Monday, February 20, 2017

உலகம் சுற்றலாம் வாங்க

உலகமே ஒரு கிராமமாய் (Global village) மாறி துபாயில் ஒரு கடைக்கோடியில் ஒளிந்திருந்ததை கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! முருகன் சிரமப்பட்டு உலகையே வலம்வந்ததைக் காட்டிலும், பெற்றோரை வலம் வந்து கணேசன் மாங்கனியைத் தட்டிச்சென்றது போல பெரும் பொருட்செலவும், அலைச்சலும் இல்லாமல் உலகைச் சுற்றிப் பார்க்க உடனே போக வேண்டிய இடம் குளோபல் வில்லேஜ். உலகச் சுற்றுலா சென்று வாங்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சுலபமாக இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்.  .

வருடத்தில் ஆறு மாதங்களான நவம்பர் முதல் ஏப்ரல் வரை தான் இந்த மாபெரும் பொருட்காட்சி திடல் திறந்திருக்கும்.   என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை, அத்தை மகன் இராம் அவனது மனைவி என அனைவருமே அத்திடல் மூடியிருக்கும் சமயம் சுற்றுலா வந்ததால் யாரையும் இங்குக் கூட்டிவரமுடியாத வருத்தம் இன்றும் எனக்கு உண்டு.

இவர்களாவது பொருட்காட்சி திடல் திறக்காத பொழுது சுற்றுலா வந்திருந்தார்கள். ஆனால் என் அத்தை, மாமா பொருட்காட்சி திடல் திறந்திருந்த பொழுது ஒரு மாதகாலம் சுற்றுலா வந்த போதிலும் பல காரணங்களால் அவர்களைக் அங்குக்கூட்டிச்செல்ல முடியவில்லை என்ற பெரும் மனக்கவலை இப்பொழுதும் எனக்கு உண்டு.

கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் இரண்டு வண்டிகளில்  மாபெரும் பொருட்காட்சி திடலுக்குச் செல்ல ஆயத்தமானோம். கணவர் சிலமாதங்கள் துபாயில் தனியாக தமிழ், கன்னட நண்பர்களுடன் தங்கியிருந்ததன் பயனாகவும், அனைவரும் ஒருசில மாதங்களில் தங்கள் மனைவி, மக்களைக் கூட்டிவர நாங்கள் அனைவருமே குடும்பத்துடன் மொழி பேதமின்றி நண்பர்கள் ஆகியிருந்தோம்.

பொருட்காட்சித் திடல் நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் சொந்த வண்டியிலோ, நண்பர்களுடன் அவர்களது வண்டியிலோ செல்வது வசதியாய் இருக்கும். போக்குவரத்துச் செலவைப் பற்றி கவலைப்படாதவர்கள் வண்டிகளை ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்டு பயணத்தை தொடங்கியும், முடித்தும் கொள்ளலாம்.

பேருந்து வசதிகள் மதியம் 3.15 முதல் இரவு 11.15 மணிவரை அரைமணிநேர பயண தூரத்தை கடக்கும் வகையில் குறிப்பிட்ட காலநேரத்திற்கு ஒருமுறை செய்துகொடுக்கப் பட்டிருந்தன. ஒரு சமயம் அல்குபைபா(al ghubiaba) பேருந்து நிறுத்தத்தில் ஒரு நீண்ட வரிசையைப் பார்த்து ஆர்வத்தில் கணவரின் நண்பர் பாஸ்கர் அவர்கள் “எங்கே செல்வதற்கான வரிசையென்று?”  வினவ “குளோபல் வில்லேஜ்” என்று வந்த பதில் சிறிய அதிர்வலையைத் தந்தது.(union) யூனியன் நிறுத்ததிலிருந்தும் மக்களின் வசதிக்காக  பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நண்பர்கள் குழுவில் சொந்தமாக வண்டிவைத்திருந்த இருநண்பர்கள் பெயருமே சதீஷ்.அடையாளத்திற்காக அவரவர் மனைவி பெயரைக் கொண்டு சுஜி சதீஷ், ராஜி சதீஷ் என்று அழைப்போம்.மாலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருக்கும் அனைத்து வாயிற்கதவுகளும் வார இறுதிநாள் மற்றும் பண்டிகைநாட்கள் என்றால் இரவு 1 மணிவரை திறந்திருக்கும்.

