களுடன் நின்றுகொண்டே சாப்பிட்டாலும்  நமது கால்கள் ஏனோ வலிப்பதில்லை.

சாப்பிட்ட உணவுகளையே சுவைத்து சோர்வானவர்கள் நிச்சயமாக நம் தலைநகரிலேயே கிடைக்கும் விதவிதமான சுவையான உணவுகளை சுவைத்து விட்டு வரலாம். சோர்ந்து போன நம் சுவை மொட்டுக்களுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தரலாம்.சுறுசுறுப்பாகட்டும் நம் சுவை மொட்டுக்கள் சிறக்கட்டும் நம் சாலையோர வணிகர்களின் வியாபாரம்.

நகர்வலம் - நடைபாதைக் கடைகள் வழியே ஒரு நடைப்பயணம்

உணவோ, பொருளோ எதுவுமே வாங்கி பணத்தை நாம் செலவழித்துவிடக்கூடாது , சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நம்மை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேச் சென்றாலும் , நம் தவத்தைக் களைப்பதற்காகவே இருப்பவைதான் இந்த நடைபாதைக் கடைகள். பெரிய குளிர்சாதன வசதி செய்யப்பட்டக் கடைகள் நம் பணப்பையை பதம் பார்த்துவிடும் என்று ஒதுங்கிச் செல்வோம்.ஆனால் இந்த நடைபாதைக் கடைகளை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிடமுடியாது.



விலைமலிவாய் இருப்பது போன்றே தோன்றும். சொகுசுக்கடைகளில் மேலாண்மை படித்த பட்டதாரிகளுக்குத் தெரியாத வித்தைகளும் வார்த்தை ஜாலங்களும் இவர்களுக்குத் தெரிந்திருக்கும். பெரிய கடைகளில் வரவேற்பாளர்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில்   நம்மை வரவேற்கும் பொழுதும், பொருள்கள் வாங்கியபின் கொடுக்கப்படும் ரசீதைப் பார்த்தாலும் குளிர்ந்த சூழல் உள்ளக் கடையிலும் நமக்கு நிச்சயமாக வியர்க்கும். 

ஆடம்பரக் கடைகளில் பொருட்களையும் உணவுகளையும் அதிக பணம் கொடுத்து வாங்கினால்தான் மரியாதை, சுகாதாரம் என்று  நினைப்பவர்கள், நாம் வாங்கும் பொருளுக்கு அங்கு போடப்பட்டிருக்கும் வண்ண மின்சார விளக்குகள், அலங்காரம், குளிர்சாதனவசதி அனைத்துக்கும் சேர்த்துத்தான் பணம் வசூலிக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


நடைபாதைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து பொருள்களும் தரமற்றவையாகவும், சுகாதாரமற்றதாகவும் இருக்கும் என்ற ஒரு பரவலான நம்பிக்கை பல மனிதர்களிடயே காணப்படுகிறது.பெரிய பெரிய கடைகளில் அதிக விலையில் விற்கும் சாதாரணப் பொருட்களைக்கூட வாய்மூடி  வாங்கிக்கொள்ளும் சிலர் நடைப்பாதையில் கடைவைத்திருப்போரிடம் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் மாபெரும் பேச்சாளர்களாகவும் மாறுவது ஆச்சர்யமாக இருக்கும்.

நடைபாதைக் கடைவைத்திருப்பவர்களிடம் சில ரூபாய் பேரம்பேசி பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டால் அவர்கள் முகத்தில் தோன்றும் பிரகாசமும் பெருமிதமும் சூரியனை மிஞ்சிவிடும். பெரும் தொகையை சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தைவிட சில ரூபாய்களை லாபமாக சம்பாதிக்கும் நடைபாதைக்  கடைவைத்திருப்போரின்வரவு தான் நம் கண்களுக்கு பெரிதாகத் தெரியும்.

நடைபாதைகளிலோ பெரிய கடைகளின் வாசலிலோ கடைபோட்டிருக்கும் சிறு குறு வணிகர்களுக்கு இடத்திற்கான வாடகை செலவு இல்லை என்றுதான் பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைத் அந்த பெரிய கடைக்காரர்களின் வாசலில் வைத்து நடத்த வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்டத் தொகையை அந்த பெரிய கடைக்காரர்களுக்கு கொடுத்துச் சரிகட்டத்தான் வேண்டி இருக்கிறது. 

