பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலை கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா.பாரதிராஜாவின் முதல் மரியாதைப்படத்தில் வருவது இந்தக்காட்சி தான். இதைப் படமாக்கிக் கொள்வதற்காக உதவி இயக்குனரிடம் பணம் கொடுத்து அனுப்பிய பொழுது, பணத்தை வாங்க கி.இராஜநாராயணன் அவர்கள் மறுத்து , அவருக்கு உணவு உபசரித்து அனுப்பிவைத்தார் என்பது ருசிகரமான தகவல்.கொலையைப் பார்க்கும் நாயக்கர் ஊரைக்கூட்ட , பஞ்சாயத்தில் கொலையாளிக்கு கழுவேற்றம் தண்டனையாக விதிக்கப்படுகின்றது.
Tuesday, July 10, 2018
Saturday, July 7, 2018
சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன்
60களில் ஆனந்தவிகடனில் வெளியான நவீன தமிழ் இலக்கிய வகையில் ' நான் இருக்கிறேன்' என்ற குறுநாவல் அதன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்திருக்கிறது. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கதாநாயகனாக தன்னை நினைத்துக் கொண்டு அவர் இந்த கதையைப் படைத்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.
கால்கள் செயலிலந்த மாற்றுத்திறனாளியாய் கண்ணன். அவரின் பள்ளி செல்லும் தங்கையாய் சித்ரா. அவளது பள்ளி ஆசிரியரான சாந்தி, சித்ராவின் இளைய அண்ணனான ராஜாவைத் திருமணம் செய்து கொண்டு சித்ராவிற்கே அண்ணி ஆகின்றார். கண்ணனின் குறைதீர்க்க மருத்துவ செலவிற்காக இளைய மகன் ராஜாவிடம் பண உதவி எதிர்பார்க்கும் அம்மா.குஷ்டரோக உடல் வியாதியால் சக்கர வண்டியில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் வீரப்பன். இவர்கள் அனைவரும் தான் கதை மாந்தர்கள்.
மரணத்தின் வாயிலில் வீரப்பனுக்கும் கண்ணனுக்கும் நடைபெறும் உரையாடல்கள் பலரது முடிவுகளை திசை திருப்புவதாய் இருந்தாலும் , ஒருவர் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.அவர் யார் என்பதுதான் திருப்புமுனை.பல கதைகள் திரைக்கதையாய், குறும்படமாய், திரைப்படமாய் மாற்றம் பெறும் பொழுது, அதன் முக்கியமான உணர்வுகளையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கடத்தத் தவறி விடுவதுண்டு.
திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குநர்களுக்கு திரைக்கதைகளை எப்படி அமைப்பது என்பதற்கான உதாரணத்தை, இந்திய
சுதந்திரத்திற்குப்பின் தமிழ்த்திரையுலகில் , முதன்முதலாக சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ஜனாதிபதி விருதை 32 வயதில் வாங்கிய ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தால் சிறப்பாகவே
கற்றுக்கொடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைக்கதையே சான்று.
'உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி.. நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளை ஞாபகப் படுத்துவதுடன், கால்கள் இல்லையென்றால் என்ன கைகளால் உலகையே வளைக்க முடியும் என்று சொல்வது வீரப்பன் கதாப்பாத்திரம் அல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது அவரது படைப்புகளை தொடர்ந்து வாசித்த அவரது வாசகர்களுக்குத் தெரியும்.' தூங்குறது மிகவும் சுகம் ..நல்லா தூங்கு..செத்தா தூங்க முடியாது' என்ற வாக்கியம் வாழ்க்கையின் தத்துவம்.