முதன் முறை மாபெரும் கண்காட்சித் திடல் செல்கிறோம் என்பதாலும், ஒரே நாளில் அனைத்துக் கூடாரங்களையும் பார்க்க முடியாது என்று கேள்விபட்டதாலும் வாயிற்கதவு திறக்கும்முன்னே ஆர்வமாய்ச் சென்று தனி நபர் கட்டணமாக 15 திராம்களுக்கான நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிக் காத்திருந்தோம். சீக்கரமே வந்திருந்ததால் வண்டிகளை வாயிற்கதவு அருகிலேயே நிறுத்த வாய்ப்பு கிடைத்திருந்தது.

கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் சென்றால் நமக்கு விருப்பமான அனைத்து விதமான பொருட்கள், கம்பளிச் சட்டைகள் போன்றவற்றை பேரம்பேசி மிகக்குறைந்த விலைக்கு வாங்லாம் என்று ஏற்கனவே பலமுறை இங்கு வந்திருந்த ராஜி-சதீஷ் தம்பதியினர் கூறியிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் கடைசி நாட்களில் பொருட்களைத் திரும்பி எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் வந்த வரைலாபம் என்று விற்றிடுவார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தோம்.

அதனால் பின்னொரு நாளில் கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் நாங்கள் வந்திருந்த பொழுது மிகுந்த கூட்டம் இருந்ததால் வண்டியைத் தொலைதூரத்தில் தள்ளி நிறுத்திவிட்டு நடக்க வேண்டியதாயிற்று. உந்துவண்டி நிருத்தும் இடத்திலிருந்து  வாயிற்கதவு வரை செல்வதற்கு கட்டணமளித்தால் நமது நாட்டுப்பாரம்பர்யத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதனை ஓட்டுபவர்களும் இராஜஸ்தானியர்கள் போன்று நம்நாட்டு கலாச்சாரத்தை எடுத்துரைக்கும்  வகையில் உடை உடுத்தியிருந்தார்கள். கட்டணம்சற்று அதிகமென்றாலும் சுற்றுலாப்பயணிகள் அந்த மூன்று சக்கர மிதிவண்டி பயணத்தை வெகுவாக இரசித்தது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

பெருங்கூட்டத்தில் சிறுவர்கள் தொலைந்துவிடும் வாய்ப்பு அதிகமென்பதால் அவர்கள்  மணிக்கட்டில் கட்டிக்கொள்ள ஒரு காகிதபட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று அவர்களைப் பற்றிய விவரங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.

முதலில் அது என்னவென்று தெரியாமல் நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிய அனைவரும் கையில் கட்டிக்கொள்வது என்றெண்ணி எனக்கு எனக்கு என்று நான் கேட்க “நீயும் என் குழந்தைதான் எங்கும் தொலைந்து விடாதே என் காதல் கண்மணி” என்று கூறி என் கணவர் என் கையில் கட்டிவிட நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்.   .

கண்காட்சித் திடல் ஆரம்பித்த முதல் வாரமே நாங்கள் சென்றிருந்ததால், பல நாடுகளை எடுத்துக் காட்டும் கூடாரங்களும் , பொருட்களும் தயார்நிலையில் இல்லை. கடைக்காரர்கள், பணியாளர்கள் என அனைவருமே தங்கள்கடையை அழகாய் முறைபடுத்த மும்மரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சீன கூடாரங்கள் மட்டுமல்லாது எல்லா நாட்டு கூடாரங்களிலும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பெருமை வாய்ந்த பிரத்யேக மின்னணுசார் பொருட்களை எப்படி உபோயிகிப்பது என்று மாதிரிவிளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

அதே சீனக்கூடாரத்தில் சுஜி தனது குழந்தை மஹிதாவுக்கென்று இளஞ்சிவப்பு நிறத்தில் கம்பளிச்சட்டை வாங்கி அணிவித்து மகிழ்ந்தார்.