இடஆக்கிரமிப்பு,  போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள் என்று
காவல் துறையினரின் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் அதிகாரம் உள்ளவர்களால் அவர்கள் பல இடங்களில் நசுக்கப்படுவது மறுக்கமுடியாத உண்மை. 

பல இடங்களில்,  மொத்தமாக மட்டுமே கிடைக்கும் ஏற்றுமதிக்கான உடைகளையோ பொருட்களையோ இந்த சிறு குறு வணிகர்கள் தான் மொத்தமாக வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதற்கான முக்கியப் பங்கை வகுக்கின்றனர். சாலை ஓரக் கடைகளில் கிடைக்கும் பல சுவையான உணவுகள் ஐந்து நட்சத்திர உணவுவிடுதிகளில் கூட கிடைக்காது என்பது எல்லாரும் ஒத்துக் கொள்ளும் ஒப்பனை இல்லாத உண்மை. 

சாலை ஓரக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளும் பழங்களும் பெரும்பாலும் விவசாயிகள் இயற்கையாய்  விளையவைத்தவையாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.கோடிகளில் பணம் சம்பாதிக்கும்  பன்னாட்டு நிறுவனக் கடைகள்  விலையைக் குறைத்தோ , இலவசமாக சில காய்கறி கனிகளையோ கேட்ட அளவிற்கு மேலாக கொடுப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஆனால் நம்மிடம் அன்போடும் உரிமையோடும் பேசி விலையைக் குறைத்தோ சில காய்கறிகளைக்  கொசுறுகளாய்க் கொடுக்கும் அன்பு மனம் நடைபாதைக் கடைக்காரர்களுக்கே உரித்தானது.

அவசரமாகச் செல்லும் வழியில் பிய்ந்து போன காலணியைச் சரிசெய்வதற்கு சொகுசுக் காலணிகடைகளையா நம் மனம் நாடுகின்றது.
 நடைபாதைக் கடையில் அமர்ந்திருக்கும் நண்பர்களைத் தானே நம் கண்கள் தேடுகின்றது.நடைபாதைக் கடைகளில் கிடைக்காத பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா என்ன? தலை முதல் கால் வரை அணிந்து கொள்வதற்கான உடை,  ஆபரணத்தில் தொடங்கி உணவு , உபோயகிக்கும் பொருள் வரை அனைத்துப் பொருட்களையும் நம் கண்பார்வையில் வைத்து விடுகிறார்கள். அதில் ஏதேனும் ஒரு பொருளின் வடிவமோ நிறமோ பிடித்துவிட்டால் நாம் நிச்சயமாக வாங்கிவிடுவோம். நாம் பெரிய கடைகளில் தேடி அலைந்தப் பொருட்களைக் கூடத் தெருவோரக் கடைகளில் எளிதாக வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.




வெயிலோ மழையோ, காற்றோ புயலோ எதுவாக இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக நடைபாதையில் கடைவைத்திருக்கும் அன்பர்கள் அல்லல்படவேண்டியதாய்த்தான் இருக்கிறது. மனச்சோர்வுடன் இருந்தாலும் ஒரு நீண்ட தெருவின் நடைபாதைக் கடைவழியே நடந்து சென்றோமென்றால் எத்தனைவகையான மனிதர்களை வேடிக்கைப்பார்க்கமுடிகிறது. பிடித்த உணவுகளை ருசித்து மனதைக் கவர்ந்தப் பொருட்களை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம் என்றால் மனச் சோர்வு  பல தொலைவு ஓடியிருக்கும் தானே?...நாமும் செல்லலாமா நடைபாதையில் ஒரு பயணம்.....

Sunday, October 15, 2017

முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு -அகரமுதல்வன்

திண்டுக்கல் தமிழ் பித்தன் வரைந்திருக்கும்  அட்டைப்படத்திலே இருக்கும் சிவப்புநிறத்து  நவீன வரைபடத்தில் எனக்கு மட்டும் தான் கொன்றுகுவிக்கப்பட்ட மனிதர்கள், கூர்மையான கோடாரிகள், கொடூரமான கண்கள் என தெரிகின்றதோ....



