காலச்சுவடு,இந்தியா டுடே, தினமணி போன்ற பல பிரபல பத்திரக்கைகளில் பிரசுரமான 17 சிறுகதைகள் கொண்டது இந்த தொகுப்பு. எழுதப்படாத அல்லது சொல்லப்படாத பெண்களின்
உணர்வுகளைப் பதிவு செய்வதனால், நிச்சயமாக பெண்களுக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல், ஆண்களுக்கும் ஒரு புரிதலை கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது இந்த காட்டில் ஒரு மான்.
வெவ்வேறு சூழ்நிலைகள், மனிதர்கள், என்று எழுத்தாளர் கையாண்டிருப்பதால் நமக்கு பரிட்சயமில்லாத வாழ்க்கை முறைகூட பரிட்சயமாகிறது. வடநாட்டு, வெளிநாட்டு வாழ்க்கை, ஒட்டகம், அரவாணிகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குள் இருக்கும் அன்பு,
பூப்பெய்தாத தங்கம் அத்தை என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது.' கிருஷ்ணன் மானத்தைக் காத்தான்... மானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்புரியாமல் வானத்தைக் காட்டும் அயல்நாட்டு வாழ் சிறார்கள்' சிரிப்பதா..? வருத்தப்படுவதா?
கதை சொல்லப்பட்ட காலகட்டங்கள் பல வருடங்களுக்கு முந்தயவையாக இருந்தாலும், அந்த காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்று , இன்னும் நம் மனிதர்களின் குணங்கள் எதுவும் இன்று வரை மாறாமல் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டே இருப்பதை தெரியப்படுத்தத் தவறவில்லை.'நீ எல்லாம் பொம்பளையா?' சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் கேள்வி...
யாரும் எதிர்கேள்விகேட்காத புராணங்கள், பல காலங்களாகச்
சொல்லப்பட்ட வந்த செய்திகளை , வேறு கண்ணோட்டத்தில் கண்டு, புதிதாய் படைக்கப்பட்டிருக்கும் கதைகள் , புராணங்களின் கதைகள் மாற்றத்துடனேயே இருக்குட்டுமே என்று மனம் விரும்புகிறது. 'தூங்கும் விஷ்ணுவின் காலடியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் லஷ்மியை விட தனியாக இன்னொரு பாம்புப் படுக்கையில் தாராளமாகப் படுத்தபடி இருக்கும் லஷ்மியை கற்பனை செய்ய நன்றாய்த் தான் இருக்கிறது.'
வாகனங்களுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள பிணைப்பை விளக்கி ,பின் பெண்களுக்கு வாகனங்களின் மீதுள்ள காதல் விளக்கப்படும் பொழுது என் அம்மாவின் நான்கு சக்கர வாகன ஆசை ஞாபகம் வந்தது.மலை போன்ற திறமை கொண்டிருந்த மனைவியைப் புரிந்து இறுதியில் செண்பகத்துடன் பாடிய ஷண்முகம் கழற்றியது சரிகைச் சால்வையை மட்டுமல்ல ஆண்ணென்ற அகங்காரத்தையும் தான்.
'பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்'. அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்துத்தான் தனி ஒரு உலகை ஏற்படுத்திக்கொண்டார்களா அல்லது வேறுவழியில்லாமல் உண்டாக்கிக் கொண்டார்களா என்ற கேள்வியே என் மனதைக் குத்தியது.
பெண்கள் காதலிகளாக , மனைவியாக, என்று பல பரிணாமங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் பார்வையில் ஆண் காதலும் காமமும் கலந்து வர்ணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம். 'மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றியதாம்'.'வற்றிய நீர்வீழ்ச்சி போல் இறங்கிய தொடைகளும்,கால்களும். வாடி உலர்ந்துபோன பழம் போல் லேசாகக் கிடந்த மென்சிவப்பு ஆணுறுப்பு'
'கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்' பழக்க வழக்கங்களின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து மிடுக்குக்காக சுற்றம் சீரழிக்கப்படுவதை வலியுடன் பதிவு செய்கிறது.' பயணம்' சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுடன் மாரியம்மன் வழிபடப்படும் பொழுது நாமும் அவர்களுடன் சேர்ந்தே கோழிச் சோறைத் தையல் இலையில் சாப்பிட்டு படம் பார்த்து வருகிறோம்.
எழுபதுகளின் காலக்கட்டத்திலேயே பெண்ணியத்தைப் பற்றி எழுதிய சி.எஸ்.லஷ்மி பெயரில் மட்டும் அம்பை அல்ல , ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த எழுத்துலகில் தனக்கென முத்திரை பதித்திருப்பதால் நிஜத்திலும் பேராற்றல் பெற்ற அம்பைதான்.
புத்தகம் வாங்க முடிவு செய்துவிட்டேன்
ReplyDeleteநன்றிகள்
DeleteNice post
ReplyDelete