பல கூடாரங்களில் சந்தைக் கடை போன்று கூவிகூவி அழைத்து விற்றுக் கொண்டிருந்தனர். பொருட்களை அடுக்கி வைத்திருந்த அழகைப் பார்க்கையிலேயே அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டுமென்ற பேராசை எங்கள் தோழிகள் அனைவரின் மனதுக்குள்ளும் எழுந்தது.

சுமார் 75 தனிநாடுகளையும் அதன் சிறப்பையும், புகழைக்குறிக்கும் தரமான பொருட்களையும், நாட்டின் பெருமையை உணர்த்தும் கட்டிடங்களை மாதிரி வடிவங்களாய் தத்ரூபமாய் காட்சிப்படித்தியிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் கூடாரத்திற்குச் செல்லும் பொழுதும் உண்மையாகவே அந்நாட்டுக்கேச் செல்வது போல பெருமிதம் கொண்டோம்.

நடந்து நடந்து கால்கள் வலித்தாலும், புதிதுபுதிதாய் வெவ்வேறு நாட்டு மனிதர்கள், வித்தியாசமான அமைப்புடைய  அனைத்து நாட்டு கூடாரங்கள், விந்தையான அழகுப் பொருட்களைப் பார்ப்பதில் மனம் மயங்கி உற்சாகத்துடன் நேரவிரயத்தைத் தடுக்க ஓட்டமும் நடையுமாய் தோழிகள் அனைவரும் ஒன்றாய்ப் பயணபட்டோம்.

வாங்கியப் பொருட்களையும் , குழந்தைகளையும் சுமந்து இழுத்துச் செல்வதற்காக கட்டணமுறைப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு என்று இழுபெட்டி தருவதற்கான ஏற்பாடு செய்திருந்தார்கள். 

உலகத்தையே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற என் பேராசையை அறிந்திருந்த கணவர் “பார், ஒரு காதல் கணவனாய் மனைவியின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.எல்லா நாட்டுக்கும் சென்று வா” என்று கண்ணடித்தார். எவ்வளவு விரைவாகச் சுற்றிவந்தும் முதல் தடவை சென்றிருந்த பொழுது பாதிநாட்டுக் கூடாரங்களையே சுற்றிப்பார்க்க முடிந்தது.

இந்திய நாட்டுக்கூடாரத்தைப் பார்த்த பொழுது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி ஏற்பட்டது. தாஜ் விடுதி, தாஜ்மஹால் போன்று பல பெருமைப்பெற்ற மாதிரி கட்டடங்கள் பிரம்மாண்டமாக வரவேற்றன. அங்கு ஓர் தொகுப்பாளினி பார்வையாளர்களுடன் உறையாடி பாடச்சொல்ல, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியிருந்தது இந்திய அரங்கம்.

கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் ஆளுயுர மென்மையான பல பொம்மைகளை சுமக்கமுடியாமல் சுமந்து சென்றது, எங்கள் குழந்தைகளை விட எங்கள் பெண் தோழிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது.

வாழைப்பழம், இதய வடிவம், விலங்குகள் போன்ற மாதிரி பொம்மைகளின் அழகு எங்களுக்கும் அது போன்ற பொம்மைகளை வாங்க வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தியது. கொடுக்கப்பட்ட வாய்ப்புக்குள் அடுக்கிவைத்திருக்கும் பொருட்களை களைப்பது, கூடைக்குள் பந்துகளை குறிபார்த்து எறிவது போன்ற போட்டிகளுக்குப் பரிசுகளாக பொம்மைகளை தருகிறார்கள் என்று பின்பு தான் தெரிந்து கொண்டோம் .

