Thursday, November 23, 2017

குறை தீர்க்கும் கோயில்கள் கவிதை வடிவில் - கவிநெஞ்சன் இராஜகோபால்

சிறுவயதிலிருந்து குடும்பத்தினர் வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்காகவே தமிழ்நாட்டில் பலக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்,கல்சிற்பங்கள், கட்டிடக்கலைகளை இரசித்து பிரமிக்க முடியும். நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைபட முடியும்.ருசியான பிரசாதங்களை உண்ண முடியும். நிறைய வேண்டுதல்களால் கேட்டது கிடைக்கும். இது போன்ற பல காரணங்களுக்காகத் தான் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். 


பெரும்பாலும் கோவில்கள் பெரியதாக இருப்பதால் நடந்து நடந்து கால்கள் நன்றாகவே வலிக்கும்.அதுவும் நல்ல கற்களால் அமைந்த பாதைகளில் நடக்கும் பொழுது, பாதங்களில் குத்துவது போன்றவே இருக்கும்.அதிலும் கற்பாதைகளில் பல சுற்றுக்கள் சுற்றி வரச் சொல்வார்கள்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் நம் முன்னோர்கள் அக்குப்பஞ்சர் முறை போன்று நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்று. நம் பாதங்களில் தானே பல உறுப்புகளை இயக்குவதற்கு உண்டான புள்ளிகள் உள்ளன.இப்படி ஒரு கோவிலினாலும் அந்தக் கோவிலில் வழிபாடு செய்வதாலும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் நன்மைகள் பல.

இந்த புத்தகத்தில் முதலில் நான் எனக்குத் தெரிந்த, நான் சென்று வந்த கோயில்களைத் தான் முதலில் ஆர்வமாய்ப் படித்தேன்.எனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அருகே இருக்கும் கழுகுமலைக் கோவிலுக்குப் பல முறைச் சென்றிருக்கிறேன்.குடவறைக்கோயிலான கழுகுமலையில்  முருகன் ஆறுகரத்துடன் வெற்றிவேல் கொண்டு வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பார். 

ஜடாயு சீதையைக் காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் இறக்க , ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு இறுதிக்கிரியை செய்து வைத்திருப்பார். ஜடாயுவின் தம்பி சம்பாதி ஈமக்கிரியை செய்யாத பாவத்தைப் போக்குவதற்காகவே ஸ்ரீராமர் சொன்னது போல கஜமுகபர்வதத்தில்  சம்பு பூஜை செய்து வந்திருப்பார்.அவனது பக்தியை சிறப்புக்கும் வகையில் கஜமுகபர்வதம் கழுகுமலை ஆனதென்றும் கூறுகின்றனர்.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று இந்த ஸ்தலத்திற்கான சிறப்பையும் , வரலாற்றுக் கதையையும் இந்தப் புத்தகத்தின் வழியாய் தெரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.



கோவில்பட்டி- சங்கரன்கோவில் சாலையில் 30 கி.மீ தூரம் என்றும் இக்கோவிலுக்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.இப்படி 99 கோவிலின் சிறப்புகள், அதற்குப் பின் இருக்கும் பல வரவலாற்றுக் கதைகள், அமைந்திருக்கும் இடம் என்று பல தகவல்களை இரத்தினச்  சுருக்கமாகக் கவிதை நடையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிநெஞ்சன் இராஜகோபால். புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது இதன் அடுத்த பகுதியாக இன்னும் பல அறியப்படாத கோவில்களைப் பற்றி எழுதி அவர் அதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையே மனதிற்குள் ஏற்பட்டது.

பாகற்காய் சனிபகவான் போன்று பல வித்தியாசமான வழிபாடுகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. தெரிந்த கோவில்கள் ஆனால் தெரியாத வரலாற்றுக் கதைகள், இறைவனின் பெயர்க்காரணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்கையில் ஒவ்வொரு கோயிலுக்குப் போகும் முன்னே இந்த வரலாறுகளை நிச்சயம் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உலோகக்கலவையைக் கொண்டு அழகான சிற்பம் செய்ய முடியாமல் வருந்திய சிற்பிகளுக்காக பசியென்று பாசாங்கு செய்து உலோகக் கலவையைக்குடித்து சிலைவடிவமாய் காட்சி தந்த சிவபெருமானும், சிவகாமியும் போன்று உருக வைக்கும் கதைகள் ஏராளம்.பச்சைமால் தம்பதியினர் கதைகளைத் தன்னுள் கொண்ட சதுரிகிரி மலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.திருப்புல்லானியில் பாயாசத்தைப் பற்றிக் குறிப்பிடாததுதான் எனக்குச் சின்ன வருத்தம்.

பெரிய புகழ்பெற்றக் கோவில்களைப் பற்றிய பதிவுகள் பல இடங்களில் பல புத்தகங்களில் காணப்படும். ஆனால் சக்தி வாய்ந்த தொன்மையான சிறிய கோவில்களைப் பற்றிய பதிவுகள் வரவேற்கத்தக்கதுதான்.