தொகுப்பில் இருக்கும் பத்து கதைகளிலும் காதல், அன்பு, நட்பு,நம்பிக்கை, நாட்டுப்பற்று என்று பலவகையான உணர்ச்சிகள் இழையோடி இருந்தாலும் போர், மரணம், வதை போன்று வலியும் வேதனையும் ஏற்படுத்தும் உணர்ச்சிகளே மேலோங்கி நம் மனதை கனக்க மட்டுமல்ல கண்களையும் பனிக்க வைக்கும்.

ஆசிரியர் அகரமுதல்வனின் சிறுகதை தொகுப்பே கவித்துவமாக இருப்பதை உணர்ந்த பொழுது, அவரின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்கும் ஆர்வம் அனிச்சையாய் ஏற்படுகின்றது.



'இருட்டிய வானத்தில்  சிறுசிறு காயங்களைப்போல நட்சத்திரங்கள் முந்திக்கொண்டு மின்னின'. இரவு நேரத்தில் வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உடம்பில் ஏற்பட்ட புண்களாகவும்  காயங்களாகவும் தெரிவது இரணம்.

'அவளின் பிம்பம் சினைப்பர் ஒளியைப் போல என் மீது படர்கிறது'. காதலையும் துப்பாக்கிச்சூடு வழியாய்த்தான் போரை எதிர்கொண்டவனால் வெளிப்படுத்த முடியும் என்று உணர்கையில் ஏற்படும் மின்அதிர்வு, நடுக்கத்தை நமக்கு எளிதாய் கடத்திவிடுகிறது.
'அவனின் கண்கள் வெடிக்காத கைக்குண்டைப் போல இறுகிக் கிடந்தது'. இவர் கூறும் உவமைகள் அனைத்தும் போர்,யுத்தத்தையே சுற்றியே வருவது வாசகர்களை மிரட்டத் தவறவில்லை.

'அலைகள் ஒன்றன்மீது ஒன்றுவிழுந்து கரைக்கு வருகிற பொழுது தழுவலின் முத்தங்கள் நுரைபொங்கி இனிக்கத் தொடங்கியிருக்கும்.'
கடல்அலைகளைக் கொண்டு காதலை இதைவிடச் சிறப்பாய் சொல்லிவிட முடியுமா என்ன?


குசினி,சப்பாத்துக்கள்,தேத்தண்ணி, போன்று அர்த்தங்கள் தெரிந்து கொள்ளத் தூண்டும் வார்த்தைகள் புத்தகம் முழுவதும் விரிவிக்கிடக்கின்றது.கதைகளில் வரும் அழகான தமிழ்பெயர்களை
வாசிக்கும் பொழுது நாவில் தித்திப்பு தானாய் ஏற்பட்டுவிடுகிறது

மரணத்தை எதிர்பார்க்கும் ஆர்வம், அதனை விடுதலையாக எடுத்துக் கொள்ளும் மனம், மகன் இராணுவத்தின் பிடியில் இருப்பதைவிட போரில் உயிர்துறத்தல் மேல் என்று எண்ணும் தாய்மார்கள், மரணம் சம்பவித்தால் மொத்தக்குடும்பத்துக்கும் சம்பவிக்க வேண்டும் என்ற வேண்டுதல் நமக்குள் பதட்டத்தையும், பயத்தையும் அதிகரிக்கின்றது.

முஸ்தபா யாரென்று தெரியும் பொழுது நமக்கும் இனம்புரியாத அன்பு ஏற்படுகின்றது.மிக்-27 விமானங்களை இந்தியாதான் வழங்கியது என்று தெரிந்தவுடன் 'உன் மூதாதயர்கள் வாலின் மூலம் இந்தத் தேசத்தை எரித்ததைப் போன்று இன்றும் வானிலிருந்து எரிக்கிறார்கள்' என்ற கூற்று நமக்குள் அவமானத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

தெரிந்து கொள்ளப்படாத நம் சகோதர சகோதரிகளின் வலியைத் தெரிந்து கொள்ளும் பொழுது தடுக்கமுடியாத குற்ற உணர்வில் இருந்து நம்மால் நிச்சயம் தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.

