Wednesday, February 12, 2020

பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?

நகர்வலம் - பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளிகளிலும் பொதுத்தேர்வு என்றால் ஒருவருடத்திற்கு முன்பே அந்த பாடத்திட்டங்களை நடத்தி, பயிற்சி என்ற பெயரில் அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான பாடங்கள் புறக்கணிப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவாகவே பின்பற்றப்படுவதாக சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள பொதுத்தேர்வுகள் சிறந்த அளவுகோல் அல்ல என்பதை பல சாதனையாளர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள பல வெற்றியாளர்களும் பல சூழ்நிலைகளில் நிரூபித்து இருக்கின்றார்கள். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்க சமூகத்தில் எத்தனையோ வெளிப்புறச்சூழல் அமைந்திருக்கும் பொழுது, பொதுத்தேர்வுகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பொதுத்தேர்வுகளால் நடுத்தர, உயர்தர மக்களைவிட அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை கிராமப்புற மக்களும், மலைவாழ் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களே. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். சிறிய வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் திணறுவார்கள். அதை தேர்வுமுறை ஒழுங்குபடுத்தும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. பள்ளி காலத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இன்று அந்தப்பாடப்பிரிவிலேயே சிறந்த ஆசிரியராக பல குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

பொதுத் தேர்வுகளினால் ஏற்படும் தோல்வி, மாணவர்களின் கல்விபாதையில் இடைநிற்றலை அதிகமாக்கும். இதனால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கும் என்னும் அவலம் அனைவரையும் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்கள் எதிர்கொள்வது கடினம். அடுத்த ஆண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து படிக்க சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சிறு வயதுக் குழந்தைகள் பொதுத் தேர்வுக்கான அழுத்தத்தை சுமக்கத்தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்? என்று பற்பல கேள்விகள் ஏற்படுகின்றன.



பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகவே சிதைக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே சொல்லப்படுகின்றது. பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படுகின்றது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது என்ற பள்ளிக்கல்வித் துறையும் அரசுத்தரப்பில் சில அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க முனைந்தாலும் பொதுத்தேர்வுகளினால் ஏற்படும் விளைவுகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பதுடன் தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி அலைபேசி பயன்பாட்டை குறைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.



ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கப்போகும் சிறுவனை, வேறொரு துறையில் அவன் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு அனுமானிப்பது அவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும் என்பதை நாம் உணர வேண்டும். தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களும், குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே அல்லாமல் இவ்வுலகில் அனைத்து மக்களும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்கள் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் கற்றுத்தர கடமைப்பட்டிருக்கின்றோம்.

No comments:

Post a Comment