எங்கு குளோசப்,லாங் ஷாட் வைக்க வேண்டும் என்று சொல்கின்ற ஒளிப்பதிவாளராய், காட்சிகளின் அணிவகுப்பை வரிசைப்படுத்தும் படத்தொகுப்பாளராய், எங்கு எந்த வசனம் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதை வரையருக்கும் ஒலிப்பதிவாளராய் , பன்முகத்திறமை காட்டியிருக்கும் இயக்குனர் ஜெயகாந்தன் அவர்களின் திரைக்கதை, காட்சி அமைப்பில் படமாக்கப்படும் பொழுது எழுத்தின் வெற்றியை நிர்ணயக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தன் குழந்தை இரயில் தண்டவாளத்தில் சிக்கி இறந்தாலும் பரவாயில்லை தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று உறுதியுடன் நோயாளி வீரப்பனைத்திட்டும் தம்பதியினரைவிட , தன் நோய் தன் குழந்தைக்கு வந்துவிடக்கூடாது என்று இரயிலில் விட்டு வரும் வீரப்பனின் செயல் மனதைக்கனக்கச் செய்கிறது. கண்ணனின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு காரணம் வீரப்பனின் சக்கர வண்டி மட்டுமல்ல அவனது வார்த்தைகளும் என்பதை வாழ்க்கையின் ஏதோ ஒரு நொடியில் நம்பிக்கைத் தளர்ந்த
அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - பக்கங்கள் 172 விலை 160
Friday, July 6, 2018
அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு - இரா.ஜெயப்பிரகாசம்
அமெரிக்கா என்றவுடன் பலருக்கும் மலையின் முகத்தை திரையாய் மறைக்கும் bridal falls நயாகரா நீர்வீழ்ச்சி, நம் திருவள்ளுவர் சிலையைவிட 18அடி உயரமான தாமிரத்தால் ஆன சுதந்திர தேவி சிலை, திரைப்படங்களில் பார்த்த கோல்டன் கேட் பாலம், கார்டூன் கதாப்பாத்திரங்கள் உலாவும் டிஸ்னிலேண்ட் கேளிக்கைப் பூங்காக்கள் மனதில் தோன்றும்.இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் புவி ஈர்ப்பு விசையுடன் விளையாடும் 45 டிகிரி சாய்ந்து நிற்கவேண்டிய the mystery spot, திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுதே தொடர்ச்சியாக வொயின் உபசரிக்கும் நாப்பா பள்ளத்தாக்கு, இனப்புணர்ச்சி கல்விக்கான அருங்காட்சியகம் , 1950களில் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடனான ஒற்றர்களுக்கான அருங்காட்சியகம் என்று பல இடங்கள் நம் பயண அட்டையில் சேர்ந்து கொள்ளும்.
காவலர்களிடம் வழி கேட்டால் அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என்ற தகவல் சுற்றுலா செல்பவர்களுக்கு நிச்சயமாய் உதவும்.வண்டியில் பயணம் செய்வதே உயர்வானது என்று நினைக்கும் நம்மவர்களுக்கு, பாதசாரிகள் சாலையைக் கடக்கக் கொடுக்கப்படும் முன்னுரிமை ஸ்தம்பிக்க வைக்கும்.பல வெளிநாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவதால் சிலருக்கு சகஜமாய்த் தோன்றலாம்.சோர்வாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அக்கறையுடன் நலம் விசாரிக்கும் பணியாளர்கள் ஆச்சர்யம் கொடுக்கிறார்கள்.மூன்று மாதத்திற்கு முன்பே தங்கும் இடம், சுற்றுலா தளங்களுக்கான நுழைவுச்சீட்டு, பேருந்துகளை முன்பதிவு செய்வது, தனிவண்டி,நெரிசலில் சிக்கும் பேருந்தை விட இரயில், மெட்ரோ, மோனோரயில், டிராம் பயணம் நம் பயணச் செலவுகளைச் சிக்கனப்படுத்தும் போன்றவை அவசியமான தகவலாகின்றது.
சுற்றுலா நிறுவனத்தின் உதவியில்லாமல் தனியாகவே ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து பயணிக்கும் முறை நமக்குள்ளும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. பயணக்கட்டுரையில் தூய தமிழ் வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்டு இருப்பது நல்ல தமிழ் சொற்களைக் கற்பிக்கின்றது. நாட்டிற்கு புதிதாய் வந்திருப்பவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்கும் பண்பு நம்மையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.
வெகுதூரம் நடப்பதைப் குறைக்கும் மின்சார ஸ்கூட்டர் பயணம் , சுழல் நயாகரா நதியின் த்ரில்லான படகுசவாரி, பயணங்களின் சுவாரசியமான பரிணாமங்கள்.
தற்பொழுது துபாய் போன்ற பல நாடுகளில் நடக்கும் டால்பின் நிகழ்ச்சி, கோளரங்கங்கள் ,முறையாகக் காட்சிப்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள், பல நாடுகளின் அரங்கங்கள் அமைத்து சுற்றுலாவை வளர்க்கும் திட்டங்கள், வான வேடிக்கைகள்,
பல பரிமாணங்களில் காட்சிகளை உணரும் வகையில் இருக்கையில் இருந்தபடியே பல தூரம் பயணம் செய்ய வைக்கும் சிமுலேசன் சவாரிகளுக்கு முன்னோடிகள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.நயாகாரா நதியரசியின் கதை, பேஸ்பால் மட்டை தயாரிக்கும் தொழிற் சாலைக்கு பின்னால் உள்ள சம்பவங்கள், முதுகில் கோடில்லாமல் உலாவும் அணில்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பாதை கொண்ட குகையின் பயண அனுபவம் , ஹேலோவீன் டே கொண்டாடப் படுவதற்கான காரணங்கள் , உலகின் மிகப்பெரிய நூலகம் என்று ஒவ்வொரு இடத்திற்குப் பின்னால் இருக்கும் வரலாறு அந்த இடத்திற்கான மதிப்பையும் தரத்தையும் கூட்டுகின்றது.
பொற்செல்வி பதிப்பகம்,183 பக்கங்கள்,விலை - 100.