Saturday, October 7, 2017

சூரியப் பெண்ணே - குமரி உத்ரா

28 கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சாயலில்  காதல், நகைச்சுவை, பெண்களோட காதல் தோல்வி, குடும்ப வாழ்க்கை, விவசாயம், பெண்கல்வியோட முக்கியம் என்று பல உணர்வுகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கின்ற வகையில் இருக்கின்றது.

சிறுகதைகள் வடிவில் சில கதைகள் இருந்தாலும் ,ஒரு பக்கக் கதைகள் சாயலிலும் பல கதைகள் இருக்கின்றது. ஒரு கதை ஆரம்பிக்கும் பொழுது வாசகர்களுக்கு ஒரு வகையான எண்ணத்தையும் புரிதலையும் கொடுத்துவிட்டு அந்த மனநிலையோடவே கதை முழுவதுமாக பயணிக்க வைத்து, கடைசியில வேற ஒரு பரிணாமத்தில்  கதையை முடிக்கும் பொழுது நமக்கு சின்ன அதிர்ச்சி கலந்த திருப்பத்தை கொடுக்கிறார் குமரி உத்ரா.  இதுதான் இவர்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி.

இவரின் எழுத்தில் நேர்மறைத்தன்மை நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற எல்லா மனிதர்களும் நல்லவர்களாகவும், நல்ல நிகழ்வுகளும் நம்மைச் சுற்றி நடந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த கதைகளுள் ஒரு கதாபாத்திரம் எட்டாத தூரத்தில் யாருக்கும் தெரியாத
விண்மீனாய் வாழ்வதைக் காட்டிலும் அனைவருக்கும் தெரிந்து நொடியில் மறைந்து விடும் மின்னலாய் வாழ்வது நல்லது என்று சொல்லும் ஒரு  வசனம் வாழ்வியல் உண்மையை சொல்வதாக அமைந்திருக்கிறது.

ஒரு கருத்தை வெறும் கருத்தாகச் சொன்னால் நம் மனதில் ஏறாது. அதுவே  உவமையுடன் உவமேயத்துடன் கூறும்பொழுது நம் மனதில் நிற்கும் வாய்ப்பு அதிகம்.
இவருடைய கதைகளை ஒலிச்சித்திரம் ஆக வானொலியில் கேட்கும் பொழுது சுலபமாக நம்மால் அக்கதைகளை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

'எனக்குள்ளே காதல் பயிரை வளர்ப்பதற்குள் நித்யா அறுவடை செய்துவிட்டாள். '
' மனதில் ஓரத்தில் அகல் விளக்காய் எரியும் ஆசை'  இப்படி சிறுகதைகளில்   இவர் உபயோகப்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளைப் பார்க்கும் பொழுது  இவர்  ஒரு சிறந்த கவிதாயினி  என்பதை நம்மால் உணர முடிகிறது. தலைப்புகளும் கவித்துவமாக இருப்பதை மறுக்க முடியாது.

சூரியப் பெண்ணே என்னும் தலைப்பு பெண்கள..., ஒரு மெழுகுவர்த்தியாய் இருந்து தன்னைத் தானே உருக்கி கொள்வதை விட , குடும்பத்தில் சூரியனாய்  பிரகாசித்து, மற்றவர்களுக்கு வாழ்வு எனும் ஒளியை தர முடியும்.கதிரவன் தோன்றினால் இந்த உலகமும், இயற்கையும் ஒளி பெறுவது போல , பெண்களினால் இந்த புவியும் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை..என்ற கருத்தை தான் எனக்குள் விதைத்தது.

Monday, October 2, 2017

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

பணமுதலை என்று கேள்விப்பட்டிருப்போம்.. அதை எடுத்துரைப்பது போலவே இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் தைமூர்  பணநோட்டில் சந்தோஷ் நாராயணன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்  முதலை வாயைப் பிளந்து நம்மை விழுங்குவதற்காக காத்திருக்கின்றது. தைமூர் மண்ணில் 5 முதலீட்டாளர்களையே  5 முதலைகளாாக சித்தரிக்கின்றார்.




