Wednesday, August 7, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - RJ நாகா விமர்சனம்

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும்.....

அன்பு அபிநயா வணக்கம்,

வலைப்பூவில் சில அத்தியாயங்களை நூலாக்கத்திற்கு முன்னரே நான் வாசித்து இருக்கிறேன்.நீங்கள் எழுத தொடங்கிய இந்த பிரதியின் ஆரம்பம் எனக்கும் பரிச்சயப்பட்டது என்பதில் லேசான கர்வம் எட்டிப்பார்க்கிறது இப்போது.

அமீரகத்தில் இதுவரை எத்தனையோ படைப்பு ஆளுமைகளை சந்தித்து இருந்தாலும், யாரும் யோசிக்காத மிக அற்புத தருணத்தை பதிவு செய்திருக்கும் உங்களின் செயல் என்னை பிரமிக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள் முதலில் .

அபுதாபியில் தொடங்கி புஜைராவில் முடியும் அமீரகத்தின் நீள அகலங்களில் பயணிக்கிறது உங்கள் எழுத்து ஒட்டகம்.

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும் எழுத்தின் வழியாக கடத்துகிறது உங்கள் சில நாட்களின் அமீரக வாசம்.




ஆங்கிலத்தில் இருக்கும் பல்வேறு தரவுகள் அமீரகத்தை தெரிந்துகொள்ள ஓரளவிற்கு துணை செய்யும். ஒற்றை கூகுளில் ஒட்டுமொத்த நாட்டைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது இப்போது.

ஆனால் எனக்கு தெரிந்து தமிழில் முழுமையாக அமீரகத்தை பதிவு செய்திருக்கும் முதல் நூல் இது என்றால் அது மிகையாகாது.

ஏழு ராஜாக்களின் கதை-

வெறும் பதிவாக இல்லாமல் உணவு, கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கை முறை இத்தனையும் கவனித்து எழுதியிருப்பது பிரமிப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நூலை வாசித்த பிறகு அமீரகத்தில் வசிக்கும் சிலருக்கு ஒரு குற்ற உணர்வு வரலாம். "இன்னும் அருங்காட்சியகத்தை கூட முழுமையாக பார்க்காமல் இருக்கிறோமே ..." என்று.

வேகமான மனிதர்களால் நிரம்பி வழியும் அமீரக சாலைகளில் ஒரு நீண்ட பயணத்தின் போது நிதானமாக வாசித்து முடித்தேன்.

ஒரு கோப்பை தேநீருடன் மம்ஜார் பூங்காவில் மீண்டும் பக்கங்களை புரட்டியப்படி வாசிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு.

ஜூமைரா கடற்கரையும், குளித்து ஈரம் சொட்ட கரையேறிய போது ஒட்டிக்கொண்ட உலர் மணலுமாக இங்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க உங்கள் புத்தகம் எனக்குள் இன்னொரு சாளரம் திறந்து வைக்கிறது.

உள் நுழைகிறது காற்று -

அநேகமாக அது சென்னை காற்றாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை ...

ஏழு கடல், ஏழு மலைத்தாண்டி எதோ ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் கிளியைப்போல அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் தனிமை பலரை மிரட்டிக்கொண்டிருக்க அமீரகம் இன்னும் பலருக்கு எப்படி கனவு தேசமாக இருக்கிறது என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது.

உங்கள் தொடர் எழுத்து முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்...

ஈரமண்ணின் நேசத்துடன்,
நாகா.
நிகழ்ச்சி தொகுப்பாளர்.
89.4 தமிழ் பண்பலை
அமீரகம்.