உணவோ, பொருளோ எதுவுமே வாங்கி பணத்தை நாம் செலவழித்துவிடக்கூடாது , சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நம்மை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேச் சென்றாலும் , நம் தவத்தைக் களைப்பதற்காகவே இருப்பவைதான் இந்த நடைபாதைக் கடைகள். பெரிய குளிர்சாதன வசதி செய்யப்பட்டக் கடைகள் நம் பணப்பையை பதம் பார்த்துவிடும் என்று ஒதுங்கிச் செல்வோம்.ஆனால் இந்த நடைபாதைக் கடைகளை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிடமுடியாது.
விலைமலிவாய் இருப்பது போன்றே தோன்றும். சொகுசுக்கடைகளில் மேலாண்மை படித்த பட்டதாரிகளுக்குத் தெரியாத வித்தைகளும் வார்த்தை ஜாலங்களும் இவர்களுக்குத் தெரிந்திருக்கும். பெரிய கடைகளில் வரவேற்பாளர்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் நம்மை வரவேற்கும் பொழுதும், பொருள்கள் வாங்கியபின் கொடுக்கப்படும் ரசீதைப் பார்த்தாலும் குளிர்ந்த சூழல் உள்ளக் கடையிலும் நமக்கு நிச்சயமாக வியர்க்கும்.
ஆடம்பரக் கடைகளில் பொருட்களையும் உணவுகளையும் அதிக பணம் கொடுத்து வாங்கினால்தான் மரியாதை, சுகாதாரம் என்று நினைப்பவர்கள், நாம் வாங்கும் பொருளுக்கு அங்கு போடப்பட்டிருக்கும் வண்ண மின்சார விளக்குகள், அலங்காரம், குளிர்சாதனவசதி அனைத்துக்கும் சேர்த்துத்தான் பணம் வசூலிக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நடைபாதைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து பொருள்களும் தரமற்றவையாகவும், சுகாதாரமற்றதாகவும் இருக்கும் என்ற ஒரு பரவலான நம்பிக்கை பல மனிதர்களிடயே காணப்படுகிறது.பெரிய பெரிய கடைகளில் அதிக விலையில் விற்கும் சாதாரணப் பொருட்களைக்கூட வாய்மூடி வாங்கிக்கொள்ளும் சிலர் நடைப்பாதையில் கடைவைத்திருப்போரிடம் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் மாபெரும் பேச்சாளர்களாகவும் மாறுவது ஆச்சர்யமாக இருக்கும்.
நடைபாதைக் கடைவைத்திருப்பவர்களிடம் சில ரூபாய் பேரம்பேசி பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டால் அவர்கள் முகத்தில் தோன்றும் பிரகாசமும் பெருமிதமும் சூரியனை மிஞ்சிவிடும். பெரும் தொகையை சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தைவிட சில ரூபாய்களை லாபமாக சம்பாதிக்கும் நடைபாதைக் கடைவைத்திருப்போரின்வரவு தான் நம் கண்களுக்கு பெரிதாகத் தெரியும்.
நடைபாதைகளிலோ பெரிய கடைகளின் வாசலிலோ கடைபோட்டிருக்கும் சிறு குறு வணிகர்களுக்கு இடத்திற்கான வாடகை செலவு இல்லை என்றுதான் பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைத் அந்த பெரிய கடைக்காரர்களின் வாசலில் வைத்து நடத்த வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்டத் தொகையை அந்த பெரிய கடைக்காரர்களுக்கு கொடுத்துச் சரிகட்டத்தான் வேண்டி இருக்கிறது.
இடஆக்கிரமிப்பு, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள் என்று
காவல் துறையினரின் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் அதிகாரம் உள்ளவர்களால் அவர்கள் பல இடங்களில் நசுக்கப்படுவது மறுக்கமுடியாத உண்மை.
பல இடங்களில், மொத்தமாக மட்டுமே கிடைக்கும் ஏற்றுமதிக்கான உடைகளையோ பொருட்களையோ இந்த சிறு குறு வணிகர்கள் தான் மொத்தமாக வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதற்கான முக்கியப் பங்கை வகுக்கின்றனர். சாலை ஓரக் கடைகளில் கிடைக்கும் பல சுவையான உணவுகள் ஐந்து நட்சத்திர உணவுவிடுதிகளில் கூட கிடைக்காது என்பது எல்லாரும் ஒத்துக் கொள்ளும் ஒப்பனை இல்லாத உண்மை.
சாலை ஓரக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளும் பழங்களும் பெரும்பாலும் விவசாயிகள் இயற்கையாய் விளையவைத்தவையாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.கோடிகளில் பணம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனக் கடைகள் விலையைக் குறைத்தோ , இலவசமாக சில காய்கறி கனிகளையோ கேட்ட அளவிற்கு மேலாக கொடுப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஆனால் நம்மிடம் அன்போடும் உரிமையோடும் பேசி விலையைக் குறைத்தோ சில காய்கறிகளைக் கொசுறுகளாய்க் கொடுக்கும் அன்பு மனம் நடைபாதைக் கடைக்காரர்களுக்கே உரித்தானது.
அவசரமாகச் செல்லும் வழியில் பிய்ந்து போன காலணியைச் சரிசெய்வதற்கு சொகுசுக் காலணிகடைகளையா நம் மனம் நாடுகின்றது.
நடைபாதைக் கடையில் அமர்ந்திருக்கும் நண்பர்களைத் தானே நம் கண்கள் தேடுகின்றது.நடைபாதைக் கடைகளில் கிடைக்காத பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா என்ன? தலை முதல் கால் வரை அணிந்து கொள்வதற்கான உடை, ஆபரணத்தில் தொடங்கி உணவு , உபோயகிக்கும் பொருள் வரை அனைத்துப் பொருட்களையும் நம் கண்பார்வையில் வைத்து விடுகிறார்கள். அதில் ஏதேனும் ஒரு பொருளின் வடிவமோ நிறமோ பிடித்துவிட்டால் நாம் நிச்சயமாக வாங்கிவிடுவோம். நாம் பெரிய கடைகளில் தேடி அலைந்தப் பொருட்களைக் கூடத் தெருவோரக் கடைகளில் எளிதாக வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
வெயிலோ மழையோ, காற்றோ புயலோ எதுவாக இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக நடைபாதையில் கடைவைத்திருக்கும் அன்பர்கள் அல்லல்படவேண்டியதாய்த்தான் இருக்கிறது. மனச்சோர்வுடன் இருந்தாலும் ஒரு நீண்ட தெருவின் நடைபாதைக் கடைவழியே நடந்து சென்றோமென்றால் எத்தனைவகையான மனிதர்களை வேடிக்கைப்பார்க்கமுடிகிறது. பிடித்த உணவுகளை ருசித்து மனதைக் கவர்ந்தப் பொருட்களை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம் என்றால் மனச் சோர்வு பல தொலைவு ஓடியிருக்கும் தானே?...நாமும் செல்லலாமா நடைபாதையில் ஒரு பயணம்.....
No comments:
Post a Comment