பணமுதலை என்று கேள்விப்பட்டிருப்போம்.. அதை எடுத்துரைப்பது போலவே இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் தைமூர் பணநோட்டில் சந்தோஷ் நாராயணன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முதலை வாயைப் பிளந்து நம்மை விழுங்குவதற்காக காத்திருக்கின்றது. தைமூர் மண்ணில் 5 முதலீட்டாளர்களையே 5 முதலைகளாாக சித்தரிக்கின்றார்.
உலகத்திலேயே மிக விலை உயர்ந்த காபி வகையான லூவாஃக் புனுகுப் பூனையின் மலம் என்று தெரியவரும் பொழுது அணில் கடித்த கொய்யா என்பது போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பறவைக் கூடு, வெள்ளை அட்டை, கருப்பு அட்டை போன்ற அட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப் வகைகள் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும் , ஆண்மையை அதிகரிக்கும் என்ற கூற்றுக்களை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
ஆந்திரத்தில் குறிப்பாக திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வளரும் செம்மரக்கட்டைகளுக்கு இவ்வளவு போட்டிகள் இருப்பதற்கான காரணங்கள் மற்ற நாட்டுக்காரர் கூறும் பொழுதுதான் நமக்குப் புரிகிறது. தைமூர் நாட்டின் வளங்கள், வறுமை, பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களைச் சொல்வது போன்றே நம் நாட்டில் பழக்கத்தில் இருந்துவரும் பல விஷயங்கள் நமக்கு தெளிவுபடுத்தப்படுகின்றன.
தர்மு, காவியன், சந்தோஷ், தினேசன், ரஷக்கிடோ , அல்பி, குண்டூர், ரோமியோ,அஜய், ஏசா என மனிதர்களில் இத்தனை முகங்களா என்ற எண்ணம் தோன்றினாலும் கூட்டுத்தொழில் என்கின்ற பொழுது அத்தனை மனிதர்களையும் அனுசரித்துத் தான் போக வேண்டியிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.
ஒரு நாட்டின் இயற்கை வளத்தை பணமாக மாற்றிவிட எத்தனைபேர் துடிக்கின்றார்கள்... சீனக்காரர்கள் , தைமூர் நாட்டு வாசிகள், சிங்கப்பூர் வாசிகள் , இலங்கைத் தமிழர்கள் , இந்தியர்கள் என்று ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பண்பு , குணநலன்கள் நிகழ்ச்சிகளுடன் சுவாரசியமாக விவரிக்கப்படுகின்றது.
கடல் கடந்து வேறு நாட்டில் வியாபாரம் செய்ய வந்திருந்தாலும் அந்நாட்டில் பசிதீர்த்த மைக்கிலுக்கும் தன் நாட்டில் தனது பசி தீர்த்த நண்பனான ஜேக்கப்பைப் போலவே உப்பு நோய் வந்திருந்தது , இருவருமே ஒன்றுதானோ என்று நினைக்கத் தோன்றியது.
தனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தன் நண்பன் வேற்று நாட்டில் பசியுடன் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் தனது துயரங்களை மறந்து நண்பனை அன்போடு அரவணைத்துக் கொள்ளும் ராஜா மனதில் நிற்கிறார். திருமணம் செய்வதற்கு இத்தனை செலவு, கடன் என்றால் ஏதோ ஒத்துக் கொள்ளலாம்.ஆனால் இறப்பிற்குக் கூட இறந்தவரே துன்பப்படும் அளவு அவரது உறவினர்கள் செலவு செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது அவர்கள்இறப்பைத் தள்ளிப்போடுவதற்கான காரணம் புரிகிறது.
மால்பரோ சிகரெட் பாக்கெட்டுகள், பிண்டாங் பியர்கள் மட்டுமே அவர்களின் சந்தோசத்திற்கும் போதைக்கும் போதுமானதாக இருக்கின்றது. எந்த நாடாக இருந்தாலும் ஏழைக்கு மட்டுமே உண்பதற்கு ஆபத்தான உணவுகள் போல. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆபத்து விளைவிக்கும் செடாப் நூடுல்ஸ், குப்பைக் கீரை, நாய் கறி வறுமையில் உள்ள எளியவர்களுக்கு மட்டும் தான்.
கதைசொல்லியின் கடந்தகால ஹாக்கிப் போட்டி நினைவுகள் அவருக்கு மட்டுமல்ல நமக்கும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. கதையின் ஓட்டத்திலும், கதாபாத்திரங்களின் தன்மையிலும் நாம் ஒன்றிக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது தைமூர் வாழ்க்கை.
No comments:
Post a Comment