magic box, infobells போன்றவற்றின் சிறுவர் பாடல்களை நிறையவே நம் குழந்தைகளுடன் பார்த்தும் கேட்டும் இரசித்திருப்போம். அது போன்ற இனிமையான பாடல்களை மின்கருவிகளில் நம் குழந்தைகளுக்கு அனுதினமும் தான் ஒளிபரப்பிக் காண்பிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக பெற்றோர்களோ வீட்டில் இருக்கும் உறவினர்களோ இந்த புத்தகத்தில் உள்ள சிறுவருக்கான துள்ளலான பாடல்களை தங்களுக்குப் பிடித்த மெட்டுகளில் பாடிக்காட்டினால் குழந்தைகளுடன் நாமும் உற்சாகமாவது நிச்சயம்.
குழந்தைகளுக்கானப் பாடல்களை பாடவும், இசையமைக்கவும்
முற்படுவோர் இந்த பாடல்களுக்கு இனிமையாக இசையமைத்துப் பாடித்தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புக் கொடுக்கிறது இந்த எளிமையான பாடல் வரிகள்.பொங்கல், போகிப்பண்டிகை, தீபாவளி போன்ற பண்டிகைகளின் சிறப்பு ஆகியவை பாடல் வழியே சொல்லிக்கொடுக்கப்படும் பொழுது சிறுவர்கள் மறக்கவே மாட்டார்கள்.நெகிழிப்பையைத் தவிர்ப்போம், இரத்ததானம், யோகா செய்வோம், விரைவு உணவு வேண்டாம், செய்தித்தாள் படிப்போம், மரம் வளர்ப்போம்,நூலகம் செல்வோம் போன்ற பல நல்ல பழக்க வழக்கங்கள் பாடாலாய்ப் பாடப்படும் பொழுது பசுமரத்து ஆணிப்போல அவர்களின் மனதில் பதியும் வாய்ப்பு அதிகம்.
பாடப்புத்தகங்களில் உள்ள பழைய பாடல்களையே பாடி கற்பிப்பது சலிப்பாய் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த கருத்தான புதுப் பாடல்களை பாடிக் கற்பிக்க முயற்சி செய்யலாம்.குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பூனை, அணில், தென்னை மரம்,ஆதவன், அலைபேசி, பப்பி போன்றவைகளுக்கு எல்லாம் இந்தப் புத்தகத்தில் பிரத்யேகமாய் பாடல் இருக்கின்றது. அதைப் பாடும்பொழுது சிறுவர்கள் அந்த விலங்குகள் மற்றும் பொருட்களின் பெயர்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதுடன் அதன் பெருமை மற்றும் உபயோகத்தையும் அறிந்து கொள்வார்கள்.
உண்ணும் உணவுப்பொருட்களான மாம்பழம்,காளான், காய், கனி,
தோசை, கூட்டாஞ்சோறு போன்றவற்றைப் பற்றி இப்புத்தகத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதனால் சிறுவர்களைச் சாப்பிட வைக்கும் இமாலய வேலை இலகுவாகி விடும்.பாட்டுப்பாடி கொஞ்சம் முகபாவங்கள் செய்து ஆட்டம் ஆடி காட்டினால் ஆவென்று வாயைத் திறக்கும் பொழுது அதே உணவு வகைகளை ஊட்டி விட்டு விடலாம்.மறந்து போன விளையாட்டுக்களான நொண்டி ஆட்டம், ராட்டினம், பலூன், பம்பரம்,விழுது ஊஞ்சல், தஞ்சாவூர் பொம்மை விளையாட்டு போன்றவைகளுக்கான பாடலை நாம்பாடும் பொழுது நமக்கே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்.குழந்தைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும். அவர்களும் அதையெல்லாம் பார்க்கவாவது வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.அதைச் சாக்காக வைத்து நமக்குப்பிடித்த விளையாட்டை நாமும் விளையாடிக் கொள்ளலாம்.
இது போன்று 99 பாடல்கள் உள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு பாட்டு என்று பாடினால் கூட 3 மாதத்திற்கு மேலாகப் பாடலாம்.ஒரு தடவைக் குழந்தைகயுடன் உட்கார்ந்து ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தால் போதும், நாம் மறந்தால் கூட தினமும் பாடல் பாடலாம் என்று புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் வீட்டு வாண்டுகள்.தொடர்ச்சியாக மின் எந்திரங்களைப் பார்த்துக் கண்வலித்துக் கிடக்கும் குழந்தைகளின் கண்களுக்குமட்டுமல்லாமல் காதுகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்த பாடல்களைப்பாடி ஆடலாம். அதை அவர்களுக்கு இனிமையாக்க, நாம் பாடல் பாட கற்றுக் கொண்டால் மிகச்சிறப்பு. இல்லையென்றால் கொடூரமாய் பாடாதீர்கள் என்று கேட்டு நம்மை அவமானப்படுத்தி விடுவார்கள் நம் வீட்டு சுட்டீஸ்கள்.
Good
ReplyDelete