Tuesday, February 11, 2020

அதிகரித்திருக்கும் இரயில்வே நிலைய வாகன நிறுத்தக் கட்டணம்

நகர்வலம் - மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம்


சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன் சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் கடற்கரை - வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் 75க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் மின்சார இரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இவற்றில் பெரும்பாலான இரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனங்களிலோ இரயில்வே நிலையங்களை அடைந்தபின் இரயில்வே நிலைய வாகனநிறுத்தங்களில் நிறுத்தி வைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில வாகன நிறுத்த இடங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமானதாகவும், சில இடங்கள் அவ்வப்போது ஏல முறையில் தனியாருக்கும் குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்விடங்களில் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி , சைக்கிள்களுக்கு தினகட்டணம் ஐந்து ரூபாய் எனவும், மாதந்தோறும் 100 ரூபாய் எனவும் , பைக்குகளுக்கு தின கட்டணம் பத்து ரூபாய் எனவும் மாதந்தோறும் 250 ரூபாய் எனவும் வசூலிக்கபப்படுகின்றது.



சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் புதியவாகன நிறுத்த கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலாகும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி இரயில் நிலையத்தில் கார்களுக்கு முதல் 2 மணி நேரத்திற்கு 35 ரூபாயும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாய் எனவும், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் உயர்தர நிறுத்தத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பர இருசக்கர வாகன நிறுத்தத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ 25 எனவும் , 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயாகவும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை கடற்கரை, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அரக்கோணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் எனவும், மாதக்கட்டணம் ரூ 200எனவும் , இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூபாய் 15 எனவும், மாதக்கட்டணம் ரூபாய் 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன. இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

இரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் தலைக்கவசங்களை தங்கள் வண்டியுடன் பிணைத்துச் செல்ல வேண்டும். முக்கியமான பொருட்களை வண்டியிலேயே மறந்து விடாமல் எடுத்துச்செல்ல வேண்டும். வாகனங்களை உரிய இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.


பல நூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களிடம் இரயில்வே நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.சில இரு சக்கர வாகன நிறுத்தங்களில் முழுமையாக மேல்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் விட்டுச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலை தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களால் மாற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு சில வாகன நிறுத்தங்களில் வாகன திருட்டு, வாகன சேதங்கள், எரிபொருள் திருட்டு போன்ற புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

No comments:

Post a Comment