Thursday, July 5, 2018
கொம்மை - பூமணி
'மகாபாரதக்கதை என்றாலே எங்கோ ஒரு மூலையில் ஆரிய நாட்டில் நடந்தது.நூற்றுக்கு மேற்பட்ட கதைமாந்தர்கள் உண்டு.ஆர்ய பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். கதை மாந்தர்களுக்கு தெய்வத்தன்மை பூசப்பட்டிருக்கும்.அவர்களின் செய்கைகள் அனைத்தும் கொண்டாடப்பட்டிருக்கும்.நியாயம் கற்பிக்கப்பட்டு இருக்கும்.
சமஸ்கிருத மொழியில் நடுநடுவே பாடல்கள் எடுத்துக்காட்டாய் கொடுக்கப்பட்டு இருக்கும். சுத்தத்தமிழில் உரையாடிக் கொண்டு இருப்பார்கள்.பெரிய பத்தியாய் பெரிய வாக்கியங்களாய் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.கூறவரும் நீதிகளும், வாழ்க்கை முறையும் புரிந்து கொள்வதற்கு முதிர்ச்சி தேவைப்படும்'.இது போன்ற அத்தனை கருத்துக்களுக்கும் மாற்றாக இருக்கிறது சாகித்திய அகாதமி விருதுபெற்ற பூமணி அவர்களின் சமீபத்திய படைப்பான கொம்மை.
பாரதியார், இராஜாஜி தொடங்கி எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன் வரை பிரபல எழுத்தாளர்கள் பாரதக் கதையை தங்களுக்கான எழுத்துநடையின் வழி ஈன்று எடுத்திருந்தாலும், பூமணி அவர்களின் எழுத்துநடை மண்மணம் சுமக்கும் எளிமையான மனிதர்களுக்கானது.அவரது படைப்பில் அர்ஜீனனும் கிருஷ்ணனும் 'ஏல, மச்சான், டேய் கருப்பா ,மாட்டுக்காரப்பய மண்டையில நெறையத்தான் மூளையிருக்கு' என்று தான் சாமான்ய மனிதர்கள் போல பேசிக்கொள்வார்கள்.' வாடி
எஞ் சக்களத்தி.பசப்பி..என் அடிமடியிலயே கைவச்சிட்டயா' என்று தான் பாஞ்சாலியும் சுபத்ரையும் குறும்பாகப் பேசிக் கொள்வார்கள்.
தானியத்தை உதிர்த்து கதிரில் எஞ்சியிருக்கும் கொம்மை போல் அபலைகளாய் பாரதக்கதையில் அலைக்கழிந்த பெண்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து அவர்களது அழுத்தங்களும் மனநிலையையும் எந்தவொரு பீடிகையும் இல்லாமல், வண்ணமும் பூசப்படாமல் சொல்லப்பட்டு இருக்கின்றது.விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்ப வாரிசுக்காக , கணவன், அத்தையின் விருப்பத்திற்காக என்று முனிவர்களுக்கு பணிவிடை செய்து குழந்தை வரம் பெரும் முறை , ஈடுபாடில்லாத கலவி,
கணவனுடன் உடன்கட்டை ஏறும் முறை, அவர்களின் மீதான பரிதாபத்தை பலமடங்கு ஆக்குகின்றது. அதற்குக்காரணமான கதாபாத்திரங்களையும் வெறுக்க வைக்கின்றது.
பாரதக்கதை உண்மையில் நடந்ததா இல்லையா என்ற சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், நமக்குத் தேவையான அறிவுரைகளை பிரித்து எடுத்துக் கொள்ள முடியும்.மையக்கதை ஒன்றாக இருந்தாலும், கிளைக்கதைகள் எதுவுமே விடுபடாமல் பூமணி அவர்களின் நாற்பது மாத உழைப்பில் உருவாகியிருக்கும் மகாபாரதம் சிறுவர்களுக்கும் எளிமையான நடையில் சொல்லக்கூடியவை.பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை அந்நியப்படவில்லை.
தினமும் ஒரு அத்யாயம் என்று படித்தாலும் பாரதக்கதையை 180 நாட்களில் கற்றுத்தேர்ச்சி பெற்றிட முடியும்.குடும்பச்சங்கிலியையு ம் வரைபடமாய் வரைந்திட முடியும்.சாதாரண மனிதர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் பாடல்களாகவும் ஒப்பாரிகளாகவும் வெளிப்படுத்துவதற்கு அபிமன்யு இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரி , பீமக்குட்டன் தன் தகப்பனைப்பார்க்கச்செல்லும் பொழுது வனமே அவனை வாழ்த்திப் பாடும் பாடல் சில எடுத்துக்காட்டுக்கள்.
பக்கங்கள் - 600, பதிப்பகம்-டிஸ்கவரி புக் பேலஸ், விலை - 555