Monday, October 23, 2017

ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ( காதலியக் கவிதைகள்) - அமிர்தம் சூர்யா

ஒரு சில கவிதையைப் படித்தவுடன் அதரம் என்றால் என்ன என்று என்னுள் கேள்வி ஏற்பட இணையத்தில் தேடி, உதடு என்று அர்த்தம் தெரிந்தவுடன் இது கூடத் தெரியவில்லையே என்று உதடுக் கடித்துக் கொண்டேன். 


அரூபம் என்ற வார்த்தைக்கு உருவமில்லாதவன் என்ற பொருளை அர்த்தப்படுத்திக் கொண்டாலும் , காதலும் காமும் அரூபத்தின் சுவரூபங்களாய்த் தான் நம்முள்ளே நிரம்பிக் கிடக்கிறது . ஆலிங்கனம் ஆரத்தழுவுதலின் அங்கம் என்று புரிய வெட்கம் வந்துகட்டிக் கொள்கிறது.

பாட்டிகளின் நினைவுகளுடன் காதலியையும் குலதெய்வங்களாய்ச் சேர்த்துக் கொள்ள, எப்பொழுதும் அவர்களின் நினைவு சுகமாய் நெஞ்சில் நிற்க ஏதுவாய், இவர் எழுதியிருக்கும் வாக்கியத்தைப் போலவே, 'வார்த்தையாயிருக்கும் நெகடிவ் ஃபிலிம்மை நாம் படிக்கும் பொழுது நம் வாழ்க்கையைத்தான் பிரிண்ட் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம்' என்றே தோன்றியது.


'ஒவ்வொரு நாளும் அவள் நள்ளிரவைக் குழைத்து
தூக்கத்தை தானமாய் அனுப்பிய குறுஞ்செய்தியின்
சொற்களைத் தியானிக்கிறபோது
அவளின் இரவு இங்கு என்னை அணைத்தபடி தூங்கும்'
பெரும்பாலானவர்கள் இந்த கவிதை வரிகளை வாழ்ந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காதலி எத்தனை முறை எந்தெந்த வகையில் தவிர்த்தாலும், மயான காண்டத்தில் முளைத்த நம்பிக்கையாய் அரிச்சந்திரனின் கண்களுக்கு மட்டுமே தெரிந்து விடுகிறது அவளின் தாலியும் காதலும்.

முத்தத்திற்கு எப்படி ஒப்பனையிடலாம் என்று கவிஞர் எடுக்கும் காதல் பாடம் முத்தத்தை மட்டுமல்ல அன்பின் ஆழத்தையும் அழுத்தமாய் பதிவு செய்கிறது.

மாதாந்திர விருட்சம் , கவிஞர் தன்னுள் இருக்கும் பெண்தன்மையைத் தட்டி எழுப்பி எழுதிய கவிதையை , யதார்த்த வலிகளாய் உணர்ந்து கடந்து போக முடியவில்லை.


குச்சிகளைக் கலைத்து விடுவதாய் குற்றம் சாட்டினாலும் , எச்சத்தின்  துர்வாசம் பரப்புவதாய் புகார் சொன்னாலும், கத்தும் குஞ்சுகளை அரவணைக்கும் பேரன்பில் மிதக்கும் உன்மத்தக் காற்று , நம்மை நேசிக்கும் உள்ளத்தையே நமக்கு நினைவூட்டுகிறது.

காதல், காமத்தைத் தாண்டி புரிதல், ஈர்ப்பை நம் மனதிலே பறக்க விடுகிறது இந்த ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்....

No comments:

Post a Comment