ஆரம்பத்தில் தோழிகள் அனைவருமே தத்தமது கணவர்களுக்கு, பொம்மைகளை பரிசாய் வெல்வதற்கான கோரிக்கைகளை வைக்க , அதனை ஆண்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காசுகொடுத்து வளையங்களையும், பந்துகளையும் வாங்கி மனதை ஒருமைப்படுத்தி போட்டிகளில் வென்று இந்த பொம்மைகளை வாங்குவதற்கு பதிலாக பணம் கொடுத்து பொம்மைகளே வாங்கித்தருகிறோம் என்று ஆசைவார்த்தைக் கூறினார்கள்

பின்னர் திராட்சைக் கிடைக்காத நரி “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று கூறியது போல இவ்வளவு பெரிய பொம்மைகளை வீட்டுக்குக்கொண்டு செல்வது கடினம், வீட்டில் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்று பற்பல காரணங்களைச் சொல்லி நாங்களே சமாதானம் செய்துகொண்டோம்.

நண்பர்களுள் அனைத்து தம்பதியினருக்குமே ஒவ்வொரு பெண் குழந்தைகள் இருந்ததால் அவரவரது குழந்தைகளுக்கான இழுபெட்டியில் அமரவைத்து சிலநேரம் கணவன்மார்கள் சிலநேரம் மனைவிமார்கள் என்று மாறி மாறி அழைத்து இல்லை இல்லை  இழுத்துச் சென்றோம். ராஜி கருவுற்றிருந்ததாலும், ஏற்கனவே பலமுறை சுற்றிப் பார்த்திருந்ததாலும் அத்தம்பதியினரை சிரமப்படுத்தாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இருக்கைப் பலகைகளிலும், புல்தரைகளிலும் அமரச் செய்துவிட்டு ஒவ்வொரு நாடாகச் சுற்றிப்பறந்தோம்.

ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் இருந்த அருமையான இயற்கையோடு ஒன்றிய மரப்பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், பொம்மைகள் வெகுவாக இதயத்தைக் கவர்ந்தன. இயற்கை மற்றும் மனித வளத்தை மிகவும் திறம்பட உபயோகித்திருப்பதாக உணர்ந்தோம். ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் கிடைக்கும் ஆப்ரிக்க கருப்பு சவர்க்காரம்( African black soap), உடல் வலுவலுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெய் (shea butter) , சிகைக்கும் தோலுக்கும் பொலிவு சேர்க்கும் ஆர்கன் எண்ணெய் (argan oil) உலக பிரசத்தி பெற்றவை.

சுஜியும், நந்தினியும் ஒவ்வொரு கடையாக பேரம்பேசி கடைசியாக ஓர்கடையில் மலிவுவிலைக்கு (coco butter)உடல் மினுமினுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெயை வெற்றிகரமாக 10 திராம்களுக்கு வாங்கினர். ஆப்ரிக்கர்களிடம் அடித்து பேரம்பேசினால் எங்கே நம்மை அடித்துவிடுவார்களோ என்ற சிறிய பயம் எங்களுக்குள்ளும் இருந்தது.

ஶ்ரீதேவியும், சுஜியும்  குச்சியாலான நாகரிக அணிகலன்களை பேரம்பேசி வாங்க நான் மட்டும் என் குழந்தை தன் சுட்டித்தனத்தால் அதை பாழ்படுத்திவிடுவாள் என்று பயந்து வாங்கவில்லை. ஆப்ரிக்க மலைவாழ் மக்கள் போன்று ஒப்பனை செய்திருந்தவர்களுடன் போட்டிபோட்டு அருகே சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

பல வகையான வாய்பிளக்க வைக்கும் இராட்சத இராட்டினங்களில் மக்களின் உற்சாக கூக்குரல்கள் விண்ணைப் பிளந்தன. எவ்வளவு நுழைவுக்கட்டணம் என்றாலும் எல்லா இராட்டினங்களில் பயணம் செய்ய எல்லா நாட்டு மக்களும் சாரசாரையாய் எறும்புபோல் அணிவகுத்திருந்தனர். இராட்டினங்களில் சாகச அனுபவங்கள் பெற ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோ, உறவினர்களோ அமைந்துவிட்டால் அதுவே உற்சாகத்தின் உச்சக்கட்டம்.