உலகத்திலேயே மிக விலை உயர்ந்த காபி வகையான லூவாஃக்  புனுகுப் பூனையின் மலம் என்று தெரியவரும் பொழுது அணில் கடித்த கொய்யா என்பது போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பறவைக் கூடு, வெள்ளை அட்டை, கருப்பு அட்டை போன்ற அட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப் வகைகள் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும் , ஆண்மையை அதிகரிக்கும் என்ற கூற்றுக்களை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

ஆந்திரத்தில் குறிப்பாக திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வளரும் செம்மரக்கட்டைகளுக்கு இவ்வளவு போட்டிகள் இருப்பதற்கான காரணங்கள் மற்ற நாட்டுக்காரர் கூறும் பொழுதுதான் நமக்குப் புரிகிறது. தைமூர் நாட்டின் வளங்கள், வறுமை, பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களைச்  சொல்வது போன்றே நம் நாட்டில் பழக்கத்தில் இருந்துவரும் பல விஷயங்கள் நமக்கு தெளிவுபடுத்தப்படுகின்றன.

தர்மு, காவியன், சந்தோஷ், தினேசன்,  ரஷக்கிடோ , அல்பி, குண்டூர், ரோமியோ,அஜய், ஏசா என மனிதர்களில் இத்தனை முகங்களா என்ற எண்ணம் தோன்றினாலும் கூட்டுத்தொழில் என்கின்ற பொழுது அத்தனை மனிதர்களையும் அனுசரித்துத் தான் போக வேண்டியிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.

ஒரு நாட்டின் இயற்கை வளத்தை பணமாக மாற்றிவிட எத்தனைபேர் துடிக்கின்றார்கள்... சீனக்காரர்கள் , தைமூர் நாட்டு வாசிகள், சிங்கப்பூர் வாசிகள் , இலங்கைத் தமிழர்கள் , இந்தியர்கள் என்று ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பண்பு , குணநலன்கள் நிகழ்ச்சிகளுடன் சுவாரசியமாக விவரிக்கப்படுகின்றது.

கடல் கடந்து வேறு நாட்டில் வியாபாரம் செய்ய வந்திருந்தாலும் அந்நாட்டில் பசிதீர்த்த மைக்கிலுக்கும் தன் நாட்டில் தனது பசி தீர்த்த நண்பனான ஜேக்கப்பைப் போலவே உப்பு நோய் வந்திருந்தது , இருவருமே ஒன்றுதானோ என்று நினைக்கத் தோன்றியது.

தனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தன் நண்பன் வேற்று நாட்டில் பசியுடன் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் தனது துயரங்களை மறந்து நண்பனை அன்போடு அரவணைத்துக் கொள்ளும் ராஜா மனதில் நிற்கிறார்.   திருமணம் செய்வதற்கு இத்தனை செலவு, கடன் என்றால் ஏதோ ஒத்துக் கொள்ளலாம்.ஆனால் இறப்பிற்குக் கூட இறந்தவரே துன்பப்படும் அளவு அவரது உறவினர்கள் செலவு செய்யவேண்டும்   என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது  அவர்கள்இறப்பைத் தள்ளிப்போடுவதற்கான காரணம் புரிகிறது. 

மால்பரோ சிகரெட் பாக்கெட்டுகள், பிண்டாங் பியர்கள் மட்டுமே அவர்களின் சந்தோசத்திற்கும் போதைக்கும் போதுமானதாக  இருக்கின்றது. எந்த நாடாக இருந்தாலும் ஏழைக்கு மட்டுமே உண்பதற்கு ஆபத்தான உணவுகள் போல. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆபத்து விளைவிக்கும் செடாப் நூடுல்ஸ்,  குப்பைக் கீரை, நாய் கறி வறுமையில் உள்ள எளியவர்களுக்கு மட்டும் தான்.



கதைசொல்லியின் கடந்தகால ஹாக்கிப் போட்டி நினைவுகள் அவருக்கு மட்டுமல்ல நமக்கும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. கதையின் ஓட்டத்திலும், கதாபாத்திரங்களின் தன்மையிலும் நாம் ஒன்றிக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது தைமூர் வாழ்க்கை.