Monday, February 10, 2020
நகர்வலம் - உணவகங்களில் இனி ஊட்டச்சத்துப்பட்டியல்
நகர்வலம் - ஊட்டச்சத்துள்ள உணவுகளை இனி உணவகங்களிலும் தேர்ந்தெடுக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆற்றல் தரும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை கார்போஹைடிரேட் என்றும், உடல் கட்டமைப்பிற்கு பயன்படும் புரத உணவுகளை புரோட்டின் என்றும், உடல் செயல்பாட்டிற்கு அல்லது எதிர்ப்பு சக்திக்குப் பயன்படும் உணவுகளை வேதிப்பொருள் என்றும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் செயல்பாட்டினைப் பொறுத்தும் வகைப்படுத்துகின்றார்கள்.
உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலரும் தாங்கள் உட்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார்கள். உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர்கள் உணவகங்களில்கூட தாங்கள் தேர்ந்தெடுக்கும் உணவை அதன் ஊட்டச்சத்தைக்கொண்டே தேர்ந்தெடுப்பதை பார்த்திருப்போம். ஒரு உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றது, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்த பின்னேயே அவர்கள் தங்களுக்கான உணவினை வரவழைப்பார்கள். உணவகங்களிலும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுசெய்வதற்கான சூழல் தற்பொழுது உருவாகி இருக்கின்றது.
உணவில் ஊட்டச்சத்து அளவு குறித்து அக்கறை கொள்வோர் இனி தங்கள் அலைபேசி வழி ஒவ்வொரு உணவுவகைக்கும் செயலியை உபயோகித்தோ அல்லது இணையத்தின் வழியோ அதன் ஊட்டச்சத்து விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உணவகங்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் உணவகங்களின் உணவை நம்பித்தான் செல்கின்றனர். இவ்வாறு, உணவு உண்ணும் நுகர்வோருக்கு எந்த உணவகம் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, உணவகங்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள். நுகர்வோர், உணவகங்களின் உணவுப் பொருட்களை விரும்பி உண்கின்றனர். தற்காலத்தில் உணவகங்களுக்குச் சென்று தான் உண்ண வேண்டும் என்ற நிலைமை மாறி செயலிகளின் வழியாகவும், ஒரு அழைப்பின் வழியாகவும் நாம் விரும்பிய உணவை வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிட முடியும்.
இந்நிலையில் இவ்வாறு உண்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதில்லை. அதற்கான வாய்ப்பும் உணவகங்களால் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்துவதை உணவகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முறையை உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்து உள்ளது.
புரததச்சத்து மனித உடலுக்கு மிக முக்கியமானது. மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள், தோல், முடி, எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் கட்டமைப்பிற்கும் பெரும் பங்கினை வகிக்கிறது.
வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. பொட்டாசியம் முக்கியமாக செல்களின் உள்ளேயும், இரத்தம் மற்றும் மென்மையான திசுக்களிலும், சோடியம் திரவங்களில் உதாரணமாக இரத்த பிளாஸ்மா மற்றும் திசு திரவத்திலும் காணப்படுகிறது. இது போன்ற ஊட்டச்சத்து விவரங்களை அறிந்து கொள்வதன் வழி ஆரோக்கியமான உணவை நாமே தேர்ந்தெடுக்கலாம்.
உணவின் ஊட்டச்சத்து அளவை குறிப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவும் போது உணவகங்கள் பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் உணவைத்தயாரிப்பதுடன், வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெற்று ஆரோக்கியமான உணவுவகைகளை தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, அதன் பிறகு, உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல்நலனுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்த உட்கொள்ளலாம் என்னும் முறை ஆரோக்கியமாகவே பார்க்கப்படுகின்றது. உணவு விலைப்பட்டியலுடன் ஊட்டச்சத்துப்பட்டியலையும் கவனத்தில் கொண்டால் அறுசுவை உணவுடன் ஆரோக்கிய உணவும் சாத்தியமாகும்.
No comments:
Post a Comment