நம் மாநிலத்தில் மட்டுமல்லாது வேறு மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கும் சென்று பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் கதைகளும் நம்மை ஈர்க்கவே செய்கின்றன.சென்றுவந்தக் கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளாத பல சிறப்புகளை  தாமதமாக தெரிந்து கொண்டாலும் நமக்குக் கிடைப்பது நன்மையும் பெருமையும் தான் .பெரும்பாலும் எல்லா மாவட்டத்தின் கோவில்களின் புராணங்கள் சொல்லப்பட்டிருப்பதால் எல்லா ஊர்க்காரர்களும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது புரட்டிப் படிப்பார்கள்.அவர்களை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றலும் இந்த கவிதைகளுக்குள் ஒளிந்துகிடக்கிறது.

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினம் - நவம்பர் 14... அகில இந்திய வானொலியில்


https://drive.google.com/file/d/1rjgGEc-uIvtJKwv_WZ1h8UkHBEhfdmHI/view?usp=drivesdk

காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜவர்ஹலால் நேரு குழந்தைகளின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டதனாலேயே ,நம் நாட்டில் எல்லா குழந்தைகளும் அடிப்படைத் தேவைகளையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக, அவரது பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.





இப்பொழுது குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்றஎல்லா துறைகளிலும்  தங்கள் திறமைகளை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். சிறுவயதிலேயே மேடைபயங்களையெல்லாம் காலடியில் மிதித்து வானொலி,தொலைக்காட்சி, பத்திரிக்கைத்துறை, இணைய ஊடகங்கள் என்று வெற்றிக் கொடி பறக்கவிடும் ஆயிரக்கணக்கான  குழந்தைகளை நாம் அறிவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை விட அவர்களது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமை வெளிப்படுவதில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெற்றோர்கள் ஈடுபாடு கொண்டிருப்பது ஒருவகையில் குழந்தைகளுக்கு  வழிகாட்டுதலாகவும் , ஊக்கம் தருவதாக இருந்தாலும் மற்றொரு வகையில் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது  என்பது நமக்கு கவலை தரும் செய்தி.  

பொரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் குழந்தைகளின் மேல்  ஆர்வக்கோளாறாய் திணித்துவிடுகின்றனர். அது அவர்களது குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியையும் பறித்துவிடுகின்றது. 


பாலியல் குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்க குழந்தைகளுக்கான இந்த நல்ல நாளிலேயே ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய புரிதல்களையும்,  விழிப்புணர்வையும் நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நம்கடமையாகும்.

கதை சொல்லக் கேட்டு நச்சரித்தக் குழந்தைகள் இப்பொழுது மின்னனு எந்திரங்கள் போதுமென்று திருப்திப்பட்டுக் கொள்வதற்குப் பெற்றோர்களே காரணமாக இருப்பது வேதனையான விஷயம்.நல்ல பழக்க வழக்கங்களையும், சகமனிதர்களை அன்போடு அரவணைக்கும் பாங்கையும் நாம் தானே நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் 

குழந்தைகளைத் தொழிலாளர்களாய்ப் பணியில் அமர்த்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்றாலும் வறுமை அந்த பிஞ்சுக் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடச்செய்வதோடு  , சமூக விரோதிகளுடன் சேர வைத்து சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடவைத்துவிடுகிறது.

ஒரு பக்கம் குழந்தைகள் உணவில்லாமல் வறுமையில் வாடுகின்றார்கள் என்றால் மறுபக்கம் சமநிலையற்ற நச்சுத்தன்மை நிறைந்த உணவு போன்றவற்றால்  அதிக எடை கொண்டு குழந்தைகள் பல வகையான நோய்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

உணவு,உடை,இருக்க இடம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ குழந்தைகளை நாம் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பார்க்க நேர்கிறது. இன்று ஒருநாள் மட்டும் குழந்தைகளிடையே போட்டிகள் நடத்தியோ, தலைவர்களைப் போல் வேடம் அணிவித்தோ இந்தநாளைச் சிறப்பாய் கொண்டாடிவிட்டோம் என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.


எல்லா குழந்தைகளும் அடிப்படைக் கல்வியாவது பெற்றிட நம்மாளான உதவிகளைச்  செய்வோம் என்று உறுதி ஏற்போம். அவர்கள் வருங்கால இந்தியாவை வேர்களாகத் தாங்கி உலகநாடுகள் மத்தியில் ஒளிரச் செய்துவிடுவார்கள் என்று நம் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்போம்.

Monday, November 6, 2017

தமிழனின் தத்துவம் - திருக்குறள் அறம் - விஸ்வேஸ்வரன்

திருக்குறளுக்கு கலைஞர் கருணாநிதி, பரிமேலழகர், மு.வரதராசனார், தேவநேயப்பாவணர்னு பல பேர் பல தெளிவுரைகள் எழுதியிருக்கும் போது , இந்தத் தெளிவுரை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு நீங்க நினைக்கிறதயேத்தான் நானும் யோசிச்சேன்.