ராஜி-சதீஸ் தம்பதியினர் சென்ற முறை வந்திருந்த பொழுது தாங்கள் புதிதாகக் தமிழ்நாட்டில் கட்டிய வீட்டிற்கு துனிசியா,எகிப்திய கூடாரங்களிலிருந்து தரமான வீட்டு அலங்காரப் பொருட்களை மலிவுவிலைக்கு வாங்கியதை பெருமையுடன் கூறினர். பிரான்ஸ் நாட்டு கூடாரத்திற்குச் சென்ற உடனேயே பலவகையான சுகமான சுகந்தங்கள் மனதை மயக்கின. 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கூடாரங்களைக் கடந்து வந்த பொழுது பேரம்பேசி எனக்கு ஒரு கம்பளிச் சட்டையும் , கைப்பையும் வாங்கினோம். அமீரகத்தில் கோடை காலத்தில் இரவு 12மணி ஆனாலும் அனல்காற்று வீசும். குளிர்காலமென்றால் மின்விசிறிக்கும், குளிரூட்டிக்கும் நல்ல ஓய்வு கொடுத்துவிடுவோம். பல நண்பர்கள் சேர்ந்து நிறைய கம்பளிச் சட்டை வாங்கியபொழுது எதிர்பாராத வகையில் மிகமிக குறைந்த விலைக்கு கம்பளிச் சட்டை வாங்கிய தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் ராஜி-சதீஸ் தம்பதியினர்.

ஓமன் மற்றும் ஏமன் கூடாரங்களில் ஏகப்பட்ட வகைவகையான தேன்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழகான குச்சியில் சுவைத்து பார்க்கக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் சில வகையான தேன்கள் ஆண்களுக்கானது என்று விற்பனையாளர் கூற அப்பொழுது எனக்கு புரியவில்லை. பின்பு கணவர் தனியே எனக்கு சற்று விளக்கமாகக்கூற வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

ஏமன் நாட்டு கூடாரங்களில் தரம்வாய்ந்த பட்டை, ஏலக்காய் போன்று வாசனை சாமான்களை அழகான குடுவைகளில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.கமகமக்கும் விதவிதமான குங்குமப்பூக்களை குவைத்நாட்டு அரங்கங்களில் பார்த்தபொழுது திருமணத்திற்கு முன்னேயே கணவர் எனக்காக  ஆசையாய் வாங்கிவைத்திருந்த குங்குமப்பூ ஞாபகம் வந்தது.

செளதி நாட்டுக்கூடாரத்திற்கு சென்றிருந்த பொழுதுதான் பேரிச்சை பழங்களில் இத்தனை வகைகளா என்று ஆச்சர்யமடைந்தோம். பலவகையான அரபுநாட்டு பேரிச்சைகளைக் குவித்து வைத்திருந்தார்கள். புது வகையான (dates biscits) பேரிச்சை உரொட்டிகளின் விலை 30 திராம்கள் என்பது கூடுதல் ஆச்சர்யத்தை தந்தது.

 

நடந்து நடந்து எல்லோருக்கும் சற்று பசித்திருந்த வேளையில் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சுவையான ஹைத்ராபாத் பிரியாணியை  ராஜி-சதீஸ் தம்பதியினர் எல்லோருக்கும் பரிமாறினார்கள் .

