Monday, April 3, 2017

பூவதி ஆச்சி - இரங்கல் கவிதை

சிறுமியாய்
சிறுவர் மலருக்காக
சிறகடித்து வருவேன்
சிறிதும் சீற்றம்
கொள்ளாது 
சிறு சிறு கதைகளை
சிரத்தையுடன் படித்துச்
சொல்வீர்களே!!

பருவ காலத்தில்
பலமென்று
இடுப்பெலும்பும்
உறுப்புகளும் உறுதிபெற
சத்தான உளுந்தங்களியை
இனிப்பாய் இன்முகத்துடன் 
செய்து தருவீர்களே!!

வேலைக்காக வீட்டைவிட்டு
வெளியூர் வந்தாலும் 
வீட்டுஞாபகம் வந்தால்
தனியே இருந்த தலைநகரில்
தங்களைத் தேடி
ஓடி வருவேனே!!

பழம் பிசைந்து 
செய்துதந்த பணியாரச்சுவை
நாவைவிட்டு நீங்கவில்லை!
அபிக்குட்டியென்று
ஆசையாய் கட்டிக் 
கொஞ்சும் சத்தம்
காதைவிட்டு அகலவில்லை!!

கணவரைக் குழந்தையாய்
கவனித்தீர்கள்
தமக்கைகளிடம் 
தாயைப் போன்று 
பாசத்தைப் பொழிந்தீர்களே!!

மூப்பெய்தி மெலிந்து
முடியாமல் போனாலும்
காலடிச் சத்தம் கேட்டால்
ஆவலுடன் ஆர்ப்பரிப்பீர்களே!
எங்கே சென்றீர்கள்?
அங்கேயாவது நிம்மதியாக
ஓய்வெடுங்கள் ஆச்சி!!!

2 comments:

  1. "கணவரைக் குழந்தையாய்
    கவனித்தீர்கள்
    தமக்கைகளிடம்
    தாயைப் போன்று
    பாசத்தைப் பொழிந்தீர்களே!!" என
    அருமையாக நினைவுகூருவதை
    காணமுடிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. அன்பைப் பொழிந்தவள் ஆச்சி

      Delete