'இன்னை'க்குங்கிற சொல் மருவி 'இம்மை'க்குன்னு சொல்லா ஆனது.
ஆகமம் என்பது பாவ புண்ணியங்களைக் கூறும் ஆரியவேத மரபு நூல். அதற்கு உட்பட்டு பரிமேலழகர் இம்மை என்ற சொல்லுக்கு இப்பிறவி என்று பொருள் தருவது,  திணிக்கப்பட்ட பொருளாத்தான்  தோன்றுகிறது. இப்படிப்பல அறிஞர்கள் பல  வகையான அர்த்தங்களை வலிந்து புகுத்துகின்றமாதிரியே திருக்குறளோட பல உரைகள் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த உரை தமிழ்பண்பு மாறாமல் மதச்சார்பில்லாமல் இயற்றப்பட்டிருக்கிறது.

அதிகாரம் (1-4)    அடிப்படைக் கல்வி,அதைக் கற்றுத் தரும் ஆசிரியர்,
அதிகாரம்(5-7) இல்லறம், குடும்பம் ,
அதிகாரம்( 8-21)அன்புடையார் ,
அதிகாரம்(22-33) அருளாளர்,இப்படி மனிதவாழ்வினைப்பிரித்து வாழ்க்கையிள் விளக்கம் கூறுவது திருக்குறள்.
அதிகாரம் (34-38) உபநிடத, கீதையின் கருத்துகளை மறுக்கின்ற பகுதி.

பிரம்ச்சரியம், கிரஹஸ்தம், வனப்ரஸ்தம், சந்யாசம்ங்கிற நான்கு ஆசிரமங்களைக் கொண்ட நூல் மநுதர்மம். இந்நூல் திருக்குறளின் மேற்கூறிய பிரிவினைகளை  ஏற்று ஆரிய வேதக்கருத்துகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு இயற்றப்பட்டிருக்கிறது.

'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தா னிடை'. என்னும் குறளில் சிவிகையில்(பல்லக்கில்)  செல்பவர்கள் அறச்செயல் செய்தவர்கள். சிவிகையைச் சுமப்பவர்கள் பாவம் செய்தவர்கள் என்று அறத்தின் பெருமையை விளக்குகின்றார் பரிமேலழகர்.
ஆனால் சிவிகையைச் சுமப்பவனுக்கும், சுமந்து செல்பவனுக்கும் அறம் ஒன்று என்று இந்த நூலின் உரை ஆசிரியர் குறிப்பிடுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஒருவன் அவனது முந்தையப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் காரணமாய் சிவிகையைச் சுமந்தும் , பயணம் செய்வதும் என்று சொல்வது ஏற்புடையதாய் இல்லை.எந்தத் தொழிலும் தாழ்வில்லை தானே.

மக்கட்பேறு அதிகாரத்தில் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் ' என்ற குறளில்  சிறுகுழந்தை பிஞ்சுக் கரங்களால் கலக்கி விளையாடிய கூழ் அமிழ்தத்தை விட உயர்ந்தது என்று பதிவிடும் பொழுது வள்ளுவர்  தேவர்களுடைய பானமான அமிர்தம் உயர்வானதல்ல என்று கூறுவதையே  ஆசிரியர் தன்னோட கருத்தாய்த் தெரிவிக்கின்றார்.தேவரன்ன கயவர், ஒழுக்கமற்ற தேவர்னு திருக்குறள்ல இருக்கிற பதிவுகளையும் எடுத்துக்காட்டா கூறி விளக்குகின்றார்.

திருக்குறள்-கீதை பற்றிய ஒரு ஒப்புநோக்கு SACP2014 ( society for Asian comparative philosophy conference) என்ற மாநாட்டில் philosophy of peninsular India  என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஏற்கப்பட்டு, திருக்குறளோட புகழை உலகறியச் செய்திருக்கிறார் ஆசிரியர். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தநூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறளோட அறத்துப்பால் உள்ள 38 அதிகாரங்களுக்கு இந்ந நூலில் தெளிவுரை விளக்கப்பட்டிருக்கிறது.


இந்தநூலின் இன்றைய தேவை : உலகளவில் இந்திய சிந்தனையியல் (INDOLOGY) பற்றிய நூல்கள் பெரும்பாலும் உபநிடதங்கள், கீதை, இராமாயணம், மகாபாரதம் என்ற வேதமரபிலான சிந்தனைகளே ஆகும். தமிழ் தொன்மொழி, அதன் நூல்களை தாங்கள் மொழியில் மாற்றி, பின்னர் மூலநூல்களை வேதமரபினர்அழித்து விட்டனர் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சரியானதே. இந்த நூல் கீதை, மநுதர்மம் ஆகியநூல்கள் திருக்குறள் கருத்துகளை ஏற்று திரிபு செய்யப்பட்டது என்பதை விளக்கும். மேலும் இந்திய சிந்தனையியல் வளர்ச்சியில் தமிழின் தனித்துவம் ஓரளவு விளங்கும்.வடமொழி மட்டுமே தனித்துவம் பெற்றது என்ற தவறான வாதத்தை இந்நூல் முறியடிக்கிறது.