நாங்களனைவரும் அதைச் சிற்றிடை உணவாக பகிர்ந்து உண்டு சற்று களைப்பைப் போக்கிக் கொண்டு அடுத்த அடுத்த நாட்டுக்குச் சுற்றுலா செல்ல தயாரானோம். அடுத்த முறை வருகை தந்திருந்த பொழுது நாங்கள் மற்ற இரு குடும்பத்திற்கும் சேர்த்து பிரியாணி சமைத்து எடுத்து வந்திருந்தோம்.

பெரிய புல்தரையில் அனைவருமே தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கேலி கிண்டலுடன் கதைபேசி உணவு உண்டோம். பொருட்காட்சித் திடல் உள்ளே உணவு, திண்பண்டம், தண்ணீர், குளிர்பானமென அனைத்துமே சற்று விலை அதிகமென்பதால் அனைத்து குடும்பத்தினரும் தங்களுக்குத் தேவையான திண்பண்டம் மற்றும் தண்ணீரை குழந்தைகளின் இழுபெட்டியில் வைத்து இழுத்து வந்திருந்தோம்.

எல்லோரும் ஏதோ வேலையில் மூழ்கிஇருக்க சுஜி-சதீஸ் தம்பதியினரின் குழந்தையான மஹிதாவைச் சிலநிமிடங்கள் காணாது தவித்து விட்டோம். ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த கூட்டத்தில் ஒரு மூன்று வயது குழந்தையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பயந்திருந்தோம். கடைசியாக எங்களருகேதான் அக்குழந்தை உட்கார்ந்திருந்ததால், நாங்கள் சரியாக கவனிக்கவில்லையென்று எனக்கும் என்கணவருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ராஜி-சதீஸ் தம்பதியினருடன் மஹிதாவைப் பார்த்தபின்தான் அனைவருக்கும் மூச்சு வந்தது.

அப்பொருட்காட்சித்திடல் நடுவே சிறிய நீரோடை போன்று உருவாக்கி அதில் படகுகளை விட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்திருந்தனர். பயணம் செய்தவர்களுக்கு ஐரோப்பாவில் இருக்கும் வெனிஸ் நகரத்தில் கட்டடங்களுக்கு நடுவே படகுசவாரி செய்தது போன்ற ஒரு  உணர்வு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.

வாரஇறுதியென்றால் அனைவரையும் குதூகலப்படுத்தும் வகையில் அற்புதமான வண்ண வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு நாட்டுக் கூடாரத்திற்கென்று பிரத்யேக மேடை அமைத்திருந்தனர். அதில் அந்நாட்டு பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், கலை நிகழ்ச்சிகள், நடனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தந்த நாட்டிலிருந்து பல கலைஞர்களை தினமும் அழைத்துவந்து அவர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பளித்திருந்தனர்.  .

பொருட்காட்சித்திடலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பல நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் தங்கள் திறமையை, இசை, நடனம், சாகசங்கள் வழி வெளிபடுத்தி மொழிபேதமில்லாமல் கூட்டத்தை வசியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

நமக்கு பரிட்சயமான பிரபலங்கள் என்றால் ஷ்ரேயா கோஷல், பேரிகைக் கலைஞர் (drums) சிவமணி, மலையாள நடிகர் மம்மூட்டி, நிவின் பாலி போன்ற பல நட்சத்திரங்கள் அந்த மேடையை அலங்கரித்துள்ளனர்.

துருக்கி நாட்டுக்கூடாரமருகே புகழ்பெற்ற குனாபாவை (kunafah) சூடாக வாடிக்கையாளருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். வளைகுடா நாடுகளில் வேலை செய்திருந்த காலம்தொட்டே குனாபாவின் மேல் கணவருக்கு தீராத காதலிருந்ததால், தான் மட்டும் உண்ணாது “யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம்” என்பதற்கேற்ப நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களையும் அவ்வினிப்பை சுவைக்கச் செய்தார்.

உலகப்பிரசித்தி பெற்ற (Dondurma) டொன்டூர்மா எனப்படும் ஒருவகையான கூம்புப்பனிகத்தை (coneicecream)  துருக்கி நாட்டுக்கூடாரத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வித்தைகாட்டி விற்றுக்கொண்டிருந்தார்கள். கூம்புப்பனிகத்தை கொடுப்பதுபோல் பாவணை செய்து கொடுக்காமல் சிறுவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதுவே பெரியோர்களிடம் பலவிதமான ஏமாற்று வித்தையைக் காட்டும்பொழுது “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்பது போன்ற உணர்வுதான்  வாடிக்கையாளர்களின் முகத்தில் தெரிந்தது. பலர்அந்த ஏமாற்றுவேலையை வெகுவாக இரசித்தாலும், சிலர் கோபம் கொண்டு அவர்களுடன் சண்டைபோட ஆரம்பித்தனர்.

இங்கிலாந்து நாட்டுக் கூடாரத்தில் ஒப்பனை செய்து கொள்வதற்குத் தேவையான பிரசித்திப்பெற்ற பெயர்களுடைய உதட்டுச்சாயம் (ipstick) , நகச்சாயம்(nailpolish) , முககளிம்பு (face cream )  போன்ற சாமான்களுடன் நறுமணம் வீசும் வாசனை திரவியங்கள்  குறைந்தவிலையில் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்தவுடன் பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் சுஜியும், நந்தினியும் வாங்கலானார்கள்.

தாய்லாந்து நாட்டுக்கூடாரத்தில் ஆண்கள் பெண்களுக்கென உடல்வலியைக் குறைப்பதற்கான பிரத்யேக (massage)உருவு மையம் நிறுவப்பட்டிருந்தது. உடல்உருவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அமோகமாகக் கிடைத்தது. கொரிய கூடாரத்திற்குச் சென்றிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நந்தினியின் காலணிகள் பிய்ந்துவிட்டதால், பேரம்பேசி அவர் அங்கு ஒரு மிருதுவான காலணிகள் வாங்க நானும் அதே போன்று மற்றொரு வண்ணத்தில் காலணிகள் வாங்கினேன்.

எனக்கும், என் கணவருக்கும் பேரம்பேச தெரியாததால் அவ்வப்பொழுது நந்தினி-மகேஷ் தம்பதியினரைத் துணைக்கு அழைத்துக் கொண்டோம். அங்கு ஓர் கடையில் கைப்பை அழகாய் இருப்பதைக் கண்டு விலைபேச, அது கொஞ்சம் தூசியாய் இருந்ததால் குறைவான விலைக்கு தர கடைக்காரர் சம்மதித்தார். தூசியை நன்றாகத் துடைத்தபின் கைப்பை புதிதுபோல மின்னியது.

இரவு 12மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும், பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே அடித்திப் பத்திவிடுவார்களோ என்ற நினைப்புடன், கிளம்புவதற்கே மனதில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நெடுந்தூரம் நடந்திருந்தாலும் உடலுக்கு மட்டுமே சோர்வு ஏற்பட்டிருந்தது. மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியில் உற்சாகம் குறையாமல் வீடு திரும்பினோம்.

4 comments:

  1. Glad to read and enjoy the good experience of yours's!!
    Dubai Rocks!!!😊👍

    ReplyDelete
  2. துபாயில உலகமே ஒரு கிராமமாய் (Global village) மாறிய இடத்தை அழகாகச் சொன்னீர்கள். அங்கே விமானம் மாறி ஏறிப் போக உதவும் விமான இறங்கு தளம் இருக்கே! அதனால், இதன் சிறப்பு அதிகமோ! கண்காட்சித் திடல் கண்ணோட்டம் அழகு. இரசித்ததை (enjoy) சுவைத்ததை அழகாகப் படைத்தீர். பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